பட்டி தொட்டி எங்கும் ஒலித்த " அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு " பாடல் இடம்பெற்ற பட்டிக்காடா பட்டணமா படமும் அவ்வாறே அன்றைய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. 1972 இல் வெளிவந்த இந்தப்படத்தில் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் சிவாஜி நடித்தார். அடங்காத மனைவிக்கும் செல்வச்செருக்கு மிக்க மாமியாருக்கும் சவால்விடும் நாயகன், தனது முறைப்பெண்ணை அழைத்து பாடும் இந்தப்பாடல் அந்நாளைய குத்துப்பாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. விமர்சன ரீதியாகப்பார்த்தால் அந்தப்படமும் பாடலும் பெண்ணடிமைத்தனத்தையே சித்திரித்தது. மக்களிடம் பிரபல்யம் பெற்றதால், இலங்கையில் சிங்கள சினிமாவுக்கும் வந்தது. இன்னிசை இரவுகளில் இடம்பெற்றது. அதே இசையில் ஒரு பாடலை எழுதிப்பாடிய இலங்கைக்கலைஞர் ராமதாஸ் தமிழ்நாட்டில் மறைந்தார்.
" அடி என்னடி சித்தி பீபீ " என்று தொடங்கும் அந்தப்பாடலின் சொந்தக்காரர் ராமதாஸ், இலங்கையில் புகழ்பூத்த கலைஞராவார். மரைக்கார் ராமதாஸ் என அழைக்கப்பட்ட இவர் பிறப்பால் பிராமணர். ஆனால், அவர் புகழடைந்தது மரைக்கார் என்ற இஸ்லாமியப்பெயரினால். சென்னையில் மறைந்துவிட்டார் என்ற தகவலை சிட்னி தாயகம் வானொலி ஊடகவியலாளர் நண்பர் எழில்வேந்தன் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவுடன் இருந்ததாகவும் அறிந்தேன்.
1970 காலப்பகுதியில் இலங்கை வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் தோன்றி அசத்தியிருக்கும் ராமதாஸ், குத்துவிளக்கு உட்பட தமிழ், சிங்களப் படங்களிலும் நடித்தவர். பாலச்சந்தரின் தொலைக்காட்சி நாடகத்திலும் இடம்பெற்றவர். கோமாளிகள் கும்மாளம் நகைச்சுவைத் தொடர் நாடகத்தைக் கேட்பதற்காகவே தமிழ் நேயர்கள் நேரம் ஒதுக்கிவைத்த காலம் இருந்தது. அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பினால் அதனைத் திரைப்படமாக்குவதற்கும் ராமதாஸ் தீர்மானித்தார். வானொலி நாடகத்தில் பங்கேற்ற அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன், அய்யர் அப்துல்ஹமீட் ஆகியோருடன் மரைக்கார் ராமதாஸ் வயிறு குலுங்க சிரிக்கவைத்த தொடர்நாடகம் கோமாளிகள் கும்மாளம். நான்குவிதமான மொழி உச்சரிப்பில் இந்தப்பாத்திரங்கள் பேசியதனாலும் இந்நாடகத்திற்கு தனி வரவேற்பு நீடித்தது. திரைப்படத்தை தயாரிக்க முன்வந்தவர் முஹம்மட் என்ற வர்த்தகர். திரைப்படத்திற்காக ஒரு காதல் கதையையும் இணைத்து , காதலர்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவும் குடும்ப நண்பர்களாக மரைக்காரும் அப்புக்குட்டியும் அய்யரும் உபாலியும் வருவார்கள். இந்தப் பாத்திரங்களுக்குரிய வசனங்களை ராமதாஸே எழுதினார். காதலர்களாக சில்லையூர் செல்வராசன் - கமலினி நடித்தார்கள். நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் வத்தளையில் அமைந்த ஆடம்பரமான மாளிகையின் சொந்தக்காரராக ஜவாஹர் நடித்தார். அதற்கு கோமாளிகை என்றும் பெயர்சூட்டினார் ராமதாஸ்.
கோமாளிகள் கும்மாளம் வானொலி நாடகம் ஒலிபரப்பான காலத்திலேயே வி.எஸ். துரைராஜாவின் குத்துவிளக்கு வெளியானது. இந்தப்படத்தை -- நீர்கொழும்பில் நான் கற்ற ஆரம்பப்பாடசாலை விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்காக எமது பழைய மாணவர் மன்றம் முன்வந்தவேளையில் அதற்காக நிதியுதவிக் காட்சிக்கு காண்பித்தோம். அப்படத்தில் நடித்த கலைஞர்களையும் அழைத்து இடைவேளையில் பாராட்டினோம். அதற்கான அழைப்பிதழுடன் ராமதாஸை அவர் கொழும்பு யூனியன் பிளேஸில் பணியாற்றிய கொலோனியல் மோட்டர்ஸ் நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அன்றுதான் அவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. எமது அழைப்பை ஏற்று நீர்கொழுப்புக்கு வந்தார்.
அன்று முதல் நண்பர்களாகப் பழகினோம். எமது பாடசாலைக்கு இதுபோன்ற நிதியுதவிக்காட்சிகளுக்கு தம்மால் முடிந்தவரையில் உதவுவதற்கும் தாம் தயாராக இருப்பதாகச்சொன்னார். அவ்வாறே மீண்டும் எமது பாடசாலை அபிவிருத்திக்காக நடத்தப்பட்ட ரிதம் 76 என்ற கலை நிகழ்ச்சிக்கு தமது கோமாளிகள் குழுவினரையும் அழைத்துவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ராமதாஸ் , கொழும்பில் அங்கம் வகித்த நாடக மன்றத்தின் காப்பாளராக விளங்கிய மருத்துவர் ஜெயமோகன், அச்சமயம் நீர்கொழும்பு பெரியாஸ்பத்திரியில் பணியாற்றியதுடன், எமது பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளராகவும் இருந்தமையால் ராமதாஸ_டன் மேலும் சில சிங்கள கலைஞர்களையும் வானொலிக் கலைஞர்களையும் அழைக்கமுடிந்தது. சிங்களத் திரைப்பட நடிகர்கள் ரவீந்திர ரந்தெனிய, டோனி ரணசிங்க, எடி ஜயமான்ன, சிரியாணி அமரசேன மற்றும் கே.எஸ்.ராஜா, மரைக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன், அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோருடன் கோமாளிகள் படத்தின் தயாரிப்பாளர் மொஹமட்டும் வருகை தந்திருந்தார். அனைவரும் எதுவித சலுகைகளோ சன்மானங்களோ பெறாமலேயே வந்து ரசிகர்களை மகிழ்வித்து, எமது பாடசாலையின் அபிவிருத்திக்கு உதவினார்கள்.
ராமதாஸ் அப்பொழுது குடும்பத்தினருடன் கொழும்பு புறநகரில் பொல்ஹேன்கொடவில் வசித்தார். இவருடைய வீட்டுடன் இணைந்திருந்த மற்றைய வீட்டில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களும் தமது குடும்பத்தினருடன் வசித்தார். அதனால் ராமதாஸை சந்திக்கும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன. அதன் பலனால் கோமாளிகள் படம் வெளியானபொழுது மல்லிகைக்கு ஒரு விளம்பரமும் பெற்றுக்கொள்ள முடிந்தது. விளம்பரம் தந்து உதவியவருக்கு உபகாரமாக அந்தப்படம் பற்றிய எனது ரசனைக்குறிப்புகளை மல்லிகையில் எழுதியிருக்கின்றேன். ராமதாஸ் பழகுவதற்கு இனிமையான எளிமையான மனிதர். இலங்கை வானொலி வர்த்தக சேவையிலும் தேசிய சேவையிலும் பல நாடங்களில் நடித்திருக்கும் அவர், எனது சுமையின் பங்காளிகள் சிறுகதையை கே.எம். வாசகர் வானொலி நாடகமாக தயாரித்து ஒலிபரப்பியபோது பிரான்ஸிஸ் பாத்திரமேற்று நடித்தார். பிரதேச பேச்சுமொழி வழக்கில் ஏற்கனவே பேசி நடித்து தேர்ச்சி பெற்றிருக்கும் ராமதாஸ_க்கு, நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்களின் பேச்சுமொழியும் இலகுவாக வந்தது. \
கோமாளிகள் திரைப்படம் இலங்கையில் பல பிரதேசங்களில் திரைக்கு வந்தவேளையில் எதிர்பாராத விதமாக அவருடனும் இதர கலைஞர்களுடனும் யாழ்தேவியில் பயணமாகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்றுதான் அவருடன் கொழும்பு கோட்டையிலிருந்து கிளிநொச்சிவரையில் நீண்ட பொழுதுகள் உரையாடினேன். கிளிநொச்சியில் அன்று மாலை பிரதான மைதானத்தில் நடைபெறவிருந்த கலைநிகழ்ச்சிக்கு அவருடைய தலைமையில் கோமாளிகள் குழுவினருடன் நடிகை மணிமேகலையும் பொப்பிசைப்பாடகர் ஏ.ஈ. மனோகரனும் வந்தனர். யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கிய நிகழ்ச்சிக்காக நானும் நண்பர் மேமன்கவியும் புறப்பட்டிருந்தோம். நாம் ஆசனம் பதிவுசெய்திருந்த பெட்டியிலேயே இந்தக்கலைஞர்களும் வந்தார்கள். அதில் வந்த இதர பயணிகள் மனோகரனை பாடச்சொல்லி அமர்க்களம் செய்துகொண்டிருந்தமையால் அவரும் பாடினார், ஆடினார். அந்த அமளிக்கு மத்தியிலும் நானும் ராமதாஸ_ம், மேமன்கவியும் இலக்கியம், நாடகம், திரைப்படம் பற்றி உரையாடினோம். அப்பொழுது ராமதாஸ் தம்பதியரின் மகள் நாகப்பிரியா கையில் தவழும் குழந்தை. தான் செல்லும் ஊர்களுக்கெல்லாம் மனைவி குழந்தையுடன் வரும் ராமதாஸ் வெறும் கலைஞன் மட்டுமல்ல பொறுப்புள்ள சிறந்த குடும்பத்தலைவன்.
யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் அப்பொழுது அவருடைய கோமாளிகள் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு படச்சுருள் சற்று மங்கலாக இருப்பதாக தியேட்டர் நிருவாகம் ராமதாஸ_க்கு தெரிவித்திருந்தது. தனது வேலைப்பளுவுக்கு மத்தியில் முதல் நாளே ஸ்ரூடியோவுக்கு ஓடிச்சென்று புதிய பிரிண்ட் எடுத்துக்கொண்டு குடும்பத்துடனும் கலைஞர்களுடனும் அன்று ரயிலேறினார். அதனை யாழ்ப்பாணத்தில் வின்சர் தியேட்டரில் சேர்ப்பிப்பதற்காக என்னிடம் ஒப்படைத்தார். அந்தக்கலைக்குழுவினர் கிளிநொச்சியில் இறங்கினர்.
ராமதாஸ் தந்த கோமாளிகள் திரைப்படத்தின் குறிப்பிட்ட புதிய பிரிண்ட் படச்சுருளை யாழ். வின்சரில் அன்று மதியமே சேர்ப்பித்தேன். ராமதாஸ் - கோமாளிகள் திரைப்படம் தந்த வெற்றியைத்தொடர்ந்து ஏமாளிகள் என்ற திரைப்படத்திற்கும் கதை - வசனம் எழுதி தயாரித்தார். ஆனால், கோமாளிகளுக்கு கிடைத்த வரவேற்பு ஏமாளிகளுக்கு கிட்டவில்லை. கோமாளிகள் ராமதாஸ் குழுவினர் ஏமாளிகள் குழுவினராகிவிட்டனர் என்றும் விமர்சனங்கள் வந்தன.
இலங்கையில் தமிழ்த்திரைப்பட முயற்சி விஷப்பரீட்சைதான் என்பதை அனுபவத்தில் புரிந்துகொண்ட மற்றும் ஒரு கலைஞர்தான் ராமதாஸ். எனினும் தமக்கெல்லாம் படம் எடுக்கும் எண்ணக்கருவை விதைத்தது இலங்கையில் முதலில் வெளிவந்த தோட்டக்காரி படம்தான் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
இலங்கை வானொலி, நாடக மேடைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் முதலானவற்றில் தோன்றி தனக்கென தனி முத்திரை பதித்த கலைஞன், தமிழில் பல பேச்சுமொழி வழக்கில் பேசி அசத்திய கலைஞன், அந்திமகாலத்தில் சென்னையில் மௌனமே மொழியாக வாழ்ந்து மறைந்துவிட்டார்.
தொலைக்காட்சியின் வருகை ராமதாஸ் போன்ற வானொலிக் கலைஞர்களின் முகவரியை தொலைத்துவிட்டது. திரையில் தோன்றி முகவரியை தக்கவைத்துக்கொள்வதற்கும் வக்கற்ற நிலைக்கு இலங்கையில் தமிழ்த்திரையுலகும் தமிழ்த்தொலைக்காட்சி நாடகத்துறையும் தத்தமது முகவரிகளை தொலைத்துவிட்டன. அதற்கான பின்னணிகள் பற்றி அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அயல்நாட்டின் ஆக்கிரமிப்பில் இலங்கையில் நலிவுற்ற தமிழ் கலைத்துறைகள் இவை.ராமதாஸின் குடும்பத்தினருக்கும் அவருடன் இணைந்து பயணித்த கலையுலக நண்பர்களுக்கும் வெகுதொலைவிலிருந்து எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.