அறுவடை முடிந்துவிட்டால் வயல்வெளியில் ‘கிளிக்கோடு’ விளையாட்டு தொடங்கிவிடும். பள்ளி முடிந்து வீடு வந்த பின்னால் வயலுக்குச் செல்வதை தவிர்க்கவே முடிவதில்லையயயய. விளையாடாவிட்டாலும் பார்த்துக்கொண்டு இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. சூழ்நிலைமைக்கும் நேரத்துக்கும் தக விளையாடப் போவதற்கு முன்பாகவோ பின்னாகவோ நான் வசந்தாக்கா வீட்டுக்குப் போய் வந்துகொண்டேயிருந்தேன் அந்நாட்களில். சிரிக்கச் சிரிக்கவும் பேசுவதோடு, மிக நகைச்சுவையான வி~யங்களைச் சொல்லும்போது அவ்வப்போது என் தோளைத் தொட்டுத்தழுவி வசந்தாக்கா பேசுவாள். என்னோடு மட்டும்தான் அவள் அப்படிப் பேசுவதாக நான் நம்பிக்கொண்டிருந்தேன். அதில் இனம்புரியாத ஒரு இன்பத்தையும் நான் அடைந்துகொண்டிருந்தேன். பெரும்பாலும் அவளோடு நான் பேசாத நாட்கள் அதனாலேயே மிக அரிதாக இருந்தன.
ஒரு நாள் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய எனக்கு சிறிதுநேரத்தில்தான் திடுக்கிட்டாற்போல சந்தேகமாகிற்று, அன்று வீட்டுக்குத் திரும்பிவந்து திண்ணையிலே நான் எனது பாட்டா செருப்பை கழற்றிவிட்டேனாவென்று. அப்படியானால் எங்கோ மறந்துபோய் விட்டிருக்கிறேன். எங்கே? வயல்வெளி விளையாட்டிடத்தில் மறுபடி போட்டுக்கொண்டது ஞாபகம் வந்தது. அல்லது அவ்வாறான ஒரு ஞாபகத்தை நான் வலிந்து உருவாக்கிக்கொண்டேன். அப்படியானால் வசந்தாக்கா வீட்டு படிக்கட்டில்தான் விட்டிருக்கவேண்டும். அதை மறுநாள்கூட நான் எடுத்துவிடலாம். ஆனால் அங்கேதான் விட்டேன் என்றும் நூறு சதவிகிதம் துணிய முடியாமல் இருந்தது. உடனேயே வசந்தாக்கா வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினேன்.
“எங்கயடா போறாய் இந்த நேரத்தில?” என்று அம்மா கத்தினாள். “இந்தா ஓடியந்திடுறன்” என்று பின்னால் திரும்பிக் கூவினேன். சாவகச்சேரி அப்போது பட்டணசபையாக இருந்தது. அதற்கான தனி மின்சார உற்பத்தி நிலையம் பஸ்நிலையத்துக்குப் பின்னால் இருந்தது. பெரிதான ஆனால் சின்னாஸ்பத்திரி என்று ஊரிலே சொல்லப்பட்ட ஆஸ்பத்திரியும், பெரிய சந்தைக் கட்டிடமும் கொண்டது சாவகச்சேரி பட்டணசபை. அங்கே தேவேந்திரா என்ற ஒரு சினிமா தியேட்டரும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்ட அதே நேரத்திலேயே அங்கேயும் அவை காண்பிக்கப்பட்டன. கைதடி, நாவற்குழி, புத்தூர் சந்தி, கொடிகாமம், மிருசுவில், பளையிலிருந்துகூட புதுப்படங்களுக்கு அங்கே சனம் மொய்க்கும்.
1959 அல்லது 1960 அளவில்தான் யாழ்ப்பாணப் பகுதிக்கு பாட்டா சிலிப்பர் அறிமுகமாகியது என்று நினைக்கிறேன். சைஸ் ஐந்துக்கு மேலே 4 ரூபா 90 சதம் விலை போட்டிருந்தது. விலை குறித்து விற்ற முதல் பண்டமும் அதுவாகவே அப்போது இருந்ததாக ஞாபகம். சாவகச்சேரிக்கும் ஏறக்குறைய அதே காலப்பகுதியில்தான் அது விற்பனைக்கு வந்திருக்கலாம். மணலும், கல்லும், முள்ளும் தெரியாது நடந்த அப்பகுதி இளைஞர்கள் காலில் செருப்பு மாட்டத் தொடங்கிய காலம் அதுதான். கல்லுக்கும், முள்ளுக்குமாக அன்றி நாகரிகத்தின் அடையாளமாகவே முழுதாய் அது இருந்தது. முதல் முதல் பாட்டா செருப்பு போட்டுவந்த சத்தியநாதன் ரீச்சருக்கு ‘பாட்டா’ ரீச்சரென்று பட்டப்பெயர் வைக்கப்பட்டது அக்காலத்தில்தான். புதிதாக செருப்புப்போடத் தொடங்கியதால் பெரும்பாலும் கழற்றிவிடுகிற இடங்களில் மறந்துபோய் விட்டுவிட்டு வெறுங்காலோடு வீடு திரும்புகிற நிலையே பலபேருக்கும் அப்போதிருந்தது. மறந்துபோய் விட்டுவருகிற செருப்புகள் பலவேளைகளிலும் திரும்ப கிடைக்காமலேதான் பலபேருக்கும் போயிருக்கின்றன. செருப்புகள், மென்களவில் மறைந்த மாயக் காலமும் அதுதான்.
நான் அவசரமாக வசந்தாக்கா வீடு ஓடியிருந்தும் நேரத்தோடு படலை கட்டப்பட்டுவிட்டிருந்தது. தாயாரின் பேச்சுக் குரல் உள்ளே கேட்டது. தாயாரின் சத்தமே பெரிதாகக் கேட்டது. பாதி காலம் மனிசிக்கு படுக்கையும் மருந்தும்தான். எப்போதும் தொணதொணத்தபடி கிடக்கும். நீண்டகால நோயாளிகளுக்கு அதிகமாகக் கோபம் வருமோ? அவள் கோபத்தோடுதான் ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததாகப் பட்டது. ஆனாலும் நான் செருப்பின் முடிவு தெரியாமல் போய்விட முடியாதே. வசந்தாக்கா படுத்திருக்கவில்லையென்றும் தெரிந்தது. நான், “வசந்தாக்கா”வெனக் கூப்பிட்டேன்.
ஆரது என்ற கேள்வியில்லாமலே வந்து படலையை அவிழ்த்தாள். நான் சைக்கிளை வெளியே வேலியோடு சாய்த்துவிட்டு உள்ளே அவசரமாகச் செல்ல முனைந்தேன். வசந்தாக்கா என் கையைப் பிடித்து நிறுத்தினாள். நான் படியை எட்டிஎட்டிப் பார்த்து பரபரத்தேன். மேலே வெள்;ளையும் கீழே நீலமும் நீல வார்களும் கொண்ட எனது சிலிப்பர் தென்படவேயில்லை. நான் இடிந்தேன்.
ஆனால் வசந்தாக்காவாகவே என் தேடலைத் தெரிந்துகொண்டு சொன்னாள்: “என்ன, உன்ர சிலிப்பரைத் தேடுறியோ? உன்ரயாயிருக்குமெண்டு எடுத்து உள்ள வைச்சிருக்கிறன், வா. வெளியில கிடக்க நாய்கீய் கடிச்சுப்போட்டா என்ன செய்யிறது?” அப்போதுதான் என் ‘நெஞ்சுக்குள் தண்ணீர் வந்தது’.
வசந்தாக்கா என் கையைப் பிடித்தபடியே உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். அப்போதுதான் உணர்ந்தேன் என்னில் அவள் எடுத்துக்கொண்டிருக்கும் கூடுதலான சுதந்திரத்தை. தாயார் படுத்திருக்கும் தைரியத்தில் இந்த அத்துமீறிய சுதந்திரமோ? எனக்கு உடம்பு ஜில்லிட ஆரம்பித்தது.
வசந்தாக்கா வீட்டுக்கும் வேலிக்குமிடையே பெரிய மணல் அடர்ந்த முற்றமிருந்தது. இடையில் இடதுபுறமாக ஒரு மாமரமும், வலது புறத்தில் ஒரு சடைத்த வேப்பமரமும் நின்றுகொண்டிருந்தன. வீட்டுத் திண்ணையில் வைத்த லாம்பிலிருந்து பாய்ந்து வந்துகொண்டிருந்த வெளிச்சம் போதுமானதாயிருக்கவில்லை. ஆனால் மேலே நிலா முக்கால் வட்டமாயிருந்து ஒளிவீசிக்கொண்டிருந்தது. வெண்மணல் முற்றமெங்கும் ஒளி விரிந்து கிடந்தது. மாமரத்து நிழலில் என்னைப் பின்னே இழுத்தாற்போல் ஓரடி தாமதித்தாளா வசந்தாக்கா?
“ஆர் வசந்தா வந்திருக்கிறது?” என்று தாய் கேட்டாள். “அது எங்கட ராசா, அம்மா” என்றாள் பதிலை.
கையில் கொழுவி என்னை அணைத்தாற்போல வசந்தாக்கா உள்ளே கூட்டிப்போய் சிலிப்பரை எடுத்துத் தந்தாள். “இரன், சாப்பிட்டிட்டுப் போகலாம்” என்றாள். “நாங்கள் இனித்தான் சாப்பிடப்போறம்.”
நான் பரவசத்தில் இருந்துகொண்டிருந்தேன். அவள் கைபட்ட சுகமொன்றாய், நடக்கையில் அவள் நெஞ்சுபட்ட சுகம் அதைவிடப் பெரிதாய் என் ஆசைகள் தளும்பிக்கொண்டிருந்தன.
பெரும்பாலும் பகலிலே ஒரு துண்டை உடுத்திக்கொண்டு வேலைசெய்வாள் வசந்தாக்கா. கிடுகு பின்ன, முற்றம் பெருக்க, முருங்கைக்கு தென்னம்பிள்ளைகளுக்கு தண்ணீர்விட என எந்த வேலைக்கும் அது வசதியாயிருக்கும்தான். மாலையில் குளித்துவிட்டு ட்றெஸ்ஸிங் கவுண் அணிந்துகொள்வாள். அல்லது சேலை அணிந்துகொள்வாள். அன்றைக்கு அவள் ட்றெஸ்ஸிங் கவுண் அணிந்திருந்தாள். மஞ்சள் நிற ட்றெஸ்ஸிங் கவுண். லாந்தரின் மெல்லிய வெளிச்சத்திலும், நிலவின் ஒளிப் பரவலிலும் அவள் முகம் மஞ்சளாய்ப் பொலிந்து தென்பட்டது. அவளைப் பார்ப்பதற்காகக்கூட நான் அவளது அழைப்பை ஏற்று சாப்பிடப் போயிருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒரு கூச்சம் வந்து என்னைத் தடுத்துவிட்டது. நான், “சைக்கிள் வெளியில நிக்குது, வசந்தாக்கா” என்று ஒரு சாட்டை தயக்கமாய் வெளியிட்டேன். “உள்ள கொண்டுவந்து விடு” என்றாள். “வீட்டுவேலையள் இருக்கு” என்றேன் நான்.
மாணவனொருவனுக்கு அவனது வீட்டுவேலை என்பது பள்ளியில் கொடுத்துவிடும் வீட்டில் செய்வதற்கான அப்பியாசங்கள்தான். “சரி, நல்ல இருட்டாயிருக்கு, பாத்து ஓடிப்போ” என்று செருப்பை எடுத்துத் தந்து என்னை படலைவரை கூட்டிவந்தாள் வசந்தாக்கா. அவளது குரலிலும் முகத்திலும் ஒரு துக்கமிருந்ததா? அப்படித்தான் எனக்குத் தோன்றிற்று.
வரும்போதும் அவளது மேனியின் உரசல்கள் தாராளமாகவே இருந்தன. ‘அவள் என்னோடுதான் சிரித்துப் பேசுகிறாள். என்னோடுதான் தொட்டுத் தொட்டும் பேசுகிறாள். என்னோடுதான் நெஞ்செல்லாம் உரச கூடிநடக்கிறாள். நாகரத்தினனோடு இப்படியெல்லாம் செய்திருப்பாளா? அவன் எவ்வளவு பெரிய ஆகிருதியாளனாய் இருந்தாலென்ன? வசந்தாக்காவுக்கு என்னில்தானே பிரியம் அதிகமிருக்கிறது! அவன் அவளது வெளித்த முலைகளைப் பார்த்திருக்கலாம். குழந்தை பிறந்த எந்தப் பெண்ணின் முலையையும்தான் சாதாரணமாக யாராலும் அந்தப் பகுதியில் பார்த்துவிட முடியுமே. ஆனால் உரசலின்பம் யாருக்குக் கிடைத்துவிடும்? அந்தவகையில் நாகரத்தினனைவிட நான்தானே அதிர்~;டம் செய்தவன்?’
நான் எண்ணியபடியே வீடு திரும்பினேன்.
ஆறு மாதங்கள் கழிந்திருக்கும். அப்போது மாரிகாலம் தொடங்கியிருந்தது. ஒருநாள் மாலை நேரம். இருட்டடித்திருந்த வானத்தில் மேக இரைச்சல். மழைத் துமிகள் விழவாரம்பித்திருந்தன. ஈர மணல் ஒழுங்கையில் நான் சைக்கிள் மணியை அடித்தபடி பறந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். முன்னால், பக்கத்து வளவில் கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருக்கிறாள் வசந்தாக்கா. எதிரே வருவது நானெனத் தெரிந்துகொண்டுபோல் படலையில் நின்று, “உள்ள வா, ராசா. இந்தா மழை வந்திட்டுது” என்று படலையைத் திறந்து பிடித்திருந்தாள்.
மழை வந்துவிட்டதுதான். நான் இறங்காமலே சைக்கிளைத் திருப்பி மாமரத்தடியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் பாய்ந்து ஓடினேன். மழை ‘சோ’வெனப் பொழியத் தொடங்கியது. தெற்கு மூலையில் இடி இடித்தது. மேற்கிலிருந்து கிழக்குவரை மின்னல் வெட்டியடித்தது. ‘ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி- மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே- நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே- கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே’ என்ற ஓராண்டோ இரண்டாண்டுகளுக்கோ முன்னர் படித்திருந்த பாலபாடப் பாடல் அப்போது எனக்கு ஞாபகமாயிற்று. வசந்தாக்கா ஆட்டை கொட்டிலில் கட்டிவிட்டு பாதி நனைந்தபடி திண்ணையில் வந்தேறினாள். “இரு, முதல்ல விளக்கைக் கொளுத்துறன்” என்றுவிட்டு விளக்கையும் தீப்பெட்டியையும் தேடியெடுத்து கொளுத்தினாள். மேசையில் விளக்கை வைத்துவிட்டு முந்தானையை இழுத்து தனது தலையைத் துடைக்கவாரம்பித்தாள். துடைத்த பின் முன்தானையை என்னிடம் நீட்டி, “தலையைத் துடை. தலை ஈரமாயிருக்கு” என்றாள். நான் வாங்கி தலையைத் துவட்டினேன். என் பார்வையின் குறியை அவளுக்கு முந்தானை மறைத்திருக்கையில் என் கீழ் நோக்கில் தெரிந்தது வசந்தாக்காவின் நெஞ்சழகு. இருட்டில் மலரிடம் அன்றொருநாள் தொட்டுத் தெரிந்த இன்பத்தின் இடம் என் அறிவை மயக்க மெல்ல அசைந்து நான் வசந்தாக்காவை நெருங்கினேன். என்னை மெய்யார்த்தமாய் உணர்ந்தவள் சட்டென ஓரடி வைத்து பின்வாங்கினாள். “இண்டைக்கு கடைசி வெள்ளிக்கிழமை, ராசா” என்றாள்.
முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆம், அவள் அவ்வப்போது சொல்லியிருக்கிற வார்த்தைதான் அது. அன்றைக்கு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அவளது கணவன் வீட்டுக்கு வரவிருக்கிறான். வழக்கமாய் இந்தளவில் வந்திருக்கவேண்டியவன்தான். அன்றைக்கு மழையானதால் தாமதமாகிறான்போலும். என் அதிர்ச்சியைத் தெரிந்திருப்பாள். என்னில் எரிவது அவள் ஏற்றிய சுடர்தானே? அவளே என்னைச் சாந்தப்படுத்தினாள்: “சேட்டு பொக்கற்றக்க திறிறோஸ் இருக்குப்போல. நனைஞ்சிட்டுதெண்டு நினைக்கிறன். கெதியாய் எடுத்துப் பத்து.”
நான் உணர்ச்சி கறுத்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன். முடிகிற அளவில் மழை வெளித்து வந்தது. சிறிதுநேரத்தில் மழைவிட சொல்லிக்கொண்டு சென்று சைக்கிளை எடுத்தேன்.
அன்றிரவு அவள் கணவன் வந்திருப்பானென்றுதான் நினைக்கிறேன். அடுத்தடுத்த நாள் றோட்டிலே அவனைக் கண்டேன். இனிமேல் ஊரோடுதான் என்றான். ஏனென்று கேட்டதற்கு வேலையிலிருந்து நிறுத்திவிட்டதாகச் சொன்னான். அன்றைய இரவின் சணப்பித்தம் இறங்கிய பின் நானும் இயல்பில் ஆகியிருந்தேன்.
அர்த்தமான வசந்தாக்காவின் ஒவ்வொரு அழைப்பையும் விலக்கிக்கொண்டே வந்திருந்த நான், கடைசியில் ஏமாறிப்போனேனென்பதை இப்போது யோசிக்கத் தோன்றுகிறதுதான். இனியும் ஒரு சந்தர்ப்பம் வர எனக்கு வாய்ப்பில்லை. அந்த ஏக்கம் என்னில் நீண்டகாலம் நின்றிருந்தது. தேடாமலே கிடைத்த மலரை நான் மறந்தேன். ஆனால் தேடியபோதில் கிடைக்காத வசந்தாக்காவின் ஞாபகம் தோல்வியாயன்றி ஒரு இழப்பாய் என்னில் இருந்துகொண்டிருந்தது.
முதலில் வசந்தாக்காவுடனான எனது அணுக்கமானது, நாகரத்தினன் அவளை நெருங்கவிடாது தடுப்பதற்கானதாகவே இருந்தது என்பது ஒரு நிஜமாக அங்கே நின்றுகொண்டிருந்தது. ஆனாலும் அந்த வெக்கை ஏறக்குறைய மூன்றாண்டுகளின் பின் இன்னொரு வசந்தாக்காவை நான் காணும்வரை என்னைத் தகித்திருந்தது.
சிவராணி தம்பிராசண்ணையைக் கல்யாணம் செய்துகொண்டு அங்கே வந்து ஓராண்டாகியிருந்தது. தம்பிராசண்ணைக்கு சந்தை யாவாரம்தான். வெற்றிலை, சீவல் பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு விக்கிற கடை. ஆள் நோஞ்சான் மட்டுமில்லை, சயரோகக்காரன் மாதிரி எந்நேரமும் இடையறா இருமல்காரனும். அதற்கு காங்கேசன்துறை சயரோக வைத்தியசாலையில் மருந்தெடுத்ததாகத்தான் தெரிந்தது. பெரிய நன்மை அதனால் ஏற்பட்டதென்று தெரியவில்லை. தம்பிராசண்ணை நடக்கும்போது விடும் களைப்பும் இழுப்பு மூச்சும் அதைத் தெரிவித்துக்கொண்டிருந்தன. ஏற்கனவே தெரிந்திருந்தாலும் கூப்பன் கடையில் ஒருநாள் சந்தித்தபோதுதான் சிவராணியோடு கதைக்கவும், அவளைப்பற்றி சிறிது தெரியவும் என்னால் முடிந்தது. எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதியிருந்ததாகவும், சித்தியடையவில்லையென்றும் சொன்னாள். தம்பிராசண்ணை எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவரென்று ஊரிலே சொல்லக் கேட்டிருக்கிறேன். எட்டாம் பொருத்தமும் அற்றுப்போனது எனக்கு இன்னும் கூடிய சாகசத்துக்கான வழியாய்த் தெரிந்தது. என் கவனம் குவிந்ததன் காரணம் அச்சொட்டாக அவள் வசந்தாக்காமாதிரியே இருந்ததுதான். அதே உயரம், அதே நிறம், அதே மொத்தம், அதே சுருண்ட நீளமான கூந்தல். மட்டுமில்லை, அதே நெற்றி, அதே சொண்டு, அதேயளவான நெஞ்சப் பகுதியும் அவளுக்கு. வீட்டிலிருந்து கூப்பன் கடைக்கு ஒன்றரை மைல் தூரம். தலைச் சுமையில்தான் சிவராணி அரிசி, மா போன்ற சாமான்களைவீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது. அன்று தாமதித்து நின்று அவள் சாமான் வாங்கியதும் நானே கொண்டுவந்து தருவதாகச் சொல்லி சாமானை வாங்கி சைக்கிளில் வைத்தேன். “கடகத்தை சைக்கிள்ள வைச்சுக்கொண்டு ஓடேலாது” என்று சிவராணி மறுக்கத்தான் செய்தாள். ‘ஓடாட்டி பறவாயில்லை, நடந்து வரலாம். தலைச்சுமையாய் இல்லாட்டிச் சரிதானே’யென்று சொல்லி ஒருவித வற்புறுத்தலோடுதான் கடகத்தை வாங்கி சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்தேன். அடுத்த கிழமை ஒரு சனி மாலை சிவராணியே கேட்டாள், ‘தம்பி, சங்கக்கடைக்கு எப்ப போறிர் சாமான் வாங்க? போகேக்க சொல்லும், நானும் உம்மோட வாறன்’ என்று.
இது, நாலைந்து மாதங்களில் வீட்டுக்குப் போகுமளவு நெருங்கியது.
ஒருநாள் மாலை, அன்று நிச்சயமாக ஒரு சந்தை நாள், சிவராணி வீட்டுக்குப் போனேன். தேநீர் குடிக்கக் கேட்டாள். நான் வேண்டாமென்று பீடி பற்றவைக்க நெருப்புக் கேட்டேன். மேசையில் விளக்குக்கு அருகே இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து கிலுக்கிப் பார்த்து அதனுள் குச்சிகளில்லை என்று தெரிந்துகொண்டு அடுப்படிக்கு போனாள். நான் பின்னாலயே போய் அடுப்படிக்குள் அவள் பின்னாலேயே நுழைந்தேன். எதுவும் செய்யவில்லை நான். தொடவில்லை, முட்டவில்லை, பின்னால் நின்றது மட்டும்தான். “சீ நாயே, உந்த எண்ணத்தோடயோ என்ர பின்னாலயும் முன்னாலயும் திரிஞ்சனி. படிக்கிற பிள்ளை, தம்பிமாதிரியெண்டு சிரிச்சுக் கதைச்சா, மனிசியாக்கலாமெண்டு நெச்சிட்டியோ. இனிமேப்பட்டு இந்த வாசல்ல காலடி வைக்கக்குடாது” என்மீது பாய்ந்துவிட்டாள்.
எனக்கு ‘அஞ்சும் கெட்டு அறிவும் கெட்ட’ நிலை. ஒரு வார்த்தை சொல்ல நா எழவில்லை. சிரமப்பட்டு, “நெருப்பு எடுக்கத்தான்… பின்னால வந்தனான்” என்று தடுமாறினேன்.
“போய் கொம்மாவிட்டக் கேள். நல்ல கொள்ளியாய் அவ எடுத்துத் தருவா.”
பின்னால் அவளைப் பார்த்ததுகூட இல்லை நான். இரண்டு மூன்று ஆண்டுகளின் பின் நான் ஏ.எல். படித்துக்கொண்டிருந்தபோது தம்பிராசண்ணை காலமானார். பிறகு கனகாலம் சிவராணி அந்த ஊரில் இருக்கவில்லை.
வசந்தாக்காவின் இழப்பில் எப்போதாவது நான் அடைய ஒரு திருப்தியிருந்தது. வசந்தாக்காவை இழந்தாலும், அக்காவை நான் கொல்லவில்லை என்பதுதான் அது. சிவராணி வி~யத்தில் என் நினைப்புக்குக் கிடைத்தது ஒரு கழுவேற்றம்.
அப்படியே என்னைத் தரதரவென இழுத்துப்போய் குதம் கிழித்து, நெஞ்சு துளைத்து, மண்டை பிளக்க அவள் என்னைக் கழுவேற்றினாள்.
அதை காலமறிந்து கொடுத்த தண்டனையென்று இப்போது நினைக்க முடிகிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று ஒரு சொலவடை இருக்கிறது ஊரில். நான் நல்லமாடுதான் என்று நம்புகிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.