அன்புள்ள கிரிதரன் அவர்கட்கு, வாசிப்பும் யோசிப்பும் பத்தியில், தோழர் பாலன் எழுதியிருக்கும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூல் தொடர்பாக உங்கள் கருத்துக்களை படித்தேன். இந்திய ஆக்கிரமிப்பு என்பது அரசியல் பொருளாதாரம் மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல. கலை, இலக்கியம், திரைப்படம் முதலான துறைகளிலும் அந்த ஆக்கிரமிப்பு மற்றும் ஒரு அவதாரம் எடுத்திருக்கிறது.
ரோகணவிஜேவீராவின் மக்கள் விடுதலை முன்னணியின் தொடக்ககால (1970 - 1971) வகுப்புகளில் இந்திய விஸ்தரிப்பு வாதம் சொல்லப்பட்டது. இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் உள்ளே வந்தபோதும், அந்த இயக்கம் கடுமையாக எதிர்த்தது. எனினும் அதன் செயல்பாடுகளில் பல குறைபாடுகள், தவறுகள் இருந்தபோதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை முன்வைத்த முன்னோடியாக அந்த இயக்கம் அமைந்திருந்தது.
புளட் இயக்கம் வங்கம் தந்த பாடம் என்ற நூலை வெளியிட்டதன் பின்னணியிலும் அரசியல் இருந்தது. இந்திய ஆக்கிரமிப்பு இன்றும் தொடருகிறது. அது இலங்கையின் கலை, இலக்கிய, திரைப்படத்துறையையும் பாதித்திருக்கிறது. யாரோ முட்டாள்தனமாக தாய் நாடு - சேய் நாடு என்று சொன்னதன் விளைவை இலங்கை இன்றும் அனுபவிக்கிறது.
இந்திய வணிக இதழ்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குரல் எழுப்பியபோது அதனை எதிர்த்து விமர்சித்தவர்களை நீங்களும் அறிவீர்கள். இன்றும் இந்திய தமிழ் நூல்களை இலங்கைக்கு தாராளமாக வர்த்தகரீதியில் இறக்குமதி செய்யமுடியும். அவ்வாறு இலங்கைத் தமிழ்நூல்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யமுடியாது. இந்தச்சட்டம் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இந்த விவகாரம் இன்னமும் இந்திய தமிழ் ஊடகங்களுக்கும் இந்திய தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரியாது. சென்னையில் எம்மவர்கள் தமது நூல்களை புத்தகச்சந்தைக்கு எடுத்துச்செல்வதற்காக இந்திய பதிப்பகங்களின் தயவில்தான் வாழ்கிறார்கள்.
இலங்கையில் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பு நலிவடைந்தமைக்கும் இந்தியத்திரைப்படங்களின் தாராள இறக்குமதிதான் காரணம். சிங்களத்திரைப்படங்கள் பல சர்வதேச தரத்தில் அமைந்தன. அத்துடன் சிங்கள தொலைக்காட்சி நாடகங்கள் பல தரமாக இருக்கின்றன. ஆனால், இலங்கையில் இந்த இரண்டிலும் இலங்கைத்தமிழர் பின்தங்கி நலிவுற்றமைக்கு இந்திய ஆக்கிரமிப்புத்தான் காரணம்.
தொடர்ந்தும் ஈழத்தவர்கள் இந்தியாவின் தொங்குதசையாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் இந்திய எழுத்தாளர்கள் கலைஞர்களிடமும் நீடிக்கிறது என்பதற்கு, இலங்கையில் நாம் 2011 இல் நடத்திய மாநாட்டின்போது வெளியான எதிர்வினைகளைப்பார்த்தோம். தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்கள் இலங்கைசெல்லக்கூடாது என்று அங்கு களம் இறங்கியவர்கள், இந்திய மசாலாப்படங்கள் இலங்கை வந்து சம்பாதிப்பதை பார்த்துக்கொண்டிருந்தனர்.
நீண்டகாலம் மல்லிகை வெளியிட்ட மல்லிகைஜீவா தமிழகம் சென்றால் மல்லிகையை அறிமுகப்படுத்துவதற்கு அவரே இடம் தேடியதை பார்த்திருக்கின்றேன். இந்திய தமிழ் எழுத்தாளர்கள் பலரை அவர் அட்டைப்பட அதிதியாக கௌரவித்தார். அவருக்கு அங்கு கிடைத்த அங்கீகாரம் என்ன? இந்நிலையில் இலங்கையில் தமிழ்த் தேசியத்தலைவர்கள் தமிழகத்திற்கு கம்பளம் விரிக்கின்றார்கள். வன்னியில் பொங்கல் என்றால் வைரமுத்துதான் வரவேண்டியிருக்கிறது. இந்திய ஆக்கிரமிப்பு எம்மவர்களின் கண்களை இன்னமும் திறக்கவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.