
பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்த தகவலினை முகநூல் வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். அவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.
அவரை நான் அதிகம் சந்தித்ததில்லை. ஓரிரு தடவைகள் நேரில் சந்தித்துள்ளேன். ஆனால் அவர் என்னுடன் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தார். கடந்த 2019லிருந்து ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று மெசஞ்சர் மூலம் வாழ்த்துச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தார். தான் எழுதும் ஆங்கிலக்கட்டுரைகள், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கான இணைய இணைப்புகளை மெசஞ்சர்வாயிலாக அனுப்புவார். அவ்விதம் அவர் அனுப்பிய இறுதித்தகவல் மார்ச் 24 வந்திருந்தது. பாடகர் டி.எம்.எஸ். செளந்தரராஜன் பற்றிய பதிவு. ஒரு தடவை பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய அவரது கட்டுரைக்கு நான் எழுதியபோது அதற்கு அவரது வலைப்பதிவில் எதிர்வினை எழுதியதுடன் , மெசஞ்சர் மூலம் விரிவான பதிலையும் அனுப்பியிருந்தார்.
இத்தருணத்தில் தொண்ணூறுகளில் தேடகம் அமைப்பினர் எனது 'அமெரிக்கா' நாவலுக்கான கலந்துரையாடலை நடத்தியபோது வருகை தந்து சிறப்பளித்திருந்ததை நினைவு கூர்கின்றேன்.

கூடவே முதன் முதலில் அவர் என் கவனத்தை ஈர்த்த தருணத்தையும் நினைவு கூர்கின்றேன். ஆரம்பத்தில் அவரது எழுத்துகள் வீரகேசரியில் வெளியானபோது கவனித்திருக்கின்றேன். ஆர்வத்துடன் வாசித்ததில்லை. பின்னர் அவர் அக்காலகட்டத்தில் இலங்கையின் மிகவும் பிரபல்யமான தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கிய உபாலி விஜேவர்த்தனேயின் 'தி ஐலண்ட்' ஆங்கிலப் பத்திரிகையில் “Behind the Cadjan Curtain” என்னும் தலைப்பில் பத்தி எழுதிக்கொண்டிருந்தார். அதில் அப்போதுதான் ஆரம்பித்திருந்த இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் பற்றியெல்லாம் , குறிப்பாக அக்காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த உமாமகேசுவரன் , பிரபாகரன் இவர்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடு பற்றியெல்லாம் எழுதியிருந்தார். அதிலிருந்து அவ்வப்போது அவர் ஆங்கிலத்தில், தமிழில் தமிழகம், இலங்கையிலிருந்து வெளியாகும் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன்.
கனடாவில் ஆரம்பத்தில் செந்தாமரை பத்திரிகையில் ஆசிரியராகவிருந்து பின் மஞ்சரி பத்திரிகையின் ஆசிரியராக அதனை வெளியிட்டு வந்தார். அவரது கட்டுரைகளில் தொனித்த அரசியல் கருத்துகள் அவருக்குப் பல இன்னல்களைத் தந்தன. அவற்றால் தளர்ந்து விடாது தொடர்ந்தும் இறுதிவரையில் எழுதி வந்தார். அண்மைக்காலமாக அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் உடனுக்குடன் வீரகேசரியில் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
எம் காலத்தில் வாழ்ந்த முக்கியமான , ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகவே கருதுகின்றேன். உணர்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









