மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர். இவர் ஒரு காலகட்டத்தில் வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார். அதற்கு முன்னர் இவரும் இலங்கையில் சிறிது காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது. அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அந்தத் தமிழரும் மிகவும் பிரபலமானவர்தான். அவர் தோழர் என். சண்முகதாசன்.

இதுபோன்ற பல செய்திகளை வீரகேசரி – தினக்குரல் மற்றும் சமகாலம் முதலான ஏடுகளில் சிரேஷ்ட ஆசிரியராக பணியாற்றிய வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கும் - பத்திரிகைத்துறையில் என் கதை - என்ற நூலிலிருந்து நாம் தெரிந்துகொள்கின்றோம்.

தனபாலசிங்கம், ஏற்கனவே, நோக்கு ( தினக்குரல் ஆசிரிய தலையங்கங்கள்) ஊருக்கு நல்லது சொல்வேன், தமிழ் தேசியவாத அரசியல், ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர். தோழர் சண்முகதாசனின் கட்டுரைகள், மற்றும் சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள் ஆகியற்றையும் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்து கலவரங்கள் தொடங்கிய காலப்பகுதியில் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவர். வீரகேசரியில் தனது தொழில்சார்ந்த வாழ்க்கையை முதலில் ஒப்புநோக்காளராக ஆரம்பித்தவர். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தென்னிலங்கையில் இனக்கலவரம் நடந்தது. அப்போது, பிரதமராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் “ என்று சூளுரைத்தார். இவ்வாறு நாட்டில் மிகுந்த நெருக்கடி தொடங்கியவேளையிவ் தனபாலசிங்கத்தின் கொழும்பு வாழ்க்கை ஆரம்பமாகிறது. நாமிருவரும் அவ்வேளையில் வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாக இணைந்தோம். அன்று முதல் இற்றை வரையில் இவருடனான எனது நட்புறவு நீடிக்கிறது.

படிப்படியாக தன்னை இவர் எவ்வாறு வளர்த்துக்கொண்டார் என்பதையும், இந்நூலில் நனவிடை தோய்ந்து பதிவுசெய்திருக்கிறார். இந்நூலை இலங்கையின் மூத்த இடதுசாரித்தோழரும் பத்திரிகையாளருமான (அமரர் பாதிநேசன் வீ. சின்னத்தம்பி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். பேராசிரியர் எம். ஏ. நுஃமான் முகவுரையும், மூத்த பத்திரிகையாளர் டீ. பி. எஸ். ஜெயராஜ், பேராசிரியர் சந்திரிக்கா சுப்பிரமணியம், தெட்சணா மூர்த்தி மதுசூதனன் ஆகியோர் தங்கள் கருத்துரைகளையும் எழுதியுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் , இதுவரைகாலமும் செய்திகளை ஆதாரபூர்வமாவும் உண்மையாகவும் ஊடகங்களில் எழுதி வந்திருக்கும், மூத்த பத்திரிகையாளர் டீ. பி. எஸ். ஜெயராஜ் தற்போது செய்தியாகிப்போனார். அவர் இறுதியாக தனது கருத்துக்களை இந்த நூலில்தான் எழுதியிருக்கிறார் என்பது மறக்க முடியாத சோகம் என்பதையும் பதிவு செய்யவேண்டியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தனபாலசிங்கத்தின் இந்த நூல் வெளியீடு நடந்துகொண்டிருந்த வேளையில்தான், எம்முடன் முன்னர் வீரகேசரியில் பணியாற்றிய டீ.பீ. எஸ்.ஜெயராஜின் மறைவுச்செய்தி வருகிறது. தனபாலசிங்கம் , நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்புரையை நிகழ்த்தும்போது உணர்ச்சிவசப்பட்டு முழுமையாக பேசமுடியாமல் அமர்ந்து விடுவதாக கண்ணீர் மல்க சொல்லியிருக்கிறார்.

தனது 21 வயதில் வீரகேசரி பணிமனையில் பிரவேசித்த தனபாலசிங்கத்திற்கு அக்காலப்பகுதியில் தலைநகரம் முற்றிலும் புதிது. இவரது தாய்மாமனார் கந்தசாமியின் ( வீரகேசரியின் விளம்பரப்பிரிவு – உதவி முகாமையாளர் ) தூண்டுதலால் ஒப்புநோக்காளர் பணியை ஏற்கிறார்.

1980 இற்குப்பின்னர் ஆசிரியபீடத்திற்குள் இணைக்கப்படுகிறார். வெளிநாட்டுச்செய்திச்சேவைகள் தரும் செய்திகளை மொழிபெயர்த்து வழங்கிக்கொண்டிருந்தவருக்கு அரசாங்க பணியொன்றும் கிடைக்கிறது. அது ஆங்கில ஆசிரியர் தொழில். அரச தொழிலில் ஈடுபட்டால், பின்னாளில் இளைப்பாறும்போது ஓய்வூதியம் கிடைக்கும். பெற்றவர்களுக்கு இவர் ஆசிரியர் தொழிலுக்கு செல்வதே பெரிய விருப்பம். அந்தத் தொழிலையும் ஏற்றுவிட்டு, மீண்டும் வீரகேசரிக்குள் பிரவேசிக்கிறார். அதன்பிறகு பாராளுமன்ற செய்தியாளராக மாறுகின்றார். தினக்குரல், வீரகேசரி, சமகாலம் என்று இவரது வாழ்க்கை திசைதிரும்புகிறது. இத்தனைக்கும் மத்தியில் இவரது நெருங்கிய தோழர் என். சண்முகதாசனின் ஆக்கங்களை மொழிபெயர்த்து ஊடகங்களுக்கும் வழங்குகிறார்.

எவ்வாறு தன்னை வளர்த்துக்கொண்டேன் என்பதை இந்நூலின் ஒவ்வாரு அங்கங்களிலும் சுவைபட சொல்கிறார். அத்தகைய சுயசரிதைப்பாங்கில் அமைந்த இந்நூலில் நாம் அறியாத செய்திகள் பலவுண்டு. அதில் ஒன்றுதான், இப்பத்தியில் முதலில் குறிப்பிட்ட தயான் ஜெயதிலக்கா பற்றிய தகவல்.

தனபாலசிங்கம் தனது கல்லூரிப்படிப்பை நிறைவுசெய்த பின்னர், சீனச்சார்பு அரசியல் நிலைப்பாட்டுடன் இயங்கியவர். உலக அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், பத்திரிகை ஆசிரியர் பணி இவருக்கு எளிதாக அமைந்தது. வீரகேசரி ஆசிரிய பீடத்தில் தனக்கு வழிகாட்டிகளாக விளங்கிய மூத்த பத்திரிகையாளர்கள் டேவிட் ராஜூ, நடராஜா, கார்மேகம், பொன் ராஜகோபால் , ஆ. சிவநேசச் செல்வன், சந்திரிக்கா சுப்பிரமணியம் உட்பட பலரையும் நன்றியோடு சொல்லும் தனபாலசிங்கம், பல சந்தர்ப்பங்களில் வீரகேசரி. மித்திரன் ஆகியவற்றில் ஆசிரியத் தலையங்கங்களும் எழுதியிருப்பவர்.

செய்திகளை எழுதும்போது, அதனை எழுதுபவர் தனது அரசியல் சாய்வுகளை அல்லது தனது விருப்புவெறுப்புகளை அவற்றில் பிரதிபலிக்கலாகாது. இதனை தான் பெற்ற பயிற்சிகளின் மூலம் தெரிந்துகொண்டிருக்கும் தனபாலசிங்கம், நடுநிலைமை குறித்து இவரிடம் வித்தியாசமான சிந்தனை இருக்கிறது.
உண்மைக்கும், பொய்மைக்கும் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் எவ்வாறு நடுநிலைமையுடன் எழுதுவது…? மக்களுக்கு எவ்வாறு உண்மையை கூறவேண்டும்?
அரச தரப்புச் செய்திகளையும், பிரதேச நிருபர்கள் தரும் செய்திகளையும் வெளியிடும்போது, பெறும் அனுபவம் குறித்தெல்லாம் இந்நூல் , பேசுகிறது.

பல முனைகளில் நெருக்கடிகளையும் தனபாலசிங்கம் சந்தித்திருக்கிறார். உலகின் பல பாகங்களிலும் பத்திரிகைகள்மீது தணிக்கை அழுத்தங்கள் நடந்துவருகின்றன. அது மட்டுமன்றி ஆளும் வர்க்கத்தின் அச்சுறுத்தல்களுக்கும் பத்திரிகையாளர்கள் இலக்காகியுள்ளனர். பலர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். தனபாலசிங்கம் அத்தகைய செய்திகளையும் தொட்டுச்செல்கிறார். சுமார் மூன்றுவருடகாலம் துணை ஆசிரியராக பணியாற்றியபின்னர் மற்றும் ஒரு பொறுப்பினை இவர் ஏற்க நேரிடுகிறது. இதுகுறித்து தனபாலசிங்கம், பத்திரிகையாளராக வரவிரும்புபவர்களுக்கு சிறந்த ஆலோசனையை கூறுகிறார். அலுவலக நிருபராகவோ, பிராந்திய நிருபராகவோ முதலில் பணியாற்றினால் அதனால் கிடைக்கும் அனுகூலம் வலிமையானது.

தன்னை அர்ப்பணித்து பணியாற்றும் ஒருவருக்கு உரிய பதவியுர்வு கிடைக்காது போனால், வேறு பணிக்குச்செல்வார், அல்லது, மற்றும் ஏதாவது பத்திரிகைக்குள் பிரவேசிக்க முயற்சிப்பார். ஆனால், தனபாலசிங்கம் பொறுமையுடன் காத்திருந்தவர். பொறுமைக்கு பலன் கிடைத்திருக்கிறது.

தனது கதையை சொல்லும் அதேசமயம், குறிப்பிட்ட காலகட்டத்தில் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் பொருளாதார மாற்றங்களையும் பதிவுசெய்திருக்கிறார். 1991 இல் அதிபர் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக அவரது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொண்டுவந்த குற்றப்பிரேரணைக்கு இறுதியில் என்ன நடந்தது ? என்பதையும் தனபாலசிங்கம் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தினபதி – சிந்தாமணி ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் மறைந்த வேளையில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி மலர் வளையம் வைத்துவிட்டு, திரும்புகையில் பத்திரிகையாளர்கள் அனைவருடனும் சகோதர வாஞ்சையுடன் உறவாடும் தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன். தான் இறந்ததும் இவ்வாறு தனது பூதவுடலுக்கும் அஞ்சலி செய்வாயா? எனக்கேட்டிருக்கும் தகவலையும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்கிறார்.

1930 இல் வீரகேசரி பத்திரிகை ஆரம்பமாகியது. அக்காலப்பகுதியில் பாரதியாரின் நண்பர் வா.ரா சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றியவேளையில் ஊர்க்குருவி என்ற தலைப்பில் பத்தி எழுத்துக்களை எழுதினார். இந்த மரபு பின்னர் ஏனைய பத்திரிகைகளிலும் பரவியிருக்கிறது. தனபாலசிங்கமும் வீரகேசரியிலும் பின்னர் 1997 இல் தினக்குரல் ஆரம்பித்ததைய:டுத்து இதில்இணைந்து , இங்கும் பத்தி எழுத்துக்களை எழுதினார்.

தனபாலசிங்கம் எழுதிய உள்ளதைச்சொல்வேன் பத்தி வாசகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. பல்கலைக்கழக கல்வியாளர்களின் ஆக்கங்களையும் பெற்று தினக்குரலில் வெளியிட்டிருக்கிறார். அவ்வாறு பேராசிரியர்கள் கா. சிவத்தம்பியும், சிவசேகரமும் பத்தி எழுத்துக்களை தினக்குரலில் எழுதியிருக்கிறார்கள். சிவசேகரம் அவர்கள் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

கலை, இலக்கிய விடயங்களை எழுதுவதற்கு ம. பாலசிங்கம் அவர்களை தனபாலசிங்கம், நாடியதையடுத்து அவரும் தொடர்ந்து எழுதிவந்தவர். இலக்கிய நிகழ்வுகளுக்கு செல்லத்தவறுவர்களும், ம.பா .சியின் பத்தியை படிக்கத்தவறுவதில்லை எனக்கூறுமளவுக்கு குறிப்பிட்ட பத்தி எழுத்துக்கள் கவனத்தை பெற்றிருந்தன. ம. பா. சியின் பத்தி எழுத்துக்கள் பின்னர் இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

பத்திரிகைத்துறையில் தானும் வளர்ந்து ஏனையோரையும் இணைத்துக்கொண்டு இயங்கியதிலிருந்து தனபாலசிங்கத்தின் பரந்த இயல்பினையும் நாம் காண்கின்றோம். சமாதான காலத்தில் தனபாலசிங்கம் வன்னிக்கும் சென்றிருக்கிறார். போரின் விளைவால் மக்கள் எதிர்நோக்கிய கொடுந்துயரங்கள், அவர்களுக்கான புனர்வழ்வுப்பணிகள் தொடர்பான செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ஒரு சந்தர்ப்பத்தில், கொழும்பு குற்றவியல் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி அநுர சேனநாயக்காவின் அழைப்பின் பேரில் தனபாலசிங்கம் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நிகழ்த்திய உரைக்கு முன்பக்க முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதனால்தான் அழைக்கப்பட்டிருக்கிறார். தனபாலசிங்கத்திற்கு சிங்களம் பரிச்சியம் இல்லாத காரணத்தினால், உடன் பணியாற்றிய பத்திரிகையாளர் நண்பர் நிலாமையும் அழைத்துச்சென்றுள்ளார். ஆயினும் அந்த விசாரணையில் தனபாலசிங்கம் எதுவித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை.

இவ்வாறு வெளியில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர், அலுலகத்தின் உள்ளக விசாரணைக்கும் பல சந்தர்ப்பங்களில் நிருவாகத்தால் அழைக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு இருதலைக்கொள்ளி வாழ்க்கையை பத்திரிகையாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

சுயாதீன பத்திரிகையாளராக ஒருவர் இயங்குவதற்கும், பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் இடையே நிரம்ப வேறுபாடுண்டு. சுயாதீனமாக எழுதிக்கொடுத்துவிடலாம். ஆனால், நிருவாகக் கட்டமைப்புக்குள்ளிருந்து எழுதும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த விடயம் குறித்தும் இந்நூல் மறைமுகமாகவும் நேரடியாகவும் பேசியிருக்கிறது.

இந்நூலில் ஒரு சுவாரசியமான கதையையும் தனபாலசிங்கம் சொல்கிறார். தினக்குரல் பிரதம ஆசிரியர் பணிக்கான நியமனக்கடிதம் இவருக்கு ஒரு ஏப்ரில் முதலாம் திகதி – முட்டாள்கள் தினத்தின்போது தரப்படுகிறது. அதனை உடன் பணியாற்றும் நண்பர்களிடம் இவர் காண்பிக்கிறார்.

“ இன்று முட்டாள்கள் தினம் , அதனால் இதனை இன்றைய தினம் ஏற்கவேண்டாம் “ என்று நண்பர்கள் கூறுகிறார்கள். இதனை அன்றைய நிறுவனத்தலைவரிடம் இவர் சொல்கிறார். அவரோ , “ சந்தர்ப்பத்தை தவறவிட்டால், பின்னர் நீர்தான் சிரமப்படுவீர் “ எனச்சொல்கிறார்.

அக்கடிதத்தை பெறுவதற்கு முன்னர், தன்னை பத்திரிகை உலக வாழ்க்கைக்கு அனுப்பிய ( அமரர் ) கந்தசாமி அவர்களின் இல்லத்திற்குச்சென்று , அவரது உருவப்படத்திற்கும் தன்னை வீரகேசரி பணிமனைக்கு 1977 இல் அழைத்துச்சென்ற அவரது புதல்வன் ( அமரர் ) சத்திய மூர்த்தியின் உருவப்படத்திற்கும் முன்பாக நின்று கண்ணீர் மல்க வணங்கிவிட்டுத்தான், அலுவலகம் வந்திருக்கிறார். இக்காட்சியை மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்கிறார்.

சுமார் ஐந்து தசாப்த காலத்திற்கு முன்னர் மாதாந்தம் 250 ரூபா சம்பளம் பெற்றவர், 44 வருடகால பத்திரிகைத்துறை ஊழியத்தின் பின்னர் இறுதியாக 55 ஆயிரம் ரூபா பெற்றிருக்கிறார்.

இலங்கையில் அரசுகள் மாறுகின்றன. அரசியல்கட்சி பிரதிநிதிகள் எம். பி.பதவியிலிருந்து விலகும்போது ஓய்வூதியம் பெறுகிறார்கள். அவர்களின் செய்திகளுக்கு தினமும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு இதுவரையில் ஓய்வூதியம் இல்லை.இந்த நிலை மாறவேண்டும்.

தனபாலசிங்கம், இலங்கை இதழியல் துறைக்கு சிறந்த சேவையாற்றியிருப்பவர் இவரது பணி அளப்பரியது. ஊடகத்துறையில் பயிலும் மாணவர்களுக்கு மாத்திரமின்றி, இலக்கியத்துறையில் நீடிக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்த நூல் பயன்மிக்கதாக அமைந்திருக்கும். நண்பர் தனபாலசிங்கம் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்