கொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு! ஒரு சமூகமானிடவியல் பார்வை!
“ பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந்து சில நன்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. வேலை, நுகர்வு என்பவற்றால் தீர்மானிக்கப்படும் வாழ்வைத் தாண்டிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதானமான வாழ்வைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை இந்த நெருக்கடி வழங்கக்கூடும்” என நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியர் Thomas Hylland Eriksen, அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குறுகியகாலத்திற்குள் நாம் அறியப்படாத ஒரு அவசர நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளோம். நோர்வேயில் பெரும்பான்மையான விடயங்கள் தண்டவாளத்தில் நேர்த்தியாகப் போய்கொண்டிருந்த நிலைக்குப் பழகிவிட்டோம். தடம் புரள்வதென்பது எமக்கு மிக அரிதாக நேர்வது. அதனைச் சரிப்படுத்துவதென்பது சவாலானது. இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு முகம் கொடுக்கின்றோம். இனி இருக்கப்போகும் சமூகம் முன்னர் இருந்ததைப் போல் இருக்கப் போவதில்லை. நோர்வே மக்களைவிட மோசமான நெருக்கடியை ஏனைய மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
எனவே முறைப்பாடு செய்வதற்குரிய உரிமை எமக்கில்லை. மொறீசியஸ் தனது ஒரேயொரு விமானநிலையத்தினையும் மூடநேர்ந்திருக்கிறது. வெளியுலகத்துடனான நடமாட்டத் தொடர்புக்கு விமானப் போக்குவரத்தை நம்பியிருக்கும் ஒரு சிறிய தீவுத் தேசத்திற்கு இதுவொரு பாரிய விளைவு. அமெரிக்காவின் சமூகசமத்துவமின்மை மிகப்பெரியது. மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அவர்கள் சுகதேகிகளோ அன்றி நோய்வாய்ப் பட்டவர்களோ வெறுந்தரையில் நிற்கவேண்டி ஏற்படும். காங்கோ போன்ற நாடுகளில் இத்தகைய தொற்றுப் பரம்பல்களைக் கையாள்வதற்குரிய வளங்கள் குறைபாடாகவுள்ளன. வறியநாடுகளில் அனைத்துச் சமூகத் தொழிற்பாடுகளையும் வியாபாரத்தையும் நிறுத்துவது கடினமானது. இருந்தும் கிழக்காசிய நாடுகள் இது விடயத்தில் செயற்திறனைக் காட்டியுள்ளன.