- தமிழ்நாட்டில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் தடையை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மாதொரு பாகனுக்கு மாத்திரமின்றி கருத்துச்சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி இது. தடை அழுத்தத்தினால் தான் மரணித்துவிட்டதாகச்சொன்ன பெருமாள்முருகன் ஊரைவிட்டும் சென்றார். இனி அவர் உயிர்த்தெழும் காலம் கனிந்துள்ளது. இந்நாவல் மீதான சர்ச்சை வெளியானபொழுது நான் எழுதிய நீண்ட கட்டுரையை மீண்டும் இங்கு பதிவு செய்கின்றேன். இதனை எழுதியபின்னர்தான் மாதொருபாகன் நாவல் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது. -(முருகபூபதி -
சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாட நூலாகவிருந்த செல்வராஜ் எழுதிய ஒரு சிறுகதைத்தொகுப்பிலிருந்து நோன்பு என்ற சிறுகதையை நீக்கவேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் போராடின. சிறிது காலத்தில் மற்றும் ஒரு தமிழக பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதையை நீக்கவேண்டும் என்று குரல் எழுப்பியது. இலங்கையில் வடபகுதியில் உயர்வகுப்புகளில் நாவல் இலக்கிய வரிசையில் இணைத்துக்கொள்ளப்பட்ட மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய முதலாவது நாவல் நீண்ட பயணம் நூலை தவிர்த்துக்கொள்வதற்கு மேட்டுக்குடியினர் மந்திராலோசனை நடத்துவதாக அண்மையில் ஒரு தகவல் கிடைத்தது. இலங்கையின் மூத்த தலைமுறை வாசகர்களுக்கு நல்ல பரிச்சயமான நாவல் நீண்டபயணம். வடபகுதியின் அடிநிலை மக்களின் தர்மாவேசத்தையும் ஆத்மக்குரலையும் பதிவு செய்த முக்கியமான நாவல்.
இந்தப்பின்னணிகளுடன் தற்பொழுது தமிழக இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை எழுப்பியிருக்கும் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை பார்க்கலாம். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நாவலுக்கு எதிராக மீண்டும் இந்துத்துவா அமைப்பினரும் இராமருக்கு வக்காலத்து வாங்கும் இராமகோபாலனும் கோஷம் எழுப்புகின்றனர். இராமகோபாலன் பெருமாள் முருகனை அவன்... இவன்... என்றெல்லாம் ஒருமையில் விளித்து லண்டன் பி.பி.சிக்கு பேட்டியளிக்கிறார். மதவெறியின் உச்சம் அவரது குரலில் தெரிகிறது. பகுத்தறிவுவாதம் பேசிய திராவிடக்கட்சிகள் பெருமாள் முருகன் விடயத்தில் குரலை தாழ்த்தியுள்ளன. தி.முக.வுக்கும் அண்ணா தி.மு.க.வுக்கும் பெருமாள்முருகனைவிடவும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்தான் முக்கியத்துவமானது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்தவரும் மணற்கேணி மற்றும் நிறப்பிரிகை ஆசிரியருமான ரவிக்குமார் மாத்திரம் பெருமாள் முருகனுக்காக குரல் கொடுத்துள்ளார். இடதுசாரி மாக்ஸீயக்கட்சிகளும் குரல் கொடுக்கத்தொடங்கியுள்ளன.
சென்னையில் புத்தக கண்காட்சி நடந்துகொண்டிருக்கும் வேளையில் பெருமாள் முருகன் அச்சுறுத்தப்பட்டு அவரது வாக்கு மூலத்தை ஒரு சத்தியவாக்காக பெற்றுள்ளது இந்துத்துவா அமைப்பு. அவர் இனிமேல் எழுதக்கூடாது, மாதொரு பாகன் நாவலை மீளப்பெறல்வேண்டும் என்றெல்லாம் அவர்மீது அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் பிரயோகித்து - கடையடைப்பு சத்தியாக்கிரகம் என்றெல்லாம் போராடி பெருமாள் முருகனை மௌனியாக்கியிருக்கிறது ஒரு பிற்போக்குக் கும்பல். ஊரில் கலவரம் வெடித்துவிடக்கூடாது - மக்களின் அன்றாட வாழ்வு தன்னால் பாதித்துவிடக்கூடாது என்ற பெருந்தன்மையில் தான் இனிமேல் எழுதப்போவதில்லை என்றும் தமது ஆசிரியப்பணியை மாத்திரமே தொடரப்போவதாகவும் சொன்ன பெருமாள்முருகன் ஒருவகையில் இந்துத்துவாக்களிடம் சரணாகதி அடைந்துள்ளார். அவர் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் ( இதனை பேச்சுவார்த்தை என்பதா அல்லது தற்காலத்தமிழ்ப்படங்களில் வரும் கட்டைப்பஞ்சாயத்து என்பதா..? பெருமாள் முருகன் வாய்திறந்தால்தான் தெரியும் )
தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே திருச்செங்கோடு என்னும் ஊரில் சுதந்திரத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்தான் மாதொருபாகன். பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணுக்கு மற்றும் ஒருவர் மூலம் கருத்தரிக்கச்செய்து பிள்ளைப்பாக்கியம் பெறுதல் என்பது சம்பிரதாயமாக இருந்ததாகவும் அதனை பின்னணியாகக்கொண்டதே இந்த நாவல் எனவும் வெளியே பேசப்படுகிறது. இந்த நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை. அதனால் நாவலின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் - பெருமாள் முருகனின் சத்தியவாக்கு இவ்வாறு பதிவாகியிருக்கலாம் என்ற ஊகம் வெளியாகியிருக்கிறது. அதனைப்பாருங்கள்:
1. பெருமாள் முருகன் தொகுத்த - பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி - எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
2. பெருமாள் முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
3. பெருமாள் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
4. இனி - எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள் முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.
அவனை விட்டு விடுங்கள். அனைவருக்கும் நன்றி.
இந்த ஊகம் ஊர்ஜிதப்படுத்தப்படுமானால் இனி தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் அனைவரும் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு வேறு தொழில்தான் பார்க்கநேரிடும். துண்டை தலையில் போடுவார்களா...? அல்லது இடுப்புத்துண்டை வரிந்துகட்டிக்கொண்டு கருத்துச்சுதந்திரத்திற்காக போராடுவார்களா...? என்பதை இனி காலம்தான் சொல்லும்.
பெருமாள் முருகனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நாமக்கல்லில் நடந்திருக்கிறது. இந்த ஊரில்தான் மூத்த முற்போக்கு எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி நெடுங்காலம் வசிக்கிறார். ஈழத்து எழுத்தாளர்களிடம் நன்கு பரிச்சயமானவர். இவர் குறித்த விரிவான பதிவை கடந்த 2013 இல் தேனீயில் எழுதியிருக்கின்றேன். அவர் மார்க்ஸீயக் கம்யூனிஸ்ட் தோழர். அவரிடமிருந்து என்ன கருத்து வெளியாகியிருக்கிறது என்பது இன்னமும் தெரியவில்லை.
இந்தப்பதிவினை எழுதும்பொழுது சில வருடங்களுக்கு முன்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தடுக்கப்பட்ட செல்வராஜ் எழுதிய நோன்பு சிறுகதை தொடர்பாக யாழ்ப்பாணம் ஜீவநதியில் நான் எழுதிய மறுவாசிப்புக்குள்ளாகும் புராண - இதிகாச பாத்திரங்கள் என்னும் கட்டுரையை இங்கே தேனீ வாசகர்களுக்காக மீள் பதிப்பு செய்கின்றேன். இதனைத்தொடர்ந்து மாதொரு பாகன் பின்னணியில் சில ஈழத்து சிறுகதைகள் பற்றிய குறிப்புகளை எழுதுவேன்.
மறுவாசிப்புக்குள்ளாகும் புராண - இதிகாச பாத்திரங்கள்
இந்து சமயமும் வைணவ சமயமும் புராணக்கதைகளினாலும் உபகதைகளினாலும் ஐதீகங்களினாலும் மற்றும் அற்புதங்கள் நிறைந்ததுமான சுதந்திரமான சமயங்கள் என்பதனால் இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ப மறுவாசிப்புக்குட்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது.
சிறுவயதில் நாம் படித்த பாடப்புத்தகத்தில் சத்தி-முத்தி புலவர்கள் பற்றிய கதையொன்று படித்திருக்கிறோம்.
ஒரு குளந்தங்கரையில் அரசமர நிழலில் எழுந்தருளியிருந்த ஒரு பிள்ளையார் சிலைக்கு அருகில் தமது உடைகளை வைத்துவிட்டு இரட்டையர்களான சத்தி - முத்துப்புலவர்கள் குளத்திலிறங்கி நீராடிவிட்டு கரைக்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த அவர்களது உடைகள் மாயமாக மறைந்துவிட்டிருந்தன.
அரசமரப்பிள்ளையாருக்குத்தெரியாமல் அவை திருட்டுப்போயிருக்கமாட்டாது என நம்பிய அந்தப்புலவர்கள் உடனே இப்படிப்பாடினார்களாம்.
தம்பியோ பெண் திருடி
தயாருடன் பிறந்த வம்பனோ
நெய்திருடும் மாமாயன்....
இதெல்லாம் கோத்திரத்துக்குள்ள குணம்.
இவ்வாறு சத்தி - முத்துப்புலவர்களினால் எள்ளிநகையாடப்பட்ட பிள்ளையாரை கவியரசு கண்ணதாசனும் விட்டுவைக்கவில்லை. பாகப்பிரிவினை திரைப்படத்தில் ஊனமுற்ற கண்ணையன் (சிவாஜிகணேசன்) பாடுவதாக ஒரு பாடல் (டி.எம்.எஸ்ஸின் பின்னணிக்குரல்)
ஆனை முகனே,
ஆதி முதலானவனே
பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே...
பிள்ளையாரின் வயிற்றை பானை வயிறு என்று வர்ணித்திருப்பார் கவிஞர்.
இதனையெல்லாம் பொறுத்துக்கொண்ட இந்துத்துவாக்கள் தற்போது ஆண்டாள் பற்றிய ஒரு சிறுகதையை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளனர். ஏற்கனவே புதுமைப்பித்தனும் சிதம்பர ரகுநாதனும் இராமயணத்திலிருந்தும் மகாபாரதத்திலிருந்தும் சில காட்சிகளை புனைந்து படைப்பிலக்கியமாக்கியிருக்கிறார்கள். அவை இலக்கிய உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அவை பற்றி பின்னர் குறிப்பிடுவதற்கு முன்னர் ஆண்டாள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் பிரபலமான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாண்டு தமிழ்ப்பாடத்திட்டத்தில் வைணவத்தின் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் பிறப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைச்சொல்லும் நோன்பு என்ற சிறுகதை இடம்பெற்றுள்ள சிறுகதைத்தொகுப்பு பற்றிய செய்தியும் இந்து முன்னணியின் ஆட்சேபமும்தான் பி.பி.ஸி. வானொலியில் ஒலிபரப்பாகியது. திருப்பாவை இயற்றிய ஆண்டாளின் கதையை நாம் ஏ.பி.நாகராஜனின் திருமாள்பெருமை படத்திலும் பார்த்திருக்கிறோம். ஆண்டாளுக்கு மறுபெயர் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி. சிறுமி ஆண்டாளாக பேபி பத்மினியும் குமரி ஆண்டாளாக கே.ஆர்.விஜயாவும் ஆண்டாளை ஒரு குழந்தையாக துளசிச்செடி அருகே கண்டெடுத்து வளர்த்த பெரியாழ்வாராக சிவாஜிகணேசனும் நடித்தார்கள்.
வைணவ புராணம் எமக்குச்சொல்லித்தந்த கதையையே ஏ.பி.என். படமாக்கியிருந்தார். ஆனால் நோன்பு என்ற சிறுகதையை எழுதியிருக்கும் செல்வராஜ் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனிப்புக்குள்ளான படைப்பாளி. ஏற்கனவே அவரது சில படைப்புகள் சிலாகித்துப்பேசப்பட்டவை. ஆண்டாளின் பிறப்பு குறித்து மறுவாசிப்பு செல்வராஜின் சிறுகதையில் சித்திரிக்கப்பட்டுவிட்டதுதான் இந்து முன்னணியின் கோபம். துளசிச்செடி அருகே கண்டெடுக்கப்பட்ட ஆண்டாள் ஒரு தாசிக்குப்பிறந்ததாக அச்சிறுகதை சொல்வதனாலேயே இந்து முன்னணி, அதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மற்றும் வைணவ சமய பொதுமக்களிடம் கையொப்பம் சேகரித்து மனுவொன்றை குறிப்பிட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிருவாகத்திடம் வழங்கியுள்ளது. அத்துடன் அச்சிறுகதை இடம்பெற்றுள்ள கதைக்கோவையை தடைசெய்யவேண்டும் என்று மாநில அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளது.
இந்து சமயமும் வைணவ சமயமும் புனைவுகளையும் அற்புதங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக்கொண்டு மக்களிடம் பரவியவை. கூத்துக்கள், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் , திரைப்படங்கள் முதலானவற்றில் மட்டுமன்றி புனைவிலக்கியத்திலும் இடம்பெற்றுவருபவை. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து கமல்ஹாசன் வரையில் சமயப்புராணங்களை ஐதீகங்களை கற்பனையும் கலந்து திரைப்படமாக்கும் மரபு ஒருவகை வணிகக்கலாசாரமாகியிருக்கிறது.
இலங்கையில், எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோயில் திரையிடப்படு முன்னர் அங்கு தணிக்கைக்குட்பட்டபோது, ஒரு காட்சி ஆட்சேபத்துக்குரியதாக கருதப்பட்டு நீக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டுக்காயத்துடன் துடிதுடிக்க வரும் எம்.ஜி.ஆர் பண்டரிபாயிடம் வந்து வசனம் பேசுவார். ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஷோகேஸின் மீது கோபத்தில் ஓங்கி அடிப்பார். அந்த அதிர்வினால் அருகிலிருந்த சிறிய புத்தர்சிலை சற்று ஆடும். இலங்கை பௌத்தர்கள் வாழும் நாடு, அந்தக்காட்சி பௌத்தர்களை புண்படுத்தும் எனச்சொல்லிக்கொண்டு அந்தக்காட்சி நீக்கப்பட்டது. இப்படி பல கதைகளை - சம்பவங்களை பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.
இந்தப்பத்தியில் ஏற்கனவே சொல்லப்பட்ட இரண்டு முக்கிய முன்னணி படைப்பாளிகளின் இரண்டு சிறுகதைகளுக்கு இனி வருவோம். புதுமைப்பித்தன் தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி. அவரது புகழ்பெற்ற படைப்பு சாபவிமோசனம். கணவன் கோதம முனிவனின் சாபத்தினால் கல்லாகிப்போனவள் அகழ்யை. இந்திரனிடம் தெரியாமல் மயங்கி சோரம் போனதனால் அவளுக்கு கிடைத்த தண்டனை கல்லாகிவிடும் சாபம்தான். சிறிது காலத்தின் பின்னர் அந்தப்பக்கமாக வந்த இராமனின் கால் பட்டு அகழ்யை மீண்டு உயிர்ப்பிக்கிறாள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சீதையுடன் உரையாடும் அகழ்யை, பதினான்கு வருடம் வனவாசமிருந்து திரும்பும்போது அயோத்தி மக்களுக்கு சீதை புனிதமானவள் என்று காண்பிப்பதற்காக இராமனின் கட்டளைப்படி சீதை தீக்குளித்ததை அறிந்து வெகுண்டு ‘ என்னை உயிர்ப்பித்த இராமனா இப்பிடிச்செய்தான்’ என்று வேதனையுற்று மீண்டும் கல்லாகிப்போனாள். இதுதான் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதை. இன்றளவும் இலக்கிய உலகில் பேசப்படும் உன்னதமான சிறுகதை. எத்தனையோ தடவை மறுபிரசுரம் கண்டுள்ள சிறுகதை.
இச்சிறுகதையின் தொடக்கத்தில் புதுமைப்பித்தன் இரத்தினச்சுருக்கமாக இப்படி ஒரு முன்னுரை தருகிறார்.
“ ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல்கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.” தனது கதைக்கு இந்துத்துவாக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்று புதுமைப்பித்தன் எதிர்பார்த்திருந்தமையாலேயே குறிப்பிட்ட வரிகளுடன் தனது சாபவிமோசனத்தை பிரசுரத்துக்கு அனுப்பினார்.
தீக்குளித்து மீண்டு அயோத்தியில் இராமனின் பட்டாபிசேகத்திலும் இடம்பெறும் சீதை, ஒரு துணிவெளுக்கும் வண்ணானின் கூற்றினால் மீண்டும் இராமனால் காட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவது வால்மீகி இராமாயணத்தில் தொடர்கிறது. கைகேயியின் ஆணைப்படி முதலில் இராமனுடன் காட்டுக்குச்சென்றவள் பின்னர் இராமனின் ஆணைப்படி மீண்டும் காட்டுக்குச்சென்று துன்பப்பட்டவள் சீதை.
அவளது வாழ்வு கானகத்திலேயே பெரும்பாலும் கழிந்துவிட்டது. அத்துடன் அசோகவனத்திலும் இராவணனால் சிறைவைக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய பாத்திரம் சீதை. வால்மீகியின் கதையையும் கேட்காமலேயே மீண்டும் கல்லாகிப்போனாள் ஆகழ்யை. கேட்டிருந்தால்... தன்னைக்கல்லாக்கிக்கொள்ளாமல் இராமனையே சுட்டெரித்திருப்பாளோ தெரியாது. பெண்மையின் தார்மீகக் கோபத்தை இந்த வால்மீகி இராமயணத்தை தவிர்த்து புனைவிலக்கியமாக்கியிருந்தார் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு என்று தமிழ்நாட்டில் சொல்லப்படும் சிதம்பர ரகுநாதன் (இவர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். புதுமைப்பித்தனின் மறைவுக்குப்பின்னர் புதுமைப்பித்தன் வரலாறு மற்றும் புதுமைப்பித்தன் கதைகள்- சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் வரலாற்றியல் பூர்வமான ஆய்வு) ஆகிய நூல்களையும் எழுதியிருப்பவர்)
ரகுநாதனின் ‘வென்றிலன் என்றபோதும்...’ என்னும் சிறுகதையும் இலக்கிய உலகில் சிலாகித்துப்பேசப்பட்ட ஒரு மகாபாரதக்கதை. திரௌபதியைப்பற்றிய கதை.
“ ஐவருக்கும் நான் பத்தினியானேன். எனக்கு வாய்ந்த ஐந்து கணவர்களும் என்னிடம் நடந்துகொண்ட விதம்தான் என்னைக் கர்ணனைப்பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச்சென்றது. இந்த ஐவருக்கும் மேலாக கர்ணனிடம்தான் எனக்கு மனசு ஒட்டக்கூடிய பாசம் இருந்தது. தருமபுத்திரன் ஒரு ரிஷிப்பிறவி. அவருக்கு மனைவியென்றாள் சதி என்ற தெய்வீகப்பொருள். அவர் பள்ளியறையில் வைத்துக்கொண்டுகூட, திடீரென்று நீதி சாஸ்திரம் போதிக்க ஆரம்பித்துவிடுவார். பீமரோ, காதலுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவரில்லை. இடும்பைதான் அவருக்கு சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மனந்த அர்ஜூனனுக்கு நான் பலரில் ஒருத்தி. அவருக்கு சமயத்தில் ஒருத்தி வேண்டும். அது திரௌபதியானாலும் சுபத்திரையானாலும் ஒன்றுதான். நகுல சகாதேவர்கள் என் கண்ணுக்கு கணவர்களாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக்குஞ்சுகளாகத்தான் தோன்றினர். இதனால்தான் இந்த ஐவரில் எவர் மேலும் அன்பு செலுத்த முடியவில்லை. உலகமும், அவர்களும் என்பரிவையும் பச்சாதாபத்தையும் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளட்டும். எனினும், எனக்கு கர்ணன் மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருக்கிறது. கர்ணன் நினைவுதான் என் இளமையைக்கூடக் கட்டுக்குலைக்காமல் காத்து வந்தது. இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஒட்டிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக் கனவும் இன்றோடு உதிர்ந்தது என்றுதான் கொள்ளவேண்டுமா...? “ – என்று கேட்கிறாள் திரௌபதி.
இவ்வாறு ஒரு மகாபாரதக்கதையின் முக்கியமான பாத்திரம் பற்றி மறுவாசிப்பு செய்கிறார் ரகுநாதன். இவ்வாறு எழுதுவதற்கு துணிச்சல் வேண்டும்.
குருஷேத்திர போர்க்களத்தில் எத்தகைய சதிகளின் பின்னணியில் கர்ணன், அர்ஜூனனால் கொல்லப்படுகிறான் என்பதை மகாபாரதக்கதை படித்து தெரிந்துகொள்ளலாம். அல்லது பந்துலுவின் இயக்கத்தில் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படம் பார்த்து அறிந்துகொள்ளலாம்.
போர்க்களத்தில் ‘வென்றிலன் என்றபோதும்’ திரௌபதியின் மனதில் குடியிருந்தவன் கர்ணன்தான் என்று அச்சிறுகதையை முடிக்கிறார் ரகுநாதன். திரௌபதியின் உள்ளத்தை இவ்வாறு சித்திரித்த ரகுநாதன் - பின்னர் பாரதியின் பாஞ்சாலி சபதத்தை முன்வைத்து பாரதி நூற்றாண்டு காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘பாஞ்சாலி சபதம்: உறைபொருளும் மறைபெருளும்’ என்ற தலைப்பில் விரிவான சொற்பொழிவாற்றினார். இது தற்போது தனிநூலாகவும் கிடைக்கிறது.
படைப்பிலக்கியவாதிகள் இவ்வாறு புராண மற்றும் இதிகாசக்கதை மாந்தர்களை காலத்துக்குக்காலம் மறுவாசிப்புக்குள்ளாக்கி வந்திருக்கிறார்கள்.
சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் பற்றிய ஒரு மறுவாசிப்புக்கதையை சுமார் 50 வருடங்களின் முன்னர் கல்கியில் படித்திருக்கின்றேன். ஆனால் அதன் தலைப்பு தற்போது நினைவில் இல்லை.
இளங்கோவடிகள் துறவறம் மேற்கொண்டதற்கு மாதவியும் ஒரு காரணம் என்று அந்தக்கதை சித்திரிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது கல்கி ஆசிரியர் அச்சிறுகதைக்கு ‘இப்படியும் சிந்திக்கலாம்’ என்னும் பொருளுணர்த்தி சிறு முன்னுரையை இரத்தினச்சுருக்கமாக பதிவுசெய்திருந்தது நினைவு.
இந்தப்பின்னணிகளுடன் சர்ச்சைக்கு வந்துள்ள செல்வராஜின் நோன்பு சிறுகதையை பார்க்க முடிகிறது.
ஆண்டாள் பாசுரம் இலக்கியத்தில் பேசுபொருள். ஆண்டாளின் பிறப்பின் இரகசியம் புனைவுகள் சார்ந்திருப்பது. ஐதீகம் சொன்னதையே நம்பியவாறு வாழ்வதும் தொழுவதும் எம்மவர் மரபு. அதிலிருந்து விலகி வேறுவிதமாகச்சிந்தித்தால், கற்பனை செய்து புனைவிலக்கியம் படைத்தால் எதிர்வினைகளும் தவிர்க்கமுடியாதவைதான்.
இவ்வாறு இந்து மற்றும் வைணவ மதங்கள் தவிர்ந்து ஏனைய மதங்கள் பற்றி எழுதவோ பேசவோ முடியாது. மத அவமதிப்புச்சட்டம் குறுக்கே வந்துவிடும். அல்லது சல்மன் ரூஷ்டிக்கு நேர்ந்ததுபோல் அஞ்சாதவாசத்திற்கு தயாராகவேண்டும்.
நாடும் வேண்டாம் மணிமுடியும் வேண்டாம் என்று வனவாசம் சென்ற இராமனின் அயோத்திக்காக எத்தனை உயிர்கள் பலி எடுக்கப்பட்டன என்பதும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வரலாறு. இராம பூமி எனச்சொல்லப்படும் அயோத்தியும் இராமர் பாலமும் நிதிமன்றங்களை சந்தித்தன.
காட்டுக்குப்போன இராமன் தற்காலத்தில்
கோர்ட்டுக்குப்போய் க்கொண்டிருக்கிறான்.
பாவம் ஆண்டாள், அந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும் தற்போது கோர்ட்டுக்கு செல்லப்போகிறாள்.
படைப்பாளியின் கையை கட்டிப்போடுதல் உண்மைக்கு விலங்கிடுதலுக்கு சமம். பெருமாள்முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப் பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நாமக்கல் - அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் பெற்றோர் பெருமாள் - பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்து “பெருமாள் முருகன்” என்னும் பெயரில் கவிதை - சிறுகதை - நாவல் - கட்டுரை எழுதிவருகிறார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். மனஓசை - குதிரை வீரன் பயணம் - ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். ஐந்து நாவல்கள் - மூன்று சிறுகதைத் தொகுப்புகள் - மூன்று கவிதைத் தொகுப்புகள் இவருடைய புனைவு எழுத்துகள். கொங்கு வட்டாரச் சொல்லகராதியைத் தொகுத்துள்ளார். இவர் எழுதிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘பதிப்புகளும் மறுபதிப்புகளும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவர உள்ளது. இரண்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவரது இரண்டு நாவல்களை வ.கீதா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வளவு தகவல்களும் தமிழ் விக்கிபீடியாவில் பதிவாகியிருக்கின்றன. பெருமாள் முருகன் எத்தகைய ஆளுமையுள்ள படைப்பாளி என்பதற்கு சான்றாதாரமாக பின்வரும் தகவல்களையும் சொல்ல முடியும். அவரது படைப்புகள்: நாவல்கள்: ஏறுவெயில் - நிழல் முற்றம் - கூளமாதாரி - கங்கணம் - மாதொருபாகன் - ஆளண்டாப்பட்சி - ஆலவாயன் - அர்த்தநாரி - சிறுகதைத் தொகுப்புகள்: திருச்செங்கோடு - நீர் விளையாட்டு- பீக்கதைகள் - வேப்பெண்ணெய்க் கலயம் .
கவிதைத் தொகுப்புகள் நிகழ் உறவு - கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் - நீர் மிதக்கும் கண்கள் - வெள்ளி சனி புதன் ஞாயிறு வியாழன் செவ்வாய் -
அகராதி : கொங்கு வட்டாரச் சொல்லகராதி கட்டுரைகள்: ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை - துயரமும் துயர நிமித்தமும் - கரித்தாள் தெரியவில்லையா தம்பி - பதிப்புகள் மறுபதிப்புகள் - கெட்ட வார்த்தை பேசுவோம் - வான்குருவியின் கூடு - நிழல் முற்றத்து நினைவுகள் - சகாயம் செய்த சகாயம் -
1. SEASONS OF THE PALM 2004 (கூளமாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா)
2. CURRENT SHOW 2004 (நிழல் முற்றம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா)
3. ONE PART WOMAN 2013 (மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்)
பதிப்புகள்
1. கொங்குநாடு (தி.அ.முத்துசாமிக் கோனார்)
2. பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்)
3. சாதியும் நானும் (அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு)
4. கு.ப.ரா. சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
தொகுப்பாசிரியர்
1. பிரம்மாண்டமும் ஒச்சமும்
2. உடைந்த மனோரதங்கள்
3. சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
4. கொங்குச் சிறுகதைகள்
5. தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
6. உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
7. தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா )
அவர் பெற்ற விருதுகள்
1. விளக்கு விருது 2012
2. கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது 2013
3. கதா விருது 2000
4. கனடா இலக்கியத் தோட்ட விருது - அபுனைவுப் பிரிவு 2011
5. சி.கே.கே அறக்கட்டளை விருது
6. அமுதன் அடிகள் விருது
7. மணல் வீடு விருது
8. களம் விருது
9. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
10. லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது
11. தேவமகள் விருது
பெருமாள் முருகனின் கரங்களைக்கட்டிப்போடும் கைங்கரியமானது உண்மைக்கு விலங்கிடுதலுக்குச்சமம். மகாகவி பாரதி பாஞ்சாலி சபதத்தில் எழுதியதுதான் தற்பொழுது நினைவுக்கு வருகிறது.
என்ன கொடுமையிது வென்று பார்த்திருந்தார்.
ஊரவர் தங்கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள் - விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்
நெட்டைமரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமே
பெருமாள் முருகனை பாதுகாக்கத் துப்பின்றி இருக்கும் தமிழகம் எங்கே செல்கின்றது...? எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் தமிழக படைப்பாளிகள் பெருமாள் முருகனின் விடயத்தில் மௌனம் சாதிப்பதற்கான மனத்தடைகள் என்ன...? 1987 இல் நீலபத்மநாபன் எழுதிய தேரோடும் வீதி நாவலின் எதிரொலியாக அவர் வீதியில் வைத்து தாக்கப்பட்டார். ஒரு காலகட்டத்தில் குமுதம் காரியாலயம் தி.மு.க.வினாரால் தாக்கப்பட்டது. தினகரன் காரியாலயம் அழகிரியின் அடியாட்களினால் தாக்கப்பட்டது. ஆனந்தவிகடனில் கேலிச்சித்திரம் வெளியானதால் அதன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் எம்.ஜீ.ஆர் அதிகாரத்தில் இருந்தபொழுது சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி பல சம்பவங்களை பட்டியலிடலாம்.
இலங்கையில் காணமல்போன ஊடகவியலார்கள் பலர். பலர் கொல்லப்பட்டனர். செய்தி எழுதியவர்களே செய்திகளாகிப்போனார்கள். பிரான்ஸில் அண்மையில் கேலிச்சித்திர பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு சிலர் கொல்லப்பட்டார்கள். அதனைக்கண்டித்து பல இலட்சம் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
உலகெங்கும் இப்படி பேனைக்குப்பயந்து ஆயுதம் தூக்கும் கலாசாரம் வளர்ந்திருக்கிறது. பல திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. பல திரைப்படங்கள் கடுமையான தணிக்கைக்குட்பட்டன.
இலங்கையில் எனது பாட்டி சொன்ன சம்பவம் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. பாட்டியின் சமூகத்தில் முதாதையர் காலத்தில் நடந்த உண்மைச்சம்பவம் அது. பால்யவிவாகம் நடந்த காலத்தில் ஒரு சிறுமிக்கு அவள் பருவம் எய்துமுன்னர் ஒருவருக்கு திருமணம் முடித்துவைக்கப்பட்டாள். சிறிது காலத்தில் அவளது இளம் கணவன் நோயுற்று இறந்தவுடன் அவளை விதவையாக்கி மொட்டை அடித்து மூலையில் இருத்திவிட்டார்கள். சிறிது காலத்தில் அவள் பருவம் எய்திவிட்டாள்.
அவள் வீட்டில் அண்ணன்மார் வியாபாரிகள். மஞ்சள், மற்றும் மலிகைச்சாமான்கள் விற்பனை செய்பவர்கள். ஒரு நாள் பெய்த மழையில் மஞ்சள்காய்கள் இருந்த மூடை நனைந்துவிட்டது. வெய்யில் வந்ததும் அந்த மூடையை பிரித்து மஞ்சளை வெளியே காயப்போட்டிருக்கிறார்கள். அன்றையதினம் அவள் கிணற்றில் குளிக்கச்செல்லுமுன் காயப்போட்டிருந்த மஞ்சளை எடுத்து முகர்ந்து பார்த்திருக்கிறாள்.
இதனைக் கண்டுவிட்ட அவளது அண்ணன்மார் அவளுக்கு திருமண ஆசைவந்துவிட்டது என நினைத்துக்கொண்டு அவள் கிணற்றடியில் குளிக்கும்பொழுது பின்னால் சென்று அவளை கிணற்றுக்குள் தள்ளி விழுத்தி கொலை செய்துவிட்டார்களாம். அந்தப்பெண் போட்ட சாபம் பல தலைமுறைக்கு தொடர்ந்தது என்று எனது பாட்டி சிறுவயதில் சொன்னபொழுது நெடுநாட்கள் அந்த முகம் தெரியாத பெண்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
பாரதியின் மனைவி செல்லம்மாவுக்கும் அவரது மறைவின் பின்னர் மொட்டை அடித்தது சனாதனிகள் கூட்டம். இந்தக்கொடுமை பற்றி ராஜம் கிருஷ்ணன் பதிவுசெய்துள்ளார்.
தற்பொழுது பெருமாள் முருகன் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அவர் அப்படி என்னதான் எழுதிவிட்டார் என்பதை நாவலை படிக்க வாய்ப்பில்லாமல் கிடைத்த தகவலைவைத்து சொல்கின்றேன்.
கவுண்டர் சாதியை சார்ந்த குழந்தை இல்லாத தம்பதிகளான காளி - பொன்னா பற்றியது இக்கதை. குழந்தை இல்லாததால் திருச்செங்கோட்டு தேர் திருவிழாவில் அடுத்த ஆணுடன் உறவு கொண்டு பொன்னா குழந்தை பெறுவது போல் எழுதியதே சர்ச்சைக்கு காரணமாயிற்று - என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பெருமாள் முருகன் சாதியை குறிக்காமல் எழுதியிருந்தால் சிலவேளை தப்பியிருப்பாரா... ? என்ற கேள்வி எழுகிறது. ( இச்சந்தர்ப்பத்தில் கண்ணதாசன் இதழில் முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய உறவுகள் குறுநாவலையும் அதனை பூட்டாத பூட்டுக்கள் என்ற பெயரில் திரைப்படமாக்கிய முள்ளும் மலரும் மகேந்திரனையும் நினைவிற்கொள்க. முடிந்தால் உறவுகள் குறுநாவலை தேடி எடுத்துப் படியுங்கள். அல்லது பூட்டாத பூட்டுக்களை யூ ரியூ பிலாவது பாருங்கள்.)
இலங்கையில் சிங்கள இலக்கிய உலகில் மூத்த எழுத்தாளர் குணதாஸ அமரசேகர. இவர் ஒரு பல் மருத்துவர். பின்னாளில் சிங்கள தேசியம் பேசிய கடும்போக்காளர். அவரது படைப்பு கருமக்காரயோ. நான் சிங்கள படைப்பை படிக்கவில்லை. கருமக்காரயோ திரைப்படமானபொழுது பார்த்தேன். விஜயகுமரணதுங்க - கீதா குமாரசிங்க நடித்த படம். ஒரு குடும்பத்தில் அண்ணன் மனைவியுடன் கதிர்காமம் செல்லும் அவன் தம்பிக்கும் அவளுக்கும் இடையே காதல் உருவாகி அவள் கர்ப்பம் தரிக்கிறாள். அவளுக்கு அவளது கணவனால் குழந்தைப்பாக்கியம் இல்லையென்பதனால் அவ்வாறு நேர்ந்துவிடுகிறது. இறுதியில் பிரசவத்தில் அவளும் குழந்தையும் இறக்கின்றனர். பாண்பேக்கரியில் பாண் விநியோகிக்கும் தொழில் செய்யும் தம்பி இறுதியில் மனமுடைந்து பௌத்த பிக்குவாக துறவறம் செல்கின்றான்.
இந்த சிங்களப்படைப்பு இலங்கையில் சிங்கள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்தது. கதைக்கும் தடை இல்லை - திரைப்படமும் தடைசெய்யப்படவில்லை.
1972 இல் நான் பூரணி இதழில் அந்தப்பிறவிகள் சிறுகதையை எழுதியதும் இலக்கிய ஆர்வலரும் ஆசிரியருமான அநு.வை. நாகராஜன் என்பவர் - நான் மூதுபுத்து நாடகக்கதையை தழுவித்தான் அந்தப்பிறவிகள் எழுதிவிட்டதாக பூரணி இதழில் குற்றம் சாட்டியிருந்தார். அதுவரையில் நான் அந்த சிங்கள நாடகத்தை பார்க்கவில்லை.
மூதுபுத்து நாடகம் பற்றி வெளியில் விசாரித்தபொழுது - சிங்கள நாடக உலகில் Master Piece ஆக கருதப்படும் கலப்பத்தியின் மூதுபுத்து நாடகம் பிரபல்யமானது எனவும் தென்னிலங்கையில் நூறு தடவைகளுக்கு மேல் மேடையேறியிருக்கிறது என்றும் தெரியவந்தது. அந்த நாடகம் இனி எங்கே எப்பொழுது மேடையேறும் எனக்காத்திருந்தபொழுது - நீர்கொழும்பு நகரமண்டபத்திற்கு அந்த நாடகம் வந்தது. சென்று பார்த்தேன். எனது சிறுகதைக்கும் அந்த நாடகத்திற்கும் இடையே வித்தியாசம் காணப்பட்டது.
எனது அந்தப்பிறவிகள் கதையில் வரும் செபஸ்தியான் - சிசிலி தம்பதிக்கு குழந்தைப்பாக்கியம் இல்லை. அவள் கணவனின் தம்பியுடன் உறவுகொண்டு கர்ப்பிணியாகிறாள். அவளுக்கும் தம்பிக்கும் இடையில் நீடித்த உறவு கண்டு தம்பியை அடித்து துரத்திவிடும் அண்ணன் - கர்ப்பிணி மனைவியை பராமரிக்கின்றான். தம்பி வெளியே தனியாக தொழில் செய்யப்போய்விடுகின்றான். ஒரு சந்தர்ப்பத்தில் தம்பி வேறு ஒருவனால் ஒரு சச்சரவில் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவனைக்காப்பாற்ற ஓடுகின்றான் அந்த பாசமுள்ள அண்ணன். அத்துடன் எனது சிறுகதை முடிகிறது. கலப்பத்தியின் மூதுபுத்து நாடகத்தில் மனைவிக்குப்பிறக்கும் குழந்தை தன்னுடையது அல்ல எனத்தெரிந்துகொள்ளும் அண்ணன் - அது தொட்டிலில் உறங்கும்பொழுது அதன் கழுத்தை நெரித்து கொன்றுவிடுகின்றான்.
Master Piece ஆக கருதப்பட்ட அந்த நாடகம் என்னைப்பொறுத்தவரையில் அழிவு வாதத்தையே பேசியது. நீர்கொழும்பில் அந்த நாடகத்தை பார்த்த பின்னர் மேடைக்குப்பின்புறம் சென்று அதற்கு கதை இவசனம், பாடல்கள், எழுதி இயக்கிய கலைஞர் கலப்பத்தியை நேரில் சந்தித்து எனது சிறுகதை பற்றி சொன்னேன். நாகராஜனின் குற்றச்சாட்டையும் சொன்னேன். இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது எனச்சொன்ன கலப்பத்தி - படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக வேறு வேறு விதமாக கதைகளை புனையமுடியும் என்றார்.
இதுகுறித்து இலக்கிய நண்பர் இமையவன் ஜீவகாருண்யன் என்னுடன் உரையாடியபொழுது - மகாகவி உருத்திரமூர்த்தியின் புதியதொரு வீடு கவிதை நாடகத்துடனும் எனது சிறுகதையை ஒப்பிட முடியும் என்றார். இதுவரையில் எனக்கு அந்த நாடகத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டவேயில்லை.
ஒரு கடற்கரையோரத்து மீனவக்குடும்பத்தின் கதை அது. கணவன் கடலுக்கு தொழிலுக்குச்சென்று திரும்பவில்லை. நீண்டநாள் இடைவெளிக்குப்பின்னர் இனி கணவன் திரும்பமாட்டான் என நம்பிக்கொண்டு அவன் மனைவி வேறு ஒரு ஆண்மகனுடன் இணைந்து புதிய இல்லறத்தை தொடருகிறாள்.
காணாமல் போன கணவன் ஒரு இரவு திரும்பி வருகின்றான். அந்தக்குடிசையில் அவள் புதிய வாழ்வு தொடங்கியிருப்பது தெரிந்து - தான் வந்த சுவடே அவளுக்குத்தெரிந்துவிடாமல் இருட்டில் சென்று மறைந்துவிடுகின்றான்.
சிறுநண்டு படம் ஒன்று கரை மீது கீறும் - சிலவேளை கடல் வந்து அதைக்கொண்டு போகும் என்ற ஈழத்து கலை இலக்கிய உலகில் பிரசித்தமான கவிதை இடம்பெற்ற நாடகம் மகாகவியின் புதியதொரு வீடு.
மு.தளையசிங்கத்தின் சிறுகதை தொழுகை. அவருடை முதலாவது சிறுகதைத்தொகுப்பு புதுயுகம் பிறக்கிறது நூலில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் எஸ்.பொன்னுத்துரை கௌரவ ஆசிரியராக இருந்து வெளியான அக்கினிக்குஞ்சுவிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது. ஒரு கள்ளிறக்கும் தொழிலாளியிடம் சோரம்போகும் மேல் சாதிப்பெண் பற்றிய கதை. மேல்சாதிக்கணவன் திருவெம்பாவை காலத்தில் ஆலயத்தில் அதிகாலை வேளையில் தொழுகையில் ஈடுபடும்பொழுது வீட்டில் வேறு ஒரு தொழுகை நடக்கிறது.
கலைத்துவமாக லிங்க தரிசனத்தை வெளிப்படுத்திய கதை தொழுகை. டானியலின் பஞ்சமர் படித்தால் மேலும் பல உப கதைகளை அறியலாம்.
செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று நாவலில் நெடுந்தீவில் பிறந்த சிலரின் கண்கள் குறித்து சுட்டிய தகவல் பற்றிய விமர்சனம் வெளியானபொழுது எழுந்த சர்ச்சை உடனேயே அடங்கிவிட்டது.
பெருமாள் முருகன் ஈழத்து இலக்கியம் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருப்பார் என்பது எமக்குத்தெரியாது. ஆனால், இலங்கையில் மாதொரு பாகன் நாவலுக்கு ஒப்பான பல கதைகள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இலங்கையில் கலை இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நீடிப்பதற்கான ரிஷிமூலம் தெளிவானது. தமிழக அறிவுஜீவிகளும் கலைஞர்களும் படைப்பாளிகளும் போராட வேண்டிய பல சமூகப்பிரச்சினைகள் இருக்கின்றன. அது பற்றி அவர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை. விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மைகளையும் அவர்கள் கண்டறிவதில்லை. அக்கா மகள் என்பவள் யார்...? மகளுக்கு சமமானவள். அவளை மணம் முடிக்க அடியாட்களுடன் வரும் வில்லனை தமிழ்ப்படங்களில் பார்க்கின்றோம். அக்கா மகளை மணம் முடிக்கும் கலாசாரத்தில் ஒன்றியிருக்கும் தமிழகம் எது எதற்கெல்லாமோ போராட்டம் நடத்துகிறது. வேலூரில் இவ்வாறு மணம் முடித்தவர்களுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளை நேரில் பார்த்தேன். அண்ணன் - தங்கை. பாவம் வலது குறைந்த நடக்கவும் முடியாமல் துன்பப்படும் பெரிய பிள்ளைகள். ஏன்...இப்படிப்பட்ட வலது குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன...? என்பதை இந்த புத்திஜீவிகள் நினைத்துப்பார்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாட்டார்களா...? ஏகபத்தினி விரதன் இராமன் அவதரித்த தேசம் - எயிட்ஸ் நோயில் எந்த இடத்தில் நிற்கிறது...?
மருமகளுக்கு பிள்ளைப்பாக்கியம் இல்லையென்றால் அவளை துன்புறுத்தி அடித்து விரட்டுகிறது. தீயிட்டு கொளுத்துகிறது. ஸ்டவ் வெடித்து அவள் இறந்துவிட்டதாக முடித்துவைக்கப்பட்ட விசாரணைகள் எத்தனை...?
இரவல் தாய்மார் நாகரீகம் இன்று தொடரவில்லையா...? கருத்தரிப்பு சிகிச்சைகளின் பின்னணிகள் தெரியாதவர்களா... ? பெருமாள் முருகன் அப்படி என்னதான் சமூக விரோத செயலில் ஈடுபட்டுவிட்டார்....? பிள்ளைப்பாக்கியம் இல்லாத ஒரு பெண் பற்றி கதை எழுதிவிட்டார். அவள் - தான் மலடி இல்லை என்பதை நிரூபித்துவிட்டாள். ஆனால், அவள் கணவன்...? இதுதான் ஆணாதிக்க சமுதாயத்தின் கோபமேயன்றி சாதி சார்ந்த கோபம் அல்ல. மதம் சார்ந்த கோபம் அல்ல.
மாதொரு பாகன் ஆங்கிலத்திலும் வெளியாகிவிட்டதே என்ற கோபம்தான். அதனை வேற்று மொழிக்காரர்களும் படித்துவிடுவார்களே... என்ற கோபம்தான்.
புராணம் - சபரிமலை அய்யப்பன் ( ஹரிஹர சுதன் ) பற்றி என்ன சொல்கிறது....? அவரின் பிறப்பு பற்றிய ரிஷிமூலம் தெரிந்தவர்கள் இராமகோபாலனும் இதர இந்துத்துவா வாதிகளும். பெருமாள்முருகன் விவகாரம் குறித்து எந்தவொரு பெண்ணிய அமைப்புகளும் குரல் கொடுத்திருப்பதாகத் தெரியவில்லை. இந்துத்துவா ஆண்கள்தான் பெருமாள்முருகனுக்கு எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். மொத்தத்தில் பெருமாள் முருகன் என்ற ஆளுமையுள்ள ஆண்மகனின் குரலை நசுக்கியிருப்பது ஆணாதிக்கமே.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.