கனடாவில் 1984ஆம் ஆண்டிலிருந்து தமிழ்க் கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மொன்ரியாலில் வெளியான புரட்சிப்பாதை (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக்கிளை வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகை) , தமிழ் எழில் ஆகியவற்றில் கவிதைகள் வெளியாகின.
இது பற்றி எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம் (ஹம்ஸத்வனி) பின்வருமாறு கூறுவார்: "1984 இல் மொன்றியாலின் தமிழ்எழில் என்னும் மாதாந்த கைஎழுத்துப்பிரதி வெளிவந்தது. முதல் தமிழர் ஒளி வானொலிச்சேவையும் தொடங்கப்பட்டது. இரண்டிலும் எனது பங்களிப்பு இருந்தது. நான் ஆசிரியர் குழு சார்பில் எழுதினேன். கவிதைகள் நாடகங்கள் வந்தன."
'புரட்சிப்பாதை' சஞ்சிகையிலும் வ.ந.கிரிதரன், ரவி அமிர்தன் , செங்கோடன், ஆ.சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.
நூலாக வெளியான ஆரம்பக் கவிதைத்தொகுப்புகள் என்று பார்த்தால் பின்வரும் கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன:
1. ரவி அமிர்தன் - விழிப்பூ. 11.5.1985 வெளியாகியுள்ளது. (இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் அருண்மொழிவர்மனுக்கு நன்றி). இது கையெழுத்துப்பிரதியாக வெளிவந்த நூலாகத் தெரிகின்றது.
2. வ.ந.கிரிதரன் - மண்ணின் குரல். இது மண்ணின் குரல் சிறு நாவல், கட்டுரைகள் & எட்டுக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இவையனைத்தும் 84-85 காலகட்டத்தில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் வெளியானவை. 14.01.1987 அன்று மங்கை பதிப்பக வெளியீடாக வெளியானது. றிப்ளகஸ் அச்சகம் கணினி எழுத்துகள் கொண்டு அச்சடித்த கவிதைத்தொகுப்பு. இதில் அடங்கியுள்ள கவிதைகள்:
1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!
3. சுதா குமாரசாமி - 'முடிவில் ஓர் ஆரம்பம்'.
Tamil Progress Publications' (Montreal, Canada) பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு இது. றிப்ளக்ஸ் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டது. பதினைந்து கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தொகுப்பிலுள்ள கவிதைகளின் பட்டியல் வருமாறு:
1. சமர்ப்பணம்
2. என்றும் வரும் வசந்தம்....
3. சின்னவளுக்குச் சித்தியின் தாலாட்டு
4. சாம்பலாகிய கனவு
5. பிரியாவிடை பெறும் அகதி
6. உரிமையா? சலுகையா?
7. எங்கே போகிறோம்?
8. காண்பேனா? உனை.
9. காற்றில் கலந்த, காதில் ஒலித்த
10. அருமை அகராதியே..!
11. புலம்பிப் பாயும் அந்த சென்ற் லோரன்ஸ்
12. வேண்டுகோள் கேளாய்
13. கனவாகிப்போன வாழ்வு.
14. உலகமென்பது எம் உடலடா!
15. அன்னிய மண்ணில் வெறுமை.
இந்தத்தொகுப்பு வெளியான ஆண்டு: ஆகஸ்ட் 1, 1988.
இதுவரையில் நானறிந்த வரையில் இவையே கனடாவில் வெளியான ஆரம்பக் கவிதைத்தொகுப்புகள். இவற்றில் மேலும் தகவல்கள் கிடைக்கும்போது மாற்றங்கள் வரலாம்.
றிப்ளக்ஸ் அச்சக உரிமையாளரின் தந்தையாரான ஈழத்துப் பூராடனாரின் நூல்கள் பலவற்றையும் வெளியாகியுள்ளன. அவை பற்றிய விபரங்களும் (வெளியான ஆண்டு , திகதி போன்ற) அறியப்பட வேண்டும்.
டொராண்டோவில் 84ஆம் ஆண்டு நான் வருவதற்கு முன்னிருந்தே 'செந்தாமரை' என்னும் பெயரில் பத்திரிகையொன்று வெளியாகிக்கொண்டிருந்தது. அதில் வெளியான ஆக்கங்கள் பற்றியும் அறிய வேண்டும். அவற்றில் கவிதைகள் வெளியாகியுள்ளனவா? யார் யார் எழுதினார்கள் என்பவை போன்ற விபரங்கள் அறியப்பட வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.