வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் 8!
அவர் ஒரு கொடுங்கோலராக இருந்தார். சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி எல்லாப் பிள்ளைகளையும் அந்தக் கோல் மூலமாகவே கட்டுப்பாட்டிலும், பயத்திலும் வைத்திருந்தார். உக்கு பண்டாரவுக்கு அந்த இயலாத உடம்பில் தொங்கிக்கொண்டிருந்த மெலிந்த கைகளினால் எவ்வாறு இலக்கு வைத்து ஓடிக்கொண்டிருக்கிறவர்ளை கோலினால் தாக்கமுடிகிறதென்ற ஒரு வினா எப்போதும் இருந்துகொண்டிருந்தது.
அந்தச் சுற்றாடலிலுள்ள குழந்தைகள் விளையாடக் கூடுமிடம் அந்த வீட்டு முற்றமாக இருந்தது. அவர் தவிர வீட்டில் வேறு யாருமில்லையென்பதுடன், மறைவதற்கு அடி பருத்த பெரிய பெரிய கித்துள் மரங்களும், கூடலாய் வளர்ந்த கட்டையான ஈரப்பலா மரங்களும்கொண்ட விசாலமான வளவும் கொண்டிருந்தது. அந்த கொடுங்கோலுக்குப் பயந்துதான் முனசிங்க மாமாவின் மகன் சரத்சந்ர மொட்டையடிக்க தன்னை ஒப்புக்கொடுத்து மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு புத்த சங்கத்திலே சேர்ந்து போனான். குசுமவதிகூட ஒருபோது அந்தக் கொடுங்கோலினால் விளாசல் பெற்றிருக்கிறாள். ‘வா, குசும இவ்விடம்’ என்று உறுக்கியதற்கு நெளித்துக்கொண்டு அப்பால் ஓடி குசுமவதி தவிர்ந்துகொண்டாள். ‘உங்களையெல்லாம் நல்லாய் உதைக்கவேணுமடி. உங்களால்தான் பிக்கு ஆகவேண்டிய பையன்களெல்லாம் பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருக்கிறான்கள். என் கையிலே அகப்படு, அப்போ பார்த்துக்கொள்கிறேன்’ என்று மஹாபத்திர தாத்தா திட்டினார்.
அன்று மாலைக்குள்ளேயே குசும அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டாள். தூங்குவதுபோலத்தான் கண்ணை மூடி, கழுத்தைச் சரித்து தாத்தா சாய்மனையில் படுத்திருந்தார். கூடத்துக்குள் நீரருந்த திண்ணையிலேறி படபடப்புச் சத்தமுமின்றி ஒரு பறவைபோல காற்றைக் கிழித்துக்கொண்டு குசும ஓடிப் போனாள். ஆனாலும் தாத்தா தூங்குவதாக நினைத்ததால் போதுமான வேகத்தை அவள் அதில் பிரயோகித்திருக்கவில்லை. வாசலை அவள் நெருங்க காத்திருந்த தாத்தா திடீரென கண்விழித்து பட்டென கொடுங்கோலை எடுத்து வீசினார். சளாரென்ற சத்தத்துடன் முதுகில் விளாசல் இறங்கிய குசும வீரிட்டுக் கத்தினாள். அபூர்வமாய்க் காட்டும் அந்தச் சிரிப்புடன் கொடுங்கோலை மறுபடி அருகே வைத்துக்கொண்டு சாய்மனையில் சாய்ந்தார் தாத்தா. ஒரு நிமிடம் துள்ளி, ஒரு நிமிடம் நெளிந்து முதுகைத் தடவியபடி அழுது அடங்கிய குசும வெளியேறும்போது, ‘நீ கெட்ட தாத்தா. அனோமா மாமியோட உன்னை உரிஞ்சானாய்க் கண்டன்’ எனக் கத்திவிட்டு ஓடிப்போனாள். அதைக் கேட்டு தாத்தா கடகடவெனச் சிரித்தார். பின் தனது தலையை நிமிர்த்தி மீசையை முறுக்கினார். அவரது கண்கள் சிவந்திருந்தன. முடியில்லாத ராஜா ஶ்ரீராஜசிங்கன்போல அப்போது அவர் உக்கு பண்டாரவுக்குத் தோன்றினார். குசும அதன் பிறகு அந்த வீட்டுக்கு விளையாட எந்த நாளும் வந்ததில்லை.
உக்கு பண்டாரவுக்கு எல்லாம் ஞாபகமாயிருந்தன.
அவனுக்கு அப்போது பன்னிரண்டு வயதாயிருந்தது. அனோமா அவனது பெரிய மாமியின் மகள். மலையின் இறக்கத்திலுள்ள தனித்த ஒரு சின்ன வீட்டில் கலியாணமாகி வசித்துக்கொண்டிருந்தாள். அவளது புருஷனுக்கு கொழும்பிலே துறைமுகத்தில் வேலை. மாதத்தில் ஒன்றிரண்டு முறை வந்து போவான். தனியேயிருக்கும் அனோமாவை தாத்தா வெகுவாகக் கவனித்துக்கொண்டார். அவளது தாய் தமக்கையர் பட்டதைவிட, அவளின் தனிமையில் அவர் கொண்டது அதிக அக்கறையாயிருந்தது. புருஷன் வரும்போது அவள் முறுமுறுப்புடன் நடந்துகொண்டாள். ‘இந்த கார்பர் வேலை வருமானத்தில் உன்னையும் கொண்டுபோய் கொழும்பிலே வைத்து குடும்பம் நடத்துறது எப்படி? என் சாப்பாட்டுக்குத் தவிர மீந்த பணத்தை நான் உன்னிடம்தானே கொண்டுவந்து கொடுக்கிறேன். ஆராவது வாங்கித் தந்து அரக்கு குடிக்கிறது தவிர, எப்போதும் வேலைசெய்து வந்த காசில் அதுக்காக தொடுகிறதுமில்லையே. அப்புறம் நீ எதுக்காக இப்பிடி அருக்கூட்டிக்கொண்டு நிற்கிறாய்?’ என்று அவளை வந்திருக்கும் நாளெல்லாம் நச்சரித்துக்கொண்டு திரிவான். உக்கு கண்டிருக்கிறான்.
‘உனக்கு இங்கே கஷ்டம்தான் தனியாய் இருக்கிறது. நான் என்ன செய்யேலும்? கார்பரில் ஒழுங்காய் வேலை கிடைக்கட்டும். உடனேயே கொழும்புக்கு கூட்டிப் போய்விடுகிறேன். அதுமட்டும் உன்னைப் பார்த்துக்கொள்ள எங்கள் பிக்குவிடம் சொல்லிவைத்திருக்கிறேனே, உன்மேல் அன்பும் கரிசனமும் இல்லாமல் இப்பிடி செய்திருப்பேனா? கோபத்தை விடு’ என்றபடி அவளின் பின்னும் முன்னும் நாய்க்குட்டிபோல அலைவான். ஆனாலும் அனோமா அவனோடு சிரித்துக்கூட கதைப்பதில்லை.
குன்றுக்கு மேலே மரங்களின் அடர்த்தியற்ற ஒரு சிறு வெளி இருந்தது. களனியில் கலக்கும் சிற்றாறு கடுங்கோடையில் காய்ந்து கிடக்கும். மாரியில் மலையின் உச்சியிலிருந்து புரண்டடித்த வெள்ளம் பாய்ந்துவரும். அது தடிகள், சுள்ளிகளைத் தள்ளியும், கட்டைகள், கல்லுகளை உருட்டியும் வந்து அதிலே கொட்டியிருக்கும். அந்த இடத்திலே நின்று பார்த்தால் தூரத்தில் பீதுருதாலகால, சிவனொளிபாத மலையெல்லாம் மேகம் மூடித் தெரியும். அசுபினி எல நீர்வீழ்ச்சியும்.
உக்குவும் இன்னும் சில நண்பர்களும் பள்ளி இல்லாத நாட்களில் வழக்கமான விளையாட்டுகள் பிடிக்காமலாகிறபோது, அங்கே ஏறிவருவார்கள். கூவி எதிரொலிகள் கேட்டு களிப்பார்கள். அர்ச்சுன அப்படியான ஒருநாளில்தான் குசுமவதீ...! எனக் கூவி உக்குவிடம் அடிவாங்கினான். ‘குசும எனக்கு தூரத்துச் சொந்தமாவாள். என்றாலும் அவள் எனக்கு சிநேகிதி மட்டும்தான். நீ எப்பிடி அவளை அந்தமாதிரி மோகத்தோடு கத்தி அழைக்க முடியும்?’ என்று சீறினான் உக்கு. உக்குவின் முரட்டுத்தனம் தெரிந்திருந்தது எல்லாருக்கும். அர்ச்சுன அக்கணமே சுதி இறங்கிப் போனான்.
‘எனக்கும் அவள் சிநேகிதிதான்’ என்றான்.
‘அப்போ ஏன் அவள் பெயர் சொல்லிக் கத்தினாய்? அதனால் மலைகளும் இரண்டாய் மூன்றாய் அவளது பெயரைக் கத்த வைத்தாயே? அங்கே இருக்கிற ராக்கதர்களும், அரக்கர்களும் அதனால் அவளை அறிய நேர்ந்துவிட்டதே.’
‘அங்கே ராக்கதர்களும், அரக்கர்களும் இப்போது இல்லையென்றாளே என் அம்மா’ என்ற அர்ச்சுனவுக்கு, உத்தரம் சொன்னான் உக்கு: ‘அங்கே அவை எப்போதுமே இருந்துகொண்டிருக்கின்றன. புத்தசாமியே சொன்னது பொய்யாகுமா?’
‘புத்தசாமி சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். அப்படியானால் நான் இனிமேல் அவளை மலையில் நின்று கத்தி அழைக்கமாட்டேன். குசுமவுக்கு என் குரல் அவளது வீடுவரை சென்று எட்டுகிறதா எனப் பார்க்கத்தான் அவ்வாறு கத்தினேன்’ என்று அர்ச்சுன சமாளித்தான். உக்கு அடங்கினான்.
அவ்வாறு மலைமேல் ஏறிச் செல்கையில்தான் நண்பர்களுக்குப் பின்தங்கிவிட்ட உக்குவின் காதில், அனோமாவினதும் கணவனதும் பேச்சுக்கள் விழுந்திருந்தன.
அனோமாவின் புருஷன் கொழும்பு போய்விட்ட பிறகு பலவேளைகளில் மஹாபத்திர தாத்தாவை உக்கு அங்கே கண்டிருக்கிறான். ஆனாலும் குசும சொன்ன ஊத்தைவேலைகள் எதையும் அவன் கண்டதில்லை. பின்னாலேதான் காணும் அவா எழுந்தது. வசதி வருகிறபோது நண்பர்களோடில்லாமல் தனியாக மலைமேல் ஏறிச் சென்று தாத்தாவின் ஊத்தைவேலைகளை நோட்டமிட வேண்டுமென தீர்மானித்துக்கொண்டான். குசும அவ்வாறு மலையில் ஏறிய ஒருநாளில்தான் அதைக் கண்டிருக்கக்கூடுமென அவன் நம்பினான். அவள் அதைக் கண்டு வெட்கப்பட்டிருப்பாளா என அவனுக்கு யோசனை வந்தது. காணும்போது பயம் வந்தாலும் நிச்சயமாக அவன் வெட்கப்படமாட்டான். அது அவனுக்குப் பெருத்த ஆர்வத்தையும் கிளர்ச்சியையும்தான் ஏற்படுத்தும்.
அவன் எதிர்பார்ந்திருந்த அந்தச் சந்தர்ப்பம் ஒருநாள் வசதியாக வாய்த்தது. உக்கு மறைந்து மறைந்து மிக நெருங்கிச் சென்று கவனித்தான். வெளிவாசலில் நின்றிருந்த அனோமாவோடு பேச்சுக் கொடுத்தபடி உள்ளே நடந்துகொண்டிருந்தார் தாத்தா. ‘உனது புருஷன் இரண்டு ராத்திரிகள் நின்று போகிறானே, அனோமி!’
‘இப்போது ஒன்றுமே நடக்கிறதில்லை.’
‘ஒன்றுமே இல்லையா? லொக்கு பண்டா விட்டுவிட்டா இருந்தான்? காபரிலே வேலைசெய்கிற நல்ல திடசாலியாயிற்றே?’
‘எனக்கு இணக்கம் வரவேண்டாமா?’
‘அப்போ?’
‘வயதானாலும் முறுக்குள்ளவருக்காகவே காத்திருக்கிறேன்.’
‘அப்படியானால் மஹாபத்திரவுக்கு சீல் சாராயம் வாங்கி வைத்திருக்கிறாயோ?’
‘இல்லாமலா முற்றத்துக் கொடியில் துணியைப்போட்டு, கம்பால் உயர்த்தி மேலே கொடிபோல பறக்கவிட்டிருப்பேன்?’
‘என் காட்டு அன்னாசியே…!’ தாத்தா தாவி அவளைக் கட்டிப்பிடித்தார்.
தாத்தாவின் உருவத்துள் அனோமா மறைந்து கிடந்தாள். தாத்தாவை அறையின் இருள் மறைத்திருந்தது.
அவனுக்கு சம்போக விஷயம் ஏற்கனவே தெரிந்திருந்தது.
மேலே நின்று பிரயோசனமில்லையென்று அவன் பதுங்கியிருந்த இடத்திலிருந்து வெளிவந்து கீழே இறங்கிச் சென்றான்.
தாத்தாமேல் குசுமவுக்குப்போலவே உக்குவுக்கும் அதன்மேல் பிடிப்பின்மை ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
காலம் உருண்டோடிக்கொண்டிருந்தது.
ஓஎல் தேர்வு முடிவுகள் வந்து சிறிதுகாலமாயிற்று.
அன்று உக்கு தாத்தா வீடு போனபோது, அவர் வசீகரமாய்ச் சிரித்து அவனை எதிரில் அமரச் சொன்னார். ‘ஏன்டா உக்குப் பேரா, புத்தசாமியாயிடுறியா? சுகமான வாசமடா புத்தசாமி வாசம். உனக்கு ஊரெல்லாம் சோறும், வீடெல்லாம் உறவும் கிடைக்குமடா’ என்று ஆசை காட்டினார். ஓஎல் எழுதி பெயிலானவுடனேயே ஆமியில் சேர்ந்துகொள்ள விண்ணப்பம் செய்துவிட்டதாக உக்கு மறுமொழி அளித்தான்.
அதை உக்குவின் அக்கா ஜெயஶ்ரீ மூலமாக அறிந்து அவனது முடிவை மாற்ற தெண்டிக்கவேண்டுமென எண்ணிய குசுமவதி ஒருநாள் அவனை பாதையிலே சந்தித்தாள். ‘நேற்று ஜெயஶ்ரீ அக்கே வீட்டுக்கு வந்திருந்தாள்.’
‘தெரியும்.’
‘அவள் சொல்லித்தான் நீ ஆமிக்குப் போக விரும்பியிருக்கிறது தெரிந்தது.’
‘எங்களைப்போன்ற ஆட்களுக்கு வேற தெரிவு இல்லை, குசும.’
‘தெரிவு என்று இதைச் சொல்லாதே, உக்கு. இதுதான் உன்னுடைய வசதியாய் இருக்கு. நாங்கள் முயற்சிபண்ணினால் எங்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும்.’
‘நீ என்ன சொல்லுறே, குசும?’
‘துபாய்க்குப் போகலாமேண்டது சுட்டி அப்பிடிச் சொன்னன்.’
‘அது நடக்க சாத்தியமே இல்லை, குசும.’
‘அப்ப கப்பல் வேலைக்குப் போ.’
‘நிறைய சம்பளம் வரும் அந்தமாதிரி வேலைகளுக்கு, நிறைய பணம் ஏஜன்ஸிக்கு கட்டவேணுமே! அது யாரால முடியும்?’
‘அப்ப… திரும்ப சோதினை எழுதி பாஸாகியிட்டு கஸெட்டில பார்த்து அரசாங்க வேலைக்கு எழுதிப்போடு.’
‘நீ பாஸாயிட்டாய். உனக்கு வேலை கிடைச்சுதா, குசும?’
‘ஒருநாளைக்கு கிடைக்கத்தான் செய்யும்.’
‘நீ பாஸாயிட்ட நம்பிக்கையிலயிருந்து எல்லாம் கதைக்கிறாய். நான் பெயிலாகியிட்ட அவநம்பிக்கையில அதைச் சொல்லுறன்.’
‘ஆமிக்குப் போனா அங்க நீ செய்யிறதுக்கு எதுவுமிருக்காது, உக்கு. கந்தளாய் கரும்புத் தோட்டத்தில கொண்டுபோய் விடுவான்கள். நீயும் பகல் முழுக்க கரும்பை வெட்டியிட்டு, சாயந்திரத்தில சாராயத்தையும் நல்லாய்க் குடிச்சிட்டு காம்பைவிட்டு போற வாற நேரமெல்லாம் பெண்பிள்ளைகளைப் பார்த்து கண்ணடிச்சுக்கொண்டு திரியத்தான் உன்னால அங்க ஏலுமாயிருக்கும்.’
‘நானொன்றும் அந்தமாதிரிச் செய்திட மாட்டன், குசும. என்னை உனக்கு நல்லாய்த் தெரியும். எங்கட குடும்பத்தையும் நீ பழகி அறிஞ்சிருக்கிறாய்தான? அம்மாவெல்லாம் எவ்வளவு புத்தசமயியாயிருக்கிறாள்! அம்மா வளர்த்த பிள்ளைகள் நாங்கள்.’
‘சரி, அத விடு…’
‘என்னை முடிக்க விடு, குசும. சிங்களப் பெண்பிள்ளைகளெல்லாம் இப்போது மிகவும் விவரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஆமிக்காரங்கள பெரும்பாலும் பிடிப்பதில்லை. கவர்ண்மென்ற் வேலை செய்யிற இல்லாட்டி பெரிய கொம்பனியில வேலை செய்கிறவர்களாயே அவர்கள் காதலிக்கவும், கல்யாணம் பண்ணவும் விரும்புகிறார்கள்.’
‘ஆமியில் சம்பளம் மிகவும் குறைச்சல் என்பதினாலாயிருக்கும் அது.’
‘அதுவும்தான். அந்தச் சம்பளம் ரண்டு மூன்று பேருள்ள ஒரு குடும்பத்துக்கு வயிறு நிறைய சோறு போடவும் காணாது. ஆனால் உண்மையான விஷயம் நாகரீகமாக இருக்க அவங்களால முடியாது என்கிறதுதான். அது கொஞ்சம் கரடுமுரடான… எப்பிடிச் சொல்லுறது … கொஞ்சம் கெடுபிடியான வேலைதானே!’
‘சம்பளமும் குறைவு... வேலையும் நல்லாயில்லையென்றால்... பிறகு ஏன் அந்த வேலைக்கு நீ போகவேணும், உக்கு?’
‘ஏனென்றால் எனக்கு இருக்கிற அந்த இன்னொரு தெரிவை துப்புரவாய்ப் பிடிக்காது.’
‘என்ன அது?’
‘புத்தசாமியாய்ப் போறது.’
‘ஏன், உனக்கு புத்தசமயமும், புத்த சமயத்தவனாய் வாழுறதும் பிடிக்கும்தானே?’
‘ரண்டும் ஒன்றாயிடுமா, குசும? நல்ல புத்தசமயி புத்தசங்கத்தை விரும்பவேண்டுமென்று எந்த அவசியமுமில்லை. ஏனென்றால் எனது மாமா சொல்லுறதுபோல புத்தசமயத்தின் வழியில் புத்தசங்கம் போறதில்லை. அதன் நடைமுறையைப் பார்த்தாலே அது தெரியிறதுதானே? அதற்குள் அரசியலும், அரசியலுக்குள் அதுவுமாய் விழுந்து மோசமாக இருக்கிறதாம். மாமாதான் சொன்னார். எனக்கும் அதுதான் அபிப்பிராயம்.’
‘உன் மாமாவா? யாரவர்?’
‘நீ அபூர்வமாய்ப் பார்த்திருப்பாய். ஏனென்றால் அவர் அபூர்வமாகவே இங்கே வருகிற மனிதர். அவர் மாத்தளையில் இருக்கிறார்.’
‘ஜெயஶ்ரீ அக்கேயும் சொல்லியிருக்கிறாள். அவருக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறாளில்லையா?’
‘ம். அவள்மீது எனக்கும் ஒரு ஆசை இருந்ததுதான். ஓஎல் பெயிலான பிறகு அது இல்லை.’
‘அப்படியானால் நீ புத்தசாமியாகத்தானே போக விரும்பவேணும்?’
‘இல்லை, குசும. அது அப்படியான விரக்திகளினதும், வறுமையினதும், நிர்க்கதியினதும் அடைக்கலமாய் இருக்கிறதினாலேயே எனக்கு அது பிடிக்காமல் இருக்கு. இன்னுமொன்று. எங்கள் தூரத்து சொந்தக்காரன் சரத்சந்ரவை உனக்கு ஞாபகமிருக்கிறதல்லவா? சின்ன வயசிலே ஊரும் உறவும் கூடி மொட்டையடிச்சு… மஞ்சளாடை கட்டி... அவனை சாமியாய் அனுப்பி வைச்சுதே, அந்த சரத்சந்ரவைத்தான் சொல்லுறேன். நீண்ட காலமா அழுதபடி என் கனவிலே அவனது கோலம் வந்துகொண்டிருந்தது. இப்பவும்கூட புத்த சங்கத்தை நினைச்சா எனக்கு அவனுடைய ஞாபகம்தான் முதலில வரும்.’
‘விருப்பமில்லாமல் சின்ன வயதிலே சங்கத்தில சேர்த்துவிட்டிருந்தாலும், பிறகு வளர்ந்த பின்னால அவனாய்த் திரும்பி வந்திருக்க முடியும்தான? என்னையும் உன்னையும்விடக்கூட அவன் அப்பவே வளர்ந்திருந்தான்.’
‘முடியும். ஆனால் யாரும் அப்பிடிச் செய்யிறதில்லை. அந்தளவில் புத்தசங்கம் ஒருத்தரை முழுதுமாய் உள்வாங்கிவிட்டிருக்கும். அவரது ஆசை, பாசம் எல்லாம் அந்தளவில் பூரணப்பட்டிருக்கும். அரநாயக்கவில் குறைவுதான், ஆனால் இன்னும் உட்கிராமங்களுக்கள் போகப்போக நீ பிள்ளைகளற்ற நிறைய புத்தசாமிகளின் மனைவிகளைக் காண்பாய்.’
‘எனக்கும் எல்லாம் தெரியும்தான், உக்கு.’
‘அறிந்திருப்பாய்தான். உனக்கும் ஜேவிபி சிந்தனை கொஞ்சமாவது இருக்குதுதான.’
‘ஜேவிபியில எனக்கு அந்தளவு ஈடுபாடு கிடையாது. ஆனா ரோஹணவை நல்லாய்ப் பிடிக்கும்.’
‘அவருடைய பேச்சை கேட்டிருக்கிறியா?’
‘நேரில இல்லை. ரேப்பில கேட்டிருக்கிறன்.’
‘நான் கேட்டிருக்கிறன் நேரிலயே. மிச்சம் மிச்சம் நல்லாயிருக்கும். அவர்தான் மூலக்கனல். எங்களின்ட வறுமையை நீக்க துவங்கின முதல் சிங்களச் சண்டை தோல்வியென்டாலும், இன்னும் அது எங்கயோ புகைஞ்சு கொண்டிருக்கிறதாய்த்தான் இரகசியமாய் ஒரு பேச்சு ஊரில இருக்கு.’
‘நானும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறன். அதைவிடு. உனக்கு கண்டிப்பா புத்தசாமியாகப் போகமுடியாதுதான். ஆக உனக்கிருக்கிறது ஆமிவேலைதான். அதில சம்பளமும் குறைவு. ஷோக்குப் பண்ணவும் ஏலாது. ஆனா, சண்டை இல்லாத இந்த நேரத்தில உனக்கு ஆமி வேலை கிடைக்குமா, உக்கு?’
‘சண்டை இப்ப இல்லைத்தான். ஆனா வந்திடும். இப்ப தமிழ்ச் சண்டை இந்த எண்பத்து மூன்று ஆடிக் கலவரத்துக்குப் பிறகு சூடாய் ஆகியிருக்கு. இனி பெருஞ்சண்டை வரும். அப்ப நிறைய ஆமிக்கு தேவைவரும். சம்பளமும் கூடவரும். எங்களின் புத்தசாமியும் நான் ஆமிக்குப் போக நற்சாட்சிப் பத்திரம் தருவார்.’
‘சண்டை துவங்குமெண்டா அப்ப ஆராவது ஆமியில சேரப் போவாங்களா?’
‘பழைய ஆமிகளுக்குத்தான் சண்டைக்குப் போகவேண்டி வரும். புதிய ஆக்களுக்கு பிரச்சினை இல்லை.’
‘சரி, அப்ப ஆமிக்கு போறதானால் போ. ஆனா நல்ல பிள்ளையா இருந்திடு.’
தாமரைத் தண்டின் நூல்போல் அறுபடாத மென்மையில் அந்த உரையாடல் தொடர்ந்திருந்தது. இரண்டு மலைப் பிள்ளைகளின் ஊரார்ந்த அறிமுகம், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளக்கூடிய விதமாயமைந்த அந்த உரையாடல் நாளிலிருந்துதான் சிநேகிதமாக மாறியது.
உக்கு பண்டார ராணுவத்தில் சேர்ந்தபோது அவனுக்கு இருபத்தொரு வயது ஆகியிருந்தது. அதற்கு இரண்டு வருஷங்களின் பின்னால் அவனது தாத்தா மஹாபத்திர இறந்துபோனார். சாவு வீட்டுக்கு வந்து தோரணங்களும், வெள்ளைக் கொடிகளும், அன்னாசிப் பழங்களும் வீதியெல்லாம் கட்டி அவரைக் கொண்டுபோய் அடக்கம் பண்ணிவிட்டு அழுவாரைப்போல முகத்தை வைத்துக்கொண்டு போனான்.
போகும்போது அனோமாவைக் கண்டான். லொக்கு பண்டா அருகிலே நின்றிருந்தான். மறுபடி கண்கொண்டு அந்தக் காட்சியைக் காண அவனுக்கு பிரியமிருக்கவில்லை.
அவன் ராணுவத்தில் சேர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. அப்போது அவன் கேணல் ஆகியிருந்தான். முதல் ஈழ யுத்தம் முடிந்து யாழ்ப்பாணம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், ஒருமுறை ஊருக்கு வந்திருந்தான். குசுமவதியையும் வந்து பார்த்தான். அப்போது குசுமவதிக்கு கல்யாணம் முடிந்திருந்தது.
இரண்டாம் முறை வந்து குசுமவைச் சந்திக்க வீடுபோனவேளை அவளுக்கு குழந்தை பிறந்திருந்தது. அவன் பந்துல குருகேயின் அரசியல்பற்றி எச்சரிக்கை செய்தான். ‘முதலாவது ஜேவிபி புரட்சியில் உன்னுடைய கணவன் தப்பியதே பெரிய அதிர்ஷ்டம், குசும. இரண்டாவதிலும் தப்பிவிட்டார். இப்போதும் அதற்கெதிரான அழித்தொழிப்பு முயற்சிகள் நடக்காமலில்லை. இந்திய அமைதி காப்புப் படை வடக்கில் இருக்கிறதால் சிறீலங்கா ராணுவம் ஓய்வாய் இருக்கு இப்ப. அதை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லி ஜேவிபி தீவிரமான பிரச்சாரம் செய்யுது. சில தாக்குதல்களும் நடந்ததாய் கதை. அதனால் ஜேவிபியில அரசாங்கம் மிச்சம் சரியான கவனத்தோட இருக்கு. அவங்கள அழிச்சொழிக்கிற திட்டமெல்லாம் இருக்கிறதாய் அங்க காம்பிலயே பேசுவாங்க. இது உண்மையில்லாட்டியும் நீ கவனமாய் இருக்கிறது நல்லம், குசும.’
‘தான் பிடித்த முயலுக்கு மட்டுமே நான்கு கால் என நிக்கிறது பந்துல. நான் என்ன செய்யேலும், உக்கு? அதுக்கு அரசியல் முக்கியமானதாய் இருக்காம்.’
‘அப்படியே இருந்தாலும்… பாராளுமன்றத்தில் நம்பிக்கையுள்ள ஒரு கட்சி அரசியலை பந்துல பேசலாமல்லாவா? இல்லாட்டி கம்யூனிஸ்ட் கட்சியில சேர்ந்திடச் சொல்லு. அது சரியான, பாதுகாப்பான ஒரு வழியாயும் இருக்கும்.’
குசும சிரித்தாள்.
‘ஏன் சிரிக்கிறாய்?’
‘இல்லை, உனக்கு கம்யூனிஸ்ட் கட்சியில சிறிது நல்லெண்ணம் இருக்கிறதாகப் பட்டது.’
‘எனக்கு அரசியலில்லை என்றதால, கருத்தும் இல்லையென்று ஆகிவிடாது.’
‘அது சரிதான். நான் இதை பகிடியாய்ச் சொன்னேன்.’
‘ம்… அதைவிடு… ரோகண இப்ப வெளியில இருந்தாலும், கெதியில கைதாகிற நிலை வரலாமென்று ஒரு பேச்சிருக்கு. எனக்கு நண்பனாயிருக்கிற ஒரு பொலிஸ் மேலதிகாரி இதை என்னிட்ட சொன்னார். இந்த நிலைமை மோசமானதென்று நான் சொல்லத் தேவையில்லை. பார்த்து நடந்துகொள். நல்லது, நான் கிளம்பவேண்டும். நாளை யாழ்ப்பாணம் பயணம்.’
‘திரும்ப வரும்போது என்னை வந்து பார்ப்பியா?’
‘இப்ப அம்மாவும், நங்கியும் மட்டும்தானே எனக்கு. அக்கா கல்யாணமாகி மாத்தளை போயிட்டாள். இரண்டாம் கிளர்ச்சியின்போது கால்ல குண்டு பாய்ஞ்சு கால் ஊனமாயிருந்த மாமாவின் மகனோடுதான் அவளுக்கு கல்யாணமாகியிருக்கு. உனக்குத் தெரியாததா? மீதி இஞ்ச இருக்கிறது நீதான?’
போகும்போதும் வற்புறுத்தினான் பந்துலவைப்பற்றி.
குசுமவதி கவனிப்பதாகச் சொன்னாள்.
குசுமவதி சொன்னாளா? அவள் சொன்னதை பந்துல குருகே கேட்டானா? உக்கு அடுத்தமுறை அரநாயக்க போனபோது, அவனறிந்த அரநாயக்கவாக அது இருக்கவில்லை. நிறைய மனிதரின் வெறுமைகள் விழுந்திருந்தன. போலவே, குசுமவதியின் வாழ்க்கையும்.
ஒவ்வொன்றாக நாள்களைத் தூசிதட்டி எடுத்து எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தான் உக்கு பண்டார.
சின்ன வயதுக் காலத்தை நினைவு மீட்டுப் பார்ப்பது எவ்வளவு சுகமான அனுபவம்! அது சுகத்தின் தேடலாக மட்டும் இருப்பதில்லை. அதிலிருந்து ஒரு இழையேனும் எடுத்துப் பின்னப்பட்டதாகவே யுவமும் வயோதிபமும் இருக்கின்றது. தன்னை அறிதலில் இது முக்கியமான கூறாகவிருக்கிறது. இதற்கான நேரம் கிடைக்கப்பெறாதவர்கள் அபாக்கியவான்கள். உக்கு பண்டாரவுக்கு இந்த பாக்கியம் அபரிமிதமாக இருந்தது. தன் வாழ்க்கைத் திசை மாற்றத்தின் மூலத்தை நினைக்கத் துவங்குகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எவரின் எதிர்மறை உணர்வுகளைக் கொண்டிருந்தானோ அந்த மஹாபத்திர தாத்தாவே முன்னில் வந்து நின்றுகொண்டிருந்தார். அவர்போல தான் வளர்ந்திருக்கவில்லை என்பதை அப்பொழுது அறிந்து உக்கு அமைதியடைகிறான்.
அனோமாவோடு உறவிருந்த காலத்தில் தாத்தா வயதின் ஒரு மாறுவேஷத்தையே போட்டிருந்தாரென்பதை அவன் உணர்ந்திருந்தான். வெளியுலகுக்கு அவர் காட்டிய வயதல்ல, அனோமாவுக்கு அவர் காட்டியது. அந்தப் பொல்லால் எவ்வாறு தம்மை வீசியெறிந்து தாக்க தாத்தாவால் முடிகிறதென அதிசயித்த உக்கு, பொல்லை எறிந்துவிட்டு அனோமாவை இடுப்பில் கட்டிப்பிடித்து உயரத் தூக்கியிருக்கிறார். அது அவனே கண்கொள்ளக் கண்ட காட்சி. எல்லா விஷயங்களிலும் அவருக்கு நேர்மாறாய் வளர்ந்திருந்தும், ஒரு விஷயத்தில் தானும் அவர்போல தன்னை மறைத்துக்கொண்டுதானே வாழ நேர்ந்திருக்கிறதென்று அவனில் ஒரு சின்ன வருத்தம் அப்போது உருவாகிற்று.
சில நியாயங்களின் மேலாய் அதற்கு சமாதானம் கொள்வான் உக்கு.
காலத்தின் அழுத்தத்தில் அவன் அப்போது கனதியாகிப்போயிருந்தான். குசுமவதியின் வாழ்க்கை மட்டுமல்ல, அவனது வாழ்க்கையுமே கீழ்மேலாகிவிட்டது. நியாயத்தின் மேலான இழப்புகளுக்கு அவன் அழுவது நியாயம் இல்லை.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.