வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com/
2003
1.
கடைகள் அடைக்கப்படத் தொடங்கின. சாவகச்சேரி நகரம் பெரும்பாலும் வெறிதாகியிருந்தது. கடைக்காரரும் வீடு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தனர். பக்க வாசல்களையெல்லாம் மூடி, இறுதியாக முதன்மை வாசலையும் பூட்டிக்கொண்டு காண்டீபனும் எழிலனும் வர, வெளியே அவர்களுக்காக காத்திருந்த பெண்களும் ஆண்களுமான ஆறேழு பேர்கள்கொண்ட அச்சிறு குழு சைக்கிள்களை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டது. சூரியன் மேற்கில் சரிந்து சரிந்து போய் முடிவாக கச்சாய்க் கடலுள் அமுங்கியது.
ஶ்ரீவள்ளிச் சந்திக்கு வரும்போதுதான் நிலா கண்டாள், தான் மற்றவர்களிடமிருந்து சிறிது பின்தங்கிவிட்டதை. வேகமாக சைக்கிளை உழக்கினாள். ஒருபோது கல்லூரி போய்வந்த அந்த வீதிகளில் அவளுக்கு எப்போதும் அவ்வாறு ஆகிப்போகிறது. சந்தியிலிருந்து இரண்டு காணிகளுக்கப்பால் ராணுவ முகாமிருந்தது. அதைக் கடந்து போகையில் முட்கம்பிகளுள்ளே இருந்த மணல் மூட்டை அடுக்குக் காவலரணிலிருந்து பாய்ந்து வந்து சுள்ளிடச் செய்யும் ஒரு பார்வையின் நெருப்புக் கதிர்ளை எப்போதும் அவள் உணர்ந்துகொண்டிருந்தாள். அந்த உணர்வு அப்போதும் எழுந்தது.
புத்தூரில் சந்திக்குக் கிட்ட அவர்கள் தங்கியிருந்த வீட்டை அடைவதற்குள் அவள் மேலும் இரண்டு ராணுவ முகாம்களை கடக்கவேண்டும். ஆனால் அந்த இடத்தில்தான் அந்த நெருப்பு விழிகளின் வெங்கதிர் அவள்மீது பாய்ந்துகொண்டிருந்தது. இயக்கம் குத்தகைக்கு எடுத்திருந்த தென்மராட்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில் வேலைசெய்ய ஆறேழு வாரங்களாக அங்கே வந்துகொண்டிருக்கும் நிலாவுக்கு, கடந்த சில நாட்களாகத்தான் அந்த அனுபவம் ஏற்பட்டிருந்தது. ஒருவேளை முன்பும் வேறிடத்திலிருந்து அந்தக் கண்கள் அவளை அவ்வாறு பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம். அவள் கண்டதில்லை. முகத்தையோ, நெஞ்சையோகூட அல்ல, அவளது கறுப்பு லோங்ஸையும், வெளியே விட்டிருந்த வெள்ளைச் சேர்ட்டையும், அதன்மேல் கட்டியிருந்த பட்டியையுமே அவை குறிப்பாய்த் தாக்கின. அவற்றின் பஸ்மத்தில் அவள் நிர்வாணியாய் வீதியில் போவது காணும் கொடூர வேட்கைபோல் இருந்தது அது. காண்டீபனிடம் இரண்டு நாட்களுக்கு முன்னால் சொன்னபோது அவன் சிரித்தான்.
‘என்னைப் பாக்கிறானெண்டு சொல்லுறதுக்கென்ன? ஏன், என்ர உடுப்பையே பாக்கிறானெண்டு சொல்லுறீர்? அப்பிடியெண்டாலும் நாங்கள் இதுக்கொண்டும் செய்யேலாது, நிலா. அவங்கட கட்டுப்பாட்டுப் பிரதேசமிது. பின்னால தனிய வராமல் அந்த இடத்தில எல்லாரோடயும் சேர்ந்து வாரும்’ என்றிருந்தான்.
அவளும் அறிந்ததுதான் அது. செய்ய ஏதுமில்லை. ஆனால் அதுபோன்ற கண்களே அக்காமீதும் பதிந்து அவளை நாசமாக்கியிருக்கக் கூடுமென அப்போது நிலா நினைத்தாள். அது தமிழ்ப் பெண்ணென்ற அடையாளத்தின் மீதான தாக்குதலாய் நடந்தது. நினைத்தபோது அவளின் சரீரம் ஒருமுறை பதறி அடங்கியது. முகாமைக் கடந்து போனபின் அப்படியொரு ஆசுவாசம் அவளில் வந்திறங்கியது. மேலே ஐந்து சந்தியில் ஒரு ராணுவ முகாமும், தொடர்ந்து செல்ல முத்துமாரி அம்மன் கோவிலடியில் இன்னொன்றும் வரும். அது தாண்டி சிறிது தூரத்துக்கப்பால் வயலும், நீரும், பற்றையுமான வெளிதான். ஒரு பக்கம் வாதரவத்தையினதும், மறுபுறத்தில் வல்லையினதும் பரந்த தரைவைகள் அமானுஷ்யத்தில் விரிந்து கிடந்தன. அந்த இடத்தில்தான் அவளது கனவுகளும், நினைவுகளும் இறக்கை பெறுகின்றன. 2000ஆம் ஆண்டு ஆனையிறவு ராணுவ முகாம் தாக்குதலில் பெண்கள் அணியில் சென்று சமரிலே தோளில் குண்டுக் காயம் பட்டிருந்தவளுக்கு, இடது கையை அசைக்க முடியாதளவு எலும்பு முறிவு கண்டிருந்தது. நீண்ட நாட்களாயின அது குணமாக.
அப்போதும் கடினவேலைகள் சிரமம் அவளுக்கு. அப்போதுதான் பெப்ரவரி 2002இன் அரசினதும் புலிகளினதும் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. குடாநாட்டில் இயக்க வேலைகள் செய்வதற்கான பெண்கள் குழுவில் அவள் இடம்பெற்றாள். அதை அவள் ஓய்வெடுப்பதற்கான சமயமாக அவளது படையணித் தலைவி கூறியிருந்தாள். குடாநாட்டுக்கு வந்த பின்புதான் அது ஓய்வுக்கானதாக மட்டுமன்றி, பல விஷயங்களின் கற்கைகளுக்கான தளமாகவும் இருந்தது தெரிந்தது நிலாவுக்கு. கந்தக மணமற்று காற்றின் வெளி விரிந்து கிடந்தது. எதிர்ப்படும் மனிதர்களின் முகங்கள் ஆசுவாசத்தைக் கொண்டிருந்தன. ஐ.நா.வினதும், ஜி.ரி.இசற்… அக்க்ஷன் பாய்ம்… ஆகிய வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களினதும், யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினதும் வான்கள் தத்தம் கொடிகளுடன் கல்லாய்க் கிடந்த தார் றோட்டுகளில் கிடந்த குண்டு குழிகளுக்கு கம்பீரமாய் குதித்து நிமிர்ந்து பறந்துகொண்டிருந்தன. ரிவிரச நடவடிக்கையில் இடிந்தும் உடைந்தும் கிடந்த பல வீடுகளும் ஏதோ ஒரு நம்பிக்கையில் புனர்நிர்மாணம் ஆகும் சமயமாகவும் அது இருந்தது. வயல்கள் தோட்டங்களில் நிறைய பச்சைகள் தெரிந்தன. பெரும்பாலானவர்களின் வாழ்வு இயங்க அது முக்கியமானது. யுத்த நிறுத்தத்தின் புதிய வெளி அவளை அவ்வப்போது விண் கட்டிய பட்டம்போல் மனத்தை கூவச் செய்துகொண்டிருந்தது.
சாவகச்சேரி தபால் நிலைய வீதியிலிருந்த அந்த மகளிர் கல்லூரியிலேதான் அவள் ஓ.எல். படித்தாள். அவளது பள்ளிக் காலங்களினதும், பழைய சிநேகிதிகளினதும் நினைவுகளை அந்தக் கல்லூரி தாங்கி நிற்கிறது. விளையாட்டுகளில் வெற்றிகளை அவள் குவித்த காலமும் அது. ஆனாலும் அது படிப்புக்கு இசைவாக இருக்கவில்லை. யுத்தமும் புலப்பெயர்வும் ஓயாது மக்களை வருத்திக்கொண்டிருந்தன. ஒரு உயிர்ப் பயம் ஒவ்வொருவர் காலடிக்கு முன்னாலும் சென்றுகொண்டிருந்த நாட்கள் அவை. தன் வாழ்க்கையை அவள் தீர்மானிக்கவில்லை. காலம் தீர்மானித்தது.
தேர்வு முடிவுகள் வெளிவந்ததும், ‘இந்தளவே பெரிய காரியம், இனி படிச்சது போதும்’ என்றுவிட்டாள் அம்மா. நிலாவுக்கு அதற்கு மேலே ஏ.எல்.வரையாவது படிக்க விருப்பமிருந்தது. சூழல் நல்லாயில்லை என்பது சரியான ஒரு காரணமாய் அம்மாவுக்கு இருந்தது. அவளுக்கு அதுதான் அவளறிந்த சூழல்.
கேரதீவு பஸ்ஸெடுத்து மறவன்புலவிலுள்ள வீடு செல்வது அவ்வளவு கஷ்ரமாயில்லை. பஸ் வராதபோது என்ன செய்வதென்றும் யோசிக்க இருக்கவில்லை. சந்தைக்குள் இருந்த சைக்கிள் கடை அண்ணனிடம் வாடகைக்கு ஒரு சைக்கிளை எடுத்துப் போனால், காலையில் பாடசாலை வரும்போது கொடுத்துவிடலாம். போய் வருகிற பஸ் காசுக்கு இணையான தொகையை அந்த அண்ணன் வாடகையாய் வாங்கிக்கொள்ளும். இருந்தும் அம்மாவின் முடிவை மீறிக்கொண்டும் படிக்க விரும்புவதற்கு அவளுக்கு உந்துதல் எழவில்லை. ஆனால் அவளை வேறொரு திசையில் செல்ல உந்திய சம்பவமொன்று விரைவில் நடந்தது.
அப்போது அக்கா வித்தியா யாழ்ப்பாணம் நியூ மார்க்கெட்டில் ஒரு பெரிய ஃபான்சி கடையில் வேலை செய்துகொண்டிருந்தாள். வழக்கமாக சனிக்கிழமைகளில் இரண்டு மணிக்கு வீடு வந்துவிடும் அக்கா, அன்று இரவு ஏழு மணியாகியும் திரும்பவில்லை. அம்மா கேற்றடிக்கும் விறாந்தைக்குமாக திரிந்துகொண்டிருந்தாள். அப்பா விறாந்தையிலிருந்து கேற்றடியையே பார்த்துக்கொண்டிருந்தார். ஏழு மணிக்கு மேல் அவள் வந்தபோது அம்மா ஆசுவாசம் பட்டாலும்,
‘ஏனிண்டைக்கு இவ்வளவு லேற்?’ என்று பொரிந்தாள். அக்கா, ‘கடை பூட்ட லேற்றாய்ப் போச்சம்மா’ என்றுவிட்டு அறைக்கு வந்துவிட்டாள்.
அவளைப் பின்தொடர்ந்து நிஷா அறைக்குள் வர அவளுக்கு நேர் முன்னாய்த் திரும்பி குலுங்கியபடி நின்றாள் வித்தியா. பொலபொலவென கண்ணீர் வார்ந்துகொண்டிருந்தது. நிஷா,
‘என்ன வித்யா, என்ன நடந்தது?’ என்று விடுத்து விடுத்துக் கேட்டபிறகு,
‘அரியாலை செக் பொயின்ரிலை வைச்சு பஸ்ஸால இறக்கியிட்டாங்களடி’ என்றுவிட்டு, கதறாமலிருக்க வாயைப் பொத்திக்கொண்டாள்.
நிஷா திடுக்கிட்டாள். என்றாலும் அது அவ்வப்போது நடப்பதுதானே? அக்காவின் அந்தளவு உடைவுக்கு என்ன காரணமாயிருக்கும்? அவளின் புதிரை வித்தியாவிடமிருந்து தொடர்ந்து வந்த வார்த்தைகள் விடுவித்தன.
‘எங்கயோ கொண்டுபோய் நாலு மணத்தியாலமாய் வைச்சிருந்திட்டு விட்டாங்கள்.’
அவள் தெளியவே நேரமெடுத்தது.
‘உன்னோட வாற மற்றப் பிள்ளைக்கு என்ன நடந்தது?’
‘அவவையும் இறக்கினாங்கள்.’
‘ரண்டு பேரை மட்டுமோ?’
பதிலையும் அழுதாள் வித்தியா.
பிறகு, ‘அங்கால ஒரு அறையிலயிருந்து அவ கத்தின சத்தம் ஒருக்கா கேட்டுது. பிறகு என்ன நடந்ததெண்டு தெரியா’ என்றாள்.
‘அப்ப… உன்னை எப்பிடி வித்யா விட்டாங்கள்?’
கேள்வியில் சிதைந்தாள் வித்தியா. பிறகு சுதாரித்துக்கொண்டு, அவளுக்காவது தெரியவேண்டுமென நினைத்து சொன்னாள்:
‘என்னைக் கெடுக்க நான் விட்டுக்குடுத்தன்.’
என்ன அது? கெடுக்க விட்டுக்கொடுத்தல் என்பது, தன்னை அனுபவிக்க விட்டுக்கொடுத்தல் என்பதுதானே? இல்லை. விரும்பிக் கொடுப்பதற்கும், விட்டுக்கொடுப்பதற்குமான செயற்பாட்டில் தூரங்கள் இருக்கின்றன. அவள் பயந்து இணங்கியவளாயிருந்தாள்.
அனுபவித்திருந்தாலும்தான் குற்றமற்றவள். அகலிகையாக அவள் முன்னே அக்கா வித்தியா குணரூபம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
பிறகு, ‘ஒரு ஆமிக்காறன்தான். அவன்தான் கொண்டுவந்து விட்டிட்டும் போறான்’ என்றுவிட்டு தொடர்ந்து சொன்ன வித்தியாவின் வார்த்தைகளில் நிஷா திகைத்தாள்.
‘அடுத்த சனிக்கிழமை பின்னேரம் வரச்சொல்லியிருக்கிறான். இல்லாட்டி தான் இஞ்சை வந்திடுவானாம்.’
அதற்கொரு தொடக்கம் எங்கோ இருந்திருக்கிறதாய் நிஷா எண்ணினாள். போரடித்து ஓய்ந்த நிலமொன்றில் தான் இயல்பாய் இருப்பதாய்க் காட்டச் செய்யும் ஒருத்தியின் மலர்ந்த பார்வைக்கு அவ்வாறான விளைவொன்றின் சாத்தியமிருக்கிறது. நிஷா அதைக் கேட்டாள்.
‘முன்ன பின்ன கண்டதே இல்லையடி அவனை’ என்றாள் அக்கா. ஒருநாளைய அழிவோடும் தப்பிவிட முடியாதபடி இடப்பட்டுள்ள அந்த வலை மிக்க கொடுமையானது. அந்த இக்கட்டை வித்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறாளென்று நிஷாவுக்குத் தெரியவில்லை. அடுத்த சனிக்கிழமை வெகு தூரத்திலில்லை.
ஒருவகையில் அது வித்தியாவினுடைய பிரச்னை மட்டுமில்லை. முழுக் குடும்பத்தினதும். அவர்கள் தெரிந்திராத வகையில் என்னதான் இதற்கு முடிவு? காணாமல் போயிருக்கிற அவளின் சிநேகிதியின் நிலையும் முக்கியமானது.
‘என்ன செய்யப்போறாய், வித்யா? நீ சொல்லாட்டி அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்ததெண்டு ஒருத்தருக்கும் தெரியாமப் போயிடும்’ என்று நிஷா சொன்னதுக்கு,
‘இதை வேற ஆரிட்டயும் சொல்ல என்னால ஏலாமலிருக்கு, நிஷா’ என்று அழுதாள் அவள்.
அதற்கு என்ன சொல்வதென்று நிஷாவுக்குத் தெரியவில்லை. அக்கா ஒரு விபத்தை மறைக்கப்பார்ப்பது அவளளவில் சரிபோலவும் இருந்தது. வித்தியா இரவில் அழுதும், பகலில் மறைத்தும் துக்கத்தை வாழ்ந்துகொண்டு திரிந்தாள். ஒருவேளை கோப்பையின் இறுதித் துளியாக அந்தச் சம்பவமே நிஷாவை இயக்கத்தில் சேருவதற்கு உந்தித் தள்ளியிருக்கலாம். ஒரு பக்கம் வயல்வெளியும், இன்னொரு பக்கம் சதுப்பு நிலமும் தரைவைக் கடலும், மறுபக்கத்தில் ராணுவ முகாமுமாய் இருக்கிற ஒரு இடம் விபத்துக்களின் வாய்ப்புக் களம். இயக்கத்துக்குப் போவதில் இழக்க உயிர்மட்டுமே இருக்கும். புத்தாயிரம் பிறப்பதற்கு முன்பாக நிஷாவை அது இயக்கத்துக்கு விரட்டியது.
எப்போது அதை நினைத்தாலும் நெஞ்சை முறுக்கிக்கொண்டு வருகிறது நிலாவுக்கு. நிலா இயக்கத்துக்கு போன பின்னால் அந்தச் சம்பவம்பற்றிக் கதைக்க இருவருக்கும் தகுந்த சந்தர்ப்பம் அமையவில்லை. சரசு என்கிற அவளுடைய சிநேகிதியின் நிலைமையும் தெரியவரவில்லை. சனிக்கிழமைகளில் அக்கா அந்த ஆமிக்காரனிடம் போய்க்கொண்டிருக்கிறாளா என்பதும் தெரியாது. இரண்டு வாரங்களுக்கு முன்னொருநாள் அம்மா சாவகச்சேரி வந்து மாமாவும், மகன் கஜந்தனும் இங்கிலாந்திலிருந்து வரப்போவதாகத் தெரிவித்து, விடுப்பில் இரண்டு மூன்று நாட்களாவது வீட்டுக்கு வந்துபோகும்படி சொல்லிப் போனாள். அந்தத் திகதியையொட்டி மூன்று நாள் விடுப்பெடுத்திருந்தாள் நிலா. அவள் ஒருகாலத்தில் பயந்து ஓடிய இடத்தில்தான் இப்போது போய்த் தங்கப்போகிறாள். ஆனாலும் இது வேறுமாதிரியான சந்தர்ப்பம். அவள் அந்த இடைக்காலத்தில் பயத்தின் மூலவேரை அறுத்து வீசிவிட்டிருந்தாள். எதிர்ப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் உடனடியாக எதிர்வினையாற்ற அவள் நரம்பில் இப்போது விசை ஏறியிருக்கிறது. அது யுத்த நிறுத்த காலமாகவும் இருந்தது. அவள் துணிந்ததின் முக்கிய காரணம் அதுவாகவே இருந்தது. அதுவே நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் எவ்வளவு நிம்மதியைத் தருமென ஒரு எண்ணமோடியது நிலாவிடத்தில். யுத்தமென்பது தொடங்கும்போதே அவலத்தைக் கொண்டிருந்துவிடுகிறது. யுத்தமே அவலமென்பதின் மாற்று மொழிதானே? எல்லாம் எண்ணியபடி நிலா குளிர்காற்றை ஆழச் சுவாசித்தாள்.
வண்ணாத்திப் பாலம் வந்தது. பாலத்தில் குண்டும் குழிகளும் அதிகம். நிதானமாக சைக்கிளை ஓட்டவேண்டும். அவர்கள் இறங்கி உருட்டினார்கள். திரும்ப சைக்கிளை ஓடத் துவங்கியபோது வீடு போகப்போவது பற்றியே எண்ணினாள். அம்மாவின் அண்ணன் நடராசாவை சின்ன வயதில்கூட பார்த்த ஞாபகமில்லை அவளுக்கு. வளர்ந்த பின்னால் போட்டோவில்தான் பார்த்திருந்தாள். எண்பத்து மூன்று ஆடிக் கலவரத்தோடு அவர் இங்கிலாந்து ஓடியவராம். கஜந்தன் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவன். அவள் பிறந்த அதே ஆண்டில்தான் அவனும் பிறந்திருந்தான். மாதக் கணக்கில் ஒரு வித்தியாசமிருக்கிறது. அது கூடுவோ குறையவோவென்பது ஞாபகமில்லை. எப்படி இருப்பான்? சிவப்பாக, உயரமாக… அவன் இருக்கக்கூடும். எல்லாம் உத்தேசிக்கிறபடிக்குத்தான் அந்த இரண்டு குடும்பங்களுக்குள்ளும் தொடர்பு இருந்திருந்தது. தொலைபேசித் தொடர்பு, கடித போட்டோ பரிமாற்றங்கள் எதுவும்கூட அவர்களுக்குள் இருக்கவில்லை. ஓடிக்கொண்டிருக்கிற ஒரு சமூகத்தால் அவற்றையெல்லாம் ஒழுங்காக செய்துவிடவும் முடியாதுதான். ஏழு மணிக்கு மேலாகியிருந்தது அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.