வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் 9
அவனது பாட்டன் பெருவளவுக்காரராயும், பெரிய உபகாரியாயும் இருந்தார். அதனால் கிராமத்திலும், அயல் கிராமங்களிலும்கூட, பெருமதிப்புப் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் அவர்களது குலத்தொழில் துணி துவைப்பதாகவிருந்தது. நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு முந்திய காலத்திலிருந்து வெள்ளைக்காரச் சேவகத்தில் பரம்பரைத் தொழில் கைவிடப்பட்டு, பெருநிலவுடைமைக் குடும்பமாக அது ஆகியிருந்தது. பெருநிலங்களில் ரப்பர் பணமாய் வழிந்துகொட்டியது. சீமைச் சாராய குடியும் கூத்தியாள்களுமாய் பெருவளவுக் குடும்பத்துக்கு கிராமத்திலிருந்த அவப்பெயரை அவனது பாட்டன்தான் ஓரளவேனும் மாற்றிவைத்தார். அப்பொழுதும் அந்த மதிப்பை அவருக்கு மட்டுமாகவே கிராமம் ஒதுக்கிக்கொடுத்தது.
கும்பிடுகளையும் முகமன்களையும் முன்னால் கண்ட மற்றைய பெருவளவுக்காரர், முதுகில் அவை சிரிப்பாய் ஒலிக்கக் கேட்டு குறண்டிப் போகிறவர்களாகவே இருந்துவந்தார்கள். அதைத் தடுக்கவோ தவிர்க்கவோ அவர்களால் முடியாதிருந்தது. அவர்கள் முன்புறத்தில் கிடைத்த முகமன்களில்மட்டும் அமைதி காணவேண்டியதாயிற்று.
பாட்டன் காலத்திலேயே பெருவளவில் மூன்று குடும்பங்கள் முளைத்திருந்தன. பாட்டனின் பின் அவரது நான்கு பிள்ளைகளில் மூத்தவராகவிருந்த அவனது தந்தை ஜெயசேகர மல்வான குடும்பத்தின் தலைமையேற்றார். அவர் பெரிய வேட்டைக்காரரும். அவரது தந்தையின் காலத்திலிருந்து சுவரில் மாட்டப்பட்டிருந்த துப்பாக்கியை அவர் மட்டுமே கையாளக்கூடியவராய் இருந்தார். அவரால் சுடப்பட்ட புலி, மான் ஆகியவற்றின் தோல்களும் தலைகளும் சுவர்களில் மேலும் மேலும் மாட்டப்படலாயின. யானைத் தந்தந்தங்கள் அலங்காரப் பொருட்களாய் வீட்டை நிறைத்தன. அதனால் ஜெயசேகர மல்வானவுக்கு கிராம மக்களிடத்திலான மதிப்பை தக்கவைக்க முடிந்ததோடு, பெருவளவு வீட்டின் அதிகாரத்தை முழுவதுமாய் பெற்றுக்கொள்ளவும் ஏலுமானது.
பெருவனத்தை ஊடறுத்து ஓடி அருவியாற்றில் சங்கமித்த ஒரு கிளை நதியின் அருகில் கம்பீரமாய் அமைந்து, பெரிய பெரிய விறாந்தைத் தூண்களோடும், சீமை ஓட்டினால் வேய்ந்த கூரையோடும் இருந்த அந்த வீட்டில் நான்கு பிள்ளைகளின் வாழ்வும் சுகமாய்க் கழிந்துகொண்டிருந்த வேளையில், ஜெயசேகர மல்வானவின் மரணம் சடுதியில் நிகழ்ந்தது. சுதுவுக்கு நினைவிருக்கிறவரையில் அது ஒரு பெரஹர விழாவின் ஓரிரு தினங்களுக்கு முன்னதாக இருந்தது.
அதன் பின்னால் அம்மா ஒற்றையறையில் தன் சோகங்களோடு அடங்கிப் போக, சிற்றப்பா நிர்வாகப் பொறுப்பெடுத்தது யாருக்கும் நல்ல சகுனமாய் அமையவில்லை.ஜெயசேகர மல்வானவுக்குப் பின் ஒற்றை வீட்டுக்குள் நான்கு குடும்பங்களாய் தனித்தனியாகிப் போனது. அது மேலும் உடையக் கூடியதான நொறுமுகைகளும், ஆவேசங்களும் அந்த வீட்டினுள்ளே அடங்கியிருந்தன திடும்திடுமென இரண்டு சின்ன வளவுகளுக்கான எல்லைகள் விழுந்து, குஞ்சையாவும் மாமியும் அதற்குள் தனிவீடுகள் அமைத்துக்கொண்டு போய்ச் சிறிது காலத்தில், சுது குடும்பத்துக்கும் ஒற்றையறையும் சமையலறையும்கொண்ட ஒரு வீடு கல்லில் கட்டிக்கொடுத்தார் சிற்றப்பா.
பெருவளவு சிறிய வளவுகளாய்ச் சிதறிப் போனாலும் பெரியவீடு சிற்றப்பாவின் கைவசமாகியதில் ஊர் மதிப்பை அது சிற்றப்பாவுக்கு மட்டுமே பெற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தது. அதன் காரணம் பெருவீடல்ல, அந்த வீட்டுக் கூடத்துச் சுவரில் மாட்டியிருந்த துப்பாக்கியே என்பது சுதுவுக்கு எளிதாகவே விளங்கியிருந்தது.
நாளடைவில் கிராமம் அவர்களை அனுதாபத்தோடு பார்க்க ஆரம்பித்தபோது, சிற்றப்பாவின் நடைமுறைகளிலும், குணநலன்களிலும் உடன்பாடில்லாத சுதுவுக்கு, தாங்கள் அவ்வாறு பெருவீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டது நல்லதாகவேபட்டது.
சுதுவுக்கு அப்போது பன்னிரண்டு வயது நடந்துகொண்டிருந்தது. அவன் படிப்பினால் மட்டுமே எதையாவது சாதிக்க முடியுமென அம்மா எப்போதும் ஓதிக்கொண்டிருந்தாள். மாரி ஒத்துக்கொள்ளாத, வெய்யில் ஒத்துக்கொள்ளாத, ஆற்று நீர் ஒத்துக்கொள்ளாத, காலைப் பனி ஒத்துக்கொள்ளாத அந்த நலிந்த பிள்ளைக்கு ஒரு தாய் வேறு எதைத்தான் சரியான வழியாகத் தேர்ந்தெடுக்க முடியும்? சுது ஓஎல் சித்தியடைந்த நிலையில் விண்ணப்பத்தின்மூலமாகவே அவனுக்கு அரசாங்க வேலை கிடைத்தமை எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. தாயையும் தங்கையையும் மற்றும் உறவினர்களையும்விட்டு அவன் வேலை பார்க்கவேண்டி காலி நகருக்குப் புறப்பட்டான். சின்ன வயதில் புயலில் கரைதட்டியும், பாறையில் மோதுண்டு நொருங்கி மூழ்கியுமான நிறைய கப்பல் கதைகளையும், யக்கர் யக்கினிகளின் கதைகளையும் கேட்டிருந்த சுதுவுக்கு, அதே நகருக்கே வேலைபார்க்கப் போக நேர்ந்தது அளப்பரிய சந்தோஷத்தைக் கொடுத்தது.
காலி சேர்ந்த மறுநாள் நண்பரொருவர் காலி நகரைக் காட்ட அவனை அழைத்துச் சென்றார்.
கொழும்பிலுள்ளதைவிட காலி நகரின் வெளிச்சவீடு நெடிதுயர்ந்து கம்பீரமாய் நின்றிருந்தது. அதுபோன்ற ஒரு பிரமாண்டத்துடன் வீற்றிருந்தது, காலிநகர் விஹாரையின் முன்னாலிருந்த புத்த சொரூபம். அதுவே எதிரே விரிந்து தடையற்றுக் கிடந்த இந்து மாக்கடல் பொங்கியெழுந்து காலி முனையை மட்டுமல்ல, முழுத் தீவையுமே, அழித்துவிடாமல் காத்துக்கொண்டு இருக்கிறதென சின்ன வயதில் தனக்குச் சொல்லப்பட்டது வெறும் கதையில்லையென விஹாரையில் நின்று புத்த சொரூபத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஏனோ சுதுவுக்கு நினைக்கத் தோன்றியது.
ஆண்டொன்று கடந்தது.
ஒரு மாரி காலத்தில் நெஞ்சுக்குள் கபம் கட்டியெழுந்த காய்ச்சலில் வாடிய சுது, காலி வைத்தியர்களின் மருந்துக்கு சுகம்காணாது போக, விடுப்புக்கு எழுதிவிட்டு ஊர் வந்து சேர்ந்தான். குடும்ப வைத்தியரின் மருந்திலும், அம்மாவின் அருமையான கவனிப்பிலும் சிறிது சிறிதாக சுது குணமானான். ஒருநாள் பிள்ளைக்கு அம்மா சொன்னாள்: “பிக்குகளை அழைத்து வீட்டிலே பூஜை நடத்தி ஒரு காப்பு நூல் உனது கையிலே கட்டவைக்கவேண்டும்.”
ஏனென்பதுபோல் சுது நிமிர்ந்து பார்த்தான்.
“உன்னிலிருந்து நோய் தந்துகொண்டிருக்கும் பிசாசுகளை அது விரட்டுவதோடு, இனிமேல் அப்பிசாசுகள் அண்டாமல் உன்னைக் காவலும் செய்யும்.”
“அப்போ, அம்மா, எனக்கு வந்திருக்கிறது பிசாசு காரணமான நோயா?”
“அதிலென்ன சந்தேகம்?”
“கேட்கவென்று கனகாலமாய் மனத்திலிருந்தது. எங்கள் பரம்பரையில் யாருக்கேனும் இப்படியொரு ஈழை வருத்தம் இருந்திருக்கிறதாம்மா?”
“நானறிந்த மட்டில் இல்லை, சுது. என் வழியில் நிச்சயமாக இல்லை.”
“அதனால்தானம்மா, எனக்கு வரும் தீரா நோய் என் வினையின்… என் முற்பிறப்பு வினையின்... பலனேயென்று நான் எண்ணியிருக்கிறேன்.”
“யார் சொன்னது?”
“என் படிப்பும் அறிவும் அனுபவமும் சொன்னதை ஒரு புத்தசுவாமியும் உறுதிப்படுத்தினார்.”
அம்மா சிறிதுநேரம் யோசித்தாள். பிறகு, “ஒருவேளை அது உண்மையாகவும் இருக்கலாம். இப்படியொரு நோய் எங்கள் இருவரது பரவணியில் இல்லாதபோதும், உன்னில் வந்திறங்கி உன்னை வருத்த வேறு காரணமிருப்பதாய் எனக்கும் படவில்லை” என்றாள்.
“பெரும்பாலும் நோயில் கிடக்கிறபோது, நான் இதுபற்றி நிறையவே யோசித்திருக்கிறேன், அம்மா. வினையின் நோயை எந்த மருந்தினாலும் தீர்த்துவிட முடியாது. எந்த காப்பு நூலினாலும் காத்துவிட முடியாது. சுகம் வந்தாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும். அதற்கு மார்க்கம் வேறேயுண்டு. அப்போது உங்கள் எதிர்பார்ப்பு, தங்கையின் எதிர்காலமெல்லாம் நொருங்கிப்போயிடுமே, அம்மா. அதனால்தான் அந்த மார்க்கத்தில் செல்ல முடியாதவனாயிருக்கிறேன்.”
தாய் அப்போது தான் விஹாரத்தில் ஒருபோது கேட்ட அறபோதனையொன்றை நினைவுகூர்ந்தாள். ‘தீவினை நல்வினை இரண்டுமே பிறவிகளில் தொடர்பவை. சத்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு துறவு மார்க்கத்தில் இறங்குவதன் மூலமே ஒரு தீவினையாளன் தன் கர்மாவிலிருந்து விடுபடுகிறான்.’
சுதுவை குடும்பம், குழந்தைகளென்று காண அவளுக்குள் தாயாய் பெரும் கனவு இருந்தது. ஆனால் சின்னவயதிலிருந்தே நோய்வாய்ப்பட்ட பிள்ளையாக அவன் இருப்பதால், அவன் நோயின்றி சங்கத்தில் இருந்தாலும் அவளால் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும். ஒருபோது சுது மிகவும் நோய்ப்பட்டு அன்ன ஆகாரமின்றி படுக்கையில் கிடந்தபோது, ஒரு வைத்தியன், ‘இந்த சூரணத்தில் உங்கள் மகன் குணமடைந்து எழும்பினால் சரி, இல்லையேல் நீங்கள் இவனைப் பிள்ளையென மேலும் எண்ணாதிருங்கள்’ என்று சொன்னது அப்போது ஞாபகம் வந்தது. அன்றிரவு முழுவதும் தூங்காமல் அதுபற்றியே நினைத்து தவித்துக்கொண்டிருந்தாள் அவள். விடிந்தபோது எப்படியோ அந்த மருந்தில் சுது குணமாகி எழுந்தான். அப்படியானவொரு ஆபத்தான சுகவீனம் இனி வராதென்று எப்படிச் சொல்லமுடியும்? அந்தமாதிரி ஒரு நிலைமை ஏற்படுவதன் முன்னம் சுது புத்த சங்கத்தில் தவவாழ்வை மேற்கொள்வது அவளுக்கு ஆயிரம் முறையும் சம்மதமாயிருந்தது. அவள் சுதுவுக்கு சொன்னாள்: “நீ என்னையோ தங்கச்சியையோ கொஞ்சமும் எண்ணவேண்டியதில்லை. இந்த வினை வருத்தம் தீர என்ன செய்யவேணுமோ அதை புத்தசுவாமியுடனே கலந்தாலோசித்து செய்துகொள். நீ சுகதேகியாய் நீண்டகாலமிருந்தால் அதுவே எங்களுக்குப் போதும்.”
“என்னிடத்தில் நீண்டகாலமாக அந்த எண்ணமே உண்டு, அம்மா. ஆனாலும் திடப்பட முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.”
“நீ கடுமையான ஜுரம் கண்டிருந்த ஒருநாள் வினை… வினை தொடர்ந்து கொண்டிருக்கிறது… என பிதற்றியது கேட்ட நாளிலிருந்து அவ்வாறு நீ ஒரு முடிவை ஒருநாள் எடுக்கக்கூடுமென நான் வெகுகாலம் எதிர்பார்த்தேயிருந்தேன்.”
“இது உங்களுக்கு வருத்தமில்லையா, அம்மா?”
“வருத்தம்தான். ஆயினும் புத்தசங்கத்தில் சேர்வது எல்லா சௌபாக்கியங்களைவிடவும் நிறைந்த சம்பத்தானது, மகனே? மேலும் உன் பிதற்றலில் வந்தது உன் குரலுமல்ல, அது பகவானின் குரலே. ஆக… நீ அந்த மார்க்கத்தில் போவதில் நானேன் தயங்கவேண்டும்?”
“அப்படியானால் நான் சங்கத்தில் சேர்ந்துவிடவா, அம்மா?”
“புத்தசுவாமியாவதென்பது மிக்க கவுரமானதுதான், சுது. எல்லாருக்கும் அருள் வழங்கும் பேறு யாருக்கும் இலகுவில் கிடைத்துவிடாது. பகவான் பெயரில் புத்தசுவாமியினால் மட்டுமே அது முடிகிறது. என் வழியில் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு ஒரு தாத்தா தேரராக இருந்திருக்கிறார். பர்மாவென்றும், தாய்லாந்தென்றும் திரிந்திருக்கிறார். தன் செயலைப்பற்றி அவர் சொன்னதாக என் அம்மா ஒருமுறை சொன்னது ஞாபகமிருக்கிறது. ‘வேட்கையின் தேடலென ஒன்றிருக்கிறது. அதனால் தீவினை வரும். தேடலின் வேட்ககையில் வருவது தவமும், ஞானமும். நான் அவற்றையே தேடி அலைந்துகொண்டிருக்கிறேன்’ என்றாராம். அவர் எழுதிய குறிப்புக்களில் சில இப்போதும் நிலவறையிலுள்ள என் பழைய பெட்டியிலே கிடக்கின்றன.”
“இப்போதும் அங்கே அவை கிடக்கின்றனவா?”
“அங்கேதான் கிடக்கின்றன.”
“அவற்றை எடுக்கமுடியுமா, அம்மா? அவற்றை எடுக்க சிற்றப்பா அனுமதிப்பாரா?”
“அனுமதிப்பதற்கென்ன? அது என்னுடைய சொத்து. என்றாலும் சிற்றப்பாவும் நல்லவர்தான், சுது. தனக்குத் தேவையில்லாத எதையும் அவர் திருப்பிக் கொடுக்க மறுப்பதேயில்லை. நான் அவற்றை உனக்கு எடுத்துத் தாறன். நேரமுள்ளபோது அவற்றை நீ வாசிக்கலாம்.”
அடுத்த சில நாள்களுள் முப்பாட்டனின் குறிப்புக் கொப்பிகள் குடிசை வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. சுது ஒரு தணியாத் தாகத்தில் அவற்றை வாசிக்கத் தொடங்கினான். அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது, அந்த முப்பாட்டனும் ஒரு தர்மபாலவாக இருந்தாரென்பது. அவரது சங்க காலமும் ஏறக்குறைய அநகாரிக தர்பாலவின் காலமாகவே இருந்தது. மட்டுமில்லை. அநகாரிக தர்மபாலவின் சிங்கள இன எழுச்சிக்கான கருத்துக்களையே முப்பாட்டன் தர்மபால கொண்டிருந்ததையும் அவன் கண்டான். அது பௌத்த மத நூல் அல்ல, சிங்கள அரசியல் நூல். மேலே அவற்றைப் படிக்க அதிக அக்கறை எழவில்லை சுதுவுக்கு.
தாமதமாக அவன் கண்விழித்த ஒருநாள் காலையில் தங்கை சொன்னாள், “சீனா வந்திருந்தாள்” என.
“எதற்கு?”
“நீ சுகமில்லாமல் இருந்தது அறிந்து பார்க்க வந்தாள்.”
“ம்.”
சுது காலத்தைக் காத்திருக்க தேவையில்லையென நினைத்தான். உடனடியாகவே தன் வேலை நீங்குதல் கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பிவைத்தான். சுது புத்தசங்கத்தில் சேர்வதற்கான ஒரு விழாவை அவனம்மா ஊரில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தாள். அன்றைய காலை நேரத்தில் ஊரில் பாதி சனத்துக்கு மேல் கிராம விஹாரத்தில் திரண்டிருந்தது. சுது தன் அம்மா, தங்கை மட்டுமில்லாமல் சிற்றப்பாக்கள், சின்னம்மாக்கள், மாமி, மாமா, அவர்கள் பிள்ளைகள், மற்றும் எட்டிய உறவினரோடும் நின்றிருந்தான்.
கிரியைகள் தொடங்கின. பிரித் ஓதி, அதற்கான சகல கிரியைகளும் நிறைவேற்றப்பட்டு சுதுவின் தலை முதலில் முண்டிதமாக்கப்பட்டது. பின் குளத்திற்கு கூட்டிச்சென்று நீராடவைத்து திரும்ப கொண்டுவந்தனர். அப்போது சம்பிரதாயபூர்வமாக அவனுக்கு முச்சீவர ஆடை அளிக்கப்பட்டது. சுது அதை உடுத்திக்கொண்டு புத்த பகவானை சேவித்து வந்தான். எட்டு தேரர்களின் சடங்குத் தலைவர் அவனது புதிய பிறப்பின் நாமத்தை பிரக்ஞாசார தேரரென விளித்து எல்லோருக்கும் அறிவித்தார். சுது அவ்வாறே ஆனார். சுது தான் புதுஜென்மம் எடுத்ததாய் கண்கலங்க நின்றார். அம்மா உடல் நடுங்க அவர் முன்னே வந்து கண்ணீர்விட்டு நின்று அவரை ஆசீர்வதித்தாள். குடும்ப மூத்தோரும் அவ்வாறே செய்தனர். சம்பிரதாயபூர்வமாக சடங்கு நிறைவெய்தியது.
தூரத்தில் ஓரமாய் நின்று சுதுவையே பார்த்துக்கொண்டிருந்தாள் சீனா. அவள் ஒதுங்கி வழிவிட்டதுபோல் தோன்றியது. தானாகவே வழியில் வந்திருந்தாளெனினும், அது அவளுக்கு மிகவும் வலி நிறைந்தது. அவளுக்கு தமயந்தியென்று பேர் இருந்தது. என்றாலும் அவளது மேனி நிறத்துக்கும் சின்ன கண்களுக்குமாய் அவளை சீனாவென்றே வீடும், ஊரும் அழைத்தது. சீனா நல்ல பெயர்தானேயென அவள் எண்ணினாள்.
அவளைக் கண்டுகொண்டு சுதுவின் அம்மா, “சீனாவுக்கு நீ புத்தசுவாமியாகப் போறது மிகவும் வருத்தம். அதனால்தான் கிட்டவும் வராமல் தூரத்திலேயே நின்றுகொண்டிருக்கிறாள்” என்றாள்.
திரும்பிப் பார்த்து, “நான் எதுவும் நினைத்ததில்லையே” என்று தடுமாறினார்.
“அவளுக்கு இருந்தது. நான்கூட அப்படியொரு எண்ணத்தோடு இருந்திருந்தேன். சீனா பாவம்.”
“பாவம்தான். அவளுக்கு கல்யாணம் ஆகட்டும். அடுத்தமுறை இங்கு நான் வரும்போது அவளை நிச்சயமாக கண்டு தேற்றுவேன்.”
“கண்டிப்பாய் நீ அதைச் செய்யவேணும்.”
மாத்தளையிலுள்ள பிக்குகளின் பயிற்சிப் பள்ளிக்கு பிரக்ஞாசார தேரர் புறப்பட்டார்.
ஏழு வருஷங்களான பின் ஒரு அதிகாலை வேளையில் தாயின் ஞாபகமெடுத்தது பிரக்ஞாசார தேரருக்கு. அவர் ஊர் வந்தார்.
மரங்கள் வளர்ந்திருந்தன. அந்த வனமூலையிலிருந்த அரசங் கன்றுகூட நன்றாக வளர்ந்திருந்தது. மனிதர்களும் வளர்ந்தும் முதிர்ந்தும் இருந்தார்கள். வாழ்நிலை எந்த மாற்றமுமின்றி அப்படியே உறைந்திருந்தது.
பிரக்ஞாசார தேரர் தங்கையையும் தாயையும் சென்று கண்டார். தாய் பாயோடு ஒட்டிப்போயிருந்தாள். நடமாட்டமறுத்து மூன்று நான்கு மாதங்களாகின்றன என்றாள் தங்கை. அம்மா கண்திறந்து மகனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். மரணம் எவர்க்கும் தவிர்க்க முடியாததென்று தெரிந்தாலும், ஒரு துக்கம் விரைவாய் வந்து அவரில் பரவியது.
பெருவளவு அப்போது ஒரு குடியிருப்புப்போல் மாறியிருந்ததை அவர் கண்டார். சின்னதும் பெரியதுமாக எட்டுப் பத்து வீடுகள் பல ஸ்திதிகளில் அங்கு இருந்திருந்தன. கல்லாய், மண்ணாய், கிடுகாய், பலகையாய், தகரமாய் அந்த ஸ்திதி. வழியிலே ஒட்டிய வயிற்று மூக்கொழுகும் குழந்தைகள் சில பெய்த மழைக்கு தேங்கிய நீரில் சேறு தப்பி விளையாடிக்கொண்டிருந்தன. கல்வி நல்லது வறுமையிலிருந்து வெளியேற, ஆனால் அந்த வறுமைக்கு கல்வி மட்டும் போதாது என அவர் உணர்ந்தார்.
அப்போது சீனா வந்தாள்.
சீனா ஏழாண்டு வளர்ச்சியில் தளதளவென வளர்ந்திருந்தது கண்டார் பிரக்ஞாசார தேரர். சட்டையணிந்து திரிந்தவளாய்க் காணப்பட்டிருந்தவள், அப்போது முண்டுடுத்தி சுருக்குக் கை ரவிக்கை போட்டிருந்தாள். அவளது தாழ்ந்த கழுத்துச் சட்டைக்கூடாக தாய்மையின் கலசங்கள் கனத்துத் தெரிந்தன. அவளையில்லையெனினும் அவள்போல் பலரை ஊரிலே தேரர் தினமும் கண்டவர். அதனால் சலனமுற்று சுது ஆகாமல் துறவியாய் நின்றிருந்தார்.
சீனா முன்னே வந்து தாழ்ந்து வணங்கினாள்.
“சூபத் நிவன் சம்பத்” என வாழ்த்தினார் தேரர்.
“குழந்தை வந்து சொன்னாள் நீங்கள் வந்திருப்பதை.”
“அங்கே சேறு தப்பிக்கொண்டிருந்த குழந்தைகளோடு உன் குழந்தையும் நின்றிருந்ததா?”
“ஓம், சுவாமி.”
‘நீ படிப்பை முடித்திருக்கிறாயா?’
“இல்லை. படிப்பை நிறுத்திவிட்டுத்தான் கலியாணம் முடித்தேன். ஜேவிபி கலகத்தில் கணவன் இல்லாமலாகினான். ஒரு வாக்கு விட்டுப்போனான்.”
“என்ன?”
“சிங்களமென்பது தேசமில்லை, அது ஒரு பண்பாடு என்றிருந்தான்.”
“மெய்யாகவே சொல்கிறேன், அவ்வாறுணர்ந்தவன் பேரறிவாளனாவான்.”
“அவன் பொதுவுடைமை பேசும் கட்சியிலே இருந்தான்.”
“நினைத்தேன்.”
“இப்போது அரசியலிலே மீண்டுமொரு அலை அடிக்கிறது.”
“தெரிகிறது.”
“நான் என்ன செய்யட்டும், சுவாமி?”
தேரர் சிரித்தார். பின் குலுங்கி இருமினார். பின் தெளிந்து, “கணவன் விட்டுச்சென்ற வாக்கின் பின் செல்” என்றார். அவள் அதிலிருந்து ஒதுங்கியிருக்கவேண்டுமென அவர் கருதியதை சீனா புரிந்தாள்.
அவளது கைகள் மீண்டும் வணங்கின. பின் பரிவோடு, “இன்னும் அந்த ஈழை நோய்… விலகவில்லையா தங்களைவிட்டு?” என வினவினாள்.
“இது வினை, போகாது. நோய்தான் போகக்கூடியது.”
“எங்களிடத்திலே நிறைய நம்பிக்கை இருக்கவேண்டுமென சொல்லியிருக்கிறார்கள்.”
“எனக்கு எதுவுமே நம்பிக்கை தருவதாய் இப்போது இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது, சீனா.”
“சங்கம்கூடவா?”
அவரது மௌனத்தில் அதுவும்தான் என்ற பதில் மிதப்பதை சீனா கண்டாள். பின், “பெரிய இனக் கலவரங்கள் நடந்த காலங்களிலெல்லாம் சங்கம் மௌனமாய் இருந்ததை என் கணவன் குற்றம் சொல்வான்” என்றாள், தான் அவரைப் புரிந்துகொண்டதை அவருக்குக் காட்ட.
“மனிதத்தைவிட அது மதத்தை முதன்மைப்படுத்தியது. அது தப்பு. தாமரையிலைத் தண்ணீராய் இப்போது நான் மிதந்துகொண்டிருக்கிறேன். என்றாலும் தப்புகளிலிருந்து விலக எனக்கு இது வேளையில்லை.”
“தங்களைப்போல் ஞானவான்கள் சங்கத்திலிருப்பது தர்மத்துக்குப் பலமல்லவா?”
“சங்கம் பெரிய மலை. ஞானத்தால் உடைக்க முடியாது.”
“மலைகளை ஒரு மூடக் கிழவன் அகற்றிய கதையொன்றை என் கணவர் எனக்கு ஒருமுறை சொல்லிருக்கிறான்.”
தேரர் மௌனம் கொண்டார். ஏழு வருஷங்களின் முன் அவர் அறிந்திருந்த சிறுமியல்ல அவளென அறிந்தார். அவளோடு உரையாட அவருக்குத் துணிவு வந்தது.
அவர் சொன்னார்: “இல்லாததெதுவோ அவற்றை உண்டாக்கவே கதைகள் பிறக்கின்றன. ஜாதகக் கதைகள் அறமற்ற மனித சமூகத்தில் அறத்தினை விதைக்கப் புனையப்பட்டவை. நம்பிக்கையிழந்திருந்த சீன மக்களுக்கு நம்பிக்கையூட்ட புனையப்பட்ட கதையே மலைகளை அகற்றிய மூடக்கிழவனின் கதை.”
“அது வெல்ல முடியாத ஒரு தர்க்கமாய் நிற்கிறது, சுவாமி.”
“நல்ல கதைகளின் தன்மை அது.”
“அவ்வாறான நல்ல கதை எனக்கேதும் சொல்லுங்கள், சுவாமி.”
“எதையும் புதிதாக உண்டாக்கவல்ல, பொய்யில் புனைந்தவற்றை இல்லாமலாக்கவே கதைகள் இப்போது தேவைப்படுகின்றன. கதைகள் என் மனத்துக்குள் அடுக்காய்க் கிடக்கின்றன, சீனா. ஆனால் அவற்றுக்கு வார்த்தைகள் தேவைப்படுகின்றன. அவற்றுக்கான வார்த்தைகளைத் தேடியே இப்போது நான் அலைந்துகொண்டிருக்கிறேன். ஒருவேளை வார்த்தைகளும் உள்ளேதான் இருந்தால் அவை வெளிக்கிளம்பும்வரை நான் காத்திருக்கவேண்டும். அப்படி வார்த்தைகள் உருவாகி என் கதைகள் வெளியாகிறபோது உனக்கான கதையும் அதற்குள் நிச்சயமாக அடங்கியிருக்கும்.”
“தங்கள் பிரக்ஞையில் நாங்கள் என்னென்றும் ஞாபகமாய் இருக்கவேண்டுமென எப்போதும் பிரார்த்தனை செய்வேன்.”
“உனக்கு பெரிய மனசு, சீனா. நீ எவ்வளவு இலகுவாக கனவுகளை வளர்க்கிறாயோ, அந்தளவு சுலபத்தில் அவற்றை எரிக்கவும் செய்கிறாய். அந்த வன்மை எனக்குப் பிடித்திருக்கிறது.”
சீனா கொஞ்சம் பொறுத்தாள். “தணல் இன்னும் இருக்கிறது, சுவாமி.”
“கூடாது. அதை சாம்பலாக விட்டுவிடு. எப்போதும் ஊதிவிடாதே. நானும் என்றும் அதை ஊதியதில்லை.”
“அப்படியானால்… சுவாமியிடம் கனவு இருந்திருக்கிறது... எரிந்தாலும் தழல் இன்னும் உள்ளே இருந்துகொண்டிருக்கிறது.”
வார்த்தை தவறிவிட்டதை தெரிந்தார் தேரர். ஜாக்கிரதம் இழந்துவிட்டார் அவர். விழிப்போடிருக்க பயின்றுகொண்டிருந்தவர் ஒரு கணம் துயின்றுவிட்டார். எரிக்கும்போது மிச்சமின்றி எரிக்கவேண்டுமென புத்தபகவான் சொல்லவில்லையா? மறந்து போனாரே! தேரர் சொன்னார்: “திரும்பமுடியாத பாதையிலிருந்து என் மூச்சு பிறக்கிறது. அந்த மூச்சிலும் நான் இப்போது எச்சரிக்கையாயிருக்கிறேன்.”
அவர் தங்கையிடமும் தாயிடமும் விடைபெற்று வீட்டிலிருந்து புறப்பட்ட நேரத்திலும் சீனா அங்கே முற்றத்தில் நின்றிருந்தாள். அவளுக்கொரு நிச்சயம் இருந்ததை அந்த நிலையில் தெரிந்தார் தேரர்.
அவருக்குச் சலனமில்லை.
தேரர் நிதானமாக நடந்தார்.
அவரின் இருப்பு பன்சாலவில் நிலையில்லாமல் தளும்பிக்கொண்டிருந்தது. அவர் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மேலாக பௌத்தத்தின் தர்மத்தை மதிப்பவர். சங்கத்தை மீற அவருக்கு அந்த தர்மத்தின் ஒளிமட்டும் போதும். ஆனாலும் அவர் ஏனோ தாமதித்தார்.
எதற்கும் ஒரு புள்ளி விழவேண்டியிருந்தது.
அது கூடிய விரைவில் சம்பவித்தது.
இறுதி யுத்தமொன்றுக்கு நாடு தயாராகிக் கொண்டிருப்பதாக எல்லோரும் பறைந்துகொண்டிருந்த ஒருநாள், ஒரு காலை நேரத்தில் தேரர் பன்சாலவைவிட்டு வெளியே செல்ல புறப்பட்டு வந்தார்.
இரண்டு மூன்று அரச வாகனங்கள் சிங்கக் கொடிகளும், கட்சிக் கொடிகளும் பறக்க நின்றுகொண்டிருந்து இயல்பலாத நிலையை காண்பித்துக்கொண்டிருந்தன.
அவர் மேலே நடந்து வந்தார்.
விஹாரையின் முன்கூடத்துள் மாண்புமிகு அமைச்சர், மரியாதைக்குரிய தொகுதி உறுப்பினர், அனுராதபுர மாகாணசபை உறுப்பினர் சிலர் மகாதேரருடனான சந்திப்பினை முடித்துவிட்டு போய்க்கொண்டிருந்தனர். மகாதேரர் இன்னும் சன்னிதானம் கொண்டிருந்தார். தேரர் கடந்துசெல்ல முயல்கையில் மகாதேரர் கையுயர்த்த நின்றார்.
அவர் ஒரு விஷயம் குறித்து அறுதியான முடிவொன்றைத் தெரிவிக்கப்போகிறார் என்பது பிரக்ஞாசார தேரருக்குத் தெரிந்தது. அவர் ஒரு எல்லைக்குள் மகாதேரரை அணுகினார்.
“பயங்கரவாதிகளுக்கெதிரான ஒரு இறுதி யுத்தத்தை அரசு முன்னெடுத்திருக்கிறது, சுவாமி. இந்தத் தீவின் இறையாண்மையிலேயே பௌத்தத்தின் இருப்பு நிச்சயப்பட முடியும். அதனால் யுத்தம் நம் எல்லாரதும் ஆகும்” என்றார் மகாதேரர்.
பிரக்ஞாசார தேரர் சிக்கலை உணர்ந்தார். அவர் தனது கருத்தைச் சொல்லவேண்டிய சமயம் அது. மெல்ல தன்னை நிதானித்த அவர், “நீங்கள் சொன்ன யுத்தமென்பது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இருந்துகொண்டிருக்கிறதே, அது ஏன் அவ்வாறென நீண்டகாலமாக நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன், சுவாமி” என்றார்.
மகாதேரர் திகைத்தார். அத்தகைய பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. “என்ன சொல்கிறீர், சுவாமி? அவ்வளவு வன்மையான எதிரிகளே நம்மைச் சூழ எப்போதும் இருந்திருந்தார்களென்பது உமக்கு அதிலிருந்து விளங்கவில்லையா?” என்று படபடத்தார்.
“நல்லது. அவ்வாறெனில் யுத்தத்தால் நாம் எதையும் சாதித்துவிட முடியாது என்பதுதானே அர்த்தமாகவேண்டும்?”
“சாதித்துவிட முடியுமென்பதைக் காட்டத்தான் ஒரு இறுதியான யுத்தத்திற்கு அரசு அறைகூவல் விடுத்திருக்கிறது.”
“நாடு யுத்தத்தில் இருப்பது எனக்கு இஷ்டமில்லாததே. அது முடியவேண்டும். ஆனால் அது யுத்தத்தினால் அல்ல, சுவாமி.”
“இதை நமது எதிராளிகள் உணரவில்லையே!”
“இந்த யுத்தம் இரண்டு பொய்ம்மைகளின் மோதல் மட்டுமே. இது அரசியலின் சரியின்மைகளிலிருந்து உருவாகி நடக்கிறது. இந்த இடத்தில் எனக்கென்ன வேலை? அல்லது உங்களுக்குத்தான் என்ன வேலை, சுவாமி?”
“உமது குரல் சங்கத்துக்கு எதிராக இருக்கிறதே! அதற்காகவே நான் உம்மீது நடவடிக்கை எடுக்கலாம், சுவாமி. ஆனாலும் நீர் பௌத்தத்தில் கொண்டுள்ள அளவற்ற ஆர்வத்தையும், செய்துகொண்டிருக்கும் மகத்தான ஆய்வுகளையும் கருதி நான் அதை மன்னிக்கலாம். நீர் செய்யவேண்டியதெல்லாம், கிராமங்களிலே படித்த, படிக்காத அனைத்து வாலிபர்களையும் ஒரு இறுதி யுத்தத்திற்கு தயாராக்கிவிடுவதே. அரை லட்சம் பேரை இந்த யுத்தத்தில் புதிதாக இறக்கிவிட அரசு தீர்மானித்திருக்கிறது. இதற்கு சங்கம் தன் முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்கிறது. நீர் அதை நிறைவேற்ற புறப்படும் முதலாவது சாரணராக இருக்கிறீர்” என்றுவிட்டு மகாதேரர் மேற்கொண்டு அங்கே ஒருகணம்கூட தாமதிக்காமல் சன்னிதானத்திலிருந்து எழுந்து நடந்தார்.
பிரக்ஞாசார தேரர் அங்கே தங்கியிருந்த அந்த ஏழாண்டுக் காலத்தில் இவ்வளவு பேசியிருக்கிறாரா மகாதேரர்? அவர் வியந்தார்.
அவருக்கு இடப்பட்டிருப்பது ஒரு கட்டளை. நல்ல ஒரு பௌத்தன்கூட ஒப்புக்கொள்ள மறுக்கக்கூடிய ஒரு காரியத்தில் மகாதேரர் நிர்ப்பந்தமாய் அவரை ஈடுபடச் சொல்கிறார். அவரால் அதை ஒப்புக்கொண்டுவிட முடியாது. அதன் பிரதி விளைவுகள் தெரிந்திருந்தபோதும் அதை அவர் செய்யப்போவதில்லை.
பன்சால முற்றத்தில் நெடிதுயர்ந்து நின்ற புத்த பகவானை நிமிர்ந்து நோக்கினார் தேரர். கண்மூடி சிறிதுநேரம் நின்றார். முடிவு ஒரு ஒளிபோல அவருள் வந்திறங்கியது.
தேரர் பன்சாலவைவிட்டு மெதுவாக வெளியே நடந்தார்.
தூரங்களைக் கடந்தார்.
இருண்டு வந்தபோது பசியும் களைப்பும் மேலிட்டிருந்தது. பழைய சைத்தியமொன்றின் அருகிலிருந்த சிற்றோடையில் தாகம் தணித்தார். பின் மண்டப ஓரம் வந்து சிம்ம சய்யயில் தம்மை வலப்புறம் சரித்து படுத்தார்.
[தொடரும்]