காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017 டிசம்பரில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல் வெளிவந்த காலப் பகுதியிலேயே நூல் கையில் கிடைத்திருந்தும் அதை வாசிக்கத் தொடங்குவதற்கு நானெடுத்த கால நீட்சியின் கழிவிரக்கத்தோடேயே அதை அண்மையில் வாசித்து முடித்தேன்.
இந்திய சரித்திரத்தில் மாபெரும் நிகழ்வுகளைக்கொண்டது மொகலாய அரசர்களின் ஆட்சிக் காலம். அதில் பதினேழாம் நூற்றாண்டு மிகவும் தனித்துவமானது. மிக ஆழமாய் இன்றெனினும் அக் காலப் பகுதியின் சரித்திரம் வாசகனின் அறிதலில் தவறியிருக்க வாய்ப்பில்லை. வெகுஜன வாசிப்பில் பெரிதும் பேசப்பட்ட அனார்க்கலி – சலீம் காதல் அக்பர் கால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டது. தீவிர வாசகர்களின் கவனத்தையும் அக்பர் காலம் வேறு காரணங்களில் வெகுவாக ஈர்த்திருந்தது. அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜகான் ஈறாக ஐந்து பேரரசர்களின் ஆட்சிபற்றிய விதந்துரைப்பில்லாத மொகலாய சரித்திரம் அதுகாலவரை எழுதப்பட்டிருக்கவில்லை; கதைகளும் தோன்றியிருக்கவில்லை. அத்தகு காலக் களத்தில் கதை விரித்த நாவல் ‘பெருவலி’.
இரண்டு பாகங்களாய் 167 பக்கங்களில் அமைந்த இந் நாவலின் முதலாம் பாகம் ஷாஜகானின் ஆட்சியை மய்யப்படுத்தியது. அன்றைய அரசியல் நிலபரம் விளக்கமாகும்படி அக்பர் முதற்கொண்டு தொடர்ந்த பேரரசர்களின் ஆட்சியும், வாழ்வும்பற்றி அளவான விவரிப்பை நாவல் கொண்டிருப்பினும், அது ஷாஜகான் – மும்தாஜின் முதிர் காதலுக்கு குறிப்பாய் அழுத்தம் தந்திருக்கும்.
தக்காணத்து அரசதிகாரியாயிருந்த ஷாஜகான் (அப்போது குர்ரம்) பதவியிலிருந்து நீக்கப்பட்டு அங்கேயே நிஜாம்சாஹியென்ற இடத்தில் தங்கவைக்கப்படுகிறார். அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தல்களுடன் கதை அங்கிருந்துதான் ஹிஜ்ரா பானிபட்டின் பார்வையிலிருந்து ஆரம்பிக்கிறது. கதைசொல்லியும் அவ்வப்போது அவனை இடைவெட்டி கதையை நகர்த்திச் செல்வார். எவரது பார்வையிலிருந்து கதை விரிகிறதென்ற மயக்கம் வாசகனுக்குத் தோன்றாதபடி கதையை நகர்த்தும் படைப்பாளியின் சாதுர்யம் சிறப்பு. நாவலில் ஒரு மீள்பார்வை நிகழ்கிறபோதுதான் இந்த கதைசொல்லிகளின் மாற்றம்கூட வாசகனுக்குப் புலனாகிறது.
இப் பாகம் ஷாஜகானை மய்யப்படுத்தியிருப்பினும் கதையெங்கும் நகர்ந்து திரியும் பாத்திரமாயிருக்கிறாள் ஷாஜகானின் அபிமானத்திற்குரிய மகளான ஜஹனாரா பேகம். அவளது விசுவாசமான பணியாள் பானிபட்டின் நீண்ட கால அரண்மனைச் சேவகத்தின் அனுபவங்கள் ஜஹனாராவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. அவளது அரசியல் ஆர்வமும் அது குறித்த நுட்பங்களின் புரிதலுமாக இப்பாகம் வளர்ந்துகொண்டு இருக்கையில், அவளது காதல் மனத்தையும் இப்பாகம் தெளிவாகப் புலப்படுத்தியிருக்கும்.
அரசியலின் சூதும் பொய்யும் வஞ்சமும் இரண்டு பாகங்களிலுமே நிறைந்தபோய்க் கிடக்கின்றன. நிஜாம் சாஹியில் வீட்டுக் காவல்போன்ற நிலைமையிலிருந்து தப்பி ஆக்ரா வருவதற்கான ஷாஜகானின் தந்திரத்துடன்தான் முதலாம் பாகமே தொடங்குகிறது. ஜஹாங்கிர் சுகவீனம் காரணமாய் டெல்லியில் ஒதுக்கப்பட்டிருந்த சமயத்தில் சகல அரசியல் சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஆட்சியை ஷாஜகான் கைப்பற்றுவது, சக்கரவர்த்தியாக முடிசூடுவது எல்லாமே சூழ்ச்சிகளாலன்றி நிறைவேறுவதில்லை.
மனங்களில் விஷமேறிய மனிதர்கள் அதை பிறரில் பாய்ச்சிவிட தருணம் பார்த்தலையும் சூழ்ச்சிகளின் நிலைக் களமாகவே முதலாம் பாகம் ஆகியிருக்கிறது.
ஜஹாங்கிரின் மனைவி நூர் மஹல் ஒரு விஷமாகவே ஜஹனாராவுக்கு ஆரம்பத்திலிருந்து தோன்றிக்கொண்டிருக்கிறாள். ஜஹாங்கிரை தன் காதலின் போதையுள் அடக்கி சகல அதிகாரங்களையும் தன் கையகப் படுத்தியிருந்த நூர் மஹலின் நடத்தைகளும் வேறுமாதிரி இருந்திருக்க முடியாது. அதிகாரம் ஒருவரைக் கெடுக்கிறதென்பதும், முழு அதிகாரம் முற்றாகக் கெடுக்கிறதென்பதும் அவள் வழியிலேயே தரிசனமாகின்றது. படைப்பாளியின் விவரணைகளும் அவளின் இந்த இயல்பை தெளிவாய் வெளிப்படுத்தியபடியே இருக்கின்றன.
‘சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்திருந்த நூர் மஹலை அவர்கள் பார்த்து பல மாதங்கள் ஆகியிருந்தன. எனவே எல்லோரும் ஒருமுறை பார்த்தவிடும் ஆவலில் திரைகளை விலக்க முண்டியடித்தார்கள். அந்தச் சிறு சலசலப்பு செவியில் விழுந்ததும் நூர் மஹல் நாகப் படம்போல தலையைத் திருப்பிப் பார்த்தார்’ (பக்:49) என ஒரு இடத்தில் வரும். ஒரு அசௌகரியத்தின் வெளிப்பாடே ஒரு சர்ப்பத்தின் எச்சரிக்கையும் சினமும் கொள்ளுமளவான விவரணை நாவலில் உண்டு. ஜஹனாராவின் தங்கை ரோஷனாரா அரண்மனையிலிருந்த இன்னொரு விஷம். அவுரங்கசீப்பின் அனைத்து வஞ்சச் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாயிருக்கிறவள் அவள். அவளது நடத்தைகள், பேச்சுக்கள், பார்வைகள்கூட விஷம் கக்குவனவாகவே இருக்கின்றன. இத்தனைக்கும் மேலாக ஜஹனாராவுமே ஒரு கட்டத்தில் பாம்பாகத் தோற்றம் எடுத்துவிடுகிறாள், பாம்புகளின் மத்தியில் வாழ்வதில் தொற்றிய பாம்புக் குணம்போல. ‘இதைச் சொல்லும்போது ஜஹனாராவின் முகம் குருதிச் செம்மையுடன் சிவந்தது. கண்கள் விரிந்தன. கன்னக் கதுப்புகள் விரிந்து இறுகின. சினந்து நிற்கும் பாம்பின் படம்போலிருந்தது அப்போது அவள் முகம்’ என பக்கம் 15இல் வர்ணிக்கப்பட்டிருக்கும்.
தக்காணப் படையெடுப்பில் சக்கரவர்த்தி ஷாஜகானுடன் பயணிக்கும் சுற்றத்தில் நிறைமாதக் கர்ப்பிணியான அவரது மனைவி மும்தாஜும் இடம்பெற்றிருக்கிறாள். அவளது பதின்மூன்றாம் மகப் பேறு போர்க்களத்தில்தான் நிகழ்கிறது. பன்னிரண்டு பேறுகளை சுலபமாகத் தாண்டிருந்தவளுக்கு அப்பேறு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தவிடுகிறது. மஹராஷ்டிரர்களுடனான அவ்யுத்தத்தில் வென்றுகொண்டிருந்தாலும் பேற்றுக் காலத்தில் உயிரிழக்கும் மும்தாஜின் சோகம் சக்கரவர்த்தியை வெகுவாகப் பாதித்துவிடும். கூடவிருந்து தாயாருக்கு அனுசரணை செய்யும் ஜஹனாராவுக்கும் அச் சோகம் பெரிது. யுத்தத்தின் வெற்றியுடன் துக்கத்தையும் சுமந்தபடி சக்கரவர்த்தி ஆக்ரா திரும்புவதுடன் நாவலின் முதலாம் பாகம் முடிவடைகிறது. அதிலிருந்து ஜஹனாராவின் பார்வையில் இரண்டாம் பாகம் விரிகிறது. அவளுக்கு மதம் சார்ந்த தெளிவுகள் ஏற்படுவதும், தன் சகோதரன் தாரா ஷிக்கோ போலவே காடிரியா சூபி மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதுமெல்லாம் இப்பாகத்திலேயே விரிவான பேசுபொருளாகின்றன. கவிதையாய் இயங்கும் அவளது மனத்தின் மென்மையும் மேன்மையும் இப் பாகத்திலேயே அதிகமும் வெளிப்படுகின்றன. அவள் எழுதிய பதிவுகளினது ஆதாரத்தில் அப்பகுதி மிக அவதானமாகக் கட்டியெழுப்பப்படுகையில் அசாதாரண கவனம் படைப்பாளியால் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை அவதானிக்க முடியும்.
ஷாஜகானின் சுகவீனம், தாரா ஷிக்கோ முடிக்குரியவனாக அங்கீகாரமாகுதல், அவுரங்கசீப்பின் எழுச்சி, சுயா மற்றும் முராத் ஆகியோர்களையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டு அவன் தொடுக்கும் போர், அப்போரை சக்கரவர்த்தி சார்பில் எதிர்கொள்ள தாரா ஷிக்கோ தலைமையில் சென்ற அரச தரப்புப் படையினர்க்கு விளைந்த பயங்கரமான தோல்வி, பின்வாங்கும் தாரா தொடர்ந்து நிகழ்ந்த சாமுவார் போர்க் களத்தில் கைதியாதல், அவனது கொலைப்பாடு, கொலையின் கொடூரம், இறுதியில் அவுரங்கசீப் சக்கரவர்த்தியாய் முடிசூடுவதென அனைத்தும் சரித்திரத்தை மீறாத நிகழ்வுகளாக துரோகத்தை விவரிக்கும் நாவலில் மிகவும் காத்திரமாகச் சொல்லப்பட்டுள்ளன.
ஆனால் அதில் காணாமல் போகும் பகுதி அவுரங்கசீப்பின் காலத்திலும் ஜஹனாரா வகித்த வலுவான அரசியல் பாத்திரம். தனது பாட்டியான நூர் மஹலைவிடவும் அதி வல்லமை வாய்ந்த அரசதிகாரியாக விளங்கிய ஜஹனாராவாக அவள் நாவலில் இல்லை. சகோதர்களுக்கிடையிலான வேற்றுமைகளையும் பொறாமையினையும் களைவதற்காக சாம்ராஜ்யத்தையே நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றை சகோதரர்களிடம் ஒப்படைக்கும் ஒரு திட்டத்தையும் அவள் ஒருபோது சமர்ப்பிக்கிறாள். வரலாற்றில் அது முக்கியமான ஒரு பகுதி. அதை அவுரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, நாவலுமே அதை இலகுவாகக் கடந்து போய்விடுகிறது. தன்னை வரலாற்று நாவல் அல்லவெனச் சொல்லிக்கொள்ளும் ஒரு நூலில் இவ் விடுபடுதல்களைப் பொருட்படுத்தவேண்டியதும் இல்லைத்தான்.
ஷாஜகானின் சிறைப்பிடிப்பும், ஒன்பதாண்டுகள் நெடிய வீட்டுக் காவலும், ஜஹனாரா தன் அரசியல் அதிகாரங்களையெல்லாம் உதறி தந்தையின் இறுதிவரை உடனிருந்து உதவுவதும், ஷாஜகானின் மரணமும் நாவலில் அதிர்வெழும்படி சொல்லப்பட்டிருக்கும். தொடர்ந்து நிகழ்பவை சரித்திரத்தில் சோகத்தால் எழுதப்பட்டிருக்கின்றன. கல்வி கேள்விகளில் கலைகளில் கவிதையில் ஆன்ம விசாரத்திலென தன் துறைகளை மொகலாக சரித்திரத்தில் எந்த அரச குலப் பெண்ணுக்கும் முடிந்திராத உன்னதவிடத்தை அடைந்திருந்த ஜஹனாரா சகலவற்றிலிருந்தும் ஒதுங்கி தனியனாய் வாழ்ந்து மடிகிறாள். அவ்வாறொரு முடிவு நேர்ந்திருக்கக் கூடாதெனவே வாசக மனம் ஏங்குகிறது. வாசிப்பின் பின்னும் நினைவுகளில் இருந்துகொண்டு வாசகனைப் பெருவலி செய்கிறது.
நதிகளின் சமீபத்திலுள்ள தில்லி ஆக்கரா அரண்மனைகளில் இரவிலும் வெப்பம் தகித்துக்கொண்டிருக்கிறது. தைமூர் குடும்பத்தில் வேறு குல ஆண் கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அரண்மனைப் பெண்டிர் மணம் செய்வது அக்பர் காலத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பதால் மணமாகாத அரச குடிப் பெண்களின் காமத்தின் வெம்மை கனன்றெழுவதாகவே அரண்மனை இருந்திருக்க முடியும். மெஹருன்னிசாவின் கதை அதற்கொரு சின்ன உதாரணம். அரண்மனையில் விளைந்த வெம்மையின் மூலத்தை இங்கிருந்தே காணவேண்டும். இரவில் அதீத குளிரினதும், பகலில் கடு வெப்பத்தினதும் வதைப்பில் சூழலும் மனிதரும் வதைபடும் தட்ப வெப்ப நிலை வர்ணிப்பு நாவலில் க்ரிஷ்ம ருது சர்க்கம் மட்டும்கொண்ட இன்னொரு ‘ருது சம்ஹார’மாகவே இருக்கிறது.
இருள் பகலிலும் உறைந்துகிடப்பதாய்த் தோன்றும் நாட்களின் இரவுகள் தில்லி, ஆக்ரா அரண்மனைகளில் எப்படி இருந்திருக்கும்? முகலாய சாம்ராஜ்யத்தின் அழிவு அந்த இருண்மைக்குள்ளிருந்தே பிறக்கிறது. பகைவர்களுடனான யுத்தங்களில் வெற்றிகளைக் குவித்த பேரரசு, சோதரச் சண்டைகளால் அழிந்தே போகிறது. தைமூர் வமிசத்தின் ஆட்சியதிகாரம் தன் காலத்தில் அழிந்துபோக காரணமாகின்றான் அவுரங்கசீப். அதன் வலி ஜஹனாராவுக்கு மட்டுமில்லை, வாசகனுக்கும் பெருவலியாய்ச் சேர்கிறது. அதனால் நாவலும் பொருத்தமாக ‘பெருவலி’ ஆயிற்று.
தெரிந்த வரலாற்றில் தெரியாத ஊடுகள் வழி கட்டமைந்து வாசிப்பின் பின்னரும் துயர்ப்படுத்தும் இந்நாவல், பின்னுரையில் சொல்லப்படுவதுபோல் சமகால அரசியலில் எங்கே பொருந்துமென்று புள்ளி வைத்ததுபோல் சொல்ல இயலவில்லை. சூழ்ச்சியும், அதிகாரத்துக்கான யுத்தங்களும் கொடுமைகளும் வரலாற்றில் எங்கேதான் இருக்கவில்லையென இது குறித்து சமாதானம்தான் பட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த நாவலின் பலஹீனமான ஓரம்சத்தையும் இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம். நாவல் விரிந்து வருகையில் ஒரு சம்பவத்தின் பின்விளைவை வாசக அனுமானமாக விடாமல், அதையொரு பூடகத்தில் முன்னரே அறிவித்துவிடுவதாக நாவலில் பல இடங்கள் வருகின்றன. உதாரணமாக, தாரா ஷிக்கோவின் தலைமையில் அவுரங்கசீப்பின் படைகளுக்கெதிராகச் செல்லும் அரச படைகளை வர்ணிக்கும் இடத்தைச் சொல்லலாம். ‘முகலாய ராணுவமும் ரஜபுத்திர சேனையும் சாமந்தர்களின் படையும் முன்னேறிச் சென்றன. அணிவகுப்பையும் படைவீரர்களின் வேகத்தையும் கண்டபோது வெற்றி எளிது என்றுதான் தோன்றியது. ஆனால் விதி தாராவுக்கு ஆயத்தமாக்கி வைத்திருந்தது வேறொன்று’ என வரும்போது தாரா ஷீக்கோவுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்பது வெகு முன்னதாகவே வாசகன் முன் வைக்கப்பட்டுவிடுகிறது. அதுவே மாற்ற முடியாத வரலாற்று நிகழ்வாக வாசக ஞாபகத்தில் இருந்திருப்பினும் அவ்வகையான முற்கூறல் சரித்திர நிகழ்வுகளை மறப்பதின் வழி ஒரு நாவலாக பிரதியினுள் நுழைந்துகொண்டிருக்கும் வாசகனுக்கு அது உவப்பாக இருப்பதில்லை.
மற்றப்படி நாவல் களத்தை அருமையாக விரித்து, பாத்திரங்களை செப்பமாக வார்த்து ஜஹனாராவின் ஆன்ம தரிசனமாகவும், அதிகார போதையில் சோதரர்களிடையே சூதும் வஞ்சமும் துரோகமுமாய் நடந்து முடியும் ஒரு யுத்த காண்டமுமாய் நாவல் முடிவடைகிறது. அதற்காக படைப்பாளி கையாளும் மொழிநடை மிகுந்த முக்கியத்துவமுடையது. வரலாற்றுக் காலத்தினுடையதும், சமகாலத்ததுமான நிகழ்வுகள் வேறுவேறு நடையை வேண்டிநிற்பவை. அவற்றை விலக்கி ஒரு மீறலாய் விவரணத் தன்மையும், அறிவார்ந்த உணர்வுச் சிக்கல்களை விளக்குவதற்கான தன்மையும் கொண்ட ஒரு புதிய நடையை படைப்பாளி இந்த நாவலில் கையாண்டிருப்பது விசேஷம்.
நாவல் கதை விரித்த சரித்திர காலம் விசாலமானது. சற்றொப்ப 55 \ 60 ஆண்டுகள். அது விசாலித்துச் சென்ற நிலவெளியும் பெரிது. ஆயினும் அதை குறைந்தளவு பக்கங்களில் தன்னைக் கட்டிறுக்கமாக அமைத்துக்கொண்டுள்ள நாவல் வாசக அவதானத்தை வலுவாகக் கோரி நிற்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.