பதிப்பாளர் 'ஜீவநதி' பரணீதரனின் ஓர் அனுபவம்: ஈழத்து எழுத்தாளர்கள், புத்தகம் போட்டவர்கள், போட இருப்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய குறிப்பு! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளரும், ஜீவசஞ்சிகை ஆசிரியரும், பதிப்பாளருமான க.பரணீதரன் யாழ் நகரிலுள்ள ஒரு புகழ்பெற்ற புத்தகக் கடையில் தனக்கேற்பட்ட அனுபவத்தை விபரித்திருந்தார். மிகுந்த அதிர்ச்சியைத் தந்த அனுபவமாக அதனை வாசிக்கையில் நானும் உணர்ந்தேன். அவர் அங்கு எழுத்தாளர்களின் நூல்களை விற்பனைக்காகப் பத்துப் பிரதிகள் கொடுப்பது வழக்கம். பின்னர் ஒரு வருடம் கழித்துச் சென்று விற்கும் நூல்களின் பணத்தைப் பெறுவது வழக்கம். விற்காதவற்றை அங்கு தொடர்ந்து விற்க வைப்பது வழக்கம். வழக்கம் போல் இவ்விதம் அங்கு விற்பனைக்கு வைத்து அவர் , மூன்று வருடங்கள் பின்னர் அங்கு சென்றபோது அங்கு அவர் கொடுத்திருந்த நூல்களின் நிலைகண்டு அதிர்ச்சி அடைந்தார். நூல்கள் மீண்டும் பாவிக்கவே முடியாத அளவுக்கு அழுக்கான சூழலில் வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் அப்புத்தக்கடையில் விற்கப்படும் நூல்களுக்கான பணத்தைப் பெறுவதிலுள்ள சிரமங்களையும், அங்கு பணியாற்றுபவர்கள் நடந்துகொள்ளும் முறையினையும் கவலையுடன் விபரித்திருந்தார். தான் இவ்விதம் இப்பிரச்சினையை வெளிப்படுத்துவதற்குக் காரணம் அப்புத்தக்கடை நல்ல முறையில் தவறுகளைக் களைந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள். இப்புத்தக்கடை தன்னைச் சீரமைத்துக்கொள்ளாதவரை, எதிர்காலத்தில், உங்கள் பதிப்பகம் மூலம் என் நூல்கள் வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், என் நூல்களை அப்புத்தக்கடைக்குக் கொடுக்காதீர்கள்.
பரணீதரன் தனது பதிவில் புத்தகக் கடையின் பெயரைக்குறிப்பிடவில்லை. ஆனால் வேம்படி சந்தியிலுள்ள கடை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். கூகுள் வரைப்படத்தின் 'வீதிப்பார்வை' மூலம் அச்சந்தியை அவதானித்தபோது அதிலிருந்த ஒரேயொரு புத்தக்கடை பூபாலசிங்கம் புத்தகக் கடை என்பதை அறிந்து உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். பரணீதரனின் அக்கடையின் படத்தைக்காட்டி அதுவா கடை என்று கேட்டபோது அவர் ஆமென்றார்.
பூபாலசிங்கம் புத்தக்கடைக்கு இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமானதோர் இடமுண்டு. குறிப்பாக எழுத்தாளர்கள் சந்திக்கும் இடமாக, நூல்கள் வாங்கும் இடமாக அது விளங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நனவிடை தோய்தல்களில் அது நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அண்மையில் கனடாவில் மறைந்த எழுத்தாளர் இராஜகோபாலன் மாஸ்டர் கூட அங்குதான் பலரை எஸ்.பொ. , டொமினிக் ஜீவா என்று சந்தித்திருக்கின்றார். அது பற்றி டொமினிக் ஜீவா நனவிடை தோய்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவ்விதமானதொரு முக்கியமான புத்தகக் கடையில் புத்தகங்கள் இவ்விதம் அழுக்கான சூழலில், மீள்பாவனைக்குரியதல்லாத நிலையில் பேணப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல. விற்பனையான நூல்களுக்கான பணத்தைப் பெறுவதில் இவ்வளவு சிரமங்களைப் பதிப்பாளர்கள் எதிர்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பூபாலசிங்கம் பதிப்பகத்தார் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களென்று நிச்சயம் நம்புகின்றேன்.