வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் பதினைந்து!
அந்த வருஷங்களில் உள்ளிருந்த ஆத்மாவும் சற்று குளிர்ச்சி அடைந்திருந்தது பரஞ்சோதிக்கு. ஆங்காங்கே இடம்பெற்ற யுத்த நிறுத்த மீறல்கள் சிறீலங்கா யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் புகார்களாய்க் குவிந்திருந்தன. அவை ஐந்நூறுக்கும் அதிகமென ஒரு கணக்கு சொல்லிற்று. இருந்தும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவொன்றின் இருப்பே நிம்மதி தரும் அம்சமாய் பலர் மனத்திலும் இருந்திருந்தது. நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறுபது பேர் அதில் அங்கத்துவம் வகித்தமை அதன்மீதான நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தியிருந்தது. பரஞ்சோதியின் ஆறுதல் அங்கேயிருந்து பிறப்பெடுத்திருந்தது. இரண்டாயிரத்தில் ஏற்பட்ட தென்மராட்சி யுத்தத்தில் கனகாம்பிகைக் குளத்துக்கு பரஞ்சோதி ஓடிவந்து மூன்று மாதங்களுக்குள்ளாக, ஒரு சைக்கிள்கார பெட்டையின் தொடர்பை நூலாக வைத்துக்கொண்டு ஒரு சிலந்தியைப்போல கிடுகிடென ஓடி இயக்கத்தில் சேர்ந்திருந்தாள் அவளது மகள் சங்கவி. வீட்டிலே தாய் தகப்பனின் நேரடி ஒப்புதல் இல்லாமல் இயக்கத்தில் சேர முடியாதென்ற ஒரு நிபந்தனையை இயக்கம் இன்னும் ஏன் யோசிக்கவில்லையென அன்று அழுது அரற்றினாள் அவள். அப்படி எத்தனை தாய்கள், தந்தைகள் தங்கள் பிள்ளைகளைத் தேடியும், அவர்களின் வயதுக் குறைவை முன்னிறுத்தி இயக்கத்திலிருந்து விடுவிக்கக் கோரியும் கிளிநொச்சியில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள்? இரண்டு தடவைகள் ஒரு தாய்க்கும், ஒரு பெற்றோருக்கும் அவளே இரண்டு நாட்கள் தன் வீட்டிலே புகலிடம் அளித்திருந்தாள். அ
அவளே அவ்வாறாகத் துடித்திருந்ததில் அந்த பாசத்தின் மொழியை அவள் வெகு இலகுவில் புரிந்தாள். ஒரு தாய், ‘ஒரு பிள்ளையில அவனுக்கு சரியான ஆசை இருந்திது. எவ்வளவு அடாத்தாய் நிண்டு அதை மறக்கப் பண்ணினன்? இப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருந்தா அவன்ர மனத்தை அண்டைக்கு நோகடிக்காமல் விட்டிருப்பனே. அவளுக்காண்டியாச்சும் இயக்கத்தில சேராமல் விட்டிருப்பானெல்லே?’ என்று அழுதரற்றினாள். அது கொன்றவள் வைத்த ஒப்பாரி.
சங்கவிக்கு அது கதிமோட்சமாய் இருந்திருக்கலாம். ஆனால் பரஞ்சோதிதான் நெருப்பில் இதயம் விழுந்ததுபோல் வேகிக்கொண்டிருந்தாள். அவள் ஆயுதம் எடுத்துவிட்டாளென்பது பரஞ்சோதியைப் பொறுத்தவரை ஒரு நிகழ்வல்ல. அது அவள் ஆதாரம் கொண்டிருந்த அத்தனை கனவுகளினதும் ஒட்டுமொத்த அழிவுக்கான வாசல்திறப்பு.
அண்ணன் இறந்த சோகத்துக்கு அழ முடியாமல் திகைப்பூண்டில் மிதித்ததுபோல் இருந்திருந்த பிள்ளைக்கு, அப்படியொரு முடிவு இருந்ததாவென்று அவளுக்கு ஆச்சரியம் ஆச்சரியமாக வந்துகொண்டிருந்தது. அறைக்குள் தொங்கவிடப்பட்டிருந்த சாந்தனின் படத்துக்கு முன்னால் நின்று தலைதலையாய் அடித்து அவள் அழுதாள். நான்கு பிள்ளைகளில் ஏற்கனவே ஒன்றை போருக்காக இழந்தாயிற்று. இழப்பதற்கே கையளித்ததாய் ஆகிவிடுமோ அடுத்ததின் கதையும்? அவள் எவ்வளவை யோசிக்கவேண்டி இருந்தது?
சாந்தரூபி இப்போதும் முல்லைத்தீவிலே குடியிருந்தாள். இரண்டு குழந்தைகளும் பிறந்திருந்தன. அது புலிகளின் கடற்படைத் தளமும், ஆயுதக் கிடங்கும், காவலரண்களும் கொண்ட படைநிலமாகவே இருந்துகொண்டிருந்தது. அவர்கள் வாழ்க்கை தேடி அங்கே ஓடியிருந்தும் சாந்தரூபியின்மீதும், சில்வெஸ்ரர்மீதும் சங்கவியின் இயக்க இணைவு காரணமாகவே புலி முத்திரை குத்தப்பட எவ்வளவு நேரம் ஆகிவிடும்? அவர்கள் குடாவுக்கும் வன்னிக்குமென்று அடிக்கடி பயணத்தில் இருப்பவர்கள். யாழ்ப்பாணத்திலே சில உறவுகள் அவ்வாறுதான் தம் பொச்சரிப்பைக் கொட்டியிருந்தன. ‘அவைக்கென்ன, அவை இயக்கத்தாக்கள்’ என்றிருந்தாள் சில்வெஸ்ரரின் உறவுக்காரி ஒருத்தி. சங்கவியின் கதை அவளுக்குத் தெரியாதென்று சொல்லமுடியுமா?
2002 மாசியின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அந்த அவளின் ஏக்கங்களை மேலும் கொஞ்சம் குறைத்ததாய்ச் சொல்லமுடியும். ஆனாலும் உள்ளே ஒரு பதற்றத்தை அவள் கொண்டிருந்தாள்.
சில்வெஸ்ரர் கொழும்புக்கும் முல்லைத்தீவுக்குமிடையே மீன் லொறி ஓடிக்கொண்டிருக்கிறான். என்றேனும் ஒருநாள், ஏதேனும் ஒரு காரணத்தில் விசாரணைக்கென ராணுவத்தாலோ பொலிஸினாலோ அவன் இழுத்துச் செல்லப்படமாட்டான் என்பதற்கு உத்தரவாதமில்லை. இயக்ககாரியின் உறவுத் தொடர்பு விசாரணையில் அவனுக்கு சாதகமாக இருக்காது.
சாந்தரூபிகூட அந்தளவு ஏக்கத்தை அடைந்திருப்பாளா? ‘பாவம், அது சின்னப்பிள்ளை, எல்லாம் யோசிச்சு வருத்தப்படவும் அதுக்கு வயசு காணாது’ என்று அவளுக்காகவும் இவள்தானே துக்கப்பட்டாள்?
ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் குடாநாடு வந்திருப்பினும், நிர்வாக சீருடையுடன், சீருடையின்றி பொதுமக்கள் போர்வையில் கட்டற்ற விதமாக புலிகளின் நடமாட்டம் ரகசியத்தில் இருந்துகொண்டிருந்தது. இயக்கத்தில் சேர்ப்பதற்கான பரப்புரையையும் அவர்கள் காதோடு காதாகச் செய்தார்கள்.
தமிழர்களுக்கான ஒரு விமானப்படையின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான நிதி சேர்ப்பு ஒருபோது பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. பெரும் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி கடைகளும்கூட இந் நிதி சேர்ப்பிலிருந்து தவறவில்லை. செம்மனச்செல்விக்குப்போல சாந்தமலருக்கும் ஒரு பங்கு விதிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் ஊதியத்தை மாதந்தோறும் தியாகித்தாள். அவளும் பவுண் கொடுத்தாள். அத்தனை கஷ்ரங்களுக்கிடையிலும் எல்லாம் செய்தாள். அப்போதெல்லாம் சாந்தமலர் எண்ணியிருக்கிறாள், ராணுவ தடைமுகாம் கடந்து வன்னியிலிருந்து புலிகளின் யாழ் செல்லும் குழு எவ்வாறு யாழ்குடாவுக்குள் நுழைகின்றதென? யாருக்கும் அதன் விடை தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் சொல்லவுமில்லை.
யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவினரதும், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களதும் வாகனங்கள் தத்தம் அடையாளக் கொடிகளுடன் ஏ9 பாதையென புதுநாமம் பெற்றிருந்த கண்டிவீதியிலும், பரந்தன்-முல்லைத்தீவு ஏ35 பாதையிலும், பரந்தன்-சங்குப்பிட்டி ஏ15 பாதையிலும் விரைந்து பறந்து திரிந்தன. அவற்றின் காட்சி இன்னும் சமாதானத்தின் இருப்பை நிச்சயப்படுத்துவதாய் இருந்தது.
அதில் சனங்கள் சந்தோஷப்பட்டார்கள். பரஞ்சோதியும் தன் உள்ளுள் கனன்றுகொண்டிருந்த வெம்மை தணியப்பெறுகிறாள். சமாதான காலத்தின் ஓராண்டுக்குக்கும் மேலான நீடிப்பு ஒரு சாதனை. ஏற்கனவே 1987இல் ஒரு உடன்படிக்கை சமாதானத்துக்காய்க் கையெழுத்தாகியது. நிலைக்கவில்லை. அப்போது நோர்வேயின் அனுசரணையிலானது மூன்றாவது யுத்தநிறுத்தம். சர்வதேச நாடுகளின் கவனிப்பில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அது தொடரும்… தொடரவேண்டுமென்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது. முருகனாக இருந்தாலென்ன, பிள்ளையாராக இருந்தாலென்ன கோயில் கண்ட இடமெல்லாம் கையெடுத்துக் கும்பிடுகிறாள் பரஞ்சோதி. இடிந்தழிந்த கோயில்களாயினும்கூட அவள் சாத்தியமான எல்லா தெய்வங்களையும் அங்கே பிரதிஷ்டை செய்து வணங்குகிறாள். எல்லாம் அந்த சமாதானம் நிலைக்கவேண்டும் என்பதற்காக. வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பாசனத்துக்கு இரணைமடுவிலிருந்தும், கனகாம்பிகைக் குளத்திலிருந்தும் நீர் திறந்து விட்டிருந்தார்கள். எங்கும் நீரின் மணமும், பசுமையின் மணமுமாக இருந்தது.
அப்போது சங்கவியும் மூன்று பெண் போராளிகளும் சைக்கிளில் வந்து வாசலில் இறங்கினார்கள்.
சங்கவி படலையைத் திறந்துகொண்டு உள்ளே வர ஏனைய இரு போராளிகளும் கூடவந்தனர்.
இராமநாதபுரம் போகிற வழியிலே கண்டுபோக வந்ததாய் சங்கவி தெரிவித்தாள்.
இன்னும் யுத்தம் நிறுத்தப்பட்டுவிடாத பகுதியாகவே இராமநாதபுரமும், அதற்கு அப்பாலிருந்த நிலங்களும் பரஞ்சோதியின் மன அமைவில் இருந்துகொண்டிருந்தன. கண்டாவளை, தருமபுரம், இருட்டு மடு ஆதியன அப்பால் வனமும் நீரேரிகளும் சதுப்புகளுமாக விரிந்திருந்த பூமிகள். அம்பகாமம் இன்னும் யுத்தத்தின் அடர்த்தியுடன் இருந்தது. இரணைமடுக் குள காட்டுப் பகுதியோ பகலை இரவாகவும், இரவைப் பகலாகவும் மாற்றிப் போட்டுக்கொண்டு பேரிரகசியத்தை தன்னுள் இன்னுமின்னும் வளர்த்துக்கொண்டிருந்தது. அது பல்வேறு திறன்களினால் உண்டாக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தாள் பரஞ்சோதி. அதை கண்டவர் பெரும்பாலும் இல்லாதவராய் இருந்தனர். சாதாரணர்களுக்கு அதற்கான வழிகள் அடைக்கப்பட்டிருந்தன. அதன் உச்சரிப்பிலும் அவள் பரபரப்படைவது அது காரணமாயே.
அந்த இடத்தில் சங்கவிக்கான வேலையென்பது மிகுந்த ரகசியமும், சிரமமும் கொண்டதாய் இருக்குமோவென அவள் சஞ்சலப்பட்டாள்.
அவர்கள் சைக்கிள்களை வெளியே விட்டுவந்தபோதே சங்கவி அதிகநேரம் அங்கே தங்கமாட்டாளென்பதை பரஞ்சோதி புரிந்திருந்தாள். அதனால் உடனடியாகவே தேநீருக்கு கேத்திலை அடுப்பில் ஏற்றினாள்.
சமாதான செயலகமும், அரசியல்துறை அலுவலகமும் பரவிப்பாய்ஞ்சானில் இருப்பதில், அந்த குடியேற்ற பகுதியிலுள்ளவர்கள் எப்போதும் ஒரு பாதுகாப்புணர்வோடு இருந்துகொள்ளவேண்டுமென அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
அடுப்படியில் இருக்கையில் அதைக் கேட்டிருந்த பரஞ்சோதி தேநீரைக் கொண்டுவந்து கொடுத்ததும் அதுபற்றியே கேட்டாள். “இங்கத்தச் சனம் கவனமாயிருக்க வேணுமெண்டா… அப்ப திரும்ப சண்டை வந்திடுமெண்டு நினைக்கிறியளோ?” அவளுக்கு விளக்கம் கொடுத்து சங்கவியால் சமாளிக்க முடியாது.
“அப்பிடி எதிர்பாத்திருக்கிறதில எந்த நட்டமும் வந்திடாது, அன்ரி. இப்ப பாருங்கோ… தாய்லாந்தில அரசு முன்வைச்ச பிரேரணையள் போதுமானதாயில்லையெண்டு பேச்சுவார்த்தையிலயிருந்து புலியள் திரும்பி வந்திட்டினம். நோர்வே சமாதானக் குழுவும் தாங்கள் இப்போதைக்கு இஞ்ச இருக்கத் தேவையில்லை எண்டிட்டு சிறீலங்காவை விட்டு போயிட்டினம். என்ன நடக்குமெண்டு ஆரும்தான் சொல்லேலாது. எல்லாத்தையும் வைச்சுப் பாக்கேக்க சண்டை திரும்ப வருமெண்டுதான் தெரியுது.” பாரதி சொன்னாள்.
அவளின் பேச்சு பரஞ்சோதிக்கு விளங்கும்படி இருந்தது.
ஆனால், அது அவளது நெஞ்சின் அமைதியை உடைத்தது.
அவள் அந்த மாரிக்கு குரோட்டன்சும், செம்பரத்தையும், சீனியாஸ்சும் முற்றத்தில் வைக்க எண்ணியிருந்தாள். மூலை வளவுக்குள் ஒரு கோழிக் கூடு கட்டுறதும் எண்ணமாயிருந்தது. காலையில் பூக்களில் விழிக்கவும், ஏதோ ஒரு வருமானத்தைக் காணவும் பெரிய ஆசையோடிருந்தவளுக்கு, மீண்டும் யுத்தம்… மீண்டும் ஓட்டமென்றால்…
இரணைமடுக் குள பக்கமாய்… விமான ஓடுதள பாதை அமைக்கப்பட்டு வருவதாக ஒருபோது ஒரு கதையிருந்தது. சமாதான காலத்தில் அவை நிறுத்தப்பட்டிருக்கலாமென்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் சங்கவியினதும் இன்னும் முக்கியமான போராளிகளினதும் நிலைநிறுத்தம் அது அப்படியில்லை என்று கொள்ளத்தானே அவளை ஆக்கும்?
பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நோர்வே சமாதானக் குழுவும் தற்காலிகமாயெனினும் இலங்கையைவிட்டு நீங்கியிருக்கிறது. அதை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள பரஞ்சோதியினால் முடியவில்லை. அது எங்கோ நெருடலைச் செய்கிறது. யுத்தம் மீண்டும் உயிர்பெறத் துடிக்கிறது.
அவளது ஆத்மா பட்டிருந்த அமைதியும் துடித்தது.
‘எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராயில்லாத ரண்டு தரப்புக்கள வைச்சுக்கொண்டு நோர்வே சமாதானக் குழு எப்பிடியான சமாதானத்தை இஞ்ச கொண்டுவரேலும்? என்ன நடக்கப் போகுதோ? எங்க இருக்கு இதுகளின்ர முடிவு?’ பரஞ்சோதி கோபமாக எண்ணினாள்.
அவர்கள் தேநீர் குடித்து முடிய புறப்பட்டனர்.
“நீங்கள் கிட்டடியில சாந்தியக்கா வீட்ட போகேல்லயோம்மா? அக்காவை நான் பாத்து இப்ப எத்தினை வருஷமாச்சு?”
பரஞ்சோதி சொன்னாள்: “போகவேணும். நானும் போய் கனநாளாச்சு. இப்ப போகக்கூடினமாதிரி இருக்கேக்க ஒருக்கா நீ அங்க போட்டு வந்திடன்.”
உறவுகளுக்கிடையில் பெரிய தூரங்களில்லை. இருந்தும் அந்தத் தூரங்கள் ஏன் கடக்க முடியாதனவாக இருக்கின்றன? சங்கவி அதையே யோசித்தாளோ? மௌனமாய் நின்றிருந்தாள்.
முன்புபோல் சங்கவி இப்போது இல்லை. கன விஷயங்களை யோசிக்கிறாள். பதில் கிடைக்காவிட்டால் பேசாமலிருக்கிறாள். கொஞ்சம் வளர்ந்திருக்கிறாளெல்லோ? இயக்கத்தில் சேர்ந்து இப்போது மூன்று வருஷங்கள். அதுவும் வளர்ச்சிதானே?
பரஞ்சோதி எண்ணினாள்.
அவர்கள் போய்விட்டார்கள்.
காலம் பெரிய நம்பிக்கை உடைப்பெதனையும் செய்யாமல் நகர்ந்துகொண்டிருந்தது.
இருண்டு வந்த ஒரு மாலைப்பொழுதில் பரஞ்சோதி முற்றத்தில் அமர்ந்திருந்தாள். தூரத்தே சோ…வென இரைச்சல் கேட்டபடியிருந்தது. நான்கு நாட்களாக விடாது பெய்த மழையில் குளம் நிறைந்து கலிங்கு திறந்திருக்கிறார்கள். மருத நிலத்தினதும், முல்லை நிலத்தினதும் பல்வேறு மரங்கள் காற்றில் இசையெழுப்பின. வாகையின் வெண்நெற்று ஒலித்தது. சிறிதுநேரத்தில் மின்மினிப் பூச்சிகள் பறக்கத் துவங்கின. பார்த்தபடி இருந்தாள். வெளி இருளில் அமிழ்ந்துகொண்டிருந்தது. விளக்கை இன்னும் தாமதமாய்க் கொளுத்தினாலும் நல்லதுதான். அன்றைய எண்ணெயின் மிச்சத்தில்தான் நாளைய விளக்கு எரிகின்றது.
அப்போது ஏனோ போன தடவை வடமராட்சி போயிருந்தபோது நடந்த சம்பவமொன்று அவளுக்கு ஞாபகமாகிற்று. நீண்ட நாளாய் மனத்தில் அழியாது நின்றிருந்த சம்பவமும் அது.
அவள் சாந்தமலர் வீட்டை அடைந்தபோது மாலையாகியிருந்தது. பள்ளிகள் விட்டிருந்தன. அப்போது சாந்தமலரும் சைக்கிளை உருட்டியபடி சக ஆசிரியையோடு பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தாள்.
விறாந்தையில் அமர்ந்து மறுநாள் நடைபெறவிருந்த துக்க தின அனுஷ்டிப்புபற்றி பேச தொடங்கினார்கள். சாந்தமலரின் சக ஆசிரியைதான் விஷயத்தைப் பிரஸ்தாபித்தாள்.
கண்டி மல்வத்தை மகாபீடாதிபதி ஶ்ரீவிபஸ்ஸி தேரரின் இறப்புக்கான துக்க அனுஷ்டிப்பாக அது இருந்தது. அன்றைய தினத்தில் பாடசாலைகள், கடைகள், தியேட்டர்கள், சாராயக் கடைகளெல்லாம் மூடி, கறுப்புக் கொடிகளைத் தொங்கவிட்டு வடமாகாணம் மகாதேரரின் மரணத்துக்கான அஞ்சலியைச் செலுத்தவிருந்தது.
‘போன வருஷ கடைசியிலதான் மல்வத்தை மகாபீடாதிபதி, இன ஐக்கியம் ஏற்படவேணுமெண்டா முதல்ல அந்த அரசியல் சட்டத்தை மாத்தவேணுமெண்டு பகிரங்கமாய்ச் சொன்னவர். அப்பிடியொரு மகாபீடத்திலயிருந்து அந்தமாதிரிக் கருத்துச் சொன்ன முதல் ஆளும் அவர்தான். தமிழாக்கள் அப்பிடியொரு கௌரவத்தைக் குடுக்கிறதுக்கு முழுவதும் தகுதியான ஆள்தான்’ என்றாள் சாந்தமலர்.
‘அது சரிதான். ஆனா நான் சொல்ல வந்தது அதில்லை, ரீச்சர். அப்பிடிச் சொல்லி ஒரு ஆறு மாசத்துக்குள்ள அவர் செத்திருக்கிறாரே, அதை…. நீங்கள் என்னெண்டு நினைக்கிறியள்?’
‘அந்த விஷயம் மனத்தில பட்டதுதான்’ என்றாள் சாந்தமலர். ‘எண்டாலும் அவருக்கு எண்பத்தெட்டு வயசாயிருந்ததையும் நாங்கள் யோசிக்கவேணுமெல்லோ?’
‘கிழக்கு மாகாணத்தில முந்தி பொங்கு தமிழ் விழாவில பங்குபற்றின ஒரு புத்த சுவாமியையும் ஆரோ சுட்டுத்தான கொண்டினம்?’ பரஞ்சோதியின் ஞாபகம் சரியான சமயத்தில் வெளிவந்திருந்தது.
அதை சாந்தமலரின் சக ஆசிரியை வியந்த நேரத்தில், தாயை உறுக்கமாய்ப் பார்த்தாள் சாந்தமலர். அது ஏனென்று பரஞ்சோதிக்கு விளங்கியிருக்கவில்லை. அதேநேரத்தில் அவளுக்கு இன்னொரு விஷயமும் சொல்லவிருந்தது.
‘போன வருஷம்… ரண்டாயிரத்து மூண்டு மாசி நாலில... சுதந்திர தினத்தை சிறீலங்கா கொண்டாடிச்சுது. அதை துக்க தினமாய் வடமாகாணத்தில எங்கட ஆக்கள் அனுசரிச்சினம். ராணுவம் வந்து கறுப்புக் கொடியளைப் பிடுங்கி ஆக்களையும் அடிச்சுக் கலைச்சிட்டுது. ஆத்திரமடைஞ்ச கொஞ்சப் பேர், இஞ்ச வடமராட்சியிலதான், சிறீலங்காக் கொடியை அறுத்து நெருப்பு வைச்சினம்.’ தான் கண்கொண்ட சம்பவமென்று கூறினாள் பரஞ்சோதி.
‘அதை ஏனம்மா, இப்ப சொல்லுறியள்?’
‘துக்க தினம்பற்றிப் பேசினியள். அதுவும் துக்க தினம்தான?’
பரஞ்சோதி மேலே அங்கு நிற்கவில்லை.
அவள் திரும்பி வந்தபோது சக ஆசிரியை போயிருந்தாள்.
அப்போது சாந்தமலர் தாய்க்கு அந்த விபரத்தைச் சொன்னாள்.
அபிப்பிராயங்கள் பரவிச் செல்பவை. அவை வேறு மனங்களில் தம்மை ஸ்தாபிக்கும் திறன் கொண்டவையாயிருக்கின்றன. அதனால் அத்தகைய அபிப்பிராயங்களைக் கொண்ட மனிதர்கள் அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். என்றென்றைக்குமாக. அத்தகையோரில் பெரும்பாலனவர்கள் சிறைகளிலும் அடைக்கப்படுவதில்லை. காணாமல் ஆக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் வேலையிலிருந்து வீடு திரும்புகையில், இரவில் வீட்டிலே தூங்கிக்கொண்டிருக்கையில் வெளியே இழுத்துவைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். சரியாகவோ தவறாகவோ கிடைக்கிற தகவலின்மேல் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளாக அவை இருக்கின்றன.
கைக்கூலிகளாக விரும்பும் மனிதர்களுக்கு அவர்களது உடம்பெங்கும் செவிகள் முளைக்கின்றன. அவர்கள் எதையும் சொல்ல வருவதில்லை. கேட்பதற்கே வருகிறார்கள். சொல்ல வைப்பதற்காகவே எதையாவது சொல்லவும் அவர்கள் துவங்குகிறார்கள். பரஞ்சோதி வாயடைத்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
‘நாங்களெதுவும் ஏறுமாறாய்ப் பேசேல்ல. நல்லதாய்ப் போச்சு. அந்த மனிஷியும் தன்ர உடம்பெல்லாம் காதாய் அலையிற மனுஷி. வெளியாக்களுக்கு முன்னால பேசுறத நாங்கள் கவனமாய்ப் பேசவேணும், அம்மா.’ சாந்தமலர் அதற்குமேல் பேசவில்லை.
குடாநாட்டிலே அப்படியொரு நிலைமை விரிந்துகொண்டு இருக்கிறது. வன்னியிலே வேறொரு நிலைமை உருவாகிக்கொண்டு இருக்கிறது. அவளுக்கு புரிவது கடினமாகவே இருந்தது. ஒன்று மட்டும் அவளுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது, நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலை அதிக காலத்துக்கு தொடராதென்று.
துக்கமாக, பறக்கும் மின்மினிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் வெளியிலிருந்து பரஞ்சோதி வீடு வந்தபோது சங்கவி திண்ணையில் இருந்திருந்தாள். தனியாக வந்திருந்தாள்.
வழக்கம்போல உற்சாகமாய் அவள் இல்லைப்போலவும் தோன்றியது.
பரஞ்சோதி எல்லாவற்றையும் கவனித்தவாறே காரியங்கள் பார்த்தாள். அவளிடம் உடனடியாய்க் கேட்பதற்கு
எதுவுமிருக்கவில்லை. எத்தனை நாள் நிற்பாளெனக் கேட்கலாம். அவள் சீருடையில் வந்திருக்காதபடியால் வழக்கம்போல் ஐந்து நாட்கள் நிற்பாளென தெரிந்திருந்தது. அவள்தான் எதையாவது கேட்கவேண்டும் அல்லது சொல்லவேண்டும். அவளோ ஏதோ யோசனையில் மூழ்கிப்போய் இருந்திருந்தாள்.
“சாப்பிடுறியா, சங்கவி? பாணும் வாழைப் பழமும்தான்.”
“சாப்பிடுவமம்மா.” அவளது பதிலிலும் அத்தனை அலுப்பு இருந்தது.
“தேத்தண்ணி வைக்கப்போறன். வைச்சு வந்தோடன சாப்பிடுவம்.”
பரஞ்சோதி தேநீர் வைத்துவந்தாள்.
சாப்பிடும்போது கேட்டாள்: “என்ன யோசினை?”
“ம்ச்.” அலுத்தாள் சங்கவி. “எனக்கு என்ன நினைக்கிறதெண்டே தெரியேல்லையம்மா.”
“ஏன் அப்பிடிச் சொல்லுறாய்? என்ன நடந்தது? காம்ப்பிலதான் என்னெண்டான்ன நடந்திருக்கும்.”
“ரதியெண்டு எங்கட போராளி ஒருதியை நேற்று கூட்டிக்கொண்டு போச்சினம். இண்டைக்கு மத்தியானம்வரை திரும்பேல்ல. ரதிக்கு என்ன நடந்ததெண்டு ஆரைக் கேக்கிறது? ஆர் கேக்கிறது?”
“கேட்டா சொல்லாம விடமாட்டினமெல்லோ?”
“சொல்லுவினம். ஆனா எனக்கு ஒரு சந்தேகமிருக்கு. முந்தியும் இப்பிடி நடந்திருக்கு. விசாரணைக்கெண்டு கூட்டிக்கொண்டு போன ரண்டு பேர் திரும்பி வரேல்லை. பிறகுதான் தெரிஞ்சுது, அவையை டம்ப் பண்ணியாச்செண்டு.”
“பெரிய பிழை எதாவது செய்திருப்பினம்போல.”
“பெரிய பிழைதானம்மா. இயக்கக் காசை பதுக்கினாளவை. கண்டு பிடிச்சிட்டினம்.”
“இதுகளுக்கு மன்னிப்பே குடுக்க மாட்டினமோ?”
“அது அந்த விஷயத்தை விசாரிக்கிற ஆளைப் பொறுத்ததம்மா.”
சிறிதுநேரம் பேசாமலிருந்து சாப்பிட்டாள் பரஞ்சோதி. “எங்கயும் நிலைமை சிக்கலாய்த்தான் இருக்கு. இந்தமாதிரி ஆசை போராளியளுக்கு வாறது சரியான துரோகம், சங்கவி.”
“நீங்களும் கட்டியிருப்பியள்…?”
“பவுணாய்க் கட்டினன். அது கட்டத்தான வேணும். அது சரி, இதுகள் காசை எடுத்து என்னதான் செய்யுங்கள்?”
“ஷோர்ஸ் வீடுகள் இருக்கும். அங்க குடுத்து சொத்துக்களாய்ச் சேர்த்துவைப்பாங்கள். பிறகு இயக்கத்தைவிட்டு விலகிவந்து வெளிநாட்டுக்கு ஓடுவாங்கள். என்னவெல்லாமோ நடக்குது, அம்மா, அங்க.”
“சிலதுகள் கலியாணம் செய்யவும் அப்பிடிச் செய்யுங்களோ?”
“இதெல்லாத்தையும் பெட்டையள்தான் செய்யினமெண்டு நினனக்கிறியள்போல. பெடியள்தான் எல்லாம். இதுகள் வேணுமெண்டா உதவியாய் நிண்டிருக்குங்கள். இதெல்லாம் ஒருநாளைக்கு மாட்டுப்படாமல் போகாது. அப்ப தெரியும் அவையின்ர அருமை.”
“கலியாணம் செய்ய அனுமதி குடுக்குதோ இப்பவும் இயக்கம்?”
“முந்தியைப்போல குடுத்துக்கொண்டிருக்கு. ஆம்பிளயளுக்கு வயசுக்கட்டுப்பாடிருக்கு. இருபத்தொன்பது வயசானா கலியாணம் செய்யலாம். போராளிப்பெண்ணும் போராளி ஆணுமெண்டா மணக்குழுவில அனுமதியெடுத்து கலியாணம் செய்திட்டு பொம்பிளை இயக்கத்தைவிட்டு விலகியிருந்து குடும்பத்தைப் பாக்கலாம். இப்பெல்லாம் அப்பிடியில்லை. கனபேர் அனுமதியில்லாம விரும்பின ஆக்களோட சேர்ந்து வாழுதுகள்...”
அவள் நிராசைப் பட்டாளா? பரஞ்சோதிக்கு அப்படித்தான் தோன்றியது. அது சங்கவிபற்றி அவள் மனத்தில் இருள்படிந்து கிடந்த மூலையில் ஒரு வெள்ளியைக் காட்டியது. அது மெல்லவாய் இருளைக் கிழித்து சுடர்ந்தது.
சங்கவியின் திடீர் வரவும், சிந்தனையான முகமும், போராளிகள்பற்றிய பேச்சும், தொடர்ந்து அவர்களது கல்யாணம் பற்றிய பிரஸ்தாபமும் அவளது மனத்தை எங்கெல்லாமோ சுழல வைத்தது. ஒருவேளை… ஒருவேளை… சங்கவிக்கே அப்படியான எண்ணமேதும் உருவாகியிருக்கிறதோ?
அவளையே கேட்காமல் அந்தக் கேள்விக்கு பரஞ்சோதியால் ஒரு பதிலை அடைந்துவிட முடியாது. ஆனால் அது மிகமிக இன்னல் தரக்கூடியது. அவள் பௌதீகார்த்தமாய் தன் உணர்ச்சிப் பிரதிபலிப்புகளைச் செய்ய அப்போதெல்லாம் ஆரம்பித்திருந்தாள். எதையாவது எடுத்து எறிவது… கீழே போட்டு உடைப்பது… இப்படி.
அவள் வேறுவிதமாக சங்கவியை அணுகவேண்டும். “அப்பிடி… அப்பிடி… உனக்கொரு எண்ணமும் இல்லைத்தான?” “என்ர வாயைப் பழுதாக்காதயுங்கோ.”
“எனக்கு முந்தியே தெரியுமே, இப்பிடித்தான் சொல்லுவாயெண்டு. நீயும் அப்பிடி மனம் மாறியிட்டியோ எண்டு கேட்டன். கலியாணம் கட்டி குடும்பம் நடத்திற ஆசை இருந்துதெண்டா, நாங்கள் ஏன் இயக்கத்தில சேரப் போறம்?”
சங்கவிக்கு அவள் யார் சார்பாய்க் கதைக்கிறாளென்று சங்கடம் வந்தது. அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் தெரியவில்லை.
“இயக்கத்தில இருக்கிற பெடியள் பெட்டையள் என்னெண்டான்ன செய்யட்டும். அவையின்ர விருப்பம், தாய் தேப்பன்ர ஆக்கினையெண்டு என்ன கோதாரிவந்து கலியாணம் செய்யிறதெண்டாலும் செய்துகொண்டு போகட்டும். எங்களுக்கென்ன? தாய் சகோதரங்களின்ர விருப்பங்களை நாங்கள் ஏன் பாக்கவேணும்? எரியிற வீட்டில புடுங்கிறது ஆதாயமெண்டு இயக்கக் காசை கொள்ளையடிச்சுக்கொண்டு ஆரெண்டான்ன போகட்டும். என்னண்டான்ன செய்து துலையட்டும். நாங்கள் இயக்கத்துக்கு விசுவாசமாய் கடைசிவரை இருப்பம். அதுதான நீ சொல்ல வாறாய்? எனக்குத் தெரியுமே, என்ர பிள்ளையின்ர குணம்.”
பரஞ்சோதி அப்பால் கைகழுவ நடந்தாள்.
சங்கவி கைகழுவி வந்தபோது அம்மா திண்ணையில் சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கண்ணீர் மினுங்கிக்கொண்டு இருந்தது.
அவள் சங்கவி காண்பதையும் கவனமறுந்திருந்தாள்.
சதி-பதி உறவுகள் நிரந்தரமாய்ப் பிரிக்கப்பட முடியாத காலத்தில், குடும்பமென்பற்கு சாகரமென்று ஒரு பெயரிருந்தது. இப்போதும் அது சாகரமாகவே இருக்கலாம். ஆனால் அதனுள் அழுந்திச் சாகவேண்டிய விதி இப்போது யாருக்கும் இருக்கவில்லை. முன்பானால் ஆண்கள் சந்நியாசம் கொண்டு அந்தச் சாகரத்திலிருந்து மீண்டார்கள். பெண்கள் அவ்வாறு இருந்திருக்கவில்லை. அவர்கள் அந்தச் சாகரத்திலிருந்து மீண்டு எதிர்கொண்டதும் வேறொரு சாகரமாகவே இருந்தது. மீண்டும் எதிர்கொள்வதும் சாகரமேயெனில், இருக்கிற சாகரத்திலேயே இருக்கலாமென்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். இன்றைக்கு எவருக்குமே குடும்பமென்பது தாண்ட முடியாத சாகரமாயில்லை. எதிர்கொள்வதும் உயிரவலம் கொள்ளும் சாகரமாய் இருக்கவில்லை. பிறகேன் சங்கவி அவ்வளவு பிடிவாதமாய் அதை நினைக்கவும் மறுப்பவளாய் இருக்கிறாள்? பரஞ்சோதியின் மனத்தில் ஒற்றைக் கேள்வியாய் அதுதான் நிலைத்து நின்றது.
சங்கவிக்கு குடும்ப பந்தத்தை அவ்வாறு சாகர சங்கமம் அல்லது சாகர சமாப்தியென எதுவாகவும் எண்ணுகிற பக்குவம் இல்லை.
அவளுக்கு உணர்ச்சியே கொள்ள உடம்பு இருக்கவில்லையென்பது ஒரு வாதமா? எறும்பும் தன் கையால் எண் சாண். அவளுக்கும் அதனளவுக்கான உணர்ச்சி இருக்கவே செய்யும். அது குறித்தே அவள் விலகியிருக்கிறாளெனில் அதை பரஞ்சோதியால் தெளிவடைய வைக்க முடியாது. ஒரு தாயாய் அது எவராலும்தான் செய்யப்பட முடியாதது.
அந்தக் கண்கள் கவரும் சக்தி கொண்டிருந்தன. உயிர்த்துவமாய் எப்போதும் அவை பிரகாசிக்கச் செய்தன. ஆனால்… அது…? அது இல்லாத பெண் காமம்கொள்ள நினைப்பது வேடிக்கையானதென நூலோரால் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் சங்கவி அவ்வாறு பின்னிற்கிறாளா? ஒருவேளை இன்னும் சிறிதுகாலத்தில் அவளுக்கே அந்த நினைப்பு தோன்றவும்கூடும். அதுவரை பரஞ்சோதி காத்திருக்கவேண்டியதுதான். ஆனாலும் ஏனோ அவளுக்கு கண் கலங்கி வந்தது.
சங்கவி கவனிப்பது கண்டு பரஞ்சோதி எழுந்து அப்பால் நடந்தாள். என்ன செய்வாளோ? காணியில் எதையாவது செய்துகொண்டிருப்பாள்.
சங்கவிக்கு மனத்தில் வலித்தது.
தான் சாதாரணமாய் இருப்பதாய் எண்ணும்படிதான் அம்மா எப்போதும் நடந்துகொள்கிறாள். தனக்காகவேதான் அப்படியென்றும் சங்கவிக்குத் தெரிந்திருந்தது. அவளுக்குள் எத்தனை ஆசைகள்… கனவுகள்… அடக்கப்பட்டிருக்கின்றன! அவள் எப்போதும் வாய் திறந்து சொல்லாத ஆசைகளும் கனவுகளும்.
எச்சரிக்கையாகவே வாய் திறந்து… எச்சரிக்கையில்லாமல் அடிபட்டு… அம்மாவுக்கு அப்படித்தானே முடிகிறது?
அவளது எண்ணங்களும் கனவுகளும் சங்கவியால் நிறைவேற்றப்பட முடியாதனவாய் இருக்கலாம். ஆனால் அவற்றை அவள் கௌரவிக்கவேண்டும். அவை அவளிடத்தில் தன் பிள்ளைகள் பற்றியதாகவே இருக்கின்றன.
கணவனை காணாமலாகியவளாய் அவள் இருக்கிறாள். எவ்வளவு கஷ்ர காலங்களிலும் அவரது பேச்சை அவள் எடுத்ததேயில்லை.
வாழ்ந்து களைத்தவளில்லை அவள். களைத்துத்தான் வாழ்ந்தாள். அவளுக்குள்ளும்… அவளுடம்புக்குள்ளும்... அவளுக்கானதாய் எத்தனை உணர்ச்சிகள் பொங்கிக்கொண்டு இருக்கமுடியும்? ஆனால் அவளில் அது எப்போதும் வெளிப்பட்டதேயில்லை. தன் வாழ்க்கையை அவள் மறந்திருக்கிறாள்.
அவள் அம்மாவை அவ்வளவு சுலபமாய் ஒதுக்கிவைத்து எண்ணிவிட முடியாது. மகளுக்கு முன்னால் கண்ணீர்விடவும் அஞ்சியிருக்கிற ஒரு தாய் மிகமிக பரிதாபமானவள்.
‘அம்மாவோட சிரிச்சுக்கொண்டு பேசவேணும்.’ தீர்மானமாகிக்கொண்டு, சங்கவி அம்மா வேலைசெய்துகொண்டிருக்கும் பின் வளவுக்கு நடந்தாள்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.