* கட்டுரையாளர்: முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா, துணைத்தலைவர்/இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை 


முன்னுரை

தமிழை வளம் மிக்க மொழியாக உலகிற்கு உரைக்க அடித்தளம் இட்டவை சங்க இலக்கியங்களாகும். உலகமொழிகளில் நம் மொழியை இனங்காட்டுதற்கும் நம் பழந்தமிழரின் காதல், , வீரம், கொடை, ஈகை முதலான நற்பண்புகளை எடுத்தோதுவதற்கும் வழிகோலுவன சங்க இலக்கியங்கள். அத்தகு நெறியில் சங்க இலக்கியங்களில் உள்ள கலைச்சொற்களை இனம் கண்டால் வருகின்ற இளந்தலைமுறையினர் அதைப் பயன்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப உலகிற்கான முன்னுதாரணமாகவும் அவை அமையும். அந்த வகையில் ஆட்சிச் சொல்லகராதியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சங்கத் தமிழ் கலைச்சொற்கள் குறித்து அறிந்து கொள்வதும் ஆய்வு செய்வதும் இங்கு தேவையாகிறது.

ஆட்சிச் சொல்லகராதி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள ஆட்சிச் சொல்லகராதி மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது. 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சங்கத் தமிழ் கலைச்சொற்கள்

ஆட்சிச் சொல்லகராதி தொகுதி-1இல் ஆநிரை கவர்வோர் (பக்.1), கரந்துறைப்பாட்டு(பக்.20), காழகில் (பக்.51), வறியார்க்கீவோர், அறச்சாலை, ,இரவலர் இல்லம், (பக்.51), மலைப்போர்ப்படை, நறுமணப்புல்வகை, அடுமனை உணவச்சம் (பக்.53), மயங்குபொருள், இடைஞர்(பக்.54), வட்டரங்கு சார், பொங்கு உவகை(பக்.57), கடுந்துயர்(பக்.61), நாடு கவர்தல்(பக்.63), நறுநெய்யாட்டு, கரந்துறைதல் (பக்.64), முதுமொழி, மீயுயர்(பக்.71), வளை நரம்பிழை, நனி விருப்பன், கடுஞ்செலவு, களரி(பக்.79), வழக்குரைத்தல், கடுஞ்சொல்லாடல், பாழ்நிலம், அணங்கு(பக்.80), போர்க்கலக் கம்மியர், படைக்கலக் கொட்டில், உள்ளிட்ட ஏராளமான சொற்கள் சங்க கால மக்களின் பயன்பாட்டில் இருந்த வேர்ச்சொற்கள் பலவும் கலைச்சொற்களாக விளங்கியமை என்று தெளியலாம். ஏனெனில் சங்க இலக்கியங்களில் இத்தகு சொற்களை இனம் காணலாம்.

ஆட்சிச் சொல்லகராதி மூன்றாம் தொகுதியில் புல்லரிசி அப்பம் (பக்1), பண்டுவம் பண்ணுதல்(பக்.5), , மறைபொருள் (பக்.6), வட்டப்பலகணி (பக்.8), நனிநன்று, (பக்.15), முற்றம்(பக்.18), இசைநாடகம், இசை நாடகக் கொட்டகை, அறுவை(பக்.19), இகழுரை(பக்.21), உசாவாய்வு(பக்.23), ,பல்லியம்(பக்.24), ஏதிலியர் இல்லம், செங்குத்து நடுவு (பக்.27), அங்காப்பு(பக்.28), சுனைநீர்(பக்.32), அடுப்பு உலர்மண்(பக்.35), தெவிட்டு நிலை(பக்.36), சூற்பைச் சுவர், நயப்பருத்தியாடை, கருஞ்சாம்பல் நிறம்(பக்.38), காடித்தேன், (பக்.39), அகவன் அகவி, விளிப்பான் (பக்.41), கோட்டம், நோதலும் உவத்தலும் (பக்.42), சிவிகை (பக்.43), பனை நண்டு (பக்.44), பனை நார், அங்கைப் பிடிப்பு(பக்.45), நறுந்தாழை, அவையமளி, பரத்தைத் தரகர்(பக்.46), முரண்துயில் (பக்.49), அல்லூண்வழி, சுண்ணச்சாந்து (பக்.52), ஏதம் நிறைந்த (பக்.53), விருந்துக்கூடம், அம்பலமேறு(பக்.55) ஆகிய பல்வேறு சொற்களில் அடிச்சொற்கள் சங்க இலக்கியத்தின் கலைச்சொற்களாக அமைந்துள்ளமையைக் காணலாம்.

தொல்காப்பியம், யாப்பருங்கலத்தில் கலைச்சொற்கள்

தொல்காப்பியத்தில் வருகின்ற ஆநிரை கவர்தல், யாப்பருங்கலத்தில் உள்ள கரந்துறைப் பாட்டு ஆகிய கலைச்சொற்களை ஆட்சிச்சொல்லகராதி சுட்டுகிறது. தொல்காப்பியர் ஆநிரை கவர்தல் என்பதைக் கரந்தை என்ற சொல்லில் குறிப்பிடுகிறார். பின்னால் வந்த புறப்பொருள் வெண்பாமாலை விரித்துச் சுட்டுகிறது.

“வெட்சி நிரை கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி” (புறப்பொருள் வெண்பாமாலை.201)

என்ற பாடலின் மூலம்அறியலாம். கரந்துறைப் பாட்டு என்பது ஒரு வகையான சித்திரக்கவி பாடலாகும். பாடலில் உள்ள எழுத்துகளைக் கொண்டே அமைக்கப்படுவது கரந்துறைப்பாட்டு எனப்படும். இதைப் பற்றி யாப்பருங்கலம் , “ஒரு பாட்டுச் செவ்வே எழுதினால் , அதனை ஈற்று நின்று மொழிக்கு முதலாயின எழுத்துத் தொடங்கி, ஒன்று இடையிட்டு எழுத்துக்கொள்ள, மற்றொரு பாட்டுப் பொதுவது” என்று குறிப்பிடுகிறது. (யாப்பருங்கலம். பக்.413) இவற்றிலிருந்து சங்க இலக்கியத்திற்கு முந்தைய காலகட்டத்திலேயே கலைச்சொற்கள் பயின்று வந்துள்ளமையை அறியமுடிகின்றது.

சங்க இலக்கியத்தில் சான்றுகள்

சங்க இலக்கியத்தில் காழகில், அணங்கு, போர்க்கலக்கம்மியர், பனைமரம், அகவன் ஆகிய சொற்கள் பயன்பட்டு வருகின்ற தன்மையைச் சான்றாகக் காணலாம். நறுமணமுடைய அகிலின் மணத்தைச் சொல்லும்போது காழகில் என்ற சொல் சங்க இலக்கியத்தில் பயின்று வருகிறது. நறுமணப் பொருள்களை ஏற்றுமதி செய்ததையும் சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது. வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணியிலும் காழகில் பற்றிய செய்தி பயின்று வருகிறது.

“சந்த நற்சுதை நான சாயலின்
வந்த நற்சுதை மணங்கொள் காழகில்” (தேம்.107)

நல்ல சந்தனச் சாந்தும் மென்மையோடு கூடிய நல்ல கஸ்தூரிச் சாந்தும் , மணம் கொண்ட வயிரம் பாய்ந்த அகிற்கட்டை வெந்து தந்த நல்ல புகையும் என்று வருகின்ற வரிகள் அகிலின் நறுமணத்தைச் சுட்டுகின்றன.

சங்க இலக்கியங்களில் பொதுவாக தெய்வத்தையும் தலைவியையும், பெண்களையும் அணங்கு என்ற சொல்லால் குறிப்பிடுகின்ற முறையைக் காணலாம்.

“கண்டார்க்குத் தாக்கு அணங்கு இக்காரிகை காண்மின்” (பரி)

“அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர்” (ம.காஞ்சி)

“மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை” (அகம்)

என்று பரிபாடல், மதுரைக்காஞ்சி, அகநானூறு ஆகியவற்றில் அணங்கு என்ற சொல் இடம்பெற்ற தன்மைகளை அறியமுடிகிறது.

போர்க்கலக்கம்மியர் என்ற தொழில்பெயர் குறித்த சொல் சங்க இலக்கியத்தில் பயன்படுகின்ற முறைமைகளைக் காணலாம்.

“கைவல் கம்மியன் கவின்பெறாக் கழாஅ
மண்ணாப் பசுமுத் தேய்ப்ப” (நற்.94)

என்ற நற்றிணைப் பாடல்வரிகள் அணிகலன்களைச் செய்கின்றவர்களைக் கம்மியன் என்ற சொல்லால் குறிப்பிடுகின்ற பாங்கு தெரியவருகிறது. போர்க்கலக்கம்மியர் என்ற சொல் போர்க்களக் கருவிகளைச் செய்கின்ற தொழில் முனைவோரைக் கூறுகின்றது.

பனைமரம் குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் வருகின்றது. பனைநண்டு, பனைநார் குறித்த ஆட்சிச்சொல்லகராதிச் சொற்களை ,

“இரும்பனை வெண்டோடு மலைந்தோன்” (புறம்.45)

என்று தோடி தடித்த பனைஓலை பற்றிய செய்தி புறநானூற்றில் வருகின்றது.

அகவன், அகவி ஆகிய சொற்களும் சங்க இலக்கியங்களில் பரவிக்கிடக்கின்றன. குறுந்தொகையில்,

“அகவன் மகளே! அகவன் மகளே! பாடுக பாட்டே பாடுக பாட்டே!” (குறுந்.23)

குறிசொல்லும் கட்டுவிச்சி விளித்துப் பாடும்போது அகவன்மகளே என்ற சொல் குறுந்தொகையில் பயின்று வருகிறது. இது தலைவியைக் கட்டுவிச்சி விளித்துப் பாடுவதாக உள்ளது.

கருஞ்சாம்பல் நிறம் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் கார் என்ற சொல் கருமை நிறத்தைக் குறிப்பதாகப் பயின்று வருகிறது. வட்டு, வட்டரங்கம் குறித்த சொற்கள் விளையாட்டைப் பற்றிய செய்திகளில் சங்க இலக்கியங்களில் பயின்று வருவதைக் காணலாம். வளையப் பந்தாட்டம் என்ற கலைச்சொல் சங்க இலக்கியத்தில், “வரியணி பந்து” (நற்.305) என நற்றிணைப் பாடல் தெரிவிக்கிறது. பெண்கள் பூப்பந்து விளையாடுகின்ற செய்திகளையும் சங்க இலக்கியம் சுட்டுகின்றது.

முடிவுரை

ஆட்சிச் சொல்லகராதியில் வரும் கலைச்சொற்கள் பலவற்றைப் பார்க்கும்போது சங்க காலத்தில் அவை அப்படியே பயன்படுத்தப்படாது அத்தகு பொருள்பட சிறிது மாற்றம் கொண்டு வழங்கப்பட்டுள்ளமையைக் காணலாம். சங்க காலச் சொற்கள் படிப்படியாக மாற்றம் பெற்று எளிமைப்படுத்தப்பட்டுத் தற்காலத்தில் வழங்குகின்ற முறைமைகளையும் காணலாம். இக்கட்டுரையிலிருந்து சங்க இலக்கியச் சொற்கள் பலவற்றை கலைச்சொற்களாக அகராதிகள் சுட்டினாலும் இக்காலத்திற்கு ஏற்ப அவற்றை மாற்றி அமைத்து எடுத்தாளவேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

துணைநின்ற நூல்கள்

    முனைவர் ம.சு.சண்முகம், இ.ஆ.ப., முனைவர் ந.அருள்(ப.ஆ)ஆட்சிச் சொல்லகராதி (தொகுதி-1)
    முனைவர் ம.சு.சண்முகம், இ.ஆ.ப., முனைவர் ந.அருள்(ப.ஆ)ஆட்சிச் சொல்லகராதி (தொகுதி-3)
    வித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை பதிப்பு, யாப்பருங்கலம் பழைய விருத்திய உரை, சென்னை அரசு அச்சகம், 1960
    சங்கம்மீடியா, அருஞ்சொற் களஞ்சியம், வலைத்தளப்பக்கம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்