(முன்மொழிவு: கதி மாற்றமற்ற காலத்தின் சீரான நகர்ச்சியில் சந்தோஷங்களுடனும், துக்கங்களுடனுமான மனித வாழ்க்கைமட்டும்தான் ஊர்வதாகவோ பறப்பதாகவோ தோற்றம் காட்டி நிற்கிறது. வாழ்வை வாழ்வதற்கும், கழிப்பதற்குமான எல்லைக்கோடுகள் வேறுவேறானவையாகவே இருக்கின்றன. வாழ்ந்தேனா, கழித்தேனா என்ற கேள்விகளுக்கப்பால் எல்லைக்கோடுகளின் விதித்தல்பற்றியே நிறைய நான் சிந்தித்திருக்கிறேன். பதில் கிடைத்த அப்போதும் எல்லைக்கோடுகள் தாண்டமுடியாதவையாகவே இருந்திருக்கின்றன. இவை பல வேளைகளில் விண்டுரைக்க முடியாத விரக்தியின் உச்சம்நோக்கி என்னை நகர்த்தியிருக்கின்றன. மன விரக்திகள் மிக மோசமாக அழுத்துகிறபோது சமூகத்தின்மீதான கோபமாகவும், அதன் பிரதிநிதிகளாய் நின்று வாதித்து என்னை உபாதிக்கும் குடும்பத்தினருடனான ஒட்டுவிடுதலாகவும் அது பரிணமித்து என்னை எங்கோ எங்கோ தொலைத்துவிடுகிற சந்தர்ப்பங்கள் எனக்குப் பல்வேறு தடவைகளில் நேர்ந்திருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களிலும் கவுதமனுக்கு ஒரு திரிமாபோல, எனக்கு ரோஸ்களும், தயாவதிகளும், எமிகளும் இருக்கவே செய்திருக்கிறார்கள். இத்தகு கணங்கள் மிகப் பெருமைப்பட முடியாதவையாக இருந்தபோதும், என் வாழ்வின் ஒரு பகுதியாக எனக்கு இவற்றில் அக்கறையுண்டு. ஆயினும், இவை என் யோசிப்பின் காலப் பரப்பு அடக்காத விஷயங்கள். இலங்கையிலோ, தமிழகத்திலோ என்னைத் தொலைத்துவிடுவதற்கான நிலைமைகள் முதிர்ந்தபோது மிக அநாயாசமாக அவற்றைச் செய்துவிட என்னால் முடிந்திருக்கிறது. ஆனால் அவ்வாறான நிலைமைகள் என் புதிய நாடான கனடாவில் விளைந்த சமயங்களில் காலநிலையும், தொடர்பூடகச் சாதனங்களும் காரணமாய் செயற்படுத்தவியலாத நிலை உருவாயிற்று. அண்மையில் அவ்வாறான ஒரு மனவழுத்தம் திரண்ட சமயத்தில் ஒரு விச்சிராந்திபோல் வானும், நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், மண்ணும், மரங்களும்கூட பார்வையில் படமுடியாத நிலக்கீழ் வீட்டிலிருந்து, கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகவளவிலான பனிப் பொழிவாலும், குளிர் அடர்த்தியாலும், உறைபனியாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பருவகால செறிநிலையில் என் அவத்தை குறையும்படியாக என் வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அதீத முயற்சியில் ஈடுபட முயன்றிருந்தேன். யோசிக்க யோசிக்க எனக்கு விடைகளுக்குப் பதிலாக புதிர்களே கிளர்ந்தெழுந்ததாய்த் தோன்றியது. இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் மாறுகொள வாழ்ந்த வாழ்வு ஒரு வெறுமையாய் வந்து என்னைக் கவிந்தது. திட்டமிடாவிட்டாலும் வித்தியாசங்களூடாக இழுத்துக்கொண்டு செல்லப்பட்ட வாழ்க்கையில் இது தவிர்க்கப்பட முடியாதது என்றே ஆரம்பத்தில் கணித்தேன்.
ஆயினும் மேலோட்டங்களில் தென்பட்ட அர்த்தமின்மைகள், ஆழ்ந்த யோசிப்பில் ஒரோவழி அர்த்தமாயின. என் சின்ன வயதில், ‘நான் பிள்ளையாரப்பாவைக் கண்டேன்’ என்று சொன்ன விபரம் தெரியாத காலத்திலிருந்து, நான் சேர்ந்து விளையாடிய நண்பர்களும் விளையாட்டுக்களும், நான் கேட்ட கதைகள், நான் வாசிக்க ஆரம்பித்த நூல்கள், பள்ளியில் எனக்காயிருந்த பாடப் புத்தகங்கள், சின்ன வயதில் என் தந்தையைக் கண்முன்னாலேயே கொலைக்கு இழந்த கொடூரம், அதுவரை வாழ்ந்ததும் அதன் பின்னால் வாழ்ந்ததுமான நிலைமைகளும் ஊடாக, தந்தையற்ற தனயனாய் இருந்த என் பதின்ம வயதில் எனக்குள் தோன்றவாரம்பித்த இலக்குகளும் இலக்கின்மைகளும், இவற்றையடைவதற்கான எனது முயற்சிகளின் வெற்றிகளும் தோல்விகளும், இப் பருவத்தில் கிராமத்துக்கே இயல்பான முறையாக வெளிப்படையாய்த் தோன்றும் பாலியல் நாட்டமும், அவற்றினாலாகும் இடையூறுகளும், அதில் சந்திக்க நேர்ந்த அவமானங்களும் மன அவசங்களும், தோன்றிய சின்னச் சின்னக் காதல்கள், அவற்றுக்கு ஏதோவொரு வகையில் உடந்தையாகவிருந்த வானொலியிலும் கிராமபோனிலும் கிளர்ந்த ராக அர்த்தங்களோடான சினிமாப் பாடல்கள், பின் கவலையேயில்லாது காதல்களை எறிந்த விதங்களும் என்றும், எதிர்பாராதவிதமாகச் சித்தித்த என் முதல் தசையாடல், தசையாடல் இச்சைகளிலிருந்து மீண்டெழுந்த சுளுவுகள், இலக்கிய வாசிப்புக்களால் கனவிலேறிய இலட்சிய வாழ்க்கை, அது சுட்டியெழுந்த தார்மீகக் கோபங்களும், சத்திய வேட்கை காரணமாய் கண்ட இழப்புக்களும்வரை சுமார் முதல் இருபதாண்டுகளுக்கான என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மேலாக என் நினைவுகள் செய்த பயணத்தின் விளைவே கீழே வரப்போகின்ற எழுத்துக்கள். இவையே என் அரசியலை நிர்ணயித்தன. அதுவே என் வாசிப்பின் திசையைக் காட்டியது. என் எழுத்து ஊற்றுப் பெற்ற காதையின் தொடக்கப் புள்ளி இங்கிருக்கிறது. இது ஒரு சுயசரிதையல்ல. மாறாக என் சுயத்தை நான் தரிசித்த பக்கங்கள். புனைவற்று என்னை நான் கண்டது கண்டபடிக்குக் காட்டுகிற எத்தனங்கள். இதற்காக நான் சொற்களை மட்டுமே தேடியிருக்கிறேன். அதுகூட புனைவுத் தோற்றம் பெற்றுவிடக்கூடாதென்ற உள்ளார்ந்த அவதானத்தோடும் இருந்திருக்கிறேன் என்பதை நிச்சயமானதாய்ச் சொல்லிக்கொள்ள முடியும்.
எந்தவொரு நிகழ்வும், அதில் சம்பந்தப்படும் பாத்திரங்கள் அனைத்தும் நிஜமானவையென்ற என் சத்தியத்தின் பலம்பெற்றவை. இப் பாத்திரங்களில் பல இன்றும் ஜீவியந்தர்களாக இருக்கிறார்கள். இறந்திருந்தாலுமேகூட அவரவரின் வாழ்க்கையென்ற எல்லைகளுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் அநாகரிகம் கருதி அவற்றின் பெயர்களை நான் மாற்றியிருக்கிறேன் என்பதை ஒப்புமூலமாய் இங்கே முன்வைத்துவிடுகிறேன்.
நல்லதுகளைக் காணும் கொடியேற்றப் பயணமல்ல நான் செய்தது. சில வேளைகளில் இந்நினைவு மீட்பு கழுவேற்றங்களாகவும் இருந்தது. அதனால் இந்த ‘நினைவேற்றம்’ என்ற தலைப்பு கழுவேற்றத்தின் ஒத்திசைவு பெற்றிருக்கிற வகையில் எனக்குப் பிடித்திருக்கிறது. வலியும், வதையுமில்லாத வாழ்க்கை எங்கிருக்கிறது? ஆனாலும் வலியும், வதையும் மிகக் கூடுதலாகவுள்ள வாழ்க்கைகளும் இருக்கின்றன. இத்தனைக்குள்ளும் தீவிர இலக்கிய வாசகனாவதும், சமதர்ம சமுதாய விருப்பத்தின்மீதான அரசியல் அபிலாசைகள் கொள்வதும், பிறகு எழுத நேர்வதும், படைப்பாளியாவதும், அந்த எழுத்துக்கு விசுவாசமாக எப்போதும் இருப்பதென்பதும் காரிய சாத்தியங்களா? சுய கழுவேற்றங்கள் இருந்தபோதும் இந்த முயற்சியில் அவை சாத்தியமெனவே எனக்குத் தோற்றப்பட்டது. அதனால்தான் ‘நினைவேற்றம்’, என் தொலைப்பிலிருந்து இந்தமுறை என்னை மீட்டெடுத்திருக்கிறது. என் நினைவேற்றத்தின் முழுமைத் தரிசிப்புக்குப் பின்னால் இதை வாசிக்கிறவர்களும் அந்த முடிவுக்கே வரக்கூடும் என்பது என் நம்பிக்கை. இது உபதேசப் பக்கமல்ல, உதாரணப் பக்கம்.)
(இனி தொடர்வது, முனை-1)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.