வழக்கறிஞரான திரு. விசுவநாதனின் உதவியை நானும் ஒருமுறை பெற்றிருக்கின்றேன். யாழ் பொதுசன நூலகத்தில் காணாமல் போன எனது புது ரலி சைக்கிளைத்திருடியவன் அகப்பட்டபோது. அவ்வழக்கு சம்பந்தமாக எனக்காக யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகியவர் திரு. விசுவநாதன் அவர்களே. காலை முழுவதும் என் வழக்கு எடுக்கப்படாததால் தன் ஜூனியரான சட்டத்தரணியொருவரிடம் என்னைக் கவனிக்கும்படி கூறிவிட்டு அவர் சென்று விட்டார். அந்த ஜுனியர் சட்டத்தரணியே பின்னாளில் யாழ் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய யோகேஸ்வரன். இந்த சைக்கிள் திருட்டு பற்றி ஏற்கனவே என் முகநூற் பதிவின்றில் எழுதியிருக்கின்றேன். அவ்விதம் திரு. விசுவநாதன் எனக்காக ஆஜராகியதற்குக் காரணம் அம்மா. வழக்குக்கு முதல்நாள் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்ற அம்மா சைக்கிள் திருட்டு வழக்கு பற்றிக் கூறியதும் , அவர் தயங்காமல் அதனைக் கவனித்துக்கொள்வதாகக் கூறினார். இதற்காக ஒருவிதத்தில் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
திரு. விசுவநாதனின் கூடப்பிறந்த தம்பிதான் யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர் மகேந்திரன். அவர் என்னுடைய எட்டாம் வகுப்பு ஆசிரியராகவிருந்தவர். இவருக்கு பிள்ளைகள் நால்வர். மூத்த மகன் வி. உருத்திரகுமாரன் இவர் தமிழர் அரசியலில் இன்று நன்கறியப்பட்டவர். இவரும் சட்டத்தரணியே. அடுத்தவர் சிவகுமார். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. சிவகுமார் யாழ் மத்திய கல்லூரி மாணவர். சிறிது காலம் என்னுடன் டியூசன் வகுப்பொன்றுக்கு வந்திருந்தார். மூன்றாவது பெண்பிள்ளை. பெயர் தர்மவதி. மருத்துவர். அடுத்தவர் கிருஷ்ணகுமார்.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அல்லது இறுதிப்பகுதியில் என்று நினைக்கின்றேன் ஒரு முறை விசுவநாதன் தம்பதியினர் 'டொராண்டோ'வுக்கு விஜயம் செய்திருந்தனர். அப்பொழுது மறக்காமல் அவர்கள் அம்மாவை வந்து சந்தித்ததுடன்., அக்காலகட்டத்தில் நடைபற்ற யாழ் இந்துமகளிர் கல்லூரியின்கனடாச்சங்க நிகழ்வொன்றுக்கும் அழைத்துச் சென்றிருந்தனர். இங்குள்ள புகைப்படம் அவர்கள் அம்மாவை அவரிருப்பிடத்தில் வந்து சந்தித்தபொழுது எடுத்த புகைப்படம். அம்மாவிடமிருந்த புகைப்படம். இப்படத்தில் இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: யாழ் இந்துமகளிர் கல்லூர் முன்னாள் ஆசிரியை திருமதி மகேஸ் கந்தையா, அம்மா (திருமதி நவரத்தினம் , 'மங்கை'), திருமதி விசுவநாதன் & திரு . விசுவநாதன். இப்புகைப்படத்தில் அம்மாவின் முகத்தில் தென்படும் மலர்ச்சி அவருக்கு அத்தம்பதியினர் மீதிருந்த அன்பினை வெளிப்படுத்தும். அம்மா இருந்திருந்தால் நிச்சயம் திரு.இராசா விசுவநாதன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு வருந்தியிருப்பார். அம்மாவின் சார்பில், தனிப்பட்டரீதியில் கணவரை இழந்து வாடும் திருமதி விசுவநாதன் அவர்களின் , குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.