கவிஞர் வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள் மிகவும் முக்கியமானவை. அவரது குழந்தைப்பாடல்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு இன்பத்தைத்தருபவை. மிகவும் புகழ்பெற்ற 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' என்னும் பாடலை எழுதியவர் கவிஞர் வேந்தனாரே. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவை அறிந்த அளவுக்கு நம் குழந்தைகள் கவிஞர் வேந்தனாரின் குழந்தைக் கவிதைகளை அறிந்திருக்கின்றார்களா என்றால் இல்லையென்றே கூற வேண்டும். அவரது 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' மட்டுமே அதிகமாக அறிந்திருப்பார்கள். ஆனால் கவிஞர் வேந்தனார் பல குழந்தைப்பாடல்களை எழுதியுள்ளார். இலங்கையில் வெளியான ஈழநாடு, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் அவரது குழந்தைக் கவிதைகள் பல வெளியாகியுள்ளன. மூன்று தொகுதிகளாக அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகள் நூலுருப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'பதிவுகள்' இணைய இதழின் சிறுவர் பக்கம் பகுதியில் அவரது குழந்தைப்பாடல்கள் அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகளிலிருந்து தொடர்ந்து வெளியாகும். அவரது குழந்தைப்பாடல்களைத் தமிழுலகு அறியவேண்டியது அவசியம். அதற்காகவே இம்முயற்சி. உங்கள் குழந்தைகளுக்கு அவரது குழந்தைக் கவிதைகளை அறிமுகம் செய்யுங்கள். - ஆசிரியர், பதிவுகள் -
1. வெண்ணிலா
பாலைப் போல வெண்ணிலா
பார்க்க நல்ல வெண்ணிலா
கோல வானில் நின்றொளியைக்
கொட்டு கின்ற வெண்ணிலா
வெள்ளிக் கூட்டம் சுற்றி நிற்க
விளங்கு கின்ற வெண்ணிலா
அள்ளி அள்ளிச் சோற்றையூட்டி
அம்மா காட்டும் வெண்ணிலா
கரிய முகிலுள் ஓடி ஒளித்துக்
கள்ளம் பழகும் வெண்ணிலா
தெரிய வில்லை என்றுதம்பி
தேடிச் சிணுங்கும் வெண்ணிலா
கலா தம்பி காந்தி யோடு'
கையைக் கோர்த்துக் கொண்டு
நிலா நிலா என்று கூவி
நின்று துள்ளும் வெண்ணிலா
- ஈழநாடு 22.4.1962
நன்றி: வேந்தனார் குழந்தை மொழி - பாகம் 1 - லாவண்யா பதிப்பகம், சென்னை , பதிப்பு 2 2019