வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் ஒன்று!
காலையின் காற்று வன்னியில் வித்தியாசமானது. அது மென்குளிரோடு பசுமையின் ஒரு மணத்தையும், நெல்லிழைகளின் ஒரு மணத்தையும் கொண்டிருக்கும். கதிரெறிந்த நெல்லின் மணம் காற்றிலேறும் விந்தையை சங்கவி பல வேளைகளில் எண்ணியிருக்கிறாள். தூக்கம் கலைந்து அவள் கண்விழித்தபோது, அந்த மென்காற்றின் இழைவில் அவள் பரவசம்கொள்ளும் கந்தம் விரவியிருந்தது.
அதை உணர்ந்தாளாயினும், கடந்த சில நாட்களாக நினைவுகளின் ஆக்கிரமிப்பால் கிளர்ந்திருந்த குதூகலமற்ற மனநிலை, அதை அனுபவிக்க முடியாதபடி அவளை ஆக்கிவிட்டது. பரஞ்சோதி அடுக்களைக்கு பக்கத்திலுள்ள வாழையடியிலிருந்து சட்டி பானைகளைத் தேய்த்துக்கொண்டிருப்பதை விரியத் திறந்திருந்த முன் கதவினூடாக கூடத்துள் கிடந்திருந்தபடியே கண்டுகொண்டிருந்தாள். அன்று சமையல் நடக்குமோ இல்லையோ, அங்கே அவளிருக்கிற காலைகளில் அது நியமம். எண்ணெய் உண்டோ இல்லையோ மாலையில் கைவிளக்கைத் துடைத்து திரிக் கருக்கலை நசுக்கியென என்றும் மாறாத அனுட்டானம் இருப்பதை ஒத்தது அது. விறகடுப்பில் வைக்கிற சருவப் பானையை சாம்பல், மண்ணென்று போட்டு எப்படித் தேய்த்தாலும் படிந்திருந்த கறுப்பு போய்விடவா போகிறது? சங்கவி சொல்ல நினைத்தாள். அதற்கே அலுப்புப்பட்டவளாய் குழந்தையை அணைத்தபடி பேசாமல் படுத்துக்கொண்டிருந்தாள்.
குழந்தைக்கு மறுபுறத்தில் குணாளன் படுத்தவிடம் வெறுமையாகக் கிடந்தது. ஏற்கனவே வெளியே சென்றுவிட்டானா, அறைக்குள்ளே வெளிக்கிட்டபடி நிற்கிறானாவென்று அவளுக்குத் தெரியவில்லை. அப்போது கேற்றடியில் சைக்கிள் ஒன்று கடகடத்தபடி வந்து நின்றது கேட்டது. அதற்காகவே காத்திருந்தவன்போல் அறைக்குள்ளிருந்து அவசரமாய் வெளியே வந்த குணாளன் பாய்ந்தோடினான். சிறிதுநேரத்தில் சைக்கிள் மறுபடி கடகடத்தது. சங்கவி சரிந்து படுத்திருந்த நிலையிலேயே தலையை நிமிர்த்த தெரிந்தது, குணாளன் சைக்கிளில் ஏறி போய்க்கொண்டிருப்பது.
‘ம்ஹ்ம்!’ சலிக்கவும் பிடித்த அலுப்பு அது.
தன்னை அழுத்திக்கொண்டிருக்கும் உணர்வை கடந்த சில தினங்களாய் உணர்ந்துகொண்டிருந்தாலும், அதை என்னவென்று துல்லியமாய் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த அழுத்தம் ஒரு வெறுமையிலிருந்து கிளம்பியதாய் ஒருபோது புலனாக, அவளுக்கு அது விசித்திரமாய்த் தோன்றியது.
மெய். வெறுமையென்பது திருமணமாகிய மூன்றாவது வருஷத்தில் ஒரு பெண்ணின் குடும்ப வாழ்வில் மிகுந்த பிரலாபத்துக்குரியது. ஒரு வயது தாண்டி தத்துப்பித்து நடையில் திரியும் ஒரு குழந்தை இருக்கிற நிலையில் அது இன்னும் அவலமானது. ஆனாலும் யோசிக்க அதுவே நிஜமென்று சங்கவிக்குத் தோன்றியது. வெறுமை!
அந்த வெறுமை எப்பொழுது தன்னில் ஏற்பட்டதென்று அவளுக்குத் தெளிவில்லை. இடையில் ஏற்பட்டதுதான். இடையிலென்றால் இயக்கத்தில் சேர்ந்த பின்பா, திருமணம் முடித்த பின்பா அல்லது இவையெல்லாவற்றிற்கும் முன்பிருந்தாவென்ற வரையறுப்பு சாத்தியமற்றிருந்தது. ஏறக்குறைய பிந்திய இரு சூழ்நிலைகளில் அவள் குழம்பிய மனநிலையோடு இருந்தாளென்று உத்தேசமாகக் கொண்டாலும், அது வெறுமையாகப் பரிணாமம் பெற்றது எங்ஙனமென்பதற்கு நிறைய விளக்கம் காணவேண்டி இருந்தது.
கிளிநொச்சி முருகன் கோவிலில் கலியாணத்தை முடித்துக்கொண்டு, ஸ்ரெல்லா ஸ்ரூடியோ சென்று மணமக்கள் முழுப்படம் எடுத்தார்கள். பின் வீட்டுக்கு வந்து, அன்றைய மாலையை வந்திருந்த ஓரிரு நண்பர்கள், எதிர்வீட்டுத் தாமரையக்கா ஆகியோருடன் தேநீர் விருந்துக் கலகலப்பில் கழித்துவிட்டு, இரவானதும் அந்த வீட்டின் ஒற்றை அறையுள் முதலிரவுக்காகச் சென்ற வேளையில்கூட, தன்னுள்ளிருந்த உணர்வென்னவென்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. எல்லாம் குழம்பியிருந்தன.
இயக்கத்தின் பயிற்சிக் காலத்தில் சூட்டுப் பயிற்சிக்கு வந்தபோது, முன்னேயுள்ள இலக்கைக் காட்டி துப்பாக்கியைக் கொடுத்தவேளை, அவள் மிக்க அநாயாசமாகத்தான் அதை கையில் வாங்கினாள். அது கண்டிருந்தது, கேட்டிருந்தது, ஸ்பரிசித்திருந்தது. ஆனால் பயிற்சியின் பின் சென்றிக்குப் போகையில் ஒரு ரி56 டாஸ் 1-2ஐ அவளிடம் கொடுத்தபோது, உடம்பெங்கும் புல்லரித்துப்போனாள் சங்கவி. அவளே அதன் பராமரிப்பும், பாதுகாப்புமென்று சொல்லப்பட்டது. அது அவளுடையதானது. அவள் அந்த உரிமையை மானசீகமாக அங்கீகரித்தாள். அதுபோன்ற ஒரு புளுகம் தவிர வேறெந்த உணர்வும் அந்தத் திருமணத்தில் அவளிடத்தில் இருந்திருக்கவில்லை. அவள் தனக்கான ஒரு மனிதனுடன் கணவன்-மனைவிப் பயிற்சியெடுத்தாள். அதுதானே நடந்தது? அது விசித்திரம்!
அவளின் அதே நிலைமையே அவனிடத்திலும் இருந்ததென்பது இன்னும் விசித்திரம். திருமணத்தின் சடங்காக குங்குமமிட்டதுபோல், அந்த அறையுள் நடந்த முதலிரவும் சடங்கின் இன்னொரு அங்கமாகவே இருந்தது. உடல்பூரா பரவியெழுந்த எந்த பரவசத்தின் அறிகுறியுமின்றியே காலையிலெழுந்து அவள் அறையைவிட்டு வெளியே வந்திருந்தாள். கணவன்-மனைவி என்பதற்கு மேலே கீழேயான தரத்தில் வேறும் உறவுகள் இருக்கக்கூடுமோ? அப்படி நிச்சயமாய் அவளுக்கு ஒரு எண்ணம் அப்போது முகம் கழுவ கிணற்றடி எழுந்துசென்ற சமயத்தில் வந்தது, சங்கவி தாயைப் பார்த்தாள். அவள் அப்போதும் பாத்திரம் துலக்குவதில் வெகுத்த ஈடுபாட்டுடன். குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அதற்கும் அதிலொரு ஈடுபாடு இருந்திருக்கும். சங்கவி கட்டிலே அமர்ந்தாள்.
அவன் அவளுக்குக் கணவனான அல்லது அவள் அவனுக்கு மனைவியான அல்லது அவர்கள் தம்பதியரான அந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது?
அவளுக்குள் ஒரு நீண்ட கதை மெல்ல விரிந்தது.
இயக்கத்தில் சேர்வதற்காகவே கிளிநொச்சிக்கு வந்தவள்போல் இரண்டொரு மாதங்களுக்குள்ளாக சங்கவி ஓடிவிட்டதை அவளது தாய்க்கு விருப்பமில்லையென்ற சின்ன வார்த்தையினால் விளங்கப்படுத்திவிட முடியாது. அங்கே வருவதற்கு எடுத்த முயற்சியும், கடந்த தூரமும், செய்த செலவும், எதிர்கொண்ட ஆபத்துக்களும் மிக அதிகம். அவள் ஆகக்கூடிய உள்ளக் கொதிநிலையை அடைந்து நாளாக நாளாகத்தான் பழைய நிலைக்கு அடங்கி வந்தாள்.
சங்கவி பயிற்சியெல்லாம் முடித்து ஆயுததாரியாய் தன் ரி56உடன் வந்தபோது, சிரித்துக்கொண்டு அவள் மறைத்துவிட்ட கண்ணீரில் அவளது மனநிலையின் எல்லாக் கூறுகளும் தெளிவாகவே தெரிந்தன. அவள் போருக்குப் புதல்வனைக் கொடுத்தவளாயிருந்தாள். மேலே அவள் பிள்ளைகளை இழக்கவோ பிரியவோகூட முடியாதவளாய் இருந்தாள். ஆனாலும் சங்கவியின் முடிவினை பின்னர் தாங்கினாள். அதுவும் சுமையான ஒரு கடமையெனத் தெளிந்தாள்.
ஆயினும் சங்கவியின் பிந்திய நடவடிக்கைகளில் அவள் குழம்பிப்போனாள். அம்மாவென தானிருந்தும், அக்காவென இரண்டு பேர்கள் இருந்தும் ஒரு வார்த்தைகூட இன்றி தன்னிஷ்டமாய், அதுவும் ஒரு போராளியையே மணம் செய்ய முடிவெடுத்தது, பரஞ்சோதிக்கு துண்டாய்ப் பிடிக்கவில்லை. சங்கவிக்கு இயக்கம் தேவையில்லையெனில் விலகிவிடுவதில் அவளுக்குத் தடையில்லை. அதற்காகவே ஒரு திருமணம் தேவையாயிருந்திருப்பினும், இயக்கம் சாராத ஒரு மாப்பிள்ளையை தங்களால் தேர்ந்திருக்க முடியுமேயென்பது அவளது ஆதங்கமாயிருந்தது. அதனால் ஒப்பியும் ஒப்பாமலுமான ஈரொட்டு நிலையே குணாளன்-சங்கவி திருமணத்தில் அவளுக்கிருந்தது. அதையும் மறுதலிக்க முடியாத காரணத்தில் அந்த நிலையெடுத்தாள். அனைத்தும் அறிவாள் சங்கவி.
குணாளனை இயக்கப் போராளியாக பல சமயங்களில் சங்கவி கண்டிருக்கிறாள். எங்கேயென்று புள்ளிவைத்துச் சொல்லமுடியாத தருணங்கள் அவை. சினமோ சிரிப்போவற்ற ஒரு நெற்றி சுருக்கிய பார்வையில் அவன் அவளைப் பார்த்திருந்தது அவளுக்கு ஞாபகம். ஒருபோது கூடநின்றிருந்த நீலகேசிகூட சொன்னாள், ‘என்ன, ரண்டாவதொண்டுக்கு அடிபோடுறமாதிரி இருக்கு, பார்வை’யென. ஆனால் அந்த உறுத்துப் பார்வைக்காரனை நெருக்கமாய்ச் சந்திக்கும் சந்தர்ப்பமொன்று 2002 மாசியில் அவளுக்கு ஏற்பட்டது. அன்ரன் பாலசிங்கமும், அவரது மனைவி அடேலும் இங்கிலாந்திலிருந்து நேரே வன்னி மண் வந்துசேர்ந்த அந்த நாளில் அது சம்பவித்திருந்தது.
இரணைமடு நீர்த் தேக்கத்தில் அந்த கூவர் கிறாப்ற் வந்து இறங்கிய நிகழ்வை நம்ப மறுத்த விழிகளுடன்தான் அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். வெளிநாட்டிலிருந்து இலங்கை வராமல் இலங்கைக்குள்ளிருந்த வன்னிக்குள் வருவதென்பது என்றைக்கும் ஒரு சரித்திரம். தலைவர் பிரபாகரன் நின்றிருக்கிறார். அவரது பார்வை அந்த ஒல்லியான உருவத்தில் இரண்டு மூன்று தடவைகள் வந்து பதிந்து மீள்கின்றது. தன் உடல்வாகுதான் அதன் காரணமோவென ஒரு வெக்கறை அவளில் படிகிறது. இருந்தும் மலர்ச்சியும், தெம்பும் காட்டி அவள் முகத்தை வைத்திருக்கிறாள்.
ஒருபோது விதூஷா அழைக்க எட்டிநடந்து போனவள் மீண்டும் தன்னிடத்துக்கு வந்த பின் தலைவரைப் பார்த்தபோது மெல்லிய பிரகாசத்துடன் அவரது பார்வை அவளிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறது. அவள் சமாதானமாகிறாள், தன்னின் அந்த ஒல்லி உடம்புக்குள்ளிருந்த வலிமையை தலைவர் கண்டுகொண்டிருப்பாரென.
அவர் பின்னால் தமிழ்ச்செல்வன். இன்னும் தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன், கடற்படைத் தளபதி சூசை, நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியவர்களுக்குப் பின்னால் விதூஷா, துர்க்கா போன்ற கேணல்கள் என விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களெல்லாம் அங்கே நிற்கிறார்கள். எல்லோர் முகங்களும் விகசித்துப்போயிருக்கின்றன. அதே விகசிப்பிலிருந்த குணாளனை அங்கேதான் அவள் கண்டாள். மிக அருகில் நின்றிருந்தான். அவளிலுமிருந்த அந்த விகசிப்பை அவன் என்னமாதிரி உணர்ந்தானோ? தன் உள்ளத்தில் விண்டெழுந்த உணர்ச்சியைக் கசியவிட அது சரியான சந்தர்ப்பமென அவன் நினைத்திருக்கக்கூடும். கிட்ட வந்த ஒரு தருணத்தில் அவன் கேட்டான், ‘கனக்கப் பேசவேணும். வீட்டை போற நாளில சொன்னா வந்து பாக்கிறன். வீடு இஞ்ச... கனகாம்பிகைக் குளத்திலதான?’ என.
அவன் வீட்டைத் தெரிந்து வைத்திருந்தது ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு. அதுபோல் அவன் பேசவிருக்கிற விஷயத்தை அறிய ஆவலுமிருந்தது.
எல்லாரும் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் அடேலுக்கு உதவியாக வந்தவள். ‘இந்த மாசம் பதினெட்டில வீட்டை போறன். அஞ்சு நாள் நிப்பன்’ என்றுவிட்டு அவள் அவசரமாய் விலகினாள்.
அந்த பதினெட்டில் அவள் வீட்டில் நின்றிருந்தபோது, அவன்பற்றிய நினைப்பையே அவள் மறந்திருந்த நிலையில், குணாளன் அங்கே வந்தான். ஒரு சாரமும், கடல் நீல காக்கிச் சட்டையும் போட்டிருந்தான். அவள் திகைத்துப்போனாலும் உள்ளே வரச்சொல்லி கதிரை எடுத்துப்போட்டாள். பரஞ்சோதி இந்த விஷயங்களில் குறை சொல்ல முடியாதவள். இரண்டொரு வார்த்தைகள் குணாளனோடு பேசிவிட்டு தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். பின் அப்பால் போய்விட்டாள். வெளியே போய்ப் பேச அவன் நினைத்ததை உள்ளே பேச வாய்ப்பானபொழுதில் அவன் சொன்னான்: ‘இயக்கத்திலயிருந்து விலத்தியிடுறதாய் இருக்கிறன்.’
அவள் திகைத்தாள். மேலும் அதை ஏன் தன்னிடம் சொல்லவேண்டும்? பலபேர் செய்கிறார்கள். அதுபோல் இயக்கத்தின் அனுமதியைப் பெற்று விலகவேண்டியதுதானே? முக்கியமான எந்தப் பொறுப்பிலுமிருக்காத அவனுக்கு தண்டனைகூட பெரிதாகக் கிடைத்துவிடாது. ஆனால் தன்னிடம் அவன் அதைச் சொல்வதற்கான காரணத்தை அவள் அறியவிரும்பினாள். அதனால் ‘ம்’ சொல்லி தொடர்ந்து கேட்கத் தயாரானாள்.
அவன் தொடர்ந்தான்: ‘இயக்கத்திலயிருந்து விலகுறதுக்கு ஒரு வலுவான காரணம் வேணும். நீரும் கேள்விப்பட்டிருப்பிர், இப்ப கன இயக்கப் போராளியள் கலியாணம் செய்துகொண்டு பொது வாழ்க்கைக்குத் திரும்புறத. வாழ்க்கையை நாங்கள் வாழாமல் அழிச்சிடக்குடாது, சொரூபா. நான் செற்றிலாகியிட முடிவெடுத்திட்டன்.’
‘கலியாணம் செய்துகொண்டு…?’
‘செற்றிலாகிறதுக்கு கலியாணமில்லை. இயக்கத்திலயிருந்து விலகுறதுக்குத்தான் கலியாணம். ஆனா நான் விரும்புற ஆள் என்னை விரும்புறதாய் இருந்தாத்தான் கலியாணமும்.’
‘அப்ப… ஆள் மனத்தில றெடியாய் இருக்கு?’ சிரிக்காமலேதான் கேட்டாள்.
அவன் சிரித்தபடி சொன்னான்: ‘இருக்கு. நான் செற்றிலாகிறதெண்டா வெளிநாட்டிலதான் செற்றிலாவன். கனடாவில என்ர அண்ணையும், இங்கிலாந்தில அக்காவும் இருக்கினம். அப்பவே அவை கேட்டவைதான், அங்க வந்திடச்சொல்லி. எனக்குத்தான் விருப்பமிருக்கேல்லை. சண்டை ஒரு தீராத வேட்கையாய் இருந்திட்டுது. இனி சண்டைக்கும் வாய்ப்பிருக்காதெண்டதால இயக்கத்தில முந்தின பிடிப்பு இல்லை. சும்மா ஆயுதத்தையும் கொண்டு சுத்தித் திரியிறது ஒரு போராளியின்ர வாழ்க்கையில்லைத்தான?’
அதைக்கூட அவன் அவளிடம் சொல்லவேண்டியதில்லை. அவள் அவனது நண்பிகூட இல்லை. பார்த்த பழக்கம்மட்டுமே. இருந்தும் ஏன் அவளைத் தேடிவந்து தன் அபிப்பிராயத்தை இறக்கிவைக்கும் சுமைதாங்கியாய் எண்ணினான்? சமாதான சூழ்நிலைபற்றி ஒரு பிழையான புரிதலும் அவன் கொண்டிருந்ததாய்த் தோன்றியது. அதை அவள் குறிப்பிட பின்வாங்கவில்லை. ‘ இப்பிடியே சண்டையில்லாமல் தீர்வு வந்திடுமெண்டு நீர் நினைக்கிறமாதிரித் தெரியுது. நீர் எவ்வளவு காலம் இயக்கத்தில இருக்கிறிர், எத்தினை களத்தில நிண்டிரெண்டு எனக்கு உண்மையில ஒண்டும் தெரியா. நான் இப்ப மூண்டு வருஷமாய் இயக்கத்தில இருக்கிறன். என்ர அறிவுக்கெட்டினமட்டில ஜெனிவாப் பேச்சு வார்த்தையால தீர்வை எட்டலாமெண்டு நான் நினைக்கேல்ல. இயக்கத்துக்கும் அந்த நம்பிக்கையிருக்கெண்டு சொல்லேலாது.’
அவளது நிச்சயமான பேச்சை எதிர்பார்க்காதவன்போல் அவன் ஒரு கணம் தடுமாறினான். பின் தெளிந்துகொண்டு, ‘உம்மட அனுபவம் எப்பிடிப் பாத்தாலும் களத்தில நிண்ட அனுபவமாய்த்தான் இருக்கேலும். சனங்களோட பழகிற என்ர அனுபவத்தை வைச்சுப்பாக்கேக்க, எனக்கு சண்டை இனி சாத்தியமில்லையெண்டுதான் படுகுது. எந்தச் சனமாச்சும் இப்ப சண்டை துவங்குமெண்டா விரும்புங்களெண்டு நெக்கிறிரோ?’ என்றான்.
அவள் வாதத்துக்குத் தயாராயில்லை. அது அவளின் அபிப்பிராயம். அவளுக்கே இயக்கத்தை விட்டுவிடலாமாவென்று ஒரு யோசனை இருந்தது. அது ‘செற்றி’லாகிறதுக்காக இல்லை. அம்மாவுக்காக. இரண்டு அக்காக்களுக்குமாக. நுளம்புபோல அவர்களில்தான் அவள் குத்திக் குத்தி ரத்தமுறிஞ்சி வளர்ந்தாள். தமிழீழமே இறுதி லட்சியமென்று நினைத்திருக்கிற அளவில் சமாதானம் வந்துவிடாது. ஆனால் நோர்வேயும், ஜப்பானும், இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும், ஐநாவும் இந்த நோர்வே பேச்சுவார்த்தையில் அவ்வளவு தீவிரம் கொண்டிருக்கிறவகையில் உடனடியாக யுத்தமும் மூண்டுவிடாது.
அவன் சொன்னதுபோல ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஊர்வலம் வருவதுதான் ஒரு போராளியின் செயற்பாடாக ஆகிக்கொண்டிருக்கிறது. சில மூத்த தலைவர்கள் இன்னும் அதிகாரமும், சொகுசும் கொண்டு உலா வருவதில் உண்மையிருக்கிறது. ஒருவேளை சாதாரண போராளிக்கு அந்த வசதி வாய்ப்புக்கள் இல்லையென்றபோதும் நிலைமை பொதுவில் அதுதான். அவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். ஆனால் அந்த முடிவை அவள் எதற்காக ஆதரிக்கவேண்டும்?
‘எங்களுக்கும் அம்மா, அப்பா, தங்கச்சி, அண்ணை, அக்காவெண்டு குடும்பமிருக்கு, சொரூபி. அவையின்ர ஆசையளை நிறைவேற்றுற கடமையும் இருக்கு’ என அவன் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான். ‘எங்கட இனத்தின்ர அவலத்தைப் போக்கிறதுக்காக ஒரு யுத்தத்தில ஏழெட்டு வருஷத்தை செலவழிச்சிட்டு எல்லாரும் நிண்டுகொண்டிருக்கிறம். இனியாச்சும் அவையின்ர ஆசாபாசங்களை நாங்கள் யோசிக்கவேணும். பிரதீபனைத் தெரியுமெல்லோ? எங்கட ஊர்ப் பெடியன்தான். நல்ல கூட்டாளி. என்னைப்பற்றி வேணுமெண்டா அவனைக் கேட்டாச் சொல்லுவான்.’
அவன் எதைநோக்கி நகருகிறானென அவளுக்குத் தெளிவுவந்தது. இனி என்ன கேட்கப்போகிறானென்பதையும் அவள் ஊகம்கொண்டாள். எதிர்பார்த்தபடியே அவன் சிறிதுநேரத்தில் அதைக் கேட்டான். ‘கனநாள் கண்டிருக்கிறன். காணுற எல்லாரும் ஞாபகத்தில இருக்கிறேல்லை. ஆனா உம்மை கனநாளாய் நினைச்சிருக்கிறன், சொரூபா. உம்மட விருப்பத்தைக் கேக்கத்தான் இப்ப நான் வந்தது.’
அவள் ஆச்சரியத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் எந்த அனுமானத்தையும் கொண்டுவிட முடியாத பார்வையாக இருந்தது அது. அவை எதையும் வெளிக்காட்டிவிடாத உட்கடத்திக் கண்களாய் மட்டும் அப்போது இயங்கின.
அவள் நினைத்திருந்ததேயில்லை ஒரு திருமணம்பற்றி. காமமூறும் உடம்பில்லை அவளுக்கு. மேலும் அந்தத் திசையில் அவளது கனவுகள் விரிந்ததுமில்லை. அவள் ஒரு நல்வாழ்க்கையை அம்மாவுக்கும் அக்காக்களுக்கும்தான் கனவாய்க் கண்டாள். அம்மாவின் அந்தளவு அலைச்சல் உலைச்சல்கள் காலகாலத்துக்கும் அவளுக்குப் போதுமென்று நினைத்தாள். அவள் தன்னைப்பற்றி பெரிதாக அல்ல, சிறிதாகவும் நினைத்திருக்கவில்லை. அவளிடம்தான் குணாளன் கேட்டிருக்கிறான், பார்த்த நாளிலிருந்து மனத்திலிருப்பதாகவும், தன்னைத் திருமணம்செய்ய சம்மதமாவென்றும்.
திடுதிப்பான அணுகுதலாயிருந்தாலும், அவனது பேச்சில் அவள் அசூயை கொள்ளவில்லை. அந்த வெளிப்படையான அணுகுமுறையை ஆரோக்கியமானதாகக் கருத அவளால் முடியும். அவனது விருப்பத்தை அவள் யோசிக்கலாம். ஆனால் அதற்குள் ஒரு உறுத்தல் இருந்தது. ‘செற்றி’லாகிற விஷயத்தில் அவன் கனடாவையும், இங்கிலாந்தையும் இழுத்ததில் ஒரு ஒவ்வாமையை அவள் கண்டாள். அது ஒரு முடிவாக, தீர்மானமாக இருந்ததைவிட, ஒரு தாபமாக அவனுள் கனன்று கொண்டிருந்ததை அவளால் காண முடிந்திருந்தது.
வெளிநாடு செல்லவிருப்பதென்பது தூண்டியில் கொளுவப்பட்டுள்ள இரை. அவள் அதைப் புரிந்தாள். ஒரு போராளியான தன்னிடமே அந்த இரையை அவன் பரீட்சிப்பதில் அவளுக்கு கோபம் வந்தது. சிலரால் அவ்வளவு சின்னத் தனமாகவும் கதைக்க முடிகிறதுதானென எண்ணி அடக்கிக்கொண்டாள்.
வெளிநாடு செல்ல உத்தேசித்திருப்பதால் இயக்கத்திலிருந்து விலக விரும்புகிறவன், இயக்கத்திலிருந்து விலக திருமணமென்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்கிறவன், அதைச் செயற்படுத்துவதற்காய் எவளையாவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? ‘கனதரம் கண்டன், மறக்க முடியேல்ல’ என்ற காதல் வளையத்தை ஏன் வீசவேண்டும்? அவளை ஏன் ஒரு உள்நோக்கத்தோடுபோல் மய்யமாக்கவேண்டும்? அவள் எங்கே, எப்போது, யாருக்குச் சொன்னாள் தான் இயக்கத்திலிருந்து விலகப்போவதாக? அல்லது எங்கே, எப்போது, யாருக்குச் சொன்னாள், வெளிநாடு செல்ல விரும்புவதாக? அவ்வளவு சாதாரணமானதா ஒரு கொள்கைப் பற்றோடு இயக்கத்தில் சேர்ந்த அவளை அதிலிருந்து இழுத்தெடுத்து கலியாணம் செய்வது?
அவன் சொன்ன மூல கரிசனங்கள் அவளிடமும் உண்டு. ஆனால் உடனடியாக எந்தத் தீர்மானமும் அவள் கொண்டிருக்கவில்லை.
இயக்கம் ஒரு தளையாக தன்னை இறுக்கிவருவதை கடந்த சில மாதங்களாக அவள் உணர முடிந்திருந்தாள். ஆனால் அதற்காகக்கூட அவள் இயக்கத்திலிருந்து விலகுகிற எண்ணத்தைக் கொள்ளமாட்டாள்.
அம்மாவுக்காக அதைச் செய்யலாம். அக்காமாருக்காகச் செய்யலாம். அதற்காக அவள் திருமணமே செய்து கொள்ள வேண்டியதான ஒரு நிஜம் இருக்கிறது. ஒரு போராளியான அவனைத் திருமணம் செய்தால், குடும்பத்தைப் பராமரிக்க பெண்ணை இயக்கத்திலிருந்து விலகுவதற்கான அனுமதியை இயக்கம் வழங்கும். திருமணத்தை அவள் நினைத்திருக்காவிட்டாலென்ன, இயக்கத்திலிருந்து விலகுவதின் சாத்தியம் அங்கே துவங்குகிறது.
அதைச் செய்யாமலே விட்டுவிடலாமாயினும் அவள் யோசிப்பதாகச் சொன்னாள்.
‘யோசிச்சு முடிவைச் சொனாப்போது’மென்றுவிட்டு அவன் போய்விட்டான்.
அந்த ஐந்து நாள் விடுமுறை முடிவதன் முன் பல தனிமைகளில் குணாளன் அவளுக்கு ஞாபகமாகிவிட்டான். அவளே மறுத்தாலும் விடாப்பிடியாக திரும்பத் திரும்ப ஞாபகமாகிக்கொண்டிருந்தான். படையணிக்குத் திரும்பிய சங்கவி சிறிதுநாளில் பிரதீபனைத் தேடிக் கண்டுபிடித்தாள். குணாளனைப்பற்றிக் கேட்டாள். ‘நீண்டகாலப் போராளி. சண்டையளில அதிகமாய் பங்குபற்றேல்லயெண்டாலும், நல்லாய்க் கதைக்கக்கூடிய ஆள். சனங்களோட நயமாயும், பயமாயும் பேசி இயக்கத்துக்கு பவுணும், ஆளும் சேர்க்கிறதில கெட்டிக்காறன். நல்லவன்தான். என்னவொண்டு, பெரியநினைப்பு,.. எதையும் பெரிசாத்தான் கதைப்பான். ரண்டு அண்ணையும் ரண்டு அக்காவும் வெளியில இருக்கினமெண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சான் கொஞ்சநாள். எனக்குத் தெரிஞ்சமட்டில உவன்தான் குடும்பத்தில மூத்த பிள்ளை. வசதியானவன்… ஏ.எல். படிச்சவன்’ என்றான். குணாளனைச் சந்திக்கச் சொல்லி அவனிடமே சொல்லியனுப்பினாள்.
ஒரு சித்திரை மாதத்தில் திருமணம் நடந்தது. வைகாசி மாதத்தில் தான் இயக்கத்திலிருந்து விலக விரும்புவதை மேலிடத்துக்கு அறிவித்தான் குணாளன். மூன்று மாதங்கள் ‘பணிஷ்மென்ற்’ கிடைத்தது. அது முடிய வந்து நல்லபிள்ளைபோல வீட்டிலே தங்கியிருந்தான். கார்த்திகாவை சங்கவி கருவாகியதும், ரமேஷோடும், சிவாவோடும் சேர்ந்து வன்னி முழுக்க அலைந்தான். நாளாக ஆக அவனது நடத்தையில் புதிரேறியது. தொடர்ந்து பலநாள்களை அவன் எங்கோ தங்கிவந்தான். சங்கவி யோசிக்கத் துவங்கினாள்.
அவள் எதற்காகத் திருமணம் செய்தாள்? அதுதான் அப்போது அவளிலிருந்த கேள்வி.
அவள் காதலுக்காக அதைச் செய்யவில்லை. காமத்துக்காய்ச் செய்யவில்லை. ஒரு குழந்தை வேண்டுமென்றும் செய்யவில்லை. தன் குடும்ப நன்மைக்காய்ச் செய்தாள். அவள் கலியாணம் செய்ததில் குடும்பத்துக்கு என்ன நன்மை கிடைத்தது?
அவன் தரப்பிலும் அதுதான் சமன்பாடு. காதலுக்காகவோ, கடமைக்காவோ அன்றி காபந்துக்காகச் செய்திருக்கிறான். எல்லாவற்றையும் ஒதுக்கி காபந்துக்காக மட்டும் செய்யப்படும் ஒரு திருமணத்தில் ஏன் அந்த வெறுமை வந்து விழுந்துவிடாது?
நிச்சயமாய் அது சங்கவியில் விழுந்தது. ஆனால் குணாளனில் விழவில்லையே.
அவன் என்ன செய்கிறான், எங்கு செல்கிறான், யார் யார் வந்து அவனுடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதொன்றும் அவள் அறியாள். அவனது நண்பன் ரமேஷ் மட்டும் அக்கா… அக்காவென்று மிகுந்த வாரப்பாட்டோடு அவளுடன் கதைபேச்சுகளை வைத்திருந்தான். அவனும் நண்பனுக்கு மிக விசுவாசமாக இருந்தான். எந்த விஷயமும் அவனிடமிருந்து என்றும் கசிந்ததில்லை.
இயல்பல்லாதவிதமாய் குணாளன் நடப்பதாய்த்தானே அவளுக்குத் தோன்றிக்கொண்டு இருக்கின்றது? இயக்கத்தை விட்டிருக்கிறவனிடம் துவக்கு எதற்கு? வீட்டுக்கு வரும்போது இடுப்பிலிருந்து அதை உருவி யாராவது ஒரு நண்பனிடம் வாசலில்வைத்து கொடுத்துவிட்டுத்தான் உள்ளே வருகிறான். துவக்கை வைத்து என்ன செய்கிறான்? தமிழீழ காவல்துறையிடம் அகப்பட்டால் அவனது நிலைமை என்னவாகுமென்பதை யோசித்தானா? இத்தகைய புதிர்களால் அவள் தன் வெறுமையும் புதிரும் இன்னமின்னும் அதிகரிக்கப் பெறுகிறாள்.
அன்று காலை அவன் எங்கோ வெளியே போயிருக்கிறான். மாலை வருவானா, மறுநாள் வருவானாவென்பது அவளுக்குத் தெரியாது. வருவானாவென்பதும் தெரியாது. தூக்கத்துக்காக மட்டுமே, ‘காலமை வெள்ளெண எழும்பவேணு’மென்று அவசரமாய் வீட்டுக்கு வருபவனிடமிருந்து அவள் என்னத்தை அறிந்துவிட முடியும்? படுத்தவுடன் தூங்கிவிடுகிறான். தூங்கியவுடன் குறட்டை போகிறது.
அவளால் அப்படிச் செய்யமுடியவில்லை. அவள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தாலும், அவளுக்கு தன் இனத்தின் எதிர்காலம்பற்றி நிறைந்த கரிசனம் இருந்தது. இயக்கத்தின் கருத்து, செயற்பாடுகளென எல்லாம் அறிந்துகொண்டிருக்கிறாள். அவ்வப்பொழுது அவளது படையணித் தோழி நீலகேசி வந்துபோகிறாள். அவள்மூலமே எல்லாம் அறிகிறாள். சொந்த விஷயங்கள்பற்றி சிலநேரம்தான் பேசுகிறார்கள். ஒருமுறை தான் கல்யாணம் செய்யப்போவதாக நீலகேசி சொன்னாள். ‘கலியாணம் செய்யிறதுக்காக இயக்கத்தை விடாத’ என்றாள் இவள். ‘இயக்கத்தை விடத்தான கலியாணம்’ என்று சிரித்தாள் அவள். இயக்கத்தின் எதிர்காலம் என்னவாகுமென்ற எண்ணத்திலேயே அன்றைக்கு பாதி இரவு இவளுக்குத் தூக்கமிழந்து போனது.
கருணாம்மான் பிரிந்து சென்ற நாட்களின் பின்னால் அவர் சேர்ந்த கூட்டுகளும், அரசுசார்பு நிலைப்பாடுகளும் எண்ணும்போதெல்லாம் இவளை வறுத்தெடுத்திருந்தன. குணாளன் எள்ளத்தனை கரிசனமும் சகலதும் இழந்துபோயிருக்கிற மக்கள்மீதுகூட, காட்டவில்லை. யுத்தம் துவங்குவதன் முன் அவர்களுக்கு ஒரு வீடு இருந்தது, ஒரு வாழ்க்கை இருந்தது. ஆனால் இப்பொழுது...? ஊரையே இழந்திருக்கிறார்கள். அவர்களது நிலை எந்தக் கணத்திலும் எவருக்கும் கரிசனத்தில் இருந்திருக்கவேண்டும். அவளின் நிலைப்பாடு அது. ஆனால் குணாளன் தூங்கினான். குறட்டைவிட்டான்.
எந்த அக்கறையும் அவள்மீதோ பிள்ளைமீதோ கொண்டிராததுபோலவே அவனது நடத்தைகள் இருக்கின்றன. திரும்பமுடியாத ஒரு வழியில் அவளது பயணம் நடந்துகொண்டிருக்கிறது. அவள் இனிச் செய்ய எதுவுமில்லை. வருவதை எதிர்கொள்ளத் தயாராயிருப்பதே முடிவாயிருந்தது. தன் வெறுமையை அவள் தானேதான் சமாளித்துக்கொள்ள வேண்டும்.
சிந்தனையிலிருந்து மீண்ட சங்கவியின் பார்வை வீதியில் பரந்தது. அந்த அதிகாலையில் நித்தியா வெளிக்கிட்டு ஒரு பாய்க்குடன் போய்க்கொண்டிருந்தாள். அவளது கையசைப்பு கண்டு தானும் கையசைத்தாள்.
முற்றத்திலிருந்த பரஞ்சோதி கொஞ்சம் சத்தமாகவே யோசித்தாள். “கொழும்புக்கு போறாபோல. ம்… சீவியத்துக்கு வழி வேணுமே!”
அம்மாவுக்கு ஏன் அந்தமாதிரி புத்தி போகிறதென்று முன்பும் சங்கவி நினைத்திருக்கிறாள். ‘சீவியத்துக்கு வழி பண்ண’ கொழும்புக்குத்தான் ஏன் போகவேணும்? இஞ்ச யாழ்ப்பாணத்திலயே உழைக்கலாமே? சிலபேர் உழைக்கினம்தான?’ நித்தியாவின் கதை சங்கவிக்குத் தெரியும். அவளே சொல்லியிருக்கிறாள். அப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறாளென்பதும், ஏன் போகிறாளென்பதும்கூட, சங்கவிக்குத் தெரியும். யாருக்கும் திறந்துவிடாத ரகசியமாய் வைத்திருக்க நித்தியா கேட்டிருக்கிறாள். நித்தியா கேட்டிருக்காவிட்டாலும் அதை ரகசியமாய்த்தான் வைத்திருக்கவேண்டுமென்று சங்கவிக்குத் தெரியும். அது ஓர் உயிர் காப்பு சார்ந்த ரகசியம். அவள் மீண்டும் நினைக்கவும் கருதியிராத ரகசியத்தை அம்மாவுக்கேனும்தான் வெளிப்படுத்திவிட முடியாது. எதிர்வீட்டு தாமரையக்காவோடு கதைபேச்சு இருக்கிறது நித்தியாவுக்கு. ஆனால் தன் அந்தரங்கங்களைப் பரிமாற நித்தியா அவளிடம்தானே ஓடிவருகிறாள்? ஒரு வாக்கு கொடுத்த பொறுப்பு அவளில் இருக்கிறது. காலம், வேவுகளின் கொடுங்கரங்கள் பற்றியதாக இருக்கிறது. யார் யாரைக் காட்டிக் கொடுப்பரென்று நிறுதிட்டமான வரைவுகளேதும் இல்லை. தாய் மகனை, மகள் தந்தையை, அண்ணன் தங்கையை, தம்பி அக்காவையென உறவுகள் அரண்செய்யாத துறையாக அது இருந்தது. அரசாங்கம், கட்சிகள், புலிகள், பிற இயக்கங்கள் எல்லாமே அந்த அச்சில்தான் சுழன்றுகொண்டிருந்தன. வெள்ளை வான் பயங்கரம் சென்ற வருஷத்தைவிட இம்முறை அதிகம். யாழிலிருந்தும் கொழும்பிலிருந்தும் அதுபற்றிய கதைகள் காற்றிலும், அச்சிலுமாய் நிறைய வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளென ஒரு பெருந்தொகையே இருக்கிறது. அது இருபதாயிரத்தைத் தாண்டிவிட்டதென அண்மையில் ஒரு தகவலில் பார்த்தாள். அவர்களெல்லாம் ஒரு அமைப்பாய்க் கூடி காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள்பற்றிய தகவல்களை அறிய வற்புறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நித்தியாவின் விண்ணப்பம் நியாயமானது. அவள் வேவு கரங்கள் எங்கெங்கும் செறிந்திருந்த ஒரு இயக்கத்துக்கு எதிராக அந்த ரகசியக் காப்பைச் செய்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு துணிச்சல் அதிகம்தானென எண்ணினாள் சங்கவி. இல்லாவிட்டால் தன் மன ஈறல்களைக் கொட்டித் தீர்க்க எந்த இயக்கத்துக்காக அஞ்சித் திரிகிறாளோ, அந்த இயக்கத்தின் முன்னாள் போராளியையே அவள் தேர்ந்திருக்க மாட்டாள். இன்னொருவகையில் அதையே சரியான தேர்வாகவும் கொள்ளமுடியும். அவளுக்கே ஏதாவது இடுக்கண் நேருங்கால், அந்த விவகாரத்தை வெளியரங்கில் எடுத்துவர மனோதிடமும், நடைமுறை விவகாரங்களும் அறிந்தவர்களால் மட்டுமே சாத்தியப்படும்.
ஒருவேளை அவளது தேர்வுக்கு அனுகூலமானவை நிறைவேறாதுபோனாலும், பிரதிகூலங்கள் நிச்சயமாக நேர்ந்து விடக்கூடாதென்ற சங்கல்பம் சங்கவிடம் இருந்தது.
1990களில் ரெலோ இயக்க உறுப்பினர்கள் தேடித்தேடிக் கட்டம் போட்டு, ஒரு திடீர்த் தாக்குதலில் புலிகளால் அழித்தொழிக்கப்பட்ட வரலாறு இன்னும் ரத்த ஈரலிப்புடன் இருக்கிறது. அத் தாக்குதலில் ஸ்ரீசபாரத்தினத்துடன் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொலைசெய்யப்பட்டனர். முக்கியஸ்தனாய் இல்லாத ஆனால் தங்களுக்கு எதிராக நிற்கக்கூடிய ஒருவனும் அப்போது புலிகளால் கட்டம்போடப்பட்டவனாக இருந்தான். அவன்தான் நித்தியாவின் கணவன். தாக்குதலில் அவன் மரணமாகிவிட்டதாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கையில், எவ்வாறோ அவர்களது குறியிலிருந்து தப்பிவிட்டவன் ஓட்டமாய், நடையாய், பட்டினியாய் நான்கு நாட்களின் பின் கொழும்பை அடைந்து பாணந்துறையிலுள்ள ஒரு நண்பனிடத்தில் தஞ்சம் கொண்டான்.
கடைசியாய் ஒருமுறை தன் கணவனின் முகத்தைக்கூட காணமுடியாது போய்விட்டதேயென்று ஆறாத் துயர்ப்பட்டாள் நித்தியா. நினைவைக் கைவிட முடியாமல் அவள் தன் கணவனுக்காகக் கைவிட்டதுதான் குங்குமம்.
அந்த நெற்றி ஒரு பிறைநிலாவின் அழகைச் சொல்லிக்கொண்டிருந்தது. பிறைநிலா பொதுவாகவே பெண்களின் நெற்றிக்கு ஒப்பாகச் சொல்லப்படினும், அந்தளவு பொருத்தம் வேறு பெண்களுக்கு வாய்க்கவில்லை. அவள் அம்மா தலைதலையாய் அடித்து அரற்றித் திரிந்தது அந்த நெற்றியைப் பார்த்துத்தான்.
மூன்று மாதங்களின் பின் ஒரு நாள் செய்தியொன்று ரகசியமாக வந்ததின்மேல் கொழும்புக்குப் புறப்பட்டாள் நித்தியா. ஒரு வாரத்தின் பின் அவள் திரும்பி கட்டைவேலி வந்தபோது, அவள் நெற்றியிலே ஒரு பருப்பளவு சிவப்புப் பொட்டிருந்தது. வேண்டிய வேண்டாதார் பார்வைகள் தீட்சண்யிக்க துக்கம் களைந்து மோகமாய்ச் சிரித்தாள் அவள். வேண்டிய வேண்டாதார் அவள் மறுகலியாணத்துக்குத் தயாராகிவிட்டதாக விஞ்ஞாபனம் செய்தார்கள். நித்தியா உள்ளுள்ளாய்த் துடித்தாலும், தன் ரகசியத்தின் போர்வையாக தானெறிந்த வளையம் வேலைசெய்வதில் திருப்தியோடு தன்னைத் தேற்றிக்கொண்டாள். ஒரு வருஷத்துள் அவள் கட்டைவேலியிலிருந்து கனகாம்பிகைக் குளத்துக்கு தன் தாயாரோடு வந்துவிட்டது, துக்கத்தை ஆற்ற மட்டுமல்ல, யாழ்ப்பாணம் இன்னும் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்தமையாலேயே ஆகும். என்றைக்கு யாழ்ப்பாணம் ராணுவத்தின் கையில் விழுந்து, வன்னிக்கு புலிகள் புலம்பெயர்கிறார்களோ, அன்றைக்கு ஒரு மரண யாத்திரையை மேற்கொண்டு அவள் மறுபடி கட்டைவேலி போய்விடுகிறாள்.
இரண்டாயிரத்து இரண்டு பெப்ரவரி 22இல் ஏ9 பாதை திறக்க மறுபடி கிளிநொச்சி வந்தாள். எங்கிருந்தும் அவள் கொழும்புக்குப் போய்வருவது தவறவேயில்லை. அதை ஒரு சாகசமாய் சரசம்தோன்ற அவள் நிகழ்த்திக் காட்டினாள். அதுவே நாளடைவில் அவள் காவித்திரியும் அபாண்டத்தின் மூலமாயும் ஆனது.
பரஞ்சோதி அதை நம்பிவிட்டாளென்று தெரிந்தது. ஆனாலும் அவளது அப்போதைய வயதை அம்மா யோசித்திருக்கலாம். நாற்பது வயதுக்கு மேலே, கொழும்பிலே இருந்தாலும்கூட பரவாயில்லை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு போய் வேசையாடுகிறாளென்று எண்ணுவதற்கு, உண்மையிலேயே ஒரு கடின மனம்தான் வேண்டியிருந்திருக்கும். பரஞ்சோதிக்கே அவளுக்குச் சற்று மேலேயான வயதுதான்.
முதல்நாளே சங்கவியிடத்தில் நித்தியா சொல்லியிருந்தாள், ‘சங்கவி, நாளைக்கு கொழும்புக்குப் போறன். முக்கியமான ஒரு நாளாயிருக்கப் போகுது வாற வெள்ளிக்கிழமை. எல்லாம் திரும்பிவந்து விவரமாய்ச் சொல்லுறன். அதுக்குப் பிறகு எனக்கு ரகசியமில்லை, சங்கவி. வரேக்க என்ர பதினைஞ்சு பதினாறு வருஷத்திய பாரத்தை அங்க விட்டிட்டுத்தான் வருவன்’ என்றிருந்தாள்.
‘சந்தோஷம், நித்யாக்கா. ஏனோ சகோதரம்மாதிரி ஒரு பற்று உங்களில. நீங்கள் சந்தோஷமாயிருந்தா எனக்கும் சந்தோஷம்தான்’ என்றாள் சங்கவி.
‘என்னஒண்டு, இருவது வரியமாய் இருக்கிற சோகத்தை நான் திரும்பவும் இஞ்சதான் கொண்டுவர வேணும்.’ என்ன சொல்கிறாளென்பது புரியாமல் சங்கவி அவளை நோக்கி நிமிர்ந்தாள்.
‘வேறயென்ன, சங்கவி. அந்தாள் உயிரோட இருக்கிறத காட்டேலாததால… மலடியாய்த்தான இன்னும் இருக்கிறன்? அந்தப் பாரத்தை எப்ப நான் இறக்கிவைக்கேலும்?’
அப்போது நித்தியாவின் கண்களிலிருந்து நீர் பொலபொலவென உதிர்ந்துகொண்டிருந்தது. தடுக்க சங்கவி முயலவில்லை. அது தடுக்க நிற்கக்கூடியதல்லவென்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
தன் நெடுங் காலத்திய துன்பத்தின் முடிவை அறிந்துவர அந்தப் பயணத்தை மேற்கொள்கிறாள் நித்தியா. தன் துயரத்தின் முடிவு எதிலிருந்தாயிருக்கும்? எப்போதாயிருக்கும்? ஏங்கினாள் சங்கவி.
குழந்தை எழுந்து, “அம்மா”வென அழைத்துக் கேட்டது. சங்கவி கிணற்றுக் கட்டிலிருந்து எழுந்து வீட்டுக்கு நடந்தாள்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.