வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் ஐந்து
வெள்ளவத்தை பிள்ளையார் கோவிலடியில் அந்த மனிதரைக் கண்டார் சாமி. குனிந்தபடி நடந்துகொண்டிருந்தவரை இருவர் தாண்டிப் போகையில் பக்கப்பாட்டில் விழுந்த பார்வையில்தான் பரிச்சயத்தின் கீறு அவரில் சிரசுதயம் காட்டியது. பக்கத்தில் அவரைவிட உயரமாகவும், தடித்துமிருந்தவன் அவரது மகன் கணேசகுமாராய் இருக்கக்கூடும். சாமிக்கு அதை திண்ணமாய் அறியும் ஆர்வம் ஏற்பட்டது. தன்னை அவர் புறக்கணித்ததுபோல் போனதுதான் சாமியின் மனத்தை அதிகமும் தூண்டியதாய்ப் பட்டது. கறுப்பு உடையோடும், நீண்ட தலைமயிர் தாடியோடுமுள்ள சாமியை அவரால் சுலபமாக அடையாளம் கண்டிருக்கமுடியும். கைமாற்றுக் கேட்டு மறுத்த அந்தக் கோபத்தை இன்னும் அந்த மனிதர் கொண்டிருப்பது சாத்தியமா? அந்த மனிதரே சவரம் செய்யாத முகத்தோடும், சபரிமலைக்குப் போகவோ போய்வந்தவர்போலவோ நான்கு முழ காவி வேட்டியும் கறுப்புச் சட்டையுமணிந்து செருப்பற்ற கால்களுடன் போய்க்கொண்டிருந்தார். அந்த ஐயப்ப பக்த தோற்றத்துக்கான குணங்களோடு அவர் பத்தாண்டுகளுக்கு முன்னால் லொட்ஜிலே சாமிக்கு அறிமுகமாகியபொழுதில் இருந்தவரேயில்லை. ஆனால் பரிச்சயத்தின் கீற்றை சாமியால் லேசுவில் புறக்கணிக்க முடியாதிருந்தது.
சாமி எட்டி நடக்க முயன்றார். முன்னால் சென்றவரும் அவசரத்தில்போல் வேகமாகவே நடந்துகொண்டிருந்தார். ஏதாவதொரு பாதசாரிகள் பாதையைக் கடக்குமிடத்தில் சிவப்பு விளக்கு விழுந்திருந்தால் அவர் காத்துநிற்கவே நேரும், பிடித்துவிடலாம்.
வெள்ளவத்தை சந்தை, அடுத்து வந்த கொழும்பு தமிழ்ச் சங்கம் தெருவென அவர்கள் வேகமாக தாண்டிச் சென்று கொண்டிருந்தனர். சிவப்பு விளக்கு மாறுவதற்காக சாமிதான் ஒரு இடத்திலே காக்கவேண்டி நேர்ந்தது.
நிலமிருந்தவர், வீடிருந்தவர், தோட்டம் வயல்களிருந்தவர் எல்லாரும் வன்னியின் வனக் குடிசைகளிலும், தறப்பாள்களின் கீழும் அந்தரித்துக்கொண்டிருந்த பொழுதில், தீவின் அதிவடக்கே அவர்களின் நிலத்தையும் வீட்டையும் தோட்டங்களையும் கொண்ட பெருநிலப் பரப்பு, இலங்கை முப்படைகளின் வசம் இருந்துகொண்டிருந்தது. அது தொண்ணூறுகளின் காலம். அக்காலப் பகுதிக்கு சற்று முன் பின்னாக கொழும்பு வந்துவிட்ட பலர் வாடகை வீடுகளிலும் லொட்ஜ்களிலும் தங்கியிருந்தனர். வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர்களிடமிருந்து எப்பொழுது தமது புறப்பாட்டுக்கான தகவல் வருமென சிலர் காத்துக் கிடந்தார்கள். இந்தியாவுக்காவது சென்றுவிட பலர் முயன்றுகொண்டிருந்தனர். அந்தப் பலரில் கணேசகுமாரும் அவனது தந்தையும் இருந்திருந்தார்கள்.
தந்தையும் மகனும் வெள்ளவத்தை கடற்கரைப் பக்கத்தில் லொட்ஜாக உருவெடுத்திருந்த ஒரு வீட்டின் ஒட்டுப் பலகை அறையில் ஆளுக்கு நூறு ரூபா நாள் வாடகைக்கு அப்போது தங்கியிருந்தனர். அறையென்பது பாயும் தலையணையும் பெட்டிகளும் உடுப்புகளும் வைக்கும் இடமாகமட்டுமே இருந்தது. பெண்களும் குழந்தைகளும் அறையிலும், ஆண்களும் இளைஞர்களும் கூடத்திலும் படுத்தார்கள். அந்தமாதிரித்தான் அந்த மூன்று வருஷங்களையும் அவர்கள் அங்கே கழித்தார்கள். மூன்று வருஷமென்பது பெரிய காலப்பகுதி இல்லைத்தான். ஆனால் கணேசகுமார் பேசிய சிங்களம் அந்தக் கால அளவை மிகப் பெரும் பரப்பில் பார்க்கும்படி கோரிநின்றது.
அந்த 133\1 எண் வீட்டிலே கொழும்புவரும் வேளையில் சாமியும் தங்கியிருக்கிறார். அதற்கு அவரிடமிருந்த வசதியும், தேவையும் சேர்ந்தே பயணித்திருக்கவேண்டும்.
இயக்கத்தில் ஈடுபட்டிருக்காத எந்தத் தமிழரையும் அவர் இலங்கைப் பாஸ்போர்ட், இலங்கை அடையாள அட்டை உள்ளவராக, விமான பயணச் சீட்டு உள்ளவராக இருக்கிற பட்சத்தில் ‘போ… விரைவாய்ப் போ…’ என்று அதிகாரிகளே தள்ளிவிடுகிற அளவுக்கு தமிழரின் வெளியேற்றத்துக்கு நாட்டின் கதவுகள் ரகசியமாய்த் திறக்கப்பட்டிருந்ததில் லொட்ஜ்கள், வீடுகளெல்லாம் தமிழர்களால் பிதுங்கி வழிந்தன. ரணதுங்க பிரேமதாசவின் ஜனாதிபத்தியத்தில் நல்லாட்சி நடக்கிறதென்று கொழும்பில் தங்கியிருந்த பல யாழ்ப்பாணத் தமிழர்கள் சொன்னார்கள். சாமி கேட்டு அதைச் சிரித்திருக்கிறார்.
சாமி மூன்று நாட்கள் அந்தமுறை அங்கே தங்கியிருந்தார்.
அந்த மூன்று நாட்களிலும் கணேசகுமார் வலு ஒட்டாக அவருடன் இருந்தான்.
அவர் புறப்படுவதற்கு முதல் நாளிரவு அவனது தந்தையை தனியே அழைத்து, ‘உங்கட மகன் வலு கெட்டிக்காறனாய் இருக்கிறான். விவேகமாய் எல்லா விஷயங்களையும் விளங்கிக்கொள்ளுறான். ஆனா தெருவில போய் வாற நேரத்தில தொங்கியும் குதிச்சும் ஓடியுமாய்க் கத்துறது நல்லதில்ல. நல்ல ஒரு மனநல டொக்டரிட்ட அவனைக் கொண்டுபோய் நீங்கள் காட்டினா என்ன?’ என்று கேட்டார்.
அதற்கு ஒரு குவாட்டருக்குப் பின்னால் எதற்கும் சிரிப்பவராயிருந்த அவனது தந்தை, ‘எனக்கிது முந்தியே தெரியும், ஐயா. தாய்க்காறி செத்தாப் பிறகு இப்ப மூண்டு வரியமாய் உவன் உப்பிடித்தான் இருக்கிறான். இந்தக் கிழமை இல்லாட்டி அடுத்த கிழமை அனுப்பியிடலாமெண்டு ஏசன்ற் சொல்லுறான். போனாப் பிறகு, அங்க மருந்தெல்லாம் ஃபிறீயாமே, அங்க காட்டுவம்’ என்று கூறிச் சிரித்தார்.
‘நீங்கள் அடுத்தடுத்த கிழமை போறதெண்டாலும் இப்ப ஒரு டொக்டரிட்ட காட்டுற அளவுக்கு நன்மையிருக்கும். வெளி நிலமையைப் பாத்தா, நீங்கள் இப்போதைக்குப் போகேலாதுபோல கிடக்கு. ஈரோப்பிலயும் கனடாவிலயும் எயாப் போர்ட்டில கொஞ்சம் கஷ்ரமெண்டு கேள்வி.’
‘நானும் அறிஞ்சன். ஆனா காசைத் திருப்பித் தாவெண்டா இனி ஏசன்ற் தரவேபோறான்? அதுதான் எல்லாம் சரிவரட்டுமெண்டு நாங்களும் பாத்துக்கொண்டிருக்கிறம்’ என்றார் அவர்.
பிறகு கணேசகுமாருக்கு அப்படியான மனநிலை ஏற்படும்படி தாய்க்கு என்ன நேர்ந்ததெனக் கேட்டார்.
கதைக்கிற அருட்டல் குணத்தோடிருந்தவர் வாய் திறந்தார். சொல்லிக்கொண்டிருக்கையில் இடையிடையே அழுதார். அது துக்கத்தினால் மட்டுமானதாய் சாமிக்குத் தெரியவில்லை. அவர் கதையை முடித்தபோது ஒரு சித்திரம் சாமியிடத்தில் விரிந்திருந்தது.
ஏ9 பாதை பூட்டியிருந்த அக் காலப் பகுதியில், சுமார் தொண்ணூறின் ஆரம்பத்தில், கணேசகுமார் பயணித்து கொழும்பு வந்த வழி மிகக் கடுமையான சதுப்புநிலமும், நீரேரியும், ஆபத்துக்களும் நிறைந்ததாக இருந்தது. அந்தப் வழியிலுள்ள நீரேரியில் படகு வந்துகொண்டிருந்த பொழுதில் மின்னலாய் வந்து தாக்கிய உலங்கு வானூர்தியின் குண்டு வீச்சில் அவன் அம்மா உடல் சிதறிச் செத்திருந்தாள். குண்டு வெடித்து படகு சிதறும்வரை பயணிகள் படகிலேயே அசைவதற்கான கால அவகாசமுமின்றி அந்தப்படியே விறைத்து அமர்ந்திருந்தார்கள். குண்டு வெடித்தபோது எல்லாரும் தூக்கி வீசப்பட்டார்கள். கணேசகுமாரும் தூக்கி வீசப்பட்டான். அப்பாவும் வீசப்பட்டார். அதிகாலைப் பொழுதுவரை காத்திருந்து, போராளிகளின் எறிகணை வீச்சுக்கும் தப்பிவந்த அந்த உலங்கு வானூர்தியின் தாக்குதல் அந்தளவு துல்லியமாக நடந்திருந்தது. கணேசகுமார் நீரில் மூழ்கி முக்குளித்து ஒருவாறு கரையொதுங்கியபோது அப்பா ஓடிவந்தார். ‘அம்மா எங்கயடா… ? அம்மா எங்க…?’ என்று பரதவித்துக் கூவினார். ‘அம்மா…! அம்மா…!’ என்று கூவியழைத்து கரை முழுதும் தேடினான் கணேசகுமார். மூன்று பேரின் உடல் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன ஏரியிலிருந்து. யாருடைய துண்டென்று யாருக்குத் தெரியும்? பெருந் துண்டுகளை உடையிலிருந்து அடையாளம் கண்டார்கள். கடைசியாக, கரையிலேயே ஒன்றாக இட்டு தீமூட்டினார்கள். அவர்கள் வவுனியா ஊடாக கொழும்பு வந்து சேர்ந்தபோது குடாநாட்டிலிருந்து வெளிக்கிட்டு ஆறு தினங்கள் ஆகியிருந்தன.
பிறகு சடுதியில் அவரே கேட்டார்: ‘நீங்களும் இஞ்ச அடிக்கடி வாறியள்போல கிடக்கு. இருந்தா ஒரு நூறு ரூவாய் கைமாத்தாய்த் தாருங்கோவன், அடுத்தமுறை வரேக்க தாறன். பிராஞ்சிலயிருந்து மகன்ர காசு வர சுணங்குது இந்தமுறை, அதுதான்…’
சாமி, ‘நானே உங்களிட்டக் கேக்கலாமெண்டிருந்தன்’ என்று தவிர்ந்துகொண்டார். ஆனால் சாமியிடம் பணமிருந்ததை அவர் கண்டிருக்க வாய்ப்பிருந்தது. பிறகு நான்கைந்து தடவைகள் அதே லொட்ஜில் அவரைச் சந்தித்திருக்கிறார். கணேசகுமார் மட்டும் வந்து வழக்கம்போல கடைக்குப் போய்வருவதுபோன்ற சின்ன உதவிகள் செய்துகொடுத்துக் கொண்டிருந்தான். அவருக்கு அது பிடித்தமாயிருந்திருக்காதென்று சாமிக்குத் தெரியும். ஆனால் கணேசகுமாரைத் தடுக்க அவரால் முடிந்துவிடாது.
தன் முன்னால் செல்பவரை நடையில் துரத்திக்கொண்டே எல்லாம் ஞாபகமானார் சாமி.
முன்னே சென்றவர் சட்டென இடது பக்க பாதையில் இறங்கினார். அந்த இடத்தை சாமிக்குத் தெரியும். போதியாவத்தை, திக்கல்அட்ட தாண்டி கழிவுநீர்க் கால்வாய்க் கரைவழி சென்றால் திம்பிரிகஸ்ஸாய வரும். அந்தப் பகுதியில் ஏராளமான யாழ்ப்பாணம் மட்டக்கிழப்பைச் சேர்ந்த மாற்றியக்கத்தவர்கள் குடியிருந்தார்கள். அவர்களில் பலரை தமிழராய் அடையாளம் காணவே சிரமமாயிருந்தது. பேச்சும் சிங்களத் தமிழாய் மாறியிருந்தது. பலபேரின் வாசம் தகரக் கூரையுள்ள பலகை வீடுகளாய் இருந்தன அங்கே. இரவுகள் சோபிதமடைகிற இடமும் அதுதான்.
கடையிலே ஏதோ வாங்க தாமதித்த அந்த மனிதரை சாமி கடைசியில் பிடித்துவிட்டார். “என்னை ஞாபகமிருக்கோ? கடற்கரைப் பக்க லொட்ஜில…”
“உங்கள ஞாபகப்படுறதுக்கென்ன? எப்பிடி இருக்கிறியள்? நல்லாய் மூச்சு வாங்குது.”
“கோயிலடியில கண்டு திரத்திக்கொண்டெல்லே வாறன்.”
“அங்கயிருந்தோ? ஏன், சாமி, கூப்பிடுறதுக்கென்ன?”
“நீங்கள்தானோவெண்டு சந்தேகமாயும் இருந்திது…”
சிறிய உரையாடலின் பின் அவர்கள் இன்னும் வெளிநாடு செல்லாத காரணத்தை உசாவினார் சாமி.
“ஏசன்ற் காசையடிச்சுக்கொண்டு ஓடியிட்டான். இனி ஏசன்ருக்கு கட்ட தன்னிட்ட காசில்லை, கொஞ்சம் பொறுங்கோ, தனக்கு பேப்பர் கிடைச்சாப்பிறகு ஸ்பொன்சரில கூப்பிடுறனெண்டான் மகன். அவனுக்கும் பேப்பர் இன்னும் கிடைக்கேல்லை, நாங்களும் இன்னும் போகேல்லை.”
“கணேசகுமாருக்கு இப்ப எப்பிடி…?”
“மருந்தெடுத்துக் குடுத்தாப்பிறகு முந்தினமாதிரியில்லை. நீங்கள் கொழும்பிலதானோ, இல்லை… யாழ்ப்பாணத்திலயோ?”
“அங்கயும் இஞ்சயும் மாறிமாறித்தான்.”
“பத்துப் பன்ரண்டு வரியமாச்சு, உங்களுக்கும் இன்னுமொரு போக்கிடம் கிடைக்கேல்லை. இப்பவும் அலைச்சல்தான” என்றார் அவர்.
பத்து பன்னிரண்டு வருஷங்களல்ல, அது இருபத்தைந்துக்கு மேலே. ஆனால் அதை அவரிடம் சொல்லவேண்டியதில்லை. சாமி சிரித்து, “பலன் வேணும் எல்லாத்துக்கும்” என்று கூறி விடைபெற்றார்.
மறுநாள் காலையில் கொழும்பிலிருந்து புறப்பட்டு சாமி புத்தூர் வந்தார். அவருக்கு வன்னி செல்லத்தான் திட்டமிருந்தது. ஆனாலும் ஏதோ வாரப்பாட்டில்போல் அங்கேயே ஓடிவந்தார்.
இரண்டு நாட்களாக எதிர்ப்புறத்து நிலா தங்கியிருந்த வீட்டைக் கவனித்தார். நிலா விடுப்பில் ஊர் போனவள் இன்னும் திரும்பவில்லையென்று தெரிந்தது.
ஊர் உறங்கிக்கொண்டிருந்தது இருளுக்குள். எந்தப் பெரிய வீடும்கூட இருளுக்குள்ளேயே புள்ளி மஞ்சள் விளக்குச் சுடரில் இருக்க விதிக்கப்பட்ட காலமாய் இருந்தது அது.
நத்துவொன்று கத்திக்கொண்டு அப்போது மேலே பறந்தது.
‘இப்பவும் நத்து இருக்கோ?’ என்று ஆச்சரியமாய் எண்ணினார் சாமி.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னால் அவரது பூர்வீக கிராமத்திலும் நத்து கத்தியது. அதை சாமியும் சின்ன வயதிலே கேட்டிருக்கிறார்.
வானொலியும், கடலும் சத்தம் அடங்கியிருந்த ஒரு இரவில், தாயின் அருகிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பரமு ஒரு பறவை மேலே கத்தியபடி பறந்து சென்றது கேட்டு, ‘என்னம்மா அது?’ என்றான் தாயாரிடம்.
‘என்னம்மா அதுவெண்டா... எது?’ தாய் கேட்டாள்.
‘மேல கத்திக்கொண்டு போச்சுதே, அது.’
‘அதுதான் நத்து.’
‘நத்தா?’ என்று கேட்டு திகைத்தான் பரமன். ஒரு பெரிய ஓட்டை முதுகிலே சுமந்துகொண்டு ஊர்ந்துசெல்கிற அந்த ஜந்து பறக்குமா? இரவின் அமைதி குலைந்துபோகும்படி அவ்வளவு பலமாய்க் கத்துமா? அவனால் நம்பமுடியவில்லை. ‘நத்து பறக்குமாம்மா?’
‘ம்.’
‘உந்தமாதிரிக் கத்துமா?’
‘ம்.’
‘கீழ ஒருநாளும் அது கத்தினதேயில்லை?.’
‘ஓட்டோட கீழ ஊர்ந்துபோற நத்தை வேற. இது நத்து. இது பறக்கும்… கத்தும்… எல்லாம் செய்யுமப்பன்.’
வளர்ந்த பிறகுதான் தெரிந்தது, நத்தை கத்திப் பறப்பது நல்ல நிமித்தமென்பது. ஒரு சுபச் செய்தியை அது முன்னறிவிப்புச் செய்கிறது. அப்போதே நினைத்திருக்கிறார், நத்து கத்துமிடமாய் தன் வீட்டை அமைத்து விருத்திகளைப் பெருக்கிக்கொண்ட தாத்தா உண்மையில் நாட்டு வளப்பம் தெரிந்திருந்தாரென்று.
சாமிக்கு தரிசன வெளி கிடைத்தது.
பீடி எடுத்துப் புகைத்தார்.
அவருக்கு சிறகுகள் முளைத்தன.
அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி.
தமிழும் சைவமும் யாழ் குடாநாட்டில் சீரும் சிறப்புமாக வளர்ந்த காலம். மதுரை மற்றும் கரந்தை தமிழ்ச் சங்கங்களுக்கு ஒரு பண்டித பரம்பரை போயும் வந்தும் இரு நாட்டு இலக்கிய ஊடாட்டங்களை வெகுவாக பராமரித்துக்கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்த அச்சு வாகன வசதி அவர்களை இன்னுமின்னும் இழுத்தெடுத்தது.
தமிழ்ப் படிப்பாலும் தன்னலமில்லாத சேவையாலும் சமூகத்தில் கௌரவத்தை சிலர் பெற்றுக்கொண்டிருக்கையில், வெள்ளைக்காரன் ஆட்சியானாலும் பழைய ராஜவம்சமும், அமைச்சர் குலமும், பிரதானிகள் சமூகமும், தளகர்த்தர் பரம்பரையும் அதிகாரம் பெற்ற அரச உத்தியோகங்கள் பெற்று ஏகச் செல்வாக்குடன் வாழ்ந்துகொண்டிருந்தன. புகையிலை ஏற்றுமதி வர்த்தகமும், தேங்காயெண்ணெய் உற்பத்தியும், கராம்பு, கறுவா, ஏலக்காய் வியாபாரமும் கோயில்களைப் புனரமைத்ததோடு திருவிழாக்களையும் ஆடம்பரமாகச் செய்ய மார்க்கம் காட்டின. தேசத்தில் முடியரசன் எவனும் இல்லாமல் ஆனான். ஆனாலும் முடியரசி இங்கிலாந்திலிருந்து மூன்று நாடுகளாயிருந்து இலங்கையென்ற ஒற்றையரசாகக் குறுக்கிய ஒரு தீவுப் பரப்பை ஆட்சிசெய்துகொண்டிருந்தாள்.
தமிழை மொழியால் வளர்த்த ஆறுமுக நாவலரின் வாழ்க்கையில் இறுதிக் கந்தாயம் அது. நல்லூர் கந்தசுவாமி கோவிலின் அனுஷ்டானங்கள், நியமங்கள், அதிகார முறைமைகள்பற்றி கோயில் அறங்காவலர்களுக்கும், அர்ச்சகர்களுக்குமிடையே இடையறா போட்டியொன்று நிலவிவந்தது. உண்மையில் ஆறு காலப் பூஜைகளும், ஆடி-ஆவணி மாதங்களின் இருபத்தைந்து நாள் மகோற்சவமும், ஆண்டின் ஐம்பத்தைந்து திருவிழாக்களும் காணும் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருமானம் குறித்த பிரச்னையே அதுவென்று ஊர் அறிந்திருந்தது.
இவ்வாறான தகராறுகள் அந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் முடிக்குரிய நீதிமன்றத்தில் விசாரணையாகி, கோவிலின் சொத்துக்கள் பராமரிக்கப்படவேண்டிய நீதிபதியின் அறிவுரையோடு, அவற்றைப் பாதுகாக்கும் பொக்கிஷ அறைக்கு இரண்டு பூட்டுகளிட்டு ஒன்று முதன்மை அர்ச்சகர் சுப்பையர் எனப்பட்ட வாலசுப்பிரமணிய ஐயர் வசமும், மற்றது அறங்காவலர் ஆறுமுக மாப்பாண முதலியார் வசமும் இருக்கவேண்டுமென்று தீர்ப்பாயிற்று.
ஆனால் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஸ்தாபகம் ஆகம விதிகளின்படி இருக்கவில்லையென்றும், தீட்சைபெறாத பிராமணர் பூஜை செய்வதும், தேவதாசிகளின் நடனமும், தேர்த் திருவிழாவன்று தேர்க்காலின் கீழ் ஆடு பலியிடப்படுவதும் கோவிலனுஷ்டானத்துக்கு முரணானதென்றும் ஆறுமுக நாவலர் பிரச்சாரம் செய்தார். இது காரணமாகவே சுமார் இருபத்தைந்து வருஷ காலம் அவர் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் போகாதிருந்தார்.
கோவில் நிர்வாகப் பொறுப்பு மாப்பாண குடும்பத்திடமே முழுவதுமாய்த் தங்கியிருந்தது. அதனால் கள்ளியங்காடு இருபாலையென இருந்த அத்தனை மாப்பாண குடும்பமும் மதிப்பும், பெருமையும், கர்வமும் கொண்டன. எல்லா குடும்ப வாலிப பிராயத்தினரும் தமிழும் சைவமும் கற்று சீரிய ஒழுக்க சீலர்களாயிருக்க குடும்பங்களில் கண்டிப்பு ஏற்பட்டது.
அக் குடும்பங்களில் ஒன்றில் பிற்காலத்தில் சிறந்த தமிழறிஞனாவான் என உற்றார் உறவினர் ஊரார் பாராட்டும்படி சைவத்தையும், தமிழையும் கற்றுவந்தான் ஒரு இளம் மாப்பாண முதலி. இருபது வயது பிராயத்துக்குள்ளேயே அவன் திருவாசகத்தை ஓதி முடித்திருந்தான். பெரிய புராணம் முழுவதையும் கற்று அறிந்திருந்தான். கந்த புராணத்தையும், கம்ப ராமாயணத்தையும் முற்றுமாய் படனங்களில் கேட்டிருந்தான். நன்னூலை குருவினிடம் கற்றுத் தேறியிருந்தான். அப்போதுதான், காலமான தமிழறிஞர் ஒருவரின் மகனான கூட்டாளி ஒருவன்மூலம் சிந்தாமணி அவனுக்கு ரகசியத்தில் கிடைத்தது. அந்நூல் அப்போது இந்தியாவில் அச்சுப் பதிப்பில் கிடைப்பதாக இருந்தது. தனது நண்பர் ஒருவர் மூலம் சென்னை ராஜ்ஜியத்திலிருந்து தமிழறிஞர் வருவித்திருந்த பிரதி அது.
அன்றுதான் கதிர்காமத்தம்பி மாப்பாணனுக்கு அடைக்கப்பட்டிருந்த இலக்கிய வாசல் முழுவதுமாய்த் திறந்தது. அதுகாலவரை சொல்லப்பட்ட பொருளை அறிந்துகொண்டிருந்தவன், முதன்முறையாக சொல்லின் பொருளை தானேயாக ஓதியுணர்ந்தான்.
சிந்தாமணி அவனை உணர்வின் அந்தத்துள் சென்று அசைத்தது. கண்ணில் பார்வைமட்டுமே உள்ளதென்றிருந்த கதிர்காமத் தம்பி, பாவமும் ரசமும்கூட அதிலுண்டு என அறிந்தான். வாய் உண்பதற்கும் ஓதுவதற்குமானது மட்டுமில்லை, அது உண்ணப்படுவதற்குமானது என்பதைத் தெளிந்தான். சிந்தாமணி அவனை காம நீர் தெளித்து பக்குவப்படுத்தி விட்டது. அலரியிதழ் அதரங்களும், சங்குக் கழுத்துகளும், கனக முலைகளும் அவனது கனவில் வரத் துவங்கின.
ஒருநாள் கைதடி ஆலயமொன்றில் கும்பகோணத்திலிருந்து வரும் ஜெகதாம்பிகை என்கிற ஆடற்கணிகையின் நடன நிகழ்ச்சிகள் திருவிழாவின் கடைசி இரு தினங்களில் நடக்கவிருப்பதான செய்தி கதிர்காமத் தம்பிக்குக் கிடைத்தது. இரண்டு நிகழ்ச்சிகளையும் காணவே தீர்மானித்துவிட்டான் கதிர்காமன். கடைசிக்கு முந்திய திருவிழா நாளில் சூரியன் சாயத் தொடங்கியதும் அவனது வண்டி கைதடியை நோக்கிப் புறப்பட்டது.
கைதடி ஆலய அறங்காவலர்களுக்கு நல்லூர் கோவில் அறங்காவலர் குடும்பத்து பிள்ளையை நன்றாகவே தெரிந்திருந்தது. ஆலய மண்டபத்தில் விரிக்கப்பட்ட ஜமக்காளத்தில் முதல் வரிசையில் அமரவைக்கப்பட்ட கதிர்காமன், நடைபெற்றுக்கொண்டிருந்த நாதஸ்வர கச்சேரியை ரசித்துப் பார்த்தான்.
தொடர்ந்து ஜெகதாம்பிகையின் நடன நிகழ்ச்சி நடக்கவிருந்தது. மிருதங்கம், வீணை, வயலின், ஆர்மோனியம், சுதிப்பெட்டி, புல்லாங்குழல், தாளம் ஆதிய இசைக் கருவிகளும் கலைஞர்களும் மேடையேறினர். சுதி சுத்தம் பார்த்து இசைக்கருவிகள் தயாராகின.
சிறிதுநேரத்தில் நர்த்தகி ஜெகதாம்பிகை இடுப்பில் இடதுகை வைத்து, வலக்கையால் காற்றளைந்து, நடையில் ஒயிலுமாக மேடைக்கு வந்தாள்.
கதிர்காமனுக்கு மூச்சு ஒழுங்கற்றது. பிராணன் அவஸ்தைப் பட்டது.
அவன் கண்டதில்லை தன் வாணாளில் அதுபோல் ஒரு உயிர்ச்சிலையை.
நூற்றாண்டுகளைப் பின் தள்ளி வந்த ராஜ வம்சத்துப் பெண்.
தலையில் கிரீடமில்லாமல் சபையின் தலையைக் கிறங்கவைத்த அழகின் அதிகாரம் அவளிடமிருந்தது.
அவளது வந்தனத்தில் சபை கரகோஷம் செய்தது.
கதிர்காமன் அசைவின்றி தன்னை மறந்தவனாய் அமர்ந்திருந்தான்.
அவனது பார்வை, நிறைந்த அவளுடலின் ஆபரணங்களை ஒவ்வொன்றாய் ஒதுக்கி அவள் மேனியழகு காண உந்திக்கொண்டிருந்தது.
அதை அவள் கண்டாள்.
அப்போது அவன்மீதான பிரமிப்பு அவளிலும்.
அந்த மாநிற மேனியின் வாளிப்பும், ஆண்மை மேலிட்ட உடற்கட்டும், அறிவு பிரகாசித்த விழிகளும் அவளை வசியமாக்கின.
கண்கள் பாவமும், ரசமும் காட்டுவது மட்டுமில்லை, இதயத்துள் விரிகிற சொல்லெடுத்து பாடலாய்க் கடத்தும் தன்மையும் கொண்டிருக்கிறதென அப்போது கதிர்காமன் உணர்ந்தான்.
‘மானின்நேர் விழி மாதராய்...’ தேவாரத்துக்கு அவள் அபிநயம் பிடிக்கவில்லை. தேவாரத்தின் பொருளாய் இருந்தாள். முடிக்கிறபோது பாவம் அவனையே வழுதியாக்கும் தாபத்தைச் சொன்னது.
அடுத்த ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்’ பாட்டில் ஜெகதாம்பிகை சர்வேஸ்வரனின் பாதங்களிலல்ல, வெற்று மார்பில் ஒளிர்ந்த வெண்சரடும், அட்சரக்கூட்டுடன் இலங்கிய நீளப் பவுண் சங்கிலியும் தொங்கிய கலா ரசிகனான கதிர்காமனின் முன்தான் யாருமறியாதபடி தற்சமர்ப்பணம் ஆனாள்.
அடுத்த நாள் கடைசித் திருவிழாவில் தவிப்புகள் மேலும் வெளிப்பட்டன.
கதிர்காமனுக்கு நிச்சயமாகிவிட்டது, அவளின்றி வாழ்தல் ஆற்றமுடியாதென்றும், அவளே தன் வாழ்க்கைத் துணையென்றும்.
அன்று நடன நிகழ்ச்சியின் இடையில் ஜெகதாம்பிகை ஓய்வெடுக்க அறைக்குத் திரும்பும்போது, சட்டென எழுந்து சென்று எதிர்பாராததாய்த் தோன்றும்படி ஒரு திட்டமிட்ட மோதலை ஏற்படுத்தி யாரும் கேளாத சொற்களில் தன் வேட்கையை அவளது காதில் ஓதிவிட்டான் அவன்.
நடன நிகழ்ச்சி முடிய இரண்டாம் காலப் பூஜை நடந்தது. கதிர்காமன் வீடு செல்ல தயாரானான். அப்போது ஒரு இளம் ஐயர் அவ்வளவு தூரம் பிரசாத தட்டை எடுத்தோடி வந்து அவனுக்கு பிரசாதம் வழங்கினார். திரும்பு முன் அடுத்த வாரத்தில் கொழும்பு ஶ்ரீபொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் தனது நர்த்தனமிருப்பதை நர்ததகி அவனிடம் தெரிவிக்கச் சொன்னதாய் ஒரு அடங்கிய சிரிப்போடு சொல்லிச் சென்றார்.
தூக்கமிழந்து விட்டது அவனுக்கு.
பசி வரத்து மறந்தது.
எல்லாம் கண்டிருந்த தாய் அவனின் நோய்பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள். உற்றார் உறவினருடன் கலந்தாலோசித்து ஒரு பரிகாரமெடுத்தாள். ஒருநாள் மகனின் முன்னே வந்து, ஒரு நல்ல நாளில் மாமன் மகள் அன்னபூரணியை நிச்சயிக்க போகலாமாவென்று அபிப்பிராயம் கேட்டாள்.
தாய் சொல் தட்டியறியாதவன் கதிர்காமன். ஆனாலும் அதைமட்டும் அவனால் ஏற்றுவிட முடியாதிருந்தது. தன் மனத்தில் ராஜாங்கம் பண்ணும் ஜெகதாம்பிகையின் அழகுபற்றி தாயாரிடமே சொல்வதெப்படி? தனக்கு கொழும்பிலே ஒரு வேலை இருப்பதாகவும், அது முடிந்து திரும்பிவந்த பின்னர் பார்க்கலாமென்றும் அப்போதைக்குச் சொல்லிவைத்தான்.
கொழும்பிலிருந்து கதிர்காமத் தம்பி திரும்பிவந்தபோது மாமா குடும்பத்தினதும், உற்றம் சுற்றமென்றிருந்தவர் குடும்பங்களினதும் முகங்களில் சினம் கொப்புளித்துக்கொண்டு இருந்தது. ‘நான் பாவம் செய்து பெற்ற பிள்ளையாயிட்டாய். ஏன் என்னை இவ்வளவு பொல்லாப்புக் கேக்கவைச்சாய்? தாய் முலை தராமல் விட்டனா, நேராநேரம் சாப்பாடு தராமல் விட்டனா, என்ன குறை வைச்சன்?’ என்று தாயார் வந்து ஒரு தரம் அழுதுவிட்டுப் போனாள்.
எல்லாம் எதிர்பார்த்துத்தான் அவனும் திரும்பியிருந்தான். தந்தை நான்கு வருஷங்களின் முன் தேகவியோகமானது நல்லதாய்ப் போய்விட்டதென்று அவன் நினைத்த முதல் கணமும் அதுதான்.
அவளது அண்ணன் அவனது தாயாரின் மூளையாகவிருந்தார்.
அவன் செய்ய எதுவுமிருக்கவில்லை.
நாட்கள் சிலவற்றின் பின் கடிதமொன்று வந்தது அவனுக்கு. திருகோணமலையிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அரச சேவையென்ற அர்த்தமுள்ள ON H.M.S ஆங்கில அடையாள முத்திரையுடன் கடிதங்கள் பெற்றிருந்ததன்றி, தபால்தலை ஒட்டிய கடிதமேதும் இதுவரை அவனுக்கு வந்ததில்லை.
அவன் கடிதத்தைப் பிரித்தான்.
ஜெகதாம்பிகை எழுதியிருந்தாள்.
திருகோணமலையிலிருந்து நேரே யாழ்ப்பாணம் வருவதாகவும், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் தனது நடன நிகழ்ச்சியொன்று இருப்பதாகவும், அங்கே தனிநாயக முதலி என்ற ஒருவர் வீட்டில் தங்கப்போவதாகவும் எழுதியிருந்தாள்.
கதிர்காமன் அன்று சாப்பிட்டான்.
இரவு நன்றாக உறங்கினான்.
ஆனி உத்தரத்து கோயில் மகோற்சவம் தொடங்கியது.
நேரத்தோடேயே சென்றிருந்த கதிர்காமத்தம்பி மாப்பாணன் கோவிலுக்குள் செல்லாமல் வெளியிலே பராக்காய் நின்றிருந்தான். அப்போது ஒரு பெட்டிக் கார் வந்து கோயில் வாசலில் நின்றது. ஜெகதாம்பிகையும், அவளுடன் கும்பகோணத்திலிருந்து வந்திருந்த அத்தையும் மாமாவும் இறங்கினார்கள். கூட அந்த வண்டியை ஓட்டி வந்திருந்த சரிகை வேட்டி சில்க் சட்டையணிந்த ஒரு கனவானும் இறங்கினார்.
சாயங்காலப் பூஜை முடிந்தது.
தீச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
முழக்குப் பறைகள் ஒலித்தன.
அண்மை வீடுகளிலிருந்த ஆண்கள் பெண்களெல்லாரும் வந்து கூடினர்.
நடன நிகழ்ச்சி வழக்கமான ஆயத்தங்கள் முடிய ஆரம்பித்தது.
மாப்பாணன் திடுக்கிட்டான். ஜெகதாம்பிகையின் கண்கள் விறைத்துக் கிடந்தன. ஏக்கத்தைத் தவிர அவற்றில் எந்த உணர்ச்சியும் காணப்படவில்லை.
அவன் ஒரு தீர்மானத்துடன் எழுந்தான். பின்னால் சென்று ஓரமாய் ஒதுங்கி நின்றான். உறவினர் தெரிந்தவர் காணாதபடி சற்றுநேரத்தில் மேலும் பின்னே ஒதுங்கினான். மேலே அவன் காணப்படவில்லை. காணப்படாதிருந்ததும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.
நடன இடையில் இளைப்பாற ஜெகதாம்பிகை அறைக்கு வந்தாள்.
அங்கே கதிர்காமன் நின்றிருந்தான்.
கண்டதும் துவண்டு அழுதாள் ஜெகதாம்பிகை. இடையில் சொன்னாள், ‘என்னை அந்த கனவானுக்கு வாழ்க்கைப்பட அவர் வீட்டிலேயே வுட்டுட்டு என் அத்தையும் மாமாவும் கும்பகோணம் போப்போறாங்க. அப்படி நிலைமை வந்தா நான் உயிரோட இருக்கமாட்டேன். மாய்ச்சிடுவேன் உசிரை’ என்றாள்.
‘அது நடக்காது. தனிநாயக முதலியின்ர வீடு எனக்குத் தெரியும். நடுச்சாமத்துக்கு மேல தயாராயிரு. நான் வருவன். என்ர வண்டியோட்டியின்ர ஊர் தூரத்தில இருக்கு. அவன் அங்க ஒரு வீடெடுத்துத் தருவான். நாங்கள் அங்க போய் கலியாணம் கட்டிக்கொண்டு இருக்கலாம்’ என்றான் கதிர்காமன்.
‘காத்திருப்பேன். இல்லாட்டி நாளைக்கு காலம்பற நீங்க அறியிற செய்தி நல்லதாயிருக்காது.’
‘கட்டாயம் வருவன். வைத்தீஸ்வரன் மேல சத்தியம்.’ அவன் அவளைத் தேற்றி அனுப்பிவைத்தான்.
அவ்வாறான அந்தச் சத்தியம் காலைக்குள் நிறைவேறியது.
சூரியன் உதித்த பொழுதில், வண்டில்காரன் கந்தனது ஊர்ப் பிள்ளையார் கோயிலிலே, கோயில் ஐயர் சாட்சியாக கதிர்காம மாப்பாணன் தாலிகட்டி ஜெகதாம்பிகையை மனைவியாக்கிக்கொண்டான்.
அதிகாலையில் தோட்டத்துக்குச் சென்றவர்கள், கொழும்பில் அப்போது குடியிருக்கும் சீமானின் வெறுமையாயிருந்த பூர்வீக மண் வீட்டில், ஒரு இளந்தம்பதியர் குடும்பம் நடத்திக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அதிசயித்தாலும் அது மௌனம் பூண்டிருந்தது. அதன் வாயை அவ்வீட்டு வாசலில் நின்றிருந்த ஒற்றை மாட்டு வண்டியின் பிரமிப்பும், வண்டியோட்டி கந்தனின் மேலான அச்சமும் மூடியிருந்தன. எனினும் புதிதாக உருவாகியிருந்த அந்தச் சூழலை அது வெகுவாக ரசித்தது.
பளீரென்ற பச்சையில் பட்டுடுத்திய ஒரு தேவதையும், அதற்கிளைக்காத அழகில் கம்பீரமான ஒரு ஆணும் அது என்றும் கண்டதேயில்லை. அது உதவிசெய்ய, ஒத்தாசை புரிய அழைக்காமல் வாசலில் வந்து நின்றது. ஊர் மூன்று நான்கு நாட்களுக்குள் முழுவதுமாய் அவர்கள்மேல் வசியமாகிப்போனது.
சிலநாட்களில் முதுசொத்தின் பெரும்பாகத்தை விற்று அங்கே பெரிய நிலமொன்றை வாங்கினான் கதிர்காமன்.
அது கல்லும், மண்ணும், கரம்பும், திட்டியுமாயிருந்தது. கூலிக்கு மேல் கூலி வைத்தும் தானே கூலியாகவும் நின்று உழைத்தானவன். அவ்வாறாக ஒரு பெரிய தோட்டத்தை விரைவில் உண்டாக்கினான்.
பக்கத்திலிருந்த ஒரு வீட்டின் குடியானவப் பெண்ணுடன் வேவிலந்தைப் பிள்ளையார் கோயிலுக்கு ஒரு வெள்ளிக்கிழமை ஜெகதாம்பிகை சென்றாள். பூஜை முடிந்து வெளியே வந்தவள் அதிசயித்துப் போனாள். கோயிலின் அருகே ஒரு வேப்ப மரமும், ஒரு இலந்தை மரமும் தம்முள் ஒன்றோடொன்று பிணைந்து வளர்ந்தோங்கி நின்றிருந்தன. எது எதனைச் சுற்றியதென்று தெரியமுடியாத பிணைப்பு.
பூஜை வைத்த ஐயரிடமே அதன் மகத்துவமான கதையைக் கேட்டாள் ஜெகதாம்பிகை.
எவ்வளவு தெரிந்திருப்பாரோ, ஆனாலும் தெரிந்ததைச் சொன்னார் ஐயர். ‘வேம்பு சிவன். இலந்தை சக்தி. சிவனும் சக்தியும் இணைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரத் தோற்றம்தான் இது.’
நாளடைவில் தாங்கள் குடியிருக்கும் மாயக்கையின் கதையும் அறிந்தாள்.
அதன் பின் இரவுகளில் பறவையொன்று கத்திப் பறக்கும் சத்தம் கேட்டாள். அதை விசாரித்தபோது குடியானவப் பெண் சொன்னாள், ‘அது நத்து, நாச்சியார். உப்பிடித்தான் அது ராவில கத்திப் பறக்கும்’ என்று.
‘அது நல்லதுக்கா?’
‘நல்லதுக்குத்தான், நாச்சியார். சாக்குருவிய போலயில்லை இது. நத்து கத்தினால் நல்லது.’
அவள் இந்தக் கதையெல்லாம் வந்து கதிர்காமனுக்குச் சொன்னாள்.
எப்போதும் நிறைந்திருக்கும் குளமொன்று மாயக்கையிலே அவர்களது அயலிலே இருந்தது.
ஒரு மாரியில் பெருமழை பிடித்தபோது, சுற்றிவரவிருந்த மேட்டுநில வெள்ளமெல்லாம் குளத்தில் வந்து விழத் துவங்கிவிட்டது. விடாது பெய்த அந்த மழையில் குளத்துத் தாமரைகளெல்லாம் மூடுண்டன. அல்லிகள் நீரில் அமிழ்ந்து கிடந்தன. குளம் தளும்பிக்கொண்டிருந்தது. ஊரின் நீரெல்லாம் குளத்தில் வந்து விழுந்தால் அது மீட்டுவிடுமென்று எண்ணினான் கதிர்காமத்தம்பி. ‘தாழ்வுப்பாட்டில எங்கட தோட்டமிருக்கு. குளம் நிறைஞ்சால் தோட்டத்துக்குள்ள தண்ணி ஏறியிடும். வைச்ச பயிரெல்லாம் அழிஞ்சிடப் போகுது’ என்று ஜெகதாம்பிகைக்குச் சொல்லி கவலைப்பட்டான்.
ஆனால் மூன்று நாட்கள் பெய்த விடாத மழையிலும் தோட்டத்துக்குள் வெள்ளம் ஏறவேயில்லை.
குளம் நிறைந்திருந்தது. வெளி வெள்ளம் உள்ளே வழிந்துகொண்டிருந்தது. ஆனாலும் நீர்மட்டம் உயராதிருந்தது.
அவனுக்கு அந்த அதிசயத்தைத் தெரியும் ஆர்வம் வந்தது.
மழை விட்ட பின்னால் தனியாகப் போய் குளத்தைச் சுற்றியுள்ள இடமெல்லாம் காரணத்தைத் தேடினான். தண்ணீர் மாயமாக மறையும் விந்தையின் மூலத்தை அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
சுற்றாடலின் நீர் வளம் அவனது தோட்டச் செய்கைக்கு பெரிய அனுகூலமாயிருந்தது.
உழைத்து செழிப்பாக வாழத்தொடங்கிய அந்த மாப்பாணனின் கதையிலிருந்து கிளையெடுக்கிறது சாமியின் கதை. அவரது தந்தை கந்தப்பிள்ளை மாப்பாணனின் காலம், தாத்தாவின் காலத்தைவிட பெரிதாக வேறுபட்டுப் போகவில்லை. தாத்தா தன் மகனை ஓரளவுக்கு மேல் படிப்பிக்கும் சிந்தையோடு இருக்கவில்லை. ஆனால் தந்தை மகனை படிப்பால் உயர்த்துவேனென்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றார். கல்வியாலும் தன் குலம் சிறக்கவேண்டுமென்பது அவரது அவாவாயிருந்தது.
ஏழு அறைகள், இரண்டு கூடங்கள், இரண்டு சமையலறைகளென அமைந்த அந்த கள்ளிக்கோட்டை ஓடு போட்ட பெரிய வீட்டில்தான் பரமேஸ்வர மாப்பாண முதலி பிறந்து வளர்ந்தான். அண்மையிலிருந்த ஒரு சைவப் பள்ளியில் ஆரம்ப கல்வியைத் தொடங்கியவன், எட்டாம் வகுப்புக்கு மேலே அவனது தந்தையின் நண்பர் ஒருவரது வீட்டில் தங்கி கொழும்பிலேதான் படித்தான். முன்பு இருந்ததோ என்னவோ, ஆனால் கொழும்பு சென்ற பிறகு அவனுக்கு படிப்பு வரவேயில்லை. எச்.எஸ்.ஸி. படித்துக்கொண்டிருக்கையில் தியத்தலாவ நிலஅளவை மற்றும் வரைபடவாக்க கல்வி நிறுவனத்தில் சேர்ந்துகொண்டான். பின்னால் அவனுக்கு இலங்கை அரச நிலஅளவைத் திணைக்களத்தில் ஒரு வேலை கிடைத்தது. அங்கிருந்து 1977இல் இனக்கலவரத்தோடு அவன் வேலையைவிட்டு ஊர் வந்த பிறகு பரமேஸ்வர மாப்பாண முதலியின் கதைக்கு ஒரு இரண்டாம் பாகம் தொடங்குகிறது. அது அவன் சாமியாகக் காரணமான சம்பவங்களை உள்ளடக்கியிருந்தது.
அதை சாமி இன்னொரு நாள் எண்ணிப் பார்ப்பார்.
திரும்பவும், அதே நத்தோ வேறோ, வீட்டின் மேலாய்க் கத்திப் பறந்தது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.