சர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் நா. சண்முகதாசன்!
தோழர் சண்முகதாசன் நூற்றாண்டு நினைவாக....
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.
1960 - களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும் - சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது - இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் 'திரிபுவாதம்' எனக் கண்டித்தார்.
குருசேவ் முன்வைத்த ‘'சமாதான சகவாழ்வு” என்ற சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை - புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன. 1964-ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க - வாலிபர் சங்க - கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.