வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் ஒன்பது!
கொழும்பில் நடைபெறவிருந்த அந்த நிகழ்ச்சிபற்றிய தகவலை பழைய பத்திரிகைகளில் அவர் கண்டிருந்தார். அதற்கான சில சிங்கள இனவாத அமைப்புகளின் எதிர்க்குரலை ஒரு சிங்கள பத்திரிகையில் வாசித்தபோது, அந்நிகழ்ச்சி அவரை ஆர்வப்படுத்தியது. முந்திய ஆண்டு அந்நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடந்தபோது, அவ்வளவு பெரிய ஆர்வம் ஏற்படாததோடு, சென்று காணும் வசதியும் அவர் அற்றிருந்தார். தனிப்பட்ட மனநிலைக் காரணம்தான். திறம்பும் தன் மனநிலையோடும் போராடும் மனிதராக அவர் இருந்திருந்தார். அதனால் நினைத்தார் செய்தார் என்றமாதிரித்தான் அவரால் இயங்க முடியும்.
கொழும்பில் நடைபெறவிருந்த அந்த நிகழ்ச்சியைச் சென்று காணும் உந்துதல் ஏற்பட்டதும், கையிலுள்ள பணம் பிரயாணத்துக்கு போதுமாவென பார்த்தார். போதுமாயிருக்க புறப்பட்டுவிட்டார்.
ஓமந்தையில் அவரது முகத்தையும் அந்தச் சிரிப்பையும் கண்டபிறகு, புலிகளின் சோதனை நிலையத்தில், ராணுவ சோதனை நிலையத்திலும்தான், அவரைத் தடுத்துநிறுத்தும் திறன் எவருக்கும் இருக்காது. பாஸ் எடுப்பதற்கு வன்னியில் கொஞ்சம் அலைய நேர்ந்தது சாமிக்கு. பிரதீபன் அங்கே இல்லாதவகையில் அவருக்கு அதுவும் முடியுமாகிப்போனது. அவர் கஷ்டமென்று அதிகமும் உணர்ந்த அம்சம் ‘பாஸ்’ எடுப்பது மட்டுமாகவே இருந்தது.
விழாவின் ஐப்பசி 29, 2003 நாள் காலையில் விஹாரமாதேவி பூங்காவின் இனிய குளிர் செறிந்த காற்றை நெஞ்சு நிறைய சுவாசித்தபடி வாசலில் நின்று, எதிரே விழாக்கோலம் கொண்டிருந்த கொழும்பு மாநகரசபை மண்டபத்தைப் பார்த்தபடியிருந்தார் சாமி.
விழா ஏற்பாட்டாளர்களான ஹிரு அமைப்பினர் இங்குமங்குமாய் நடந்து அவசரமாய் இயங்கிக்கொண்டிருந்தார்கள். சிங்கள-தமிழ் கலைஞர் எழுத்தாளர் ஒன்றுகூடல்-2003 போன்ற இலங்கைத் தீவளாவிய ஒரு விழாவை ஏற்பாடு செய்வது சாதாரணத்தில் முடிந்துவிடுவதில்லை. அதற்கான முழு உழைப்பை விழாவுக்கு முன்னர்போலவே, விழாவினன்றும் அது நிர்ப்பந்தித்துக்கொண்டு இருக்கும். மேலும் அன்றைய தினம் ஒரு அசாதாரண நாளாகவும் அமையப்போகிறதென்பது அவர்களுக்கும் தெரிந்திருந்த வகையில், தங்கள் முழு அவதானத்தையும், உழைப்பையும் அவர்கள் அதற்குச் செலுத்தியே ஆகவேண்டும்.
நேரம் ஒன்பது மணியானது.
பார்வையாளர்கள் சிறிது சிறிதாக வந்துசேரத் தொடங்கினர். விழா வெகுஜன விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை. அது முன்னரே அழைப்பிதழ் அனுப்பப்பட்டோருக்கும், பங்குபெறும் கலைஞர்கள் கல்விமான்கள் பத்திரிகையாளர்களுக்குமானது. சாமியிடம் அழைப்பிதழ் ஏதும் இருந்திருக்கவில்லை. அது அவருக்கு எள்ளளவு கரிசனையும் இல்லாதது. உள்ளே அமர்ந்துதான் விழா நிகழ்ச்சிகளைக் காணவேண்டுமென்ற அவசியமேதும் சாமிக்கு இல்லை.
சாமி வீதியைக் கடந்து நகரசபை மண்டப வாசலை அடைந்தார்.
ஒன்பது மணிக்கு ஆரம்பித்திருக்கவேண்டிய விழா அது. இன்னும் தள்ளிப்போகும்போல்தான் தோன்றிக்கொண்டிருந்தது. விழாவுக்கு வந்திருந்தவர்கள், ஏற்பாடு செய்த ஹிரு அமைப்பினர் உட்பட அனைவரும் ஒரு பரபரப்பில் இருப்பதுபோலிருந்தது.
தியாகுவும் கணேசும் அப்போதுதான் மண்டபம் வந்து சேர்ந்தார்கள். மண்டபத்தின் உள்ளும் வெளியிலுமாய் பார்வையாளர்கள் சிதறி நின்றுகொண்டிருப்பது நிலைமையை அவர்களுக்கு விளக்கியது. அங்கே ஒரு சிக்கல் எழுத்திருக்கிறது. முதல்நாளிரவு அவர்கள் அறிந்திருந்தது வெறுமனே வதந்தியாயில்லை என்பது தெரிந்தது. விழாவைக் குழப்புவதற்கு சிகள ஹெல உறுமயபோன்ற சிங்கள வகுப்புவாத அமைப்புகள் சில பாரிய ஏற்பாடுகளுடன் இருக்கின்ற விஷயத்தை முதல் நாள் மாலை தராகி சிவராம்மூலம் தியாகு அறிந்திருந்தான்.
ஆர்மர் பாரில் சந்தித்தபோது அதை தியாகு கணேசுக்கு சொன்னான். எந்த இரகசியத்தையும் பேசுவதற்கு பார் வசதியான இடம்தான். அவர்கள் பேசுவது அடுத்த மேசைக்கு கேட்டுவிடாதபடி இரைச்சல் இருந்துகொண்டிருந்தது. கோல்பேஸ் திடலில் நின்றிருக்கையில் கேட்கும் இந்து சமுத்திரத்தின் அதே இரைச்சல். அங்கிருந்த ஏறக்குறைய முப்பது மேசைகளும் தனியுலகங்களாக இருந்துகொண்டிருக்கும். அந்த மேசையிலிருந்தவர்கள் அந்தந்த உலகத்து வாசிகளாக மட்டுமே இருப்பார்கள்.
கணேஷின் மனம் முழுக்க கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற அதன் முதலாவது ஒன்றுகூடலைச் சுற்றி அலைந்துகொண்டு இருந்தது. வடக்கின் அதுவரை காலத்திய யுத்தத்தின் அழிவுகளைக் கண்டும், மனிதாயத சேதங்களைக் கேட்டும் அச் சிங்கள சமூகத்தின் கலைஞர்களும் எழுத்தாளர்களும் கல்விமான்களும் அடைந்த அதிர்ச்சியும் வேதனையும் அவன் கண்கூடாகக் கண்டு மனம் நெகிழ்ந்திருந்தவன். அதனால்தான் ‘சிங்கள கலைஞர்கள் காட்டிய அக்கறையும் அனுதாபமும் வியத்தற்குரியது’ என பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒரு கட்டுரையிலே எழுதியிருந்தார். தமிழ்நெற் இணையத்தில் அந்தக் கட்டுரையை அவன் வாசித்திருந்தான். ‘இன ஐக்கியத்தின் நம்பிக்கை’ என அதில் அவர் தெரிவித்திருந்த கருத்து அவனுக்கு ஒப்பாகவிருந்தது.
அத்தகைய ஒரு ஒன்றுகூடல் சிங்கள இன வெறியர்களால் தடைப்படுமானால், அது நாட்டின் இறையாண்மை குறித்து பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துமென அவன் எண்ணினான். அது நடைமுறையிலிருக்கும் யுத்தநிறுத்த உடன்படிக்கையை, நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்களை சவால்விடுவதாக அமையுமென அவன் கருதினான். அத்தகைய முன்னெடுப்புகளை அரசாங்கம் கண்டு வாளா இருந்துவிடாதெனினும், அதன் பொலிஸ் துறையின் செயற்பாட்டுக்கு எல்லை இருந்ததையும் அவன் அறிவான்.
அதைவிட அவன் யோசிக்க இன்னொரு கோணம் இருந்தது. யாழ் குடாநாட்டிலிருந்தும் வன்னியிலிருந்தும் வரவிருந்த கலைஞர் எழுத்தாளர்களின் பயணத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு உண்டு?
பாரிலிருந்து மறுநாள் காலை பஸ்நிறுத்தத்தில் சந்திக்கிற திட்டத்தோடு வீடு புறப்பட்டபோது, இருவருக்கும் வழக்கமான போதை ஏறியிருக்கவேயில்லை. அதை விழா நடப்பதுபற்றிய, வந்துகொண்டிருக்கும் வடக்கு கிழக்கு கலைஞர் எழுத்தாளர்களின் பாதுகாப்புபற்றிய அக்கறைகள் உறிஞ்சிவிட்டிருந்தன.
“யாழ்ப்பாணத்திலயிருந்து நேற்று இரவு வெளிக்கிட்ட பஸ் இந்தளவு நேரமாயும் வரேல்லயெண்டா, வழியில எதோ பிரச்சினையெண்டு நினைக்கிறன்.”
கணேஷ் சொன்னதை ஒப்புக்கொண்டதுபோல் தியாகு மௌனமாயிருந்தான்.
சற்றுநேரத்தில் தொலைபேசியில் வந்த ஒரு செய்தியை முகத்தில் பிரகாசம் பொங்க விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சரத் தெரிவித்தார். “தமிழ்க் கலைஞர்கள் கொழும்பு வந்து சேர்ந்துவிட்டார்கள். அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலிலே அவர்கள் விழாவுக்கு வர தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள். விழாவை இன்னும் அரை மணிநேரத்தில் நாங்கள் தொடங்கிவிடலாம்.”
கணேசும் தியாகுவும் இன்னும் மண்டபத்துக்கு வெளியே நின்றிருந்தனர். அப்போது அவர்கள் அறிந்த செய்தி அவர்களை அதிரவைத்தது. ‘ஏறக்குறைய நாற்பது பேர்வரையில் வந்துகொண்டிருந்த பஸ்ஸை இடைவழியில் மறித்து தாக்குவதற்கிருந்த இனவாதிகளின் திட்டத்தை முறியடிக்க பஸ் சுற்றுப்பாதையில் பயணித்து வந்ததே அந்த மூன்று மணி நேர தாமதத்தின் காரணம்.’
தாமதத்தைத் தவிர அந்த நிமிஷம்வரையில் வேறு தடங்கல்கள் இருக்கவில்லை. எல்லோருக்கும் நிம்மதியாயிருந்தது. அனைவரும் மண்டபத்துக்குள் சென்று அமரத் தொடங்கினர். கணேசுக்கும் தியாகுவுக்கும் மூன்றாவது வரிசையில் நீண்ட தாடி வைத்து, கறுப்புடை அணிந்திருந்த ஒரு முதியவருக்கு அருகில் இரண்டு இருக்கைகள் கிடைத்தன.
தொடக்க நிகழ்ச்சிகளுக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. அப்போது தனக்கருகே வந்த ஹேமாவிடம் சரத் ரகசியமாய்ச் சொன்னான். “கூட்டத்தைக் குழப்புவதற்கு இனி அவர்கள் ஒரு தோல்வியின் வெறியோடு முயற்சிப்பார்கள், ஹேமா. பார்வையாளர்களோடு பார்வையாளர்களாக வரும் குழப்பகாரரை இனி அழைப்பிதழை மட்டும் வைத்துக்கொண்டு நாம் அடையாளம் காணமுடியாது. ஏற்கனவே மண்டபம் நிறைந்துவிட்டது. அதனால் அவர்களை அவர்களது நடவடிக்கையும், உணர்ச்சி வெளிப்பாடும் மூலமாகத்தான் கண்டுபிடிக்கவேண்டும். கவனமாயிரு.”
அவள் சரியென்றுவிட்டு வாசலுக்கு நடந்தாள்.
வடக்கிலிருந்து வந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நகர மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். கணேசும் தியாகுவும் தங்களுக்கு முன்னரே தெரிந்திருந்த சில கலைஞர்களைக் கண்டு சுகம் விசாரித்தனர்.
விழா தொடங்கியது.
அப்போது நேரம் 10.30.
சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்சிகள் முடிய, கவிதையரங்கு தொடங்கியது. சிங்கள பேராசிரியர் ஒருவர் சமகால சிங்கள கவிதைகளைப்பற்றி உரை நிகழ்த்தினார்.
பக்கத்து இருக்கையிலிருந்த தாடிக்காரர் மிகுந்த அவதானமாக அவரது உரையைக் கேட்டுக்கொண்டிருந்தார். மெல்ல இடித்து தியாகு கணேசுக்கு அதை சமிக்ஞையில் காட்டினான். அது அவரது கோலத்துக்கு கொஞ்சம் அதிகமான உன்னிப்பாக அவனுக்குத் தென்பட்டிருந்ததுபோலும்.
ஒருபோது வெகு உற்சாகமாக அவர் கரகோஷம் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து மண்டபமும் கரகோஷமெழுப்பியது. மெல்ல அவரது பக்கமாய்ச் சாய்ந்து, “பேராசிரியர் என்ன சொன்னார்?” என சிங்கள மொழியில் விளக்கம் குறைந்தவன்போல் கணேஷ் கேட்டான்.
அவன்போலவே சாய்ந்து மெல்லிய குரலில் அவர் அதற்கான பதிலைச் சொன்னார். “தீவாக இருக்கிறதால எந்த மொழியின்ரயும் தாக்கமில்லாமல் சிங்களக் கவிதை தனக்கான தனித்துவத்தோட இருக்காம். மெய்தானே! இதுகின்ர மறுபக்கத்தில தீவாயிருந்தாலும் தமிழ்க் கவிதை அயலின் தாக்கத்தை அடையுது எண்ட அர்த்தமிருக்கு. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டா அதுகின்ர சினிமாப் பாடலின்ர தாக்கமும், நல்ல கவிதையின்ர தாக்கத்தைப்போல இலங்கைத் தமிழ்க் கவிதையை பாதிக்கச் செய்யுதுதான?”
கணேஷ் அவரிடம் தான் கேட்டதையும், அதற்கு அவரின் பதிலையும் தியாகுவுக்குச் சொன்னான். அருகிலிருந்தவர் அவர் கோலத்தை மீறிய விஷயத் தெளிவோடிருப்பதை இருவரும் உணர்ந்தனர்.
கவிதை அமர்வினைத் தொடர்ந்து நாவல் அரங்கு தொடங்கியது.
சிங்கள நாவல்பற்றிய கட்டுரை வாசிப்பின் பின், இலங்கைத் தமிழ் நாவல்கள்பற்றிய தன் கட்டுரையை வாசிக்க எழுத்தாளர் செ.யோகநாதன் வந்தார்.
எழுத்தாளர் செ.யோகநாதனின் கட்டுரை விஷயத்தோடு சரியாகத்தான் ஆரம்பித்தது. மேலே அவரது கருத்துக்கள் வரலாற்றுரீதியாகவன்றி சுயவிருப்பம் சார்ந்ததாக அமைந்துவிட்டன. வன்னி நாவல்கள்பற்றியும், அங்கு அப்போது பெருகி வரும் இலக்கியத்தின் செழிப்பான கூறுகள்பற்றியும், அவற்றுக்கெல்லாம் காரணமான தலைவரின் செயலூக்கம்பற்றியுமான துதியாக அது பின்னால் அமைந்துபோனது.
கணேஷ் அவரது கட்டுரையை அவதானமாகவே கேட்டிருந்தான். தலைவரை அங்கே இழுத்துவருவதற்கு எந்த அவசியமும் இருந்திருக்கவில்லை. தொடர்ந்தும் எழுத்தாளர் செ.யோகநாதன் கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தார். அதனிடையேயும் தலைவரின் கீர்த்தி இரண்டொரு முறை வந்துபோனது. மூன்றாவது முறை தலைவரின் கீர்த்தி கட்டுரையில் பிரஸ்தாபமானபோது, பார்வையாளர்களின் பின்வரிசையில் சலசலப்பு எழுந்தது.
எழுத்தாளர் செ.யோகநாதன் கட்டுரையை வாசித்து முடிப்பதற்குள் அது அமளியானது.
ஹிரு அமைப்பினர், போதுமான பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிராத அந்த நிலையில், அமளியை அடக்க வாசல்புறத்தில் கூடினர். அமளியைக் கிளப்பியவர்கள் அழைப்பிதழற்று வந்திருந்ததின் பேரில் அவர்களை வெளியே செல்லப் பணித்தனர். குழப்பகாரர் பிடிவாதமாக மறுத்து கூச்சல் குழப்பங்களை விளைத்துக்கொண்டிருக்க, அவர்களை வெளியேற்ற மேற்கொண்ட ஹிரு அமைப்பினரின் முயற்சி இறுதியில் கைகலப்பில் முடிந்தது.
ஹிரு அமைப்பினர் மூவருக்கு இரத்தக் காயங்கள் ஏற்பட்டன.
தாமதமின்றி அவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
குழப்பத்தை விளைத்தவர்களை ஹிரு அமைப்பினர் மிகுந்த பிரயத்தனத்தில் இறுதியாக வெளியேற்றினர்.
உடனடியாக சகல மண்டப வாசல்களும் அடைக்கப்பட்டன.
வெளியே நின்றிருந்த சிகள ஹெல உறுமய ஆதரவாளர்கள் எழுப்பிய ஆரவாரம் கொந்தளித்த சமுத்திரம்போல் எழுந்துகொண்டிருந்தது.
நிகழ்ச்சிகள் நின்றிருந்தன.
மண்டபத்தில் அசாதாரண மௌனம் நிலவியிருந்தது.
அச்சம் அனைவர் மனங்களிலும் உறைந்து கிடந்தது.
இருபது ஆண்டுகளின் முன் 1983 ஜுலையில் நடந்த கலவரத்தை நினைத்து அப்போது பலர் பதறியிருக்கக்கூடும்.
நேரம் 12.30 ஆகியிருந்தது.
மண்டபத்தில் நடைபெற்ற வன்முறைபற்றி சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அது குறித்து அறிவிக்கப்பட்டார். கூடுதலான பாதுகாப்புக்கு பொலிஸார் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
ஹிரு அமைப்பைச் சார்ந்த சரத் சபையின் முன்நின்று தமது உறுதியை முன்வைத்தார். “யாரும் பயப்பட வேணாம். கூடுதலான பொலிஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கு. மண்டபக் கதவுகளும் உள்ள பூட்டியிருக்கு. அதையும் மீறி யாராவது வன்செயல் புரிய வந்தா, எங்களின்ட அரணைத் தாண்டிதான் உங்கள அணுகவேணும். வருபவர்களிடமிருந்து எங்கட உயிரைக் கொடுத்தும் உங்களப் பாதுகாப்போம். இப்போ நாம் மதிய உணவை முடிக்கலாம். நிகழ்ச்சிகள் மதிய உணவு வேளை முடிய தொடரும்.”
சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் கணேஷ் கவனித்தான், பெண் சிங்கமொன்று மண்டபத்தின் உள்ளே காவலுக்குப்போல் கையிலே ஒரு திருப்புளி ஆயுதத்துடன் வீறுடன் நடந்துகொண்டிருந்தது.
அப்போது கரையோரமாய் அமர்ந்திருந்த தன்னை நடுப்பகுதியில் அமர்ந்திருந்த குறுந்தாடி வைத்த ஒரு மனிதர் அடிக்கடி உற்றுப்பார்ப்பதை குசுமவதி அவதானித்தாள். அவளது மனம் குழம்பியது. அவளை யாரும், குறிப்பாக கேகாலையார், அடையாளம் காணுவது அவளுக்கு விருப்பமில்லை. அதனால்தான் புறப்படுவதற்கு முன்பு பலமுறை யோசித்தாள், தான் அந்த ஒன்றுகூடலுக்கு போகத்தான் வேண்டுமாவென. பின்னர் அது ஒரு தார்மீகக் கடமையென்ற நினைப்பில் புறப்பட்டு வந்தாள். சிறிதுநேரம் மதிய இடைவேளையின் கலகலப்பில் பராக்காகி இருந்துவிட்டு மறுபடி அவள் திரும்பியபோது அவர் அங்கே காணப்படவில்லை. அவளுக்கு ஆசுவாசமாக இருந்தது. பிறகு தெரிந்தது, அந்த மனிதர் அவளுக்கு நேர் பின்னால் வந்து அமர்ந்திருந்தாரென்று.
அவர் நிதானமாக முன்னே சரிந்து அவளைக் கேட்டார். “நான் தவறாக நினைக்கவில்லையென்று எண்ணுகிறேன். நீங்கள் குசுமவதிதானே?”
அப்போது சற்றே பரிச்சயத்தின் கூறுகளை அவர் முகத்தில் காணக்கூடியதாயிருந்தது குசுமவதிக்கு. அவரது பண்பான பேச்சும் இன்னொரு நெருக்கத்தை அளிக்க, தான் குசுமவதிதான் என்றாள்.
“மூன்று வருஷங்களுக்கு மேலாக சந்திக்கவில்லை. என்றாலும் முந்திய தோற்றத்தில் நான் இல்லாததில் என்னை அடையாளம் காண உனக்குச் சிரமமாய்த்தான் இருக்கும். நான்… உக்கு… உக்கு பண்டார.”
குசுமவதி திகைத்துப்போனாள். “உக்குவா…? இதென்ன கோலம் உக்கு? நீ….”
“இங்கே ஒன்றும் பேசவேண்டாம். நான் அங்கே இல்லை இப்போது. அடையாளம் தெரியாதபடி அலைந்துகொண்டிருக்கிறேன். வெளியே விபரமாகச் சொல்கிறேன்.”
உக்குவின் நிலைமையை அப்போதே புரிந்துகொள்ள முடிந்தது குசுமவதியால்.
உக்கு ராணுவத்தில் அப்போது இல்லையென்பது அவளுக்கு ஆச்சரியமாக, அதை எதிர்பார்த்திராதபோதும், இருந்திருக்கவில்லை. அவனை அவளுக்குத் தெரிந்திருந்தது. ராணுவத்தின் சித்திரவதைகளை, பாலியல் வல்லுறவுகளை அறிந்திருந்தவன், அத்தகைய இடத்தில் தனக்கு வேலையில்லையென விட்டுவிடக் கூடியவன்தான். ஆனால் அவன் அது காரணமாய் ஒரு சிரமத்திலிருக்கிறானென்று எண்ணியபோது அவளால் துக்கப்படாமலிருக்க முடியவில்லை. அவளது நண்பர்கள் எல்லோருமே ஒருவிதத்தில் சிதறிப்போனவர்களாய் இருந்தார்கள். ஜேவிபி கிளர்ச்சிக் காலங்களில் இறந்துபோனவர்களாயும் பலர். சோகங்களை அடிவயிற்றில் கட்டிக்கொண்டதாய் அவளது பிறந்த ஊர் ஆகிப்போக விழுந்த சாபமென்ன?
மலையை எப்போதும் ஒரு மேகம் மூடவந்து காத்துக்கொண்டிருக்கிறது. அது பெரும்பாலும் கார்மேகமாகவே இருந்துவிடுகிறது. மலையின் குழந்தைகளுக்கு விழுகின்ற துக்கத்தின் நிழல் எங்கிருந்து தொடங்குகிறது? அரநாயக்க எவ்வளவு அழகான ஊர்! அவள் விரும்பியா அந்த ஊரை நீங்கினாள்?
பலவும் எணண்ணியபடி அவள் இருந்தாள்.
மாலை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.
இறுதி நிகழ்வாக பத்திரிகைச் சுதந்திரம் குறித்த அமர்வு. சிங்கள பத்திரிகையாளர் ஒருவரது உரையின் பின் தராகி சிவராம் என்கிற தமிழ்ப் பத்திரிகையாளர் உரையாற்ற வந்தார். சமாதான காலமென்பதின் அர்த்தத்தை விசாரணைக்கு உட்படுத்தியது அவரது உரை.
“ஒரு பத்திரிகையாளனாய் என் தர்மத்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன். அதனாலேயே தாக்குதல் குறியாகவும் இருக்கிறேனென்பது எனக்குத் தெரியும். அதைச் செய்ய முனைபவர்களும் எனக்கு மிகவும் தெரிந்தவர்களே. அவர்கள் நினைப்பதை, திட்டமிடுவதை சரியாகச் செய்யக்கூடிய மனிதர்களும். ஆக எனது ஆபத்து இன்னும் என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கவே செய்கிறது. அதனாலேயே நான் மாறிவிட முடியாது. கொழும்பிலிருந்து எனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு எனது சொந்த ஊரான திருகோணமலைக்கு நான் ஓடிவிட முடியுமா? இந்த நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் அடக்கப்பட்டிருக்கிறது என்பதின் வெளிப்படையான காட்சியே என்மீது செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அழுத்தங்கள். ஒரு பத்திரிகையாளனாய் இந்த இடத்தில் அதை உரத்துச்சொல்ல விரும்புகிறேன்.”
அந்த உரை குசுமவதிக்கு பிடித்திருந்தது. அதற்காக அவர்மீது அவள் இரக்கம்தான் பட்டாள். மரணம் தன் சுவடுகளைத் தொடர்ந்துகொண்டு இருக்கையில் தனது கடமை எதுவோ அதைச் செய்ய தான் பின்னிற்கப் போவதில்லையென்ற அந்த வார்த்தைகள் அவளுக்கு ஏறக்குறைய பந்துலவின் வார்த்தைகளாகவே தோன்றின. அவ்வாறு சொன்ன பந்துல இப்போது இல்லை. ரத்த வெள்ளத்துள் வீழ்ந்து செத்துப்போனான். அதையே சொன்ன தராக்கி சிவராமுக்கு என்ன நடக்கக்கூடும்?
பிக்குகள் தலைமை தாங்கிய சிகள ஹெல உறுமயவின் ஒன்றுகூடலுக்கெதிரான பெரும் ஊர்வலமொன்று, கொழும்பு நகர மண்டபத்தைநோக்கி வந்துகொண்டிருப்பதான செய்தி மிகவேகமாக அங்கே பரவியது. மண்டபக் கதவுகள் அப்போது திறந்திருந்த நிலையில் வெளியே நின்றிருந்த பொலிஸ் படையைக் கண்டதால் சபை தெம்புடனிருந்தது.
நிகழ்வுகள் முடிந்து வெளியே வந்தபோது விஹாரமாதேவி பூங்காவுக்கு அருகேயும் முன்னாலும் ஓடிய வீதிகள், வேலை முடிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அந்த நேரத்தில், வாகனங்களோ பாதசாரிகளோ அற்று வெறிச்சோடிக் கிடந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. வீதித் தடைகளை ஏற்படுத்தி ஹெல உறுமயவின் ஊர்வலத்தை மாநகரசபை மண்டபப் பக்கமாய் வராது திசைதிருப்பி விட்டதில் விளைந்த வெறுமை அது என்பது பின்னால் தெரிந்தது.
“உக்கு, யாரும் உன்னை அடையாளம் கண்டுவிட முடியாது. பயப்படாதே. என்னாலேயே அடையாளம் காண முடியாது போய்விட்டதே! நீ ஏன் என்னோடு வவுனியாவுக்கு வரக்கூடாது? ரண்டு நாட்கள் தங்கிவரலாமே.” குசுமவதி கேட்டாள்.
“நீ வவுனியாவிலா இருக்கிறாய்? உன்னை இங்கே கண்டபோது நீ கொழும்பில் இருப்பதாக நினைத்தேன். ஏன் வவுனியாவுக்கு? அரநாயக்க என்ன செய்தது உனக்கு?”
“ஊரையல்ல… நான் விலகி வந்தது சில மனிதர்களிடமிருந்தான ஆபத்துக்களையே.”
“அப்படியென்ன…?”
“உனக்கு செனவிரத்னவை ஞாபகமிருக்கிறதல்லவா?”
உக்கு யோசித்தான்.
“அரநாயக்கவில் குன்றின் அடிவாரத்தில் இருக்கிற அந்த மஞ்சள் வீட்டுக்காரன்.”
“ஓ… ஞாபகமிருக்கிறது. அரநாயக்க சண்டிய.”
“அவனே நான் அங்கிருந்து ஓடக் காரணமானவன்.”
சொல்லும்போதே அரநாயக்கவை பிரிந்த சோகத்தின் எறியங்களை அவள் முகத்தில் கண்டான் உக்கு.
இரண்டு நாட்கள் குசுமவதியின் வீட்டில் தங்க உக்குவுக்கு கஷ்ரமிருக்கவில்லை. வீட்டில் மற்றவற்றைப் பேசலாமென மேலே எதுவும் அவன் கேட்காமல் விட்டுவிட்டான்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.