[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]
நியூயார்க் மாநகரத்தின் புரூக்லின் நகரின்கண் ஃப்ளஷிங் வீதியில் அமைந்திருந்த சீர்திருத்தப் பள்ளியாகவும், அவ்வப்போது சட்டவிரோதக் குடிகாரர்களின் தடுப்புமுகாமாகவும் விளங்கிய அந்த யுத்தகாலத்துக் கடற்படைக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியின் பொழுதுபோக்குக் கூடமொன்றிலிருந்து இருள் கவிந்திருக்குமிந்த முன்னிரவுப் பொழுதில் எதிரே தெரியும் 'எக்ஸ்பிரஸ்' பாதையை நோக்கிக் கொண்டிருக்குமிந்த அந்தக் கணத்தில் இளங்கோவின் நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக அவன் வாழ்வினோர் அங்கமாக விளங்கிக் கொண்டிருந்த இந்தத் தடுப்புமுகாம் வாழ்க்கைக்கோர் விடிவு. நாளை முதல் அவனோர் சுதந்திரப் பறவை. சட்டவிரோதக் குடியாக அச்சிறையினுள் அடைபட்டிருந்த அவனைப் பிணையில் வெளியில் செல்ல அனுமதித்துள்ளது அமெரிக்க அரசின் நீதித்துறை. அவனது அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்கானதொரு தீர்வு கிடைக்கும் அவன் வெளியில் தாராளமாகத் தங்கித் தனது வாழ்வின் சவால்களை எதிர்நோக்கலாம். அவனைப் பற்றிச் சிறிது இவ்விடத்தில் கூறுவது வாசகருக்கு உதவியாகவிருக்கலாம்... மேலும் வாசிக்க