பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு!

1. நல்லூர்க் காலம் -  நகர அமைப்பு மற்றும்  கட்டடக்கலை

நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக்  குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

"...முத்திரைச் சந்தை ஏறத்தாழ  இதன் மையத்தில் அமைந்துள்ளது.  எனினும், அக்கால நல்லூர்  ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ,  அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை  இருந்தது எனறோ  எடுத்துக்கொள்ள முடியாது.  ஒல்லாந்தர் கால நல்லூர்  ஒழுங்கற்ற வடிவம்  கொண்டதாக இருந்ததையே  அக்கால நிலப்படங்கள்  காட்டுகின்றன.  தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.  தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." ('யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) , பக்கம் 69)

நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ , சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற  முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர் , இவ்விடயத்தில் கட்டடக்கலை பற்றி, நகர அமைப்புப் பற்றிய வாஸ்துசாத்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். ஏனென்றால் நாம் இன்று வரை வாஸ்துசாஸ்த்திரம் பார்த்துத்தான் வீடுகளைக் கட்டுகின்றோம். இவ்விதிகளைத்தான் எம் முன்னோரும் நகரங்களை அமைக்கையில் பின் பற்றினார்கள். இவ்விதிகளின்படி தலைநகர்களை அமைக்கும்போது நகரின் மையத்தில் கிழக்கு - மேற்காக, வடக்கு - தெற்காக இரு பிரதான பாதைகள் இருக்க வேண்டும் எனவும், நகரம் சதுர வடிவில் (அவ்விதம் அமைக்க முடியாத சூழலில் செவ்வக வடிவில் ) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் இவ்விதம் அமைக்கப்படும் தலைநகரைச்சுற்றி மதில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான பாதைகள் மதில்களின் வாசல்களை சந்திக்குமிடத்துக்கண்மையில் ஒவ்வொரு திக்கிலும் ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் இவ்விதிகள் குறிப்பிடுகின்றன.  இவ்விதமான பண்டைய நகர அமைப்பு விதிகளை ஆராய்ந்து , தென்னிந்திய , வட இந்திய நகரங்கள் , ஆலயங்களையெல்லாம் ஆராய்ந்திருக்கும் Architecture of the World: India  என்னும் நூல் இவற்றை ஆராய்வதற்குரிய சிறந்த உசாத்துணை நூல்களில் ஒன்று. (Andreas Wolwahsen , Henri Stierlin (Editor)  இந்நிலையில் மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாத்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அதற்காக உறுதியான ஆதாரங்கள் இல்லையென்று குறிப்பிட்டிருக்கலாம் என்று மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.

மேலும்  ஒல்லாந்தர் , ஆங்கிலேயர் காலத்தில் நல்லூர் ஆனது கிராமம் ஆகச் சுருங்கி விட்டது என்பதையும் மயூரநாதன் அவர்களின் ஆவணங்கள் மூலம் எடுத்துக்காட்டியிருக்கின்றார். ஆனால் போர்த்துக்கேயர் காலத்து ஆவணங்களை ஆராய்ந்து The Kingdom of Jafanapatam 1645' நூலை எழுதிய P.E.Peiris ஓரிடத்தில் 'நல்லூர் பட்டணம்'  (Nallur Patanam) என்று  குறிப்பிட்டிருக்கின்றார்.  இது எதைக் காட்டுகின்றது என்றால் போர்த்துக்கேயர் காலத்தில் பட்டணமாக இருந்த நல்லூர் ஒல்லாந்தர் காலத்தில் கிராமமாகவும், சுற்றுலாத்தலமாகவும் மாறி விட்டிருக்கையில் ,  போர்த்துக்கேயரால் நல்லூர் ராஜதானி நகர ஆலயங்கள், கட்டடங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் , நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒல்லாந்தரின் ஆவணங்களின் காலகட்டத்தில் நல்லூர் நகரத்தின் வீதிகள் எல்லாம் முக்கியமிழந்து , சிதைந்திருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அவர் இவ்விடயத்திம் முடிந்த முடிபாகக் கருத்தினைத் தெரிவித்திருந்தாலும், அவரது சிறப்பு மிக்க இந்நூல் , நல்லூர் ராஜதானி ஒழுங்கான வடிவில் அமைந்திருப்பதையே வெளிப்படுத்தும் தகவல்களைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன். நல்லூர் ராஜதானி சதுர வடிவில் அமைந்திருக்க வேண்டும் என்பதும், அதன் பிரதான வீதிகளாக வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு வீதிகள் அமைந்திருக்க வேண்டும் என்பதையே என் ஆய்வு நூலில் தெரிவித்திருந்தேன்.  அவ்வீதிகளைப் பற்றிய மயூரநாதனின்  நூலிலுள்ள தகவல்களும் அவற்றையே உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகின்றது. 

மேலும் மயூரநாதனின் ஆய்வில் கிழக்கில் கோட்டை வாசல், கோட்டையடி ஆகிய காணிப்பெயர்களைக்கொண்ட  பகுதிகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனது ஆய்விலும் அக்காணிப்பகுதிகளைக்குறிப்பிட்டு, அவை கோட்டையின் கிழக்கு வாசல் இருந்திருக்கலாம் என்பதைக்  குறிப்பிடுகின்றன  என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.  மேலும் யாழ்ப்பாண வைபவமாலை சட்டநாதர் கோயிலுக்கு அண்மையில் வடக்கு வாசல் இருந்ததையும், வரலாற்றுக் குறிப்புகள் , யாழ்ப்பாண வைபவமாலை உட்பட, வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அண்மையில் மேற்கு வாசல் இருந்ததையும்   குறிப்பிடுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, இவற்றின் விளைவாகத் தெற்கு வாசலொன்று கையிலாசநாதர் கோயிலுக்கு அண்மையில் இருந்திருக்கலாம் என்ற ஊகத்துக்கு, தர்க்கபூர்வமான முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால் அதற்கான வரலாற்றுக்  குறிப்புகள் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் , இது பற்றிப் போர்த்துக்கேயரின் குறிப்புகளை மேலும் ஆராய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன்.  மயூரநாதனின் இந்நூலிலும் 1560 ஆம் ஆண்டுப் போர்த்துகேயரின் படையெடுப்பின்போது மேற்கு வாசல் இருந்ததையும், அங்கு ஒரு மதில் இருந்ததையும் போர்த்துக்கேயரின் குறிப்புகள் தெரிவிக்கின்றன என்னும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவையெல்லாம் நல்லூர் இராஜதானியானது மதிலுடன் சூழந்த இராஜதானியாக இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. இவ்விதம் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு  கோட்டை நகரமாகவும், ஆலய நகரமாகவும்  இருந்திருக்கலாம் என்பதுவே என் ஆய்வின் முடிவுகள். இவ்விடயம்  பற்றி வெளியான முதலாவது நூல்  'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல். 

மயூரநாதன் மேற்படி நூலில் கோட்டை வாசல்களைப்பற்றிய வரலாற்றுக்குறிப்புகளைக் கவனத்திலெடுக்கவில்லை என்பதை உணர முடிகின்றது.  கிழக்கிலுள்ள கோட்டை வாசல், கோட்டையடி, யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடும் வடக்கு வாசல், மேற்கு வாசல், போர்த்துக்கேயரின் குறிப்புகள் குறிப்பிடும் கோட்டை மதில் , நகர அமைப்பு பற்றிய வாஸ்துசாத்திர் விதிகள் போன்றவற்றையெல்லாம் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பைப்பொறுத்த வரையில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. அவற்றையும் கவனத்திலெடுத்திருந்தால் ஒரு வேளை மயூரநாதனின்  நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் வடிவம் பற்றிய கருத்துகளிலும் மாற்றங்கள் இருந்திருக்குமென்று கருதுகின்றேன்.  

இந்நூலைக் குறிப்பிட்டு, இந்நகர் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் தகவல்களையும் மயூரநாதன் இந்நூலில் தெரியப்படுத்தியிருக்கின்றார். மயூரநாதன் இப்பகுதிகளில் குறிப்பிட்டுள்ள மேலதித்தகவல்கள் முக்கியமானவை.  நல்லூர் ராஜதானியின் மையத்தில் முத்திரைச் சந்தை இருந்தது, அதனை மையமாக வைத்து ராஜதானி நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் வகையில் கிழக்கு - மேற்கு, வடக்கு - தெற்கு வீதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது என்பது என் ஆய்வின் முடிவு. வேறு யாருமே இவ்விதம் நல்லூர் ராஜதானி  அமைந்திருந்தது என்று ஆய்வு மூலம் வந்தடைந்ததில்லை. மயூரநாதன் இப்பிரிவுகளைக் கவனத்திலெடுத்து அப்பகுதிகளை ஆராய்ந்துள்ளார்.

 இந்நூலின் பக்கத்தில் உள்ள படம் 11இல்  நல்லூர்க் காலத்தில் இருந்திருக்கக் கூடிய தற்கால வீதிகள் என்று குறிப்பிட்டு வெளியிட்டிருக்கும் நிலவரை படத்தில் (பக்கம் 79) நான் என் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் வடக்கு, தெற்கு , கிழக்கு - மேற்காக வீதிகள் முத்திரைச் சந்தை அருகாகச் செல்வதைக் காண முடிகின்றது.  இவ்விதமான வீதி அமைப்பை எங்கிருந்து மயூரநாதன் பெற்றார் என்பதைக் குறிக்கவில்லை என்பதால் எனக்குச் சிறிது குழப்பம். அதனை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும். ஏனென்றால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் அவர் இவ்விதமானதொரு ஒழுங்கினை வலியுறுத்தவில்லை என்பதைக் காணலாம். 

நூலின் 'அறிமுகம்' குறிப்பு பற்றி..

மேலும் நூலின் அறிமுகம் பகுதியில் மயூரநாதன் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து பற்றியும் இங்கு சுட்டிக்காட்டலாம். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

"யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டுள்ள எல்லைக்கோயில்களின் அமைவிடங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது நல்லூர் நகரம் முத்திரைச்சந்தையை மையமாகக் கொண்டதும், ஒரு கிலோ மீற்றர் ஆரை கொண்டதுமான  வட்டத்துக்குள் அடங்கி விடுவதைக் காணலாம்" (பக்கம்  40)

யாழ்ப்பாண வைபவமாலையில் எங்கும் நல்லூர் ராஜதானியின் அமைப்பு பற்றிக் குறிப்பிடப்படவில்லை. நகரின் நான்கு திக்குகளிலும் ஆலயங்கள் அமைக்கப்பட்ட தகவல்கள் கூறப்பட்டுள்ளன. முத்திரைச் சந்தை பற்றி எங்குமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. முத்திரைச் சந்தை பற்றி முதன் முதலாகப் போர்த்துக்கேயரின் குறிப்பொன்றில்தான் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள நல்லூர் நகரத்தில் ஆலயங்கள்  அமைந்துள்ள இடங்களைப் பார்த்தால் அவை வேறான  இடங்களில் கட்டப்பட்டிருப்பதால் அவை முத்திரைச் சந்தையை மையமாகக்கொண்டிருக்கவில்லை. தற்போதுள்ள நல்லூர் நகரத்து ஆலயங்களை வைத்துப்பார்த்தால் எவ்வித ஒழுங்கும் தெரியாது. முதன் முறையாக ஒழுங்கற்றுக் கிடக்கும் நல்லூரில் , நல்லூர் ராஜதானியாகவிருந்தபோது முத்திரைச் சந்தையை மையமாக வைத்து நகர அமைப்பு சதுர வடிவில் அமைந்திருந்தது என்றும்,  அதனை ஊடறுத்துச் செல்லும் இரு பிரதான வீதிகளும் நகரின் கோட்டையைச சந்திக்கும் வாசல்கள் இருந்தன, அவற்றுக்குப் பாதுகாப்பாக ஆலயுங்கள் இருந்தன என்பது  எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வின் முடிவுகள். எனவே முத்திரைச் சந்தையை , அதன் மையத்தைப் பற்றிக் கருத்துக் கூறும் எவரும் நிச்சயம் எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வினைக் குறிப்பிடுவது அவசியம். மேற்படி நூலின் அறிமுகம் பகுதியில் இடம்  பெற்றுள்ள மயூரநாதனின் கூற்று பின்வருமாறு இருந்திருந்தால் பொருத்தமாகவிருந்திருக்கும்:

"யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டுள்ள எல்லைக்கோயில்களின் அமைவிடங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, வ.ந.கிரிதரன் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வில் குறிப்பிடுவது போல் ,  நல்லூர் நகரம் முத்திரைச்சந்தையை மையமாகக் கொண்டதும், ஒரு கிலோ மீற்றர் ஆரை கொண்டதுமான  வட்டத்துக்குள் அடங்கி விடுவதைக் காணலாம்" 

அதே சமயம் இவ்விதம் குறிப்பிடுவது என் ஆய்வின் முடிவுகளைச் சுட்டிக்காட்டுவதாகவு, ஆமோதிப்பதாகவுமிருந்திருக்கும். ஏனென்றால் ஒழுங்கற்றுக் கிடக்கும் தற்கால நல்லூரிலிருந்து ஒழுங்கான நகர அமைப்பினைக்  கொண்டதாக நல்லூர் ராஜதானி விளங்கியது என்ப்துதான் என் ஆய்வின் பிரதானமான முடிவு. 

அதே சமயம் அறிமுகம் பகுதியில் இவ்விதம் கூறும் மயூரநாதன்  இன்னுமோரிடத்தில்   "முத்திரைச் சந்தை ஏறத்தாழ  இதன் மையத்தில் அமைந்துள்ளது.  எனினும், அக்கால நல்லூர்  ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ,  அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை  இருந்தது எனறோ  எடுத்துக்கொள்ள முடியாது. " என்று கூறுவது ஏன் என்பது சிறிது குழப்பத்தைத் தருகின்றது. அதை மயூரநாதனதான் விளக்க வேண்டும்.

ஒல்லாந்தர் காலத்துச் செமினரி மற்றும் நல்லூர் பெரிய முருகன் ஆலயம் பற்றி...

இந்நூலில் செம்மணிப் பகுதியில் மிகவும் விரிவாக ஒல்லாந்தர் காலத்தில் இருந்த செமினரி பற்றி மிகவும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் மயூரநாதன். மிகவும் பெரிய அளவில் அமைந்திருந்த செமினரியில் செம்மணி  வீதிப்பக்கமாக அமைந்துள்ள பகுதியில் அக்காலத்தில் கிறிஸ்த்தவ ஆலயம் இருந்ததையும், வடக்குப் பகுதியில் யமுனாரி இணைந்திருப்பதையும் காண முடிகின்றது.  அக்கிறிஸ்தவ ஆலயமிருந்த பகுதியில்தான் தற்போதுள்ள பெரிய கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. 

இப்படம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மயூரநாதன் இதனைத்  தேடி எடுத்து இந்நூலில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. அவரது தேடலில் ஆழத்தையும்  வெளிப்படுத்துகின்றது. அடுத்தது செமினரி பற்றியும், யமுனாரி பற்றியும், பழைய கந்தசாமி ஆலயம் பற்றியும் அவர் குறிப்பிடும் முக்கிய விடயங்கள் வருமாறு:

1. செமினரி மூன்றரை ஏக்கருக்குச் சற்று அதிகமான நிலப்பரப்பு மிக்கது.
2. வரைபடங்கள் நெதர்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ளன.
3. செமினரிக் கட்டடம் அற்புதமானது என கட்டடளைத் தளபதி சுவார்டெக்ரூன் கூறியிருக்கின்றார் (17ஆம் நூற்றாண்டின் இறுதில் வாழ்ந்தவர்)
4. வரைபடத்தில் போதகரின் வீடு , தேவாலயம் , பாடசாலை 24 மாணவர்கள் படிக்க, ஒல்லாந்த ஆசிரியரின் வீடு, 200 மாணவர்களுக்கான் பொதுப்பாடசாலை என 5 கூறுகள் இருந்தன. 

பூங்காக்கள்  , குளிக்க நீர்த்தொட்டிகள் என நன்கு வடிவமைக்கப்பட்டிருந்த இச்செமினரி ஒல்லாந்தரின் கட்டடக்கலை, நில அமைப்பு வடிவமைப்புக் கலை ஆகியவற்றின் திறமையை வெளிப்படுத்துவன.

இச்செமினரியின் வடக்குப் பகுதியில் ப வடிவக் கேணியான யமுனாரி இணைக்கப்பட்டிருந்ததை தள வடிவமைப்புப்படம் புலப்படுத்துகின்றது. 

'தற்போது யமுனாரி , புனித யாக்கோபு தேவாலயத்தையும் அண்டி இருப்பதாகச் சொல்லப்படும் அத்திவார எச்சங்கள் மேற்படி செமினரியினுடையதாக இருக்கக்கூடும்' என்கின்றார் மயூரநாதன். 

'நல்லூர்க் காலத்தில் யமுனாரிக் கேணி இருந்திருந்தாலும் , அதைச் செமினரியின் பகுதியாகப் பயன்படுத்தியதால்  , செமினரியைக் கட்டியபோது திருத்தி மேம்படுத்தியிருப்பர் என்கின்றார். செமினரின் தளவரைபடத்தில் கேணி பகர வடிவாக இருக்கின்றது  (பக்கம்  218, படம் 63) ப வடிவின் இடையில் கேட்போர் கூடமும் உள்ளது.  கேட்போர் கூடத்தை நீக்கினால் ப வடிவம். கேட்போர் கூடத்தையும் உள்ளடக்கினால் செவ்வக வடிவம். இது பற்றி மயூரநாதன் 'முன்னர் செவ்வக வடிவாக இருந்த கேணி, ஒல்லாந்தர் காலத்தில்கேட்போர் கூடத்தையும் கட்டியதால் ப வடிவமாக மாறியிருக்கவும் வாய்ப்புண்டு' என்கின்றார். 

செமினரி வரை படமும், யமுனாரி பற்றிய மயூரநாதனின் கருத்துகளும் முக்கியமானவை, நூலின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாக நான் இனங்காண்பேன். அவரது தேடலையும் , ஆய்வுச் சிறப்பையும் வெளிப்படுத்தும் அம்சங்கள்.

செமினரியின் பெரிய அளவிலான வரைபடத்தை நோக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள்:

என் நல்லூர் ராஜதானி ஆய்வில் , பாதிரியார் குறிப்பிட்டது போல் நல்லூர் முருகன் ஆலயம் இருந்த பகுதியிலேயே கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

போர்த்துக்கேயரின் 1560 படையெடுப்பை விபரிக்கும் ஆவணங்களில் நல்லூர் முருகம் ஆலயம் பெரிய கோயில் என்று விபரிக்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் பகோடா என்றழைத்தார்கள். அதே சமயம் கோயில்களை விட்டு மன்னன் வடக்கு அல்லது கிழக்காக ஓடினான் என்னும் போர்த்துக்கேயரின் கூற்றுக்களில் இருந்து நல்லூரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்திருக்கலாம் என்பதையும் உணர முடிகின்றது என்பார் மயூரநாதன்.

எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால் யமுனாரிக்கு அருகில் இருக்கும் அத்திவாரச்சிதைவுகள் செமினரியினுடையதாக மட்டும் ஏன் இருக்க வேண்டும்? ஏன் பெரிய நல்லூர் முருகன் கோயிலினுடையதாகவும் இருக்கக் கூடாது? அந்தக் கோயில் பெரியது. மதில்களுடன் கூடிய பாதுகாப்பு மிக்கதாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் யாழ்ப்பாண இராச்சியத்தை 1619இல் வெற்றி கொண்டதும் தளபதி ஒலிவேறா முதலிரு ஆண்டுகள் நல்லூர் பெரிய கோயிலில் இருந்துதான் நாட்டை நிர்வாகித்து வந்தான் போலும்.  அதன் பின் அடிக்கடி தமிழரின் எதிர்த்தாக்குதல்கள் தஞ்சை மன்னன் உதவியுடன் நடைபெறவே , பாதுகாப்பு கருதி பண்ணைத்துறையில் அமைத்த கோட்டைக்குச் செல்கின்றான் என்பதையும் இந்நூல் எடுத்துக் காட்டுகின்றது.

மேலும் யமுனாரி பற்றிப் பின்வருமாறு யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடும்:

'.. முப்புடைக் கூபமும் உண்டாக்கி, அக்கூபத்தில்  யமுனாநதித்தீரத்தமும் அழைப்பித்துக் கலந்து  விட்டு.." (யாழ்ப்பாண வைபவமாலை, முதலியா குல. சபாநாதன் பதிப்பு, பக்கம் 26) 

இங்கு மயில்வாகனப்புலவர் யமுனாரி என்று கேணியை அழைக்காவிட்டாலும்,ம் அதில் இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றான யமுனா நதியின் தீர்த்தத்தை வரவழைத்துக் கலந்ததைக்  குறிப்பிடுகின்றார். ஏன்?  அது அருகில் இருந்த நல்லூர் முருகன் ஆலயத்தின் தீர்த்தக்கேணியாக இருந்திருக்கலாம் என்பதைத்தான் இத்தகவல் சுட்டிக்காட்டுகின்றது. மயில்வாகனப்புலவர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில் அக்கேணி புனிதக் கேணியாக விளங்கியிருக்கின்றது என்பதைத்தான் அவரது யமுனா நதித்தீர்த்தம் பற்றிய கூற்றும் வெளிப்படுத்துகின்றது. 

அண்மையில் யாழ் கோட்டைப் பகுதியில் நடந்த நவீனத்தொழில் நுட்பம் பாவித்து நடத்திய தொல்லியல் ஆய்வுகள் போல் ஏன் யமுனாரியை அண்டிய பகுதிகளிலும் நடத்தக் கூடாது. அதன் மூலம் பழைய நல்லூர் முருகன் கோயில்களின் , செமினரியின் அத்திவாரச் சிதைவுகளைக் காணக்கூடும்.

[பகுதி இரண்டு மேலும் தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்