"நான் என் பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -
ஈழநாடும் , நானும் (2): அப்பாவின் பெயரிலெழுதிய சித்திரைப்புத்தாண்டுக்கவிதையும், மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ்த்தின விழா நிகழ்வும்..
ஈழநாடு மாணவர் மலர் என் 'தீபாவளி தித்தித்தது' கட்டுரைக்குத் தந்த ஊக்கம் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டியது. மேலும் சில கதைகளை என் பாடசாலை அப்பியாசப் புத்தகத்தில் எழுதினேன். அவற்றில் ஒன்றின் தலைப்பு மட்டும் இன்னும் நினைவிலுள்ளது. கதையின் தலைப்பு - 'மழை பெய்து ஓய்ந்தது'. கதை ஆரம்பிக்கும்போதும் , முடியும் போதும் இடம்பெற்றிருக்கும் வசனங்கள்: 'மழை பெய்து ஓய்ந்தது'. :-) அதனை வழக்கம்போல் அப்பாவுக்குக் காட்டினேன். அவர் படித்துப்பாராட்டினார். அக்காலகட்டத்தில் எங்கள் வீட்டு அயல்வீட்டில் குடியிருந்த 'அன்ரி' ஒருவரும் அக்கதைக் 'கொப்பி'யை இரவல் வாங்கிச்சென்று வாசித்துவிட்டு வந்து பாராட்டினார்.
இதற்கிடையில் பொங்கல் திருநாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது அப்பா சுதந்திரன் பத்திரிகையையும் வாங்கிக்கொண்டிருந்தார்.அதில் நா.பாலேஸ்வரியின் 'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு' தொடராக வெளிவந்துகொண்டிருந்ததாக நினைவு. அவரது எழுத்து நடையும் என்னை அக்காலகட்டத்தில் மிகவும் கவர்ந்திருந்தது என்பேன். அப்பருவ நினைவுகள் அழியாத கோலங்கள் என்பவை என்பதால் அவர் பற்றிய நினைவுகளும் அவரது தொடர்கதையின் சில பக்கங்களை மட்டுமே வாசித்திருந்தபோதிலும் நினைவில் பதிந்து விட்டன.
சுதந்திரனுக்குப் பொங்கலைப்பற்றிய கவிதையொன்றினை எழுதி அனுப்பி வைத்தேன். சுதந்திரனில் சிறுவர்களுக்கான பக்கமெதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் அக்கவிதையை ஏன் ஈழநாடு மாணவர் மலருக்கு அனுப்பாமல் , சுதந்திரனுக்கு அனுப்பினேன் என்பதற்கான காரணம் இன்றுவரை புரியவில்லை. என்ன ஆச்சரியம்! சுதந்திரனின் பொங்கல் தின இதழில் என் கிறுக்கலும் வெளியாகியிருந்தது. இன்னும் அக்கவிதை வரிகள் நினைவிலுள்ளன.
"பொங்கல் பொங்கல் பொங்கலாம்.
புது வருடப் பொங்கலாம்.
எங்கும் எங்கும் சிறுவர்கள்
எலிவாணம் கொளுத்தி மகிழ்வார்கள்.
உலகைக் காக்கும் கதிரவனுக்கு
உலகைக் காக்கும் உழவர்கள்
பொங்கல் பொங்கிப் படைத்திடுவார்
பொங்கல் என்னும் திருநாளில்."
இதுதான் அக்கவிதை வரிகள். இன்னும் சுதந்திரனின் அப்பிரதியை அவ்வப்போது தேடிக்கொண்டுதானிருக்கின்றேன்.
இவ்விதமாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்கையில் சித்திரை வருடப்பிறப்பும் நெருங்கியது. இம்முறை மீண்டும் ஈழநாடு பத்திரிகைக்கு அனுப்ப வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அக்காலகட்டத்தில் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியான பண்டிகைக் காலக் கவிதைகளின் வடிவைக் கவனித்து விட்டு, அதைப்போன்றதொரு கவிதை எழுதி அப்பாவின் பெயரில் எழுதி ஈழநாடு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். வெளிவந்தால் காட்டி அப்பாவை ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென்று எண்ணி
அனுப்பியிருந்தேன்.
என்ன ஆச்சரியம் அக்கவிதையை ஈழநாடு அப்பாவின் பெயரில் தனது வருடப்பிறப்பிதழில் பிரசுரித்திருந்தது. அதனையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். இதில் வரும் விழவுகள் என்னும் சொல் மட்டும் ஈழநாடு தேர்வு செய்திருந்தது. ஏன் ஈழநாடு விழவுகள் என்னும் சொல்லைப்பாவித்தது என்பது புரியவில்லை. நான் அதற்குப் பதிலாகப்பாவித்திருந்த சொல் எதுவென்பதையும் மறந்து விட்டேன்.
கவிதை: சித்திரைத் திருநாள் - ந.நவரத்தினம் -
தமிழர் திருநாள் சித்திரையாம்
தரணி புகழும் பெருநாளாம்
உழவர் மகிழும் நன்னாளாம்
உலகம் மகிழும் பொன்னாளாம்
விழவுகள் பெருகும் பெருநாளாம்
வீரம் பொங்கும் மணிநாளாம்
வளங்கள் கொழிக்கும் திருநாளாம்
வாழ்வு செழிக்கும் தனிநாளாம்
புத்தாடை அணிந்து மகிழ்ந்திடுவோம்
புதுப்புதுப் படமும் பார்த்திடுவோம்
சித்தி வீட்டுக்குச் சென்றிடுவோம்
சிரித்துச் சிரித்துப் பேசிடுவோம்
மத்தாப்பு வாணம் கொளுத்திடுவோம்
மகிழ்வுடன் பாடி ஆடிடுவோம்
தித்திப்புப் பட்சணம் தின்றிடுவோம்
தினமும் புன்னகை புரிந்திடுவோம்.
சித்தி, மத்தாப்பு போன்ற சொற்களெல்லாம் தமிழகத்துச் சஞ்சிகைகளின் பாதிப்பு. இக்கவிதை வெளியானதும் அதனைக்கொண்டுபோய் அப்பாவிடம் காட்டினேன். அப்பா அதைக்கண்ட் 'ஏனிப்படி செய்தாய். இப்படி இனிச்செயாதே' என்று மென்மையாகக் கடிந்து கொண்டார். அப்பா அதைப்பார்த்து மகிழ்வாரென்று பார்த்தால் இவ்விதம் கூறுகிறாரே என்று மனம் சிறிது வாடினாலும், அவர் கூறுவதும் சரியென்றே பட்டது. அதன்பின் ஒருபோதுமே அவ்விதமான விளையாட்டில் நான் இறங்கவில்லை.
அடுத்து இன்னுமொரு கவிதை என் பெயரில் 'மழை பொழிந்தது' என்னும் தலைப்பில் எழுதி ஈழநாடு மாணவர் மலருக்கு அனுப்பினேன். அது 19-6-70 ஈழநாடு வாரமலரில் வெளியானது. வழக்கமாக ஞாயிறு வாரமலராக வெளியாகும் ஈழநாடு அம்முறை வெள்ளியன்று வாரமலராக வெளியாகியது. அக்கவிதை இதுதான்:
மழை பொழிந்தது - ந.கிரிதரன் -
வானம் எங்கு மிருண்டிடவே
வண்ண மயில்க ளாடிடவே
மான்கள் துள்ளி யோடிடவே
மகிழ்ந்து குலாவிக் கொஞ்சிடவே
தேன்சுவை தேங்கும் மலரினங்கள்
சிலிர்த்துத் தலையை நிமிர்த்திடவே
வானம் மழையைப் பொழிந்ததம்மா
வையம் யாவும் மகிழ்ந்ததம்மா.
இதற்கிடையில் ஆகஸ்ட் மாதம் ,மட்டக்களப்பில் அகில இலங்கைரீதியில் தமிழ்த்தின விழா நடக்கவிருந்தது. அதையொட்டிப்பல்வேறு போட்டிகள் வவுனியா மகாவித்தியாலயத்தில் நடக்கவிருந்தன, முதலில் என்னை காமினி மகாவித்தியாலயத்தில் நடந்த சொல்வதெழுதல் (சிங்களப்பாடசாலை) போட்டிக்கே அனுப்பினார்கள். அங்கு சென்றால் என் பெயர் இல்லையென்று திருப்பி அனுப்பி விட்டார்கள். என் கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்காது. எதற்காக அப்போட்டிக்கு என்னை அனுப்பினார்கள் என்பது இன்னும் விளங்காத புதிர். திரும்பிய என்னை வவுனியா நகரத்துப்பாடசாலைகளுக்கிடையில் நடைபெறவிருந்த கட்டுரைப்போட்டியில் பங்குபற்ற அனுமதித்தார்கள். எவ்விதத்தயாரிப்புகளுமில்லாமல் அப்போட்டியில் கலந்துகொண்டேன்.
அப்போட்டியில் நான் மூன்றாவதாக வந்தேன். அதில் முதல் மூன்றுக்குள் வந்தவர்களைப்பின்னர் வவுனியா மாவட்டப்பாடசாலைகளுக்கான போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தார்கள். 'அப்போட்டியில் முதலாவதாக வரும் மாணவர் மட்டும் மட்டக்களப்பில் நடக்கவுள்ள அகில இலங்கைரீதியிலான கட்டுரைப்போட்டியில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்' என்று கூறினார்கள். அதுவரையில் மட்டகளப்பு சென்றிராத எனக்கு எப்படியும் அப்போட்டியில் வென்று மட்டக்களப்பு செல்ல வேண்டுமென்ற ஆவல் பெருகத்தொடங்கியது. அப்போட்டிக்கான தலைப்புகளிலொன்று 'நான் இந்நாட்டின் பிரதமரானால்'என்பது. அத்தலைப்பிலேயே கட்டுரையை எழுதினேன். நானே முதலாவதாக வந்தேன்.
அப்போட்டியில் கலந்து கொள்ளச்சென்ற என்னுடன் அப்பாவும், வகுப்பு வாத்தியாரான சுப்பிரமணிய 'மாஸ்ட்டரும்' வந்திருந்தார். மேற்படி தமிழ்த்தின விழா ஆகஸ்ட் 15,16, & 17 (1970) நாள்களில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மட்டக்களப்பில் புனித மைக்கல் கல்லூரியில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது/ போட்டியில் தந்த தலைப்புகளில் ஒன்றான 'எனது பிரயாணம்' என்னும் தலைப்பைத் தெரிவு செய்து மட்டக்களப்புக்கு வவுனியாவிலிருந்து மேற்கொண்ட அப்பயண அனுபவத்தையே மையமாகக்கொண்டு கட்டுரையை எழுதினேன். அப்போட்டியில் எனக்கே முதற்பரிசு கிடைத்தது. ஏ.எல்.பரீத் (இவ்விதமானதொரு பெயரே நினைவிலுள்ளது. சிலவேளைகளில் தவறாகவிருக்கலாம். முடிவுகள் வெளியான
தினகரன் பத்திரிகை யாரிடமாவதிருந்தால் சரி பிழை அறிந்து அறியத்தரவும்) என்னும் முஸ்லீம் சிறுவன் கட்டுரைப்போட்டியில் இரண்டாவதாகவும், பேச்சுப்போட்டியில் முதலாவதாகவும் வந்தான். அவ்வருடத் (1970) தமிழ்த்தின விழாப்போட்டி முடிவுகள் தினகரன் போன்ற கொழும்புத்தமிழ்ப்பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அப்போட்டியில் எனக்குப்பெரியதொரு வெள்ளிக்கேடயமும், நூல்கள் சிலவும் பரிசாகத்தந்தார்கள். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் 'தமிழ்ச்சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்', வீ.சி.கந்தையாவின் 'மட்டக்களப்புத்தமிழகம்', புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் நூல், மட்டக்களப்புப்பகுதியின் வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்துகள் பற்றிய நூல் போன்றவற்றுடன் வேறு சில நூல்களும் பரிசாகக்கிடைத்தன. பல
வருடங்களுக்குப்பின்னரே அவ்வெள்ளிக் கேடயத்தை வழங்கியவர் பொத்துவிலைச் சேர்ந்த வர்த்தகர் கனகரத்தினம் (பின்னர் அரசியலில் ஈடுபட்டுச் சுடப்பட்டவர்) என்பதை அக்கேடயத்தின் பின்பக்கம் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
வவுனியா மகா வித்தியாலயத்தில் காலை நேரம் பாடசாலை தொடங்குவதற்கு முன் அதிபரின் காரியாலயத்தின் முன் கூட்டம் நடைபெறும். அப்போது அதிபராகவிருந்தவர் அரியரத்தினம். அவர் நாங்கள் மட்டக்களப்பிலிருந்து திரும்பியது நடைபெற்ற காலை வணக்கக் கூட்டத்தில் என் பெயரைக்குறிப்பிட்டு அகில இலங்கைத்தமிழ்த்தின விழா நிகழ்வில் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற விபரத்தை அறிவித்தது நினைவிலுள்ளது. பின்னர் என்னிடம் எனக்குக் கிடைத்த வெள்ளிக்கேடயத்தையும் பள்ளிக்கூடத்தில் வைப்பதற்காகக்கேட்டதாக அறிந்தேன். நானோ அது எனக்குக்கிடைத்தது என்று அம்மாவிடம் கூறி என்னிடமே வைத்திருந்தேன். அதன் பிறகு யாருமே அது பற்றிக்கேட்கவில்லை. பின்னர் அவ்வெள்ளிக் கேடயம் என்னிடமேயிருந்தது.
வெற்றிமணி என்னும் சிறுவர் இதழ்..
அக்காலகட்டத்தில் வெற்றிமணி என்னும் சிறுவர் இதழ் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருந்தது. அதன் கெளரவ ஆசிரியராகவிருந்தவர் மு.க.சுப்பிரமணியம். ஆலோசகர் குழுவில் இரசிகமணி கனக.செந்திநாதன், கவிஞர் வி.கந்தவனம்,
ஏ.ரி.பொன்னுத்துரை, கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை ஆகியோரிருந்தனர். விடுமுறைகளில் யாழ்ப்பாணம் செல்லும்போது நகரின் மையத்திலிருந்த அன்பு புத்தகசாலை சென்று வெற்றிமணி வாங்குவேன். எழுத்தாளர் புதுமைலோலனின் புத்தக்கடை அது. அவர் எழுத்தாளர் செங்கை ஆழியானின் சகோதரர். வெற்றிமணிக்கும் என் படைப்புகளை அனுப்பி வைத்தேன். உருவகக்குட்டிக்கதையான 'மரங்கொத்தியும், மரப்புழுவும்' வெற்றிமணியின் நவம்பர் 1969 இதழிலும், பொங்கல் பற்றிய குட்டிக்கட்டுரை ஜனவரி 1970 இதழிலும் வெளியாகின. அவை ஒரு சிறுவனின் சிறு படைப்புகள். ஆனால் அச்சிறுவனைப் பொறுத்தவரையில் மிகுந்த ஊக்கத்தைக்கொடுத்த விலை மதிப்பில்லாத அவனது படைப்புகள் அவை. வெற்றிமணி சஞ்சிகையில் அவன் தன் பெயரில் வெளியான அப்படைப்புகளைப் பார்த்ததும் எவ்வளவு மகிழ்ந்திருப்பான்.
இதன்பின்னர் 1971இல் நான் யாழ் இந்துக்கல்லூரிக்குச் சென்று விட்டேன். எட்டாம் வகுப்பிலிருந்து உயர்தரம் வரை என் கல்வி அங்கேயே தொடர்ந்தது. அக்காலகட்டத்தில் எனக்கும் ஈழநாடு மாணவர் மலருக்குமான பிணைப்பு மேலும் இறுகத்தொடங்கியது. அக்காலகட்டத்தில் எனது கட்டுரைகள் ,கவிதைகளை ஈழநாடு மாணவர் மலர் பிரசுரித்து மேலும் என்னை ஊக்குவித்தது. ஈழநாடு மாணவர் மலருக்குப் படைப்புகளை அனுப்புவதில் நான் பெரிதும் மகிழ்வுற்றிருந்த காலகட்டமது. பால்ய பருவத்தில் என் எழுத்தை ஊக்குவித்த ஈழநாடு ,என் பதின்மப் பருவத்திலும் அதனைத்தொடர்ந்து செய்தது.
ஈழநாடும் , நானும் (3): பதின்ம வயதின் ஆரம்பத்தில் படைத்தவை இவை!
எட்டாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை (பல்கலைக்கழகப்புகுமுக வகுப்பு அல்லது கல்விப்பொதுத்தராதர உயரதர வகுப்பு) என் கல்வி யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வெளி மாவட்டத்திலிருந்து யாழ் இந்துக்கல்லூரிக்குச் சென்றதால் பரிட்சை வைத்தே எடுத்தார்கள். வழக்கம்போல் நான் தீவிர வாசிப்பு மிக்கவனாகவே அக்காலகட்டத்திலிருந்தேன். என் வாசிப்புக்கு அக்காலகட்டத்தில் உறுதுணையாகவிருந்தவர்களின் பெயர்களையும் நிச்சயம் கூறவேண்டும். யாழ் இந்துக்கல்லூரியில் படிக்கத்தொடங்கிய காலத்தில் நான் அதிகம் பழகிய பாடசாலை நண்பர்களிலொருவர் கவிஞர் வேந்தனாரின் மகனான இளஞ்சேய். அதற்குக்காரணம் இருவருமே வாசிப்பில் மிகுந்த ஈடுபாடுடையவர்கள் என்பதுதான். நானும் அவரும் இருவரிடமும் இருக்கும் நூல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வோம். இளஞ்சேய் பேச்சாற்றல் மிக்க மாணவனாக அக்காலகட்டத்திலேயே விளங்கினார்.
என் இந்துக்கல்லூரி காலகட்டத்தில் சக மாணவர்கள் யாருக்காவது நான் எழுதுவது யாருக்குமே தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. நான் யாருக்கும் பெரிதாக நான் ஈழநாடு மாணவர் மலரில் எழுதுவதையெல்லாம் கூறுவதில்லை. ஆனால் என்னுடன் பாடசாலயில் நன்கு பழகிய மாணவர்களுக்கு நான் தீவிர வாசிப்பாளன் என்பது தெரியும். ஒரு சிலர் தம்மிடமிருந்த நூல்களை நான் கேட்காமல் கொண்டு வந்தும் கொடுத்திருக்கின்றார்கள். அதே சமயம் பாடசாலையில் எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்கள் எவருக்குமே நான் எழுதுவது தெரிந்திருக்காதென்றே நினைக்கின்றேன். ஏனென்றால் யாருக்குமே நான் அது பற்றிக் கூறியதில்லை. மேலும் அக்காலகட்டத்தில் இலங்கைத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் சொக்கன், எழுத்தாளர் தேவன் (யாழ்ப்பாணம்) ஆகியோர் அங்கு கற்பித்துக்கொண்டிருந்தபோதிலும் அவர்களில் எவரும் எனக்குத் தமிழாசிரியர்களாக இருந்ததில்லை. ஒரு வேளை அவர்களிலொருவராவது வந்திருந்தால் நானும் என் எழுத்துகளை அவர்களுக்குக் காட்டியிருக்க முடியும். அவற்றைப்பார்த்து அவர்களும் என்னை அதிகமாக ஊக்குவித்திருக்க முடியும். ஏனென்றால் அக்காலகட்டத்தில் தேவன் (யாழ்ப்பாணம்) அவர்கள் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியான மணிபல்லவம் நூல் (Treasure Island) என்னிடமிருந்தது. அதனை நான் விரும்பி வாசித்திருந்தேன். அதுபோல் சொக்கன் அவர்கள் எழுதிய சிறுகதைகள் சிலவற்றை வாசித்திருந்தேன். குறிப்பாகக் கலைச்செல்வி சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதையொன்றின் மூலம் என் மனத்தில் அவர் இடம் பிடித்திருந்தார். இவர்களில் யாராவது எங்களுக்குத் தமிழ்ப்பாடமெடுத்திருந்தால் நிச்சயம் தமிழ் இலக்கியம் பற்றி, அவர்களது படைப்புகள் பற்றி, எனது எழுத்துலக முயற்சிகள் பற்றி அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பமேற்பட்டிருக்கலாம்.
அதே சமயம் தமிழாசிரியர்களைப்பொறுத்தவரையில் ஒருவரை எனக்கு இன்னும் நினைவிலுள்ளது. அவரது பெயர் குமாரசுவாமி. பத்தாவது வகுப்பில் எங்களுக்கு அவர் தமிழாசிரியராக இருந்தார். ஒரு முறை ஆற்றங்கரைக் காட்சியொன்றைப்பற்றி நான் எழுதிய வர்ணனையைப்படித்து விட்டு, அதை எடுத்துச் சென்று அவர் தமிழ் படிப்பிக்கும் வேறு வகுப்பு மாணவர்களுக்குக் கொண்டு சென்று காட்டி வந்து பாராட்டினார். அவருக்கும் நான் ஈழநாடு மாணவர் மலரில் எழுதுவது தெரிந்திருக்காதென்றே நினைக்கின்றேன். நான் அது பற்றிக்கூறியதில்லை. அவரும் கேட்டதில்லை. அவர் அறிந்திருந்தால் நிச்சயம் அதனைப்பாராட்டி மேலும் ஊக்குவித்திருப்பார்.
இதே சமயம் ஒன்பதாம் வகுப்பு , பத்தாம் வகுப்பில் நானிருந்தபோது என் வாசிப்புக்குத் தீனி போட உதவியவர் நண்பர் அமலவண்ணன். அக்காலகட்டத்தில் இவர் என்னுடன் நெருங்கிப்பழகினார். அவருடைய அம்மா, என் அம்மா, அவருடைய அம்மாவின் சகோதரி எல்லோரும் யாழ் இந்துமகளிர் பாடசாலைத்தோழிகள். அவருக்கும் நான் எழுதுவது தெரியுமோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவருக்கு நான் ஒரு தீவிர வாசிப்பாளன் என்பது தெரியும். எனக்கு அதிக அளவில் நான் தேடிக்கொண்டிருந்த நூல்களையெல்லாம் வாசிப்பதற்கு அவர் ஒருவகையில் உதவியிருக்கின்றார். அவரது உறவினர் ஒருவர் மானிப்பாய் 'றோட்டி'ல் வசித்து வந்தார். அவர் எங்களை விட வயதில் முதியவர். அவர் கல்கி, விகடன், கண்ணன் எனப் பல சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளையெல்லாம் அழகாக 'பைண்டு 'செய்து வைத்திருப்பார். அவரிடம் நான் வாசிக்கத்தொடங்கியதற்கு முன்னர் வெளியான தொடர்கதைகள் பல இருந்தன. ஜெகசிற்பியனின் 'பத்தினிக்கோட்டம்', ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' , கி.ராஜேந்திரனின் 'போர்முனை', நா.பார்த்தசாரதியின் 'பொன்விலங்கு' , நா.பா.வின் 'குறிஞ்சி மலர்', அகிலனின் 'கயல்விழி' இவற்றுடன் கண்ணன் சஞ்சிகையில் வெளியான பல சிறுவர் தொடர்கதைகள், சிறுகதைகள் & கவிதைகளின் 'பைண்டு' செய்யப்பட்ட தொகுப்புகள் பலவற்றை நான் அவரிடமிருந்துதான் பெற்று வாசித்தேன். பதிலுக்கு நான் என்னிடமிருந்த நூல்கள் பலவற்றை அவருக்கு வாசிக்கக் கொடுப்பேன். நண்பர் பரதனை முதன் முதலில் அறிந்துகொண்டது அமலவண்ணன் மூலம்தான். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
யாழ் இந்துவில் என்னுடன் படித்த பாடசாலை மாணவர்களை விட வெளியிலும் எனக்குப் பல நண்பர்களிருந்தார்கள். என் அம்மாவின் தம்பியொருவரின் மகன் எனக்கு உறவினன் என்றாலும் ,நண்பனாக விளங்கியவன். குட்டி என்று அழைத்தால்தான் அவனை எல்லோருக்கும் தெரியும். உருவத்தில் குட்டி அல்லன். அவனைச்சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் படையொன்றிருக்கும். அவர்களில் சிலர் எனக்கும் நண்பர்களானார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நண்பர் லிங்கேஸ்வரன். என்னுடன் அக்காலகட்டத்தில் சினிமா, யாழ் நூலகம், யாழ் உணவகங்களென்று அவ்வப்போது அலைந்து திரிந்திருக்கின்றார். அவரைப்போன்ற சிலருக்கு நான் ஈழநாடு பத்திரிகையில் எழுதுவது தெரியும்.
உண்மையில் அக்காலகட்டத்தில் என் வாசிப்புக்கு அதிக அளவில் தீனிபோட்டு நண்பனாக விளங்கிய ஒருவனாக நான் குறிப்பிடுபவன் உண்மையிலேயே மானுட இனத்தைச் சாராத யாழ் பொதுசன நூலகம்தான். அங்குதான் நான் அதிக அளவில் பல்வகை நூல்களையும் இரவல் பெற்று வாங்கி வாசித்து வாசித்து என் வாசிப்புக்குத் தீனி போட்டுக்கொண்டேன். சஞ்சிகை, பத்திரிகைகளை வாசிப்பதற்கு கந்தசாமி 'மாஸ்ட்டர்' வீட்டுக்கு முன்னால் அமைந்திருந்த அண்ணா அறிவகம் உதவியாக விளங்கியது. இவை என் பதின்ம வயது வாசிப்பு அனுபவங்களை விபரிப்பதற்காகக் கூறுகின்றேன்.
இவை தவிர இன்னுமொருவரையும் குறிப்பிட வேண்டும். இவர் என் பால்ய காலத்து வாசிப்புக்கு மிகவும் உதவியவர். அவர் என் அம்மாவின் கடைசித்தம்பி. அண்மையில் கனடாவில் காலமானார். அவர் பெரிதாக வாசிப்பதில்லை. ஆனால் நான் வாசிப்பதை உணர்ந்து தன் நண்பர்களிடமிருந்து வேதாள மயாத்மாவின் காமிக்ஸ், மேதாவி, சிரஞ்சீவி, & தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் என அதிக அளவில் கொண்டு வந்து தந்தவர். உண்மையில் என் யாழ் இந்து கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்த சமயம் அவர் கனடாவுக்குச் சென்று விட்டார். அவர் எனக்கு அவ்விதம் நூல்களைக்கொண்டு வந்து என் வாசிப்புக்கு உதவியது என் பால்ய பருவத்தில் விடுமுறைகளில் நான் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீட்டுக்கு வரும் சமயங்களில்தாம். அத்துடன் ஆச்சி வீட்டுப்பரணும் எனக்கு என் வாசிப்பில் உதவியிருக்கிறது. அக்காலகட்டத்தில் அப்பரண் எனக்கு அள்ள அள்ளக்குறையாத காமதேனு. பழைய கல்கி, ராணி, சஞ்சிகைகளின் சில இதழ்கள், மறைமலையடிகளின் நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள், பெரிய அளவிலான திப்புசுல்தான் நாவல் (எழுதியவர் யார் என்பது நினைவிலில்லை) எனப் பழைய நூல்களையெல்லாம் அங்குதான் வாசித்தேன். பழைய சஞ்சிகைகள் அங்கிருந்ததற்குக் காரணம் தமிழ்ப்பண்ணையில் பணியாற்றிய இளைஞரொருவர்தான். அவர் ஆச்சியின் மீது மதிப்பு வைத்துள்ள ஒருவர். மிஞ்சிய சஞ்சிகைகள், தினத்தந்தி பத்திரிகைகள் போன்றவற்றையெல்லாம் அங்கு வந்து கொடுத்து விடுவார். அவ்விதம் கொடுத்தவை காலப்போக்கில் நிறைந்து விட்டிருந்தன. பிரச்சினை என்னவென்றால் அச்சஞ்சிகைகளெல்லாம் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையல்ல. இதனால் அவற்றில் காணப்படும் தொடர்கதைகளின் ஒன்றிரண்டு அத்தியாயங்களையே வாசிக்க முடிந்தது. வாசிப்பு வெறியனாக இருந்த எனக்கு அவ்வோரிரு அத்தியாயங்களை வாசித்ததும் அத்தொடர்களை முழுமையாக வாசிக்க வேண்டுமென்ற ஆவலோங்கும். அதனால் அப்படைப்புகளைத் தேடி அலைந்ததுண்டுமுன்டு.
இவையெல்லாம் சேர்ந்து என் வாசிப்புக்கு பெருமளவில் உதவின. இதன் விளைவாகத்தான் நான் அதிகமாக அக்காலகட்டத்திலேயே ஈழநாடு மாணவர் மலருக்கு எழுதத்தொடங்கத்தொடங்கினேன். எனவே என் எழுத்துலக முயற்சிகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் , அதற்கு உதவிய வாசிப்புக்கு உதவியவர்களைப்பற்றியும் நிச்சயம் குறிப்பிட வேண்டுமென்பதால்தான் அவர்களை இங்கு நான் நினைவு கூர்ந்தேன். அதே சமயம் என் பால்ய பருவத்திலிருந்து என்னை எழுத ஊக்குவித்து, தொடர்ச்சியாக என் பதின்ம, இளமைப்பருவங்களில் என் படைப்புகளைப்பிரசுரித்த ஈழநாடு பத்திரிகை நிறுவனத்துக்கும், அச்சமயம் அங்கு பணியாற்றி என் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப்பிரசுரித்த எழுத்தாளர்கள் அனைவரையும் நான் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். இவர்களில் ஒருவரைக்கூட நான் நேரில் பார்த்து உரையாடியதில்லை. பின்னர் என் சிறுகதைகளை, ,கட்டுரைகளைப்பிரசுரித்து ஊக்குவித்த ஈழநாடு வாரமலர் ஆசிரியர் பெருமாளைக்கூட நான் ஒரு தடவைகூடப் பார்த்துக் கதைத்ததில்லை. அவ்விதமானதொரு நிலையில்தான் ஈழநாடு பத்திரிகை எவ்வளவு தூரம் என் எழுத்துக்கு உதவியிருக்கின்றது என்பதை உணர முடியும்.
1971 -1974 காலகட்டத்தில் ஈழநாடு மாணவர் மலரில் நான் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை எழுதியுள்ளேன். அவை வருமாறு (இவற்றில் அண்மையில் நூலகம் தளத்திலுள்ள ஈழநாடு பிரதிகளில் கண்டு பிடித்தவை திகதிகளுடன் உள்ளன. ஏனையவற்றில் என்னிடம் பிரதிகளுள்ளன. திகதிகள் தெரியவில்லை. ஆனால் அவை பெரும்பாலும் 73 காலகட்டத்தில் வெளிவந்தவையாகவிருக்க வேண்டும். நூலகம் தளத்தில் அவ்வருடப் பிரதிகளைக் காணவில்லை. 1974இல் வெளியான ஈழநாடு மாணவர் மலர்களையும் தேடிப்பார்க்க வேண்டும்.)
ஈழநாடு மாணவர் மலரில் வெளியான என் பதின்ம வயதின் ஆரம்பப் படைப்புகள் சில:
21.11.71 -கவிதை -வான்மதி - செல்வன் ந.கிரிதரன் - மாணவர் மலர், ஈழநாடு
21.11.71 - ஆசிரியர் - செல்வன் ந.கிரிதரன் - மாணவர் மலர், ஈழநாடு
6.2.72_ வால் நட்சத்திரங்களும் & எரி நட்சத்திரங்களும் - செல்வன் ந.கிரிதரன் - வண்ணார்பண்ணை - மாணவர் மலர்
26.11.72 - மயக்க மருந்து எப்படி வந்தது? - வ.ந.கிரிதரன் - ஈழநாடு மாணவர் மலர் - ஈழநாடு
3.9.72 - வளம் கொழிக்கும் மலைநாட்டில் ஒரு வாரம் - - வ.ந.கிரிதரன் - - மாணவர் மலர் - ஈழநாடு
21.5.72 - மாணவர் அமைதியின்மைக்கு - வ.ந.கிரிதரன் - மாணவர் மலர் - ஈழநாடு -
24.9.72- வாழ்வின் இரு கண்கள் - .ந.கிரிதரன் - மாணவர் மலர் - ஈழநாடு -
8.2.73 - ஒலி பிறந்த போது - வ.ந.கிரிதரன் - மாணவர் மலர் - (ஈழநாடு) -
5.8.73 - விஞ்ஞானிகளாக.. - வ.ந.கிரிதரன் - மாணவர் மலர் - (ஈழநாடு)
- நேற்று - இன்று - நாளை - வ.ந.கிரிதரன் - மாணவர் மலர் - (ஈழநாடு)
- தமிழர் நன்னாள் பொங்கற் திருநாள் - வ.ந.கிரிதரன் - மாணவர் மலர் (ஈழநாடு) -
குட்டிக்கதை - ஈசாப் கதையைத் தழுவி எழுதியது -
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.