(பாலின் நிலைமாற்றத்தினை பாலின மாற்றம் என்பதா, பால்நிலைப் பிறழ்வென்பதா என இக் கட்டுரை 05.05.2012இல் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு 39இல் வாசிக்கப்பட்டபோது ஒரு பிரச்சினை தோன்றியது. பால்நிலை மாற்றம் என்று குறிப்பிடுவதே சரியென்று, இலக்கியச் சந்திப்பு வாசிப்பின் பின் நான் யோசித்திருந்தாலும், மீண்டும் மீண்டுமான என் யோசிப்பில் அலியென்பது ஒரு பிறழ்வெனவே தோன்றியது. ஆண் அல்லது பெண் ஆகவேண்டியது இரண்டுமல்லாததாக ஆவது ஒரு பிறழ்வுதான். ஆனால் ஆண் அலி, பெண் அலி தம்மைப் பெண்ணாக மாற்றிக்கொள்வதை மாற்றம் எனக் குறிப்பிடல் சரியாகலாம். எனவே தொடர்ந்தும் பிறழ்வு என்ற சொல்லையே இக் கட்டுரையில் நான் பாவித்திருக்கிறேன். சில இடங்களில் வரநேர்ந்திருக்கும் மாற்றம் என்ற சொல்லை நான் வலிந்து மாற்ற முயற்சி செய்யவில்லை.) பால் நிலைப் பிறழ்வு குறித்தும், பாலியல் சார்ந்த பகுப்புகள் குறித்தும், கலவி நிலைகளும் அதுபற்றிய விளக்கங்கள் பற்றியும் சிந்திக்க முனையும் ஒருவருக்கு, அவைபற்றிய முதல்நிலைத் தகவல்களைத் தருபவை கீழைத் தேய எழுத்துக்களாகவே இருக்கின்றமை வெளிப்படையானது.
கிறித்துவுக்கு முந்திய சகாப்தத்தில் தோன்றியவையெனக் கருதப்படும் இந்திய வேதங்களிலிருந்து, உலகின் முதல் நாவல் எனக் கருதப்படும் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யப்பானிய நூலான ‘செஞ்சி மொனொகாதரி’ (Genji Monogatari) ஊடாக பால்நிலை சார்ந்த விபரங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டும், விசாரணைப்படுத்தப்பட்டும் வந்துள்ளமையைக் காணமுடியும். கலவி நிலை சார்ந்து விஞ்ஞானபூர்வமான தகவல்களைக்கொண்ட முதல் நூலாக வாத்ஸாயனனின் ‘காமசூத்திரம்’ கொள்ளப்படுவதிலிருந்து, கீழைத் தேய எழுத்துக்களில் உள்ள விபரணங்கள் பால்நிலையும் அதன் மாற்றமும் குறித்தான ஒரு விடயத்தில் முக்கியமானவை என்பதை உணர முடியும்.
மனித தோற்ற காலத்திலிருந்து உண்டாகியிருக்கக்கூடிய வகைமையும் பிரச்சினையும்தான் இவையெனினும், இப் பிரச்சினைகள் செவ்விலக்கியங்களில் பேசப்பட்டவைக்கான சான்றுகள் இன்றுவரை அகப்படவில்லையெனவே பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. ஆனால், வேத காலத்தைத் தொடர்ந்த இதிகாச காலத்தில் தோன்றிய மகாபாரதத்தில் மாற்றுப் பாலினர் குறித்தான தகவல்கள், அக்காலத்துக்கு இயைந்த அளவிலும் புரிதலிலும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன எனக் கருதுவோரும் இருக்கின்றனர்.
மகாபாரதம் எழுதப்பட்ட காலத்துக்கு ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பெற்ற பகவத்கீதையானது இடைச்செருகலாக அதனுள் இடம்பெற்றது என இன்றைய மொழி, சமூக வரலாற்று ஆய்வாளர்களால் தெரியப்படுத்தப்படுகிறது. ஒரு பழைய பிரதியின் மறுவாசிப்புக்கான அளவை அலகுகளை இவ்வகை ஆய்வுகளே அளிக்கின்றன.
மகாபாரதக் கதையானது பொதுவான தமிழ்க் கதையாடல் தளத்தில் எல்லோராலும் அறியப்பட்ட கதைதான். ஆனாலும் அதன் நுண்மைகள் 2 லட்சம் வரிகளைக்கொண்ட வியாச பாரதத்திலிருந்தும், ஏறக்குறைய பத்து லட்சம் பக்கங்களுக்கும் மேலான அது குறித்த ஆய்வு, மறுவாசிப்பு மற்றும் மாற்றுக் கதையாடல்களிலிருந்துமே ஒருவரால் அறியப்பட முடியும். அந்த வகையில் புத்துருவாக்கம் பெற்றிருக்கிற ஒரு மகாபாரதப் பாத்திரம்தான் சிகண்டி.
சிகண்டி பீஷ்மனின் மரணத்துக்குக் காரணமானவன். அந்த சிகண்டி பாத்திரம், வியாச பாரதத்திலுள்ள அளவு அன்றி, பாரதத்துக்கு மூலமானதும், சூதரதும், மாகதரதும் கதையுரைப்பில் வாய்மொழி இலக்கியமாய் நிலவி நின்றதுமான யோஜனகந்தியில் பரந்திருந்தது. அம்பை என்கிற காசிராஜனின் மகள் சிகண்டியான கதை சொல்லப்படுகிறது அதில்.
கலவிக் களிப்பில் எந்நேரமும் மயங்கிக்கிடந்த விசித்திரவீரியனுக்காகப் பெண் கேட்கப்பட, காசிராஜன் அதை மறுதலிக்கிறான். சினமடைந்த பீஷ்மன் காசி நாட்டின்மேல் படையெடுத்து அவனது அம்பிகா, அம்பாலிகா, அம்பா ஆகிய மூன்று பெண்களையுமே சிறையெடுத்துச் செல்கிறான். அவர்களில் அம்பிகாவும், அம்பாலிகாவும் பீஷ்மன் தங்களுக்குக் கணவனாக வரப்போகிறானென அடங்கியிருக்க, சாலுவ நாட்டரசன் பிரமதத்தனை தான் விரும்புவதாகக் கூறிக் கதறுகிறாள் அம்பா. பீஷ்மன் தவறினை உணர்ந்து அக்கணமே அவளைத் தேரினின்றும் இறக்கிவிட்டுச் செல்கிறான். பிரமதத்தன், சிறையெடுக்கப்பட்ட அவளை மணக்க மறுப்பதுவும், அதனால் அத்தனை இன்னல்களுக்கும் காரணமான பீஷ்மனே தன்னை மணம் முடிக்கவேண்டுமென்ற அம்பாவின் உறுதியும், பீஷ்மனின் குருவான பரசுராமனின் வேண்டுகோளும், காசிராஜனின் இறைஞ்சுதலும்; பீஷமனின் மறுதலிப்பால் உடைவது எல்லாம் அம்பாவை வெஞ்சினம் கொள்ளவைக்கின்றன.
‘அம்பை குமுறத் துவங்கினாள். அவளுள் அக்கினிப் பிழம்பு பொங்கிப் பெருக்கெடுத்தது. தன் பெண்மையின் அவமானத்துக்கு இறுதியில் தானே பீஷ்மனை வஞ்சம் தீர்க்க தீர்மானமெடுத்தாள். வெடித்துச் சிதறும் எரிமலையாய்க் காடடையும் அம்பை, தபோ கிருத்தியங்களாலும் அசுர அஸ்திர சாதகத்தாலும் தன் பெண் தன்மையையே அழித்தாள். மிருதுவான மேனி வன்மை கண்டது. பெண்மை பெருகியிருந்த அவயவத்தில் பௌரு~த்தின் அகற்சி. நாண் தழும்பேறிக் காய்த்தன கைகள். பெண்ணின் மாறா அவயவத்துடன் ஆணாய் ஓர் அபூர்வ அடைதல். நாடு திரும்புதலை மனம் முற்றாய் நிராகரித்தது. ஒரு மறைவுக்குள் கருவின் புரள்வுபோல் அமைதியடையாது இயங்கிக்கொண்டு நதியாய், காற்றாய், மேகமாய் அலைந்தாள். அவள் விழியோ பீஷ்மனின் மரண திசை வாசலில் மய்யம் கொண்டபடி. ஒருநாள் யதுசேனன் என்ற அரசனின் அரண்மனையை அடைகிறவளை அவன் தன் பிள்ளையாக ஏற்றுக்கொள்ள, சிகண்டியென்னும் மறுநாமமெடுத்து தன் காத்திருத்தலைத் தொடர்ந்தாள் அம்பை.’ இவ்வாறு எனது ‘கதாகாலம்’ நாவலில் எழுதப்பட்டிருக்கும்.
இதையே அம்பை ‘பனித்தீ’ என்ற நாட்டிய நாடகமாக சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் மேடையேற்றியிருந்தார். கிராமிய நாட்டுக்கூத்தொன்றின் மெட்டில், கவிஞர் இன்குலாப்பின் வரிகளில் வெகு பரவசம் விளைத்த நாட்டிய நாடகங்களில் ஒன்று அது. ஒரு மறுவாசிப்புப் பிரதியாக்கத்தின் வலுவான கூறுகளை அதில் காணக்கூடியதாக இருந்தது.
பால்நிலை சார்ந்த மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து அம்பையின் கதை பேசுவதாகக் கொள்ளலாம். பாரதத்தின் மறுவாசிப்பான ‘கதாகாலம்’ நாவலினாலும், ‘பனித்தீ’ நாட்டிய நாடகத்தினாலும்கூட இவ்வாறு பால்நிலை மாற்றத்தின் காரணமாக ஒருவரில் எழும் பால்நிலை விருப்பங்கள்பற்றிய விபரிப்பு அதற்குமேல் ஒரு புராண, இதிகாச கதையில் ஏற்றப்பட முடியாதவையே.
மகாபாரதத்தில் வரும் இன்னொரு முக்கியமான பாத்திரம் அரவான். உலோபிக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த மகன். பாரத யுத்தத்தில் வெற்றிக்கான வேள்வியில் பலியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவன் இவன். இளைஞனான அவனது பலியின் முன் இளமையைத் துய்ப்பதற்கான வாய்ப்புக்காக அவனுக்கு மணம்முடித்துவைக்க முயற்சிக்கிறார்கள். இறக்கப்போகும் ஒருவனுக்குப் பெண் தர எந்தப் பெற்றோரும் முன்வராதது விசித்திரமானதில்லை. அந்தத் தருணத்தின் அவலநிலையைப் போக்க கிருஷ்ணனே பெண்ணாக உருவெடுத்து வந்து அரவானை மணந்ததாக மகாபாரதம் கூறும்.
இதையே இன்றைய வாசிப்பில் ஒருபாலின புணர்ச்சியாக நாம் விளங்கிக்கொள்கிறோம்.
‘தாயின் வயிற்றிலிருந்து அன்னகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு. மனு~ர்களால் அன்னகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு. பரலோக ராஜ்ஜியத்தின் நிமித்தம் தங்களை அன்னகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்;லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன்’ (மத்தேயு 19-20) என்கிறது விவிலியம். ‘பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்றான்’ என்கிறார் மாணிக்கவாசகர்.
இவ்வாறு வேதகாலம், விவிலிய காலம், பின்னால் பக்தி இலக்கிய காலம்வரைக்கும் ஒதுக்கப்படாதவர்களாக இருந்த மூன்றாம் பாலினர், பிற்காலத்தில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக ஆனதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை.
மனோரீதியாகவும் உடல்ரீதியாகவும் பால்நிலை மாற்றம் கொள்வோர் சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாதவர்களாக, ஏன் தத்தமது குடும்பங்களினாலேயே ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாக இருப்பதற்கான காரணத்தை விளங்கிக்கொண்டு அப்பாத்திரங்கள் படைக்கப்பட்டன எனக் கூறமுடியாதுதான். ஆனாலும், சற்று முன்னரான காலம்வரைக்கும் அலிகள் என்று அழைக்கப்பட்டு வந்தவர்கள் இன்று அரவாணிகள், திருநங்கைகள் என்று குறிக்கப்படுவதற்கான ஒரு விசையை இந்தக் கதையின் மறுவாசிப்புக்கள், குறிப்பாக நாட்டுக்கூத்துக்களும், நாட்டார் பாடல்களும் ஏற்படுத்தின என்பதை இந்த இடத்தில் ஞாபகம் கொள்வது தக்கது.
அரவானின் ஒருநாள் மணவாழ்க்கையை மய்யமாகக்கொண்டு தாமும் ஒருநாள் வாழ்ந்து மறுநாள் தாலி அறுத்து விதவைகளாகும் அரவாணிகளின் திருவிழாவே தமிழகத்தில் கூத்தாண்டவர் கோயிலின் பெருவிழாவாகவும் நடைபெறுவது இதன் இன்னொரு கூறு. நம் சமூக அமைப்பில் பௌதிக, சமூக பெண் ஆண் மூன்றாம் பாலினர்மீது ஆதிக்கம் செலுத்தும் கட்டமைப்பின் மாற்றங்கள் வற்புறுத்தப்படவேண்டியதெனினும், அதன் புரிதல் முக்கியமானதாகும். அதை ஒருவகையில் எழுத்துப் பிரதிகளினைவிடவும் எழுதாப் பிரதிகள் செய்துவந்துள்ளன என்பதே உண்மை.
அந்தவகையில் குறிப்பிடப்படவேண்டியது அல்லியரசாணி மாலை, பெண்ணரசியார் கதை போன்றன. இன்றும் நிகழ்த்து கலை வடிவத்தில் அல்லியரசாணி மாலை தமிழ்நாட்டில் பரவலாக மேடையேறுகிறது. வாய்மொழி மரபில் நீண்டகாலம் நிலவிவந்த அல்லியரசாணி மாலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சேற்றப்பட்டதாக அறியமுடிகிறது. இதன் பல்வேறு பிரதிகளில் எஞ்சி அச்சாக்கம்பெற்ற பிரதி பிற்காலப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. படைப்பாளியின் பெயர் அறியப்படாத பல நற்பிரதிகளும், உண்மையில் அவை பல ஆசிரியர்களாலும் பல காலங்களிலும் மாற்றமும் செழுமையும் செய்யப்பட்டு வந்திருந்தாலும் ஓர் இலக்கியத் தேவை கருதி ஒரு பழம்பெரும் ஆசிரியர்மேல் ஏற்றப்படுகிற மரபையொட்டி புகழேந்தி தலையில் அது ஏற்றப்பட்டமையை இலகுவாக உணர்ந்துகொள்ளலாம்.
அல்லி என்னும் பெண்ணரசியின் பிறப்பு வளர்ப்பு வாழ்வு ஆகியனவே விளக்கப்பெறுகிறதெனினும், பிரதி நெடுகவும் அல்லி ஆணாகவும் பெண்ணாகவுமே குறிக்கப்பெறுகிறாள். அவளது பிறப்பும் ‘அல்லி மலரின்மீது அழகான ஆண்குழந்தை இருக்கிறது. அது ஆணும் பெண்ணும். அதை எடுத்துக்கொள்ளுங்கள்’ என மீனாட்சி ஆரம்பத்தில் கதைப்பாடலில் குறிக்கப்பெறுவதிலிருந்து அவளது இருபால் தன்மையை அறிய முடிகிறது. இதுபோன்ற கதைப்பாடல்கள் ஒருவகையில் எதிரிலக்கியமாக வளர்ந்து வந்தவையே. செவ்வியல் இலக்கியங்களைவிட இவ்வகையான நாட்டார் கதைப்பாடல்களில் உண்மையின் பல்வேறு அலகுகள் துலாம்பரமாக இருப்பதைக் காணலாம்.
அல்லியின் பிறப்பு வெளிப்படுத்தப்படும் மாதிரியும் வித்தியாசமானது. இறைவி மீனாட்சி தன் உடம்பிலிருந்து தோள் தசையை பிய்த்து வீச, அது அல்லி மலரில் விழுந்து குழந்தையாக மாறியதாகக் கதை. அல்லியரசாணி மாலை இதன்மூலம் சமஸ்கிருத மொழியின் பெண்கள் ஆளும் நாடுகள்பற்றிய கதையிலிருந்து பெரிதும் மாறுபட்ட கதையாடலைத் திறக்கிறது. வாய்மொழி மரபின்படி பாண்டிய நாடு ஒரு பெண்ணால் அமைக்கப்பட்டது. இதன்படி அல்லிநாடும் மண்ணின் மரபையொட்டிய ஒரு சித்திரிப்பையே செய்கிறது எனலாம்.
அல்லியரசாணி மாலை பெண்களுக்கான ஓரினச் சேர்க்கை வெளியை வெளிப்படையாகப் புலப்படுத்தாவிடினும், அல்லியின் இச்சைகள் மய்யம்கொள்ளும், குறிப்பாக வயதான ஒரு பிராமணனின் இளம் மனைவிமீது இச்சைப்படும் சம்பவங்கள் இவ்வெளியை நோக்கியே நகர்பவை.
பால்நிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகள் பெரும்பாலும் சமகால இலக்கியங்களில் குறிக்கப்பெற்றிருப்பினும், அதற்கான பதிவுகள் ஆய்வுகள் அரிதாகவே தென்படுகின்றன தமிழ்ப் புலத்தில். அதற்கு பூர்வாங்கமான முயற்சியே இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுவது.
அரவாணிகளே படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இக்காலம், பல்வேறு வாசல்களைத் திறந்துகொண்டிருக்கின்றன. ரேவதி, வித்தியா, ஆஷா பாரதி போன்றவர்கள் கவிதை, கட்டுரை, அனுபப் பகிர்வு, நேர்காணல்கள் மூலம் நேரில் பேசவந்திருக்கும் இன்றைய சூழல் இதுகுறித்த பல்வேறு தரவுகளைத் தந்துகொண்டிருக்கிறது. ரேவதியின் ‘உணர்வும் உருவமும்’ கட்டுரைத் தொகுப்பும், ஆஷாபாரதியின் ‘ஒரு காகிதப்பூவின் நாட்குறிப்பிலிருந்து’ கவிதையும் முக்கியமானவை.
இருந்தாலும் நாவல், சிறுகதை என்ற படைப்புப் பெருங்களத்தில், இது குறித்த வரவுகள் இல்லையென்கிற அளவுக்கு மிகமிகக் குறைவானவையே. உடனடியாகச் சொல்வததென்றால் சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவலும், இரா.நடராசனின் ‘மதி எனும் மனிதனின் மரணம் குறித்து’ என்ற சிறுகதையுமே ஞாபகத்துக்கு வருகின்றன. ஆனால் பாவண்ணனின் ‘வக்கிரம்’, இலட்சுமணப் பெருமாளின் ‘ஊமங்கடை’, கி.ராஜநாராயணனின் ‘கோமதி’ போன்ற சிறகதைகளும் இத்துறை குறித்தன எனத் தெரியவருகிறது.
‘வாடாமல்லி’ நாவலுக்குப் பின் அண்மையில் வெளிவந்துள்ள ‘கசகறணம்’ நாவலில் வரும் கனகவேல் என்ற பாத்திரம் முக்கியமானது. பெண் தன்மைகளுடனான அந்தப் பாத்திரத்தின் உணர்வுக் கோலம் மாறுபட்டது. அந்தப் பாத்;திரத்துக்கும் ஆண்மேலான இச்சையும் பாலியல் துய்ப்பும் மட்டுமில்லை, பிரிவின், கைவிடலின் வலியும் அதில் நன்கு பேசப்பட்டிருக்கிறது. அதை குலத்தழகிக்கும் கனகவேலுக்குமிடையிலான ஓர் உரையாடல் தெளிவாக விவரிக்கிறது.
‘ “என்னடா கனகவேல், உன்னய இவ்வளவு காலமும் காணயில்ல. செத்துக்கித்துப் போயிற்றயோயெண்டுதான் நினைச்சன். என்ன அம்பாறை வேலையை உட்டுற்றயோ?”
“செத்திருந்தாலும் பரவாயில்லை, குலத்தழகி. ஏன்னத்துக்கு இரிக்கோணும்?”
“ஏண்டா?”
“ இல்ல பொட்டஈ கட்டிக்கொண்டு போற சோத்துப் பொட்டிய ஒவ்வொரு நாளும் தட்டிப்பறிச்சி திண்டுபோட்டு, வேளாவேளைக்கு வாய் சிவக்க வெத்திலையும் வாங்கித் திண்டுபோட்டு திடீரெண்டு சொல்லுறான், ஊட்டுல அம்மைக்காரி பொண் பார்த்திருக்காவாம் கல்யாணம் கட்டப்போறானாம்.”
“ ஆருடா…என்னடா சொல்லுறாய்?”
“ஆரு…கரும்புபாம் ஓவசியர்தான்.”
“ஆ…ஓவசியர் உன்னய ஏமாத்திப் போட்டாரெண்ட கவலைதானோ உனக்கு.” குலத்தழகி சொல்ல மைலிப் பெத்தாவும் வெள்ளும்மாவும் சேர்ந்தே சிரிச்சிற்றாங்க.’
நாவலின் நீண்ட பகுதிக்கு பாத்திரம் நகர்வது மட்டுமில்லாமல், அதன் செயற்பாடுகள்மூலமாக நாவலின் மைய ஓட்டமும் விளக்கப்படுகிறது. இராணுவ தேடலின்போது பிடிக்கப்படும் கனகவேல் ஒருபோது அடி உதை படுவதோடு, இன்னொரு தேடலில் அகப்பட்டு தற்காலிக காவல் முகாமில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில் வெளிக்குப்போன சமயம் சுட்டும் கொல்லப்படுகிறான். சமூகத்தின் ஓரங்கமாக கனகவேல் காட்டப்படுவது முக்கியமான அம்சம்.
கனகவேலின் தோற்றம் நாவலில் காட்டப்படும் பாங்கு பாராட்டப்படக் கூடியது. ‘கனகவேல் கண்வெட்டி, கழுத்து நெளிச்சி பேசுறதப் பார்க்குறபோது ஆம்புளப் பொடியன் இவன் இப்பிடியெல்லாம் இருக்கானேயெண்டு ஆரையும் அருவருப்படையச் செய்யாது. ஆயிரத்துல ஒன்று அதிசயமாப் புறந்ததப்போல பார்க்குறாக்களக் கவர்ந்து கொள்ளுறாப்போலதான் கனவவேல் இருப்பான். போதாக்குறைக்கு எந்த அப்பழுக்கும் இல்லாத அவண்ட உடல் தோற்றத்துல மயங்குன ஆம்புளையளும் உண்டெண்டுதான் சொல்லோணும்’ என்பது நாவலில் வரும் கனகவேல் பற்றிய விவரணம்.
கனகவேல் இல்லையேல் பால்நிலைப் பிறழ்வுகள் குறித்த இந்த வி~யத்தை உடனடியான ஒரு சிந்தனைக்காக நான் தேர்வு செய்திருக்க வாய்ப்பில்லை. கனகவேல் ஆண் தோற்றத்தில் பெண்ணின் வாழ்வை வாழும் ஒரு பிறவியாகவே நாவலில் காட்டப்பட்டுள்ளது.
பால்நிலை மாற்றப் பிரச்சினையானது, ஒரு சமூக அக்கறையாக மாறியது மேலை இலக்கியங்களிலும் மிகக் குறைவாகவும், மிகப் பிந்திய காலத்ததாகவுமே தெரியவருகின்றது. கிரேக்க, உரோம தொன்மங்களில் பேசப்பட்ட டைசீரியஸ் கதையை இதன் ஆரம்பமாகக் கொள்ளலாம்.
ஹேர்குலின் பார்பின் கதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்சை மட்டுமில்லை, முழு ஐரோப்பாவையுமே உன்னிக்க வைத்தது. மருத்துவ, தத்துவ, சமூக தளங்களிலேயே இக் கதை முக்கியப்பட்டிருப்பினும் பின்னால் அது கலை இலக்கியத் தளங்களிலும் தன் பாதிப்பைச் செய்திருந்தது.
1838 இல் பிரான்ஸ் நாட்டிலே ஒரு சிறு கிராமத்தில் பெண்ணாய்ப் பிறந்த ஒரு ஜீவன்தான் ஹேர்குலின் பார்பின். வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கத்தோலிக்க மதத்தவளானதால் கான்வென்டில் படிப்பதற்கான உதவி கிடைக்கிறது. கான்வென்ட் படிப்பு தொடர்ந்துகொண்டிருக்கையிலேயே அவள்மீது தன் நண்பர்களின் அறைகளுக்குள் இரவில் நுழைந்துவிடுவதாக ஒழுக்கம், ஒழுங்கு சார்ந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
இருந்தும் கான்வென்ட் படிப்பைப் பூரணப்படுத்தும் ஹேர்குலின் ஆசிரியப் பயிற்சி அளிக்கும் கல்லூரியில் இணைந்து ஓர் ஆசிரியையாக வெளியேறுகிறாள். அவளது தன்னினச் சேர்க்கை ஆர்வம் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலேயே கவனிக்கப்பட்டது. ஒருபோது நோய்வாய்ப்படும் ஹேர்குலின் பரிசோதிப்பின் பின் முழு மருத்துவ பரிசோதனைக்கு சிபார்சுசெய்யப்படுகிறாள். அவள் பூப்படைந்திருந்தாலும் மாதவிலக்கு ஏற்படாதிருந்தது மருத்துவர்களை ஆலோசிக்க வைத்தது. இருந்தும் அவளது ஒழுக்கம் சார்ந்ததும், உடல்கூறு சார்ந்ததுமான எதுவும் அவளது பயிற்சி முடிப்பில் எதுவித பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை. 1875இல் ஒரு நகரப் பள்ளியில் அவள் ஓர் உதவி ஆசிரியையாகப் பணியேற்கிறாள்.
அங்கேயும் ஓர் ஆசிரியையுடன் ஹேர்குலினுக்கு பாலியல் தொடர்பு ஏற்படுகின்றது. ஒருமுறை பாவமன்னிப்பு பெறச் செல்லும் ஹேர்குலின் தன் அந்தரங்கத்தைத் திறக்கிறாள். திடுக்கிட்டுப்போன பாதிரியார் அவளை மருத்துவ பரிசோதனைக்கு இசைய வைக்கிறார். அவளைப் பரிசோதித்த டாக்டர் செஸ்நெற் என்பவர் அவளது உடற்கூறின் தன்மையைத் தெரிவிக்கிறார். அவள் ஓர் ஆணாகவும் இருந்தது அப்போதுதான் தெரியவருகிறது. உடலினுள் சிறிய ஆண்குறியொன்றும், விதைகளும் இருப்பதைத் தெரிந்த மருத்துவ உலகம் ஆச்சரியப்படுகிறது. அதுபோன்ற உடற்கூற்றினை விளக்க அப்போதுதான் உரிய சொல்லும் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை அயடந pளநரனழாநசஅயிhசழனவைளைஅ என்கிறார்கள். நீண்ட காலத்துக்கு அந்தச் சொல்லே மருத்துவ உலகத்தில் புழக்கத்தில் இருந்தது.
மேற்கொண்டும் ஆசிரிய பதவியில் இருக்க முடியவில்லை ஹேர்குலினினால். அவளால் பெண்ணாகவும் இருக்கமுடியாத நிலை. தனது பெயரை ஆபெல் பார்பின் என மாற்றிக்கொண்டு அவள் பாரிஸ் நகருக்கு இடம்பெயர்கிறாள்.
அங்கே அவள் அவனாக வாழ்கிறாள். வேலையின்மை, வறுமை, தன் உடற்கூற்றினால் தானே தனக்கிட்ட தனிமையென ஆபெலின் வாழ்க்கை மிக்க கடினங்களுடன் தொடர்கிறது. தன் உடற்கூற்றின் விபரங்களை, தான் உணர்ந்த விதங்களை அப்போதுதான் எழுதிவைக்கிறான் ஆபெல். 1868இன் ஓர் அதிகாலை நேரத்தில் தன் அறைக்குள்ளேயே மரித்துக்கிடந்த ஆபெலுக்கு அருகே அவன் எழுதிவைத்த சுய நினைவுக் குறிப்புகள் இருந்தன.
ஆபெலின் இறப்பின் பின் நிகழ்ந்த பிரேத பரிசோதனையில் அவன் சமையலுக்கான எரிவாயுவைத் திறந்து வைத்து தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் உலகுக்குத் தெரிய வந்தது.
1872இல் ஆபெலின் சுய நினைவுக் குறிப்புகளின் ஒரு பகுதி அச்சு ரூபமாக வெளிவந்திருப்பினும், ஆபெலின் நிலையோ, அவனது உடல்கூற்றுத் தன்மைகளோ மருத்துவ உலகத்துக்கு அப்பாலான கவனத்தை ஈர்க்கவில்லையென்றே கூறவேண்டும்.
எதிர்பாராதவிதமாக, French Dept. of Public Hygiene இலிருந்து ஆபெலின் சுய நினைவுக் குறிப்பேடு மிஷல் பூக்கோவின் கைகளில் அகப்படுகிறது. Herculine Barbin: Being the Recently Discovered Memoir of 19th century French Hermaphrodite என்ற தலைப்பில் பிரெஞ்சு மொழியில் மிஷல் பூக்கோவின் விவரக் குறிப்புகளுடன் நூலாக வெளிவருகிறது.
இச் சுய நினைவுக் குறிப்புகளின் ஆதாரத்தில் உருவான பிரெஞ்சு சினிமாதான் The Mystery of Alexina. Carlyl Churchil, David Lan ஆகியோரின் A Mouthful of Birds என்றதும், Kate Bornstein இன் Hidden: A Gender என்றதுமான மகத்தான நாடகங்களும் ஆபெலின் கதையை ஆதாரமாகக்கொண்டு வெளிவந்தன.
பால்நிலைப் பிறழ்வு குறித்த ஆய்வுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மேற்பாதியில் தீவிரமடைந்தது. ஓஇலு ஊhசழஅழளழஅந கள்பற்றிய ஆய்வுகள் வெளிவந்தது இக்காலகட்டத்திலேதான். ஓஇலு குரோமோசோம்களின் சேர்க்கை விகிதமே இப் பால்நிலைப் பிறழ்வின் காரணமென அறியப்பட்டது. எக்ஸ் குரோமோசோம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னரே வை குரோமோசோம் கண்டுபிடிக்கப்பட்டதாயினும், எக்ஸ் குரோமோசோமே பால் நிலைபாட்டில் முக்கிய அங்கம் வகிப்பது. பாலியல் உணர்வுகளின் மாறுபாடு, அதிகரிப்பு என்பன மனித நினைப்புகளாலன்றி உடற்கூற்றின் தன்மையினால் விளைபவை என்ற உண்மையை உலகம் அறிந்தது. சமூகரீதியாக இது எந்தவொரு மாற்றத்தையாவது உடனடியாக நிகழ்த்தியதா என்ற விபரம் அறியக் கிடைக்கவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் மிகப் பாரிய மாற்றங்களை அந்த முடிவு விளைத்தது. இந்நிலைதொட்டே Inter-sexuality என்ற பதமும் இன்னும் கூடுதலான அர்த்த பரிமாணத்தோடு மருத்துவ உலகில் புகுந்தது.
இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அது செய்த தாக்கத்தின் விளைவை அறிய வேர்ஜீனியா வுல்ப் 1928இல் வெளியிட்ட நாவலான (Orlando) ஒர்லாண்டோ ஒரு மாதிரியைத் தரலாம்.
ஹேர்குலின் பார்பினின் கதையும், ஒர்லாண்டோவின் கதையும் வித்தியாசமானவை. ஹேர்குலின் பெண்ணாக இருந்து ஆணாக மாறுகிறாள். ஓர்லாண்டோவோ ஆணாக இருந்து பெண்ணாக மாறுகிறான். ஓர்லாண்டோ இளைஞனாக இருந்தபோது சாஸா என்கிற ரஷ்ய தூதுவராலயத்தில் வேலைசெய்த ஒரு ரஷ்ய மன்னர்குடிப் பெண்மீது மோகம் கொண்டிருந்தாலும், அவள் லண்டனை நீங்கி ரஷ்யா சென்றதும், அவனுக்கு ஏற்படும் பாலியல் தொடர்புகள் ஆண்களோடேயே அமைகின்றன. அவன் வுhந ழுயம வுசநந என்ற கவிதையையும் எழுதத் தொடங்குகிறான்.
இடையில் இரண்டாம் சார்ள்ஸ் அரசர் ஆட்சியில் கொன்ஸ்தாந்திநோபிளுக்கு இங்கிலாந்துத் தூதுவராக அவன் அனுப்பப்படுகிறான். அங்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் ஒரு பிரச்சினை சமூகக் கலவரமாக மாறுகிறது. அக் கலவரத்தில் கிளம்பும் ஆரவாரத்தில்கூட தூக்கத்திலிருந்து எழும்பாமல் துயில்கொள்ளும் ஒர்லாண்டோ, மறுபடி எழும்புகிறபோதுதான் உணர்கிறான் தான் பெண்ணாக மாறியிருப்பதை.
ஜிப்ஸிகளோடு கலந்து பெண்வேடத்தில் லண்டன் வரும் ஒர்லாண்டோ பெரிய சமூக எதிர்ப்புகளைப் பெரும்பாலும் சந்திப்பதேயில்லை. ஆணாக ஒரு போதும், பெண்ணாக வேறொரு போதுமாக தன் அடையாளத்தை மாற்றிமாற்றி அவனால் தன் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. இந்த இடைவெளியில் இடையில் நிறுத்தப்பட்டிருந்த கவிதை நூலையும் எழுதி முடிக்கிறான் அவன். சொத்து வழக்கொன்றில் வெற்றிபெற்று வசதியாகும் ஒர்லாண்டோ லண்டனைவிட்டு நீங்கிச்சென்று வேறொரு நகரத்தில் பெண்ணாகவே வாழத் தொடங்குவதும், கப்பல் தலைமை மாலுமி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதும், 1928இல் தன் கவிதை நூலை வெளியிடுவதும், அது மிகுந்த கவனத்தைப்பெற்று புகழ்பெறுவதும் நாவலின் பிற்பகுதியில் கூறப்படுகின்றன.
லேடி ஒர்லாண்டோ வாழ்வதில் எதுவிதமான மனச் சஞ்சலங்களையும் கொண்டிருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண்ணாக வாழ்வதில் ஒர்லாண்டோ இன்பம் கொண்டதாகவே தெரிகிறது. வேர்ஜினியா வுல்பின் இலக்கிய நடையையும் கதை சொல்லும் உத்தியையும் தவிர நாவல், அக்கால உண்மையான இங்கிலாந்துச் சமூகநிலைமையை அறிய பெரும்பாலும் உதவுவதில்லை.
ஒர்லாண்டோ ஒரு நாவலாகவே எழுதப்பட்டிருப்பினும், அது ஆபெலின் சுய நினைவுக் குறிப்புகள் அளவான உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கொண்டிருக்கவில்லையென்பது ஒரு சரியான கணிப்பாகவே இருக்கமுடியும். ஆனாலும் தன் எழுத்து நடையால் இலக்கிய உலகிலும், பெண்ணெழுத்து என்ற வகையிலும், பால்நிலைப் பிறழ்வுகள் குறித்தான ஆய்வில் முக்கியத்துவம் பெறும் வகையிலும் இன்றுவரை சிறந்த இலக்கிய நூலாக அது நின்று நிலவுகிறது.
சியாம் செல்வதுரையின் ‘Funny Boy’’ இலங்கை இனக் கலவரம், பால்நிலை விருப்ப மாற்றங்கள் குறித்துமாக வந்த முக்கியமான ஆங்கில நூல். இது 1994இல் வெளிவந்தது. ஆறு கதைகளில் நாவலாக விரிவுபெற்றிருக்கும் இந் நாவல் கட்டுமானத்தால் மட்டுமின்றி, வி~ய உள்ளடக்கத்தாலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பாலின விழைச்சலின் இயல்பினை பல்வேறு நிகழ்வுத் தரிசனங்களில் இது வெளிப்படுத்துகிறது.
பால்நிலைப் பிறழ்வுகள் சமூகநிலைமைகள் காரணமானவையல்ல. ஆனாலும் இதை உடற்கூற்றுரீதியில் புரிந்துகொள்வதும், சமூகநிலையில்; வைத்து அனுசரணைகளை மேற்கொள்வதும் அவசியமாகவே தெரிகிறது. இவை குறித்த கலை, இலக்கிய முயற்சிகளைத் தேடுவதும் வரலாற்றுப் போக்கில் தொகுப்பதும் ஆய்வுசெய்வதும் இன்றுள்ள முதன்மைத் தேவையென்பதை மறுக்கமுடியாது.
காலகாலமாக தத்துவமும், சமூகவியலும், விஞ்ஞானமும் மட்டுமே இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்துவந்ததான கருத்தை, மிக அண்மைக் காலத்தில்தான் இலக்கியம் தத்துவத்துக்கும் சமூகவியலுக்கும்கூட உதவமுடியுமென்ற நிலைமையை பின்நவீனத்துவம் ஏற்படுத்தி வைத்துள்ளது. இதை நினைவுகொண்டால், கலை இலக்கியத்தில் பால்நிலைப் பிறழ்வுபற்றிய ஆக்கங்களின் தேடலினதும் தொகுப்பினதும் அவசியத்தை உணரமுடியும். அதற்கான ஒரு முன்முயற்சியாக இவ்வுரைக்கட்டு அமையமுடிந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.