அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது..! 1972 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரையரங்கில் 'குத்துவிளக்கு" என்ற ஈழத்துத் திரைப்படம் வெளியாகியது. அதனைப் பார்ப்பதற்கு நண்பர்களுடன் போயிருந்தேன். திரைப்படம் 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே.." என்ற பாடலுடன் ஆரம்பமாகியது. கணீரென்ற குரலில் அந்தப் பாடல் தொடங்கியதும் 'ஆகா… அற்புதமான குரலில் பாடல் ஒலிக்கிறதே…" என வியந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி மகிழ்ந்தது இன்றுபோல் எனக்கு ஞாபகமிருக்கிறது..! ஆமாம்.. அற்புதமாக அந்தப் பாடலைப் பாடியவர்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்று இசைத் தயாரிப்பாளராக விளங்கிய சங்கீத பூசணம் எம். ஏ. குலசீலநாதன். பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமிய நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விளங்கிய எமது குடும்ப நண்பர் ஏ. சிறிஸ்கந்தராசாவின் கொழும்பு - நாரங்கன்பிட்டி தொடர்மாடி வீட்டில் பலமுறை குலசீலநாதனைக் கண்டு பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வேளைகளில் எமது வேண்டுகோளுக்கிணங்க அவர் பல பாடல்களைப் பாடுவார். சகோதரர் வி. ரி. தமிழ்மாறன் அவரிடம் எழுதிக்கொடுத்திருந்த 'கீற்றோலைத் தென்றலிலே கீதமொன்று கேட்குதையா.." போன்ற சில மெல்லிசைப் பாடல்களையும் அவர் பாடிக்காட்டுவார். நாம் அவரது இசைமழையில் நனைந்து மகிழ்வுறுவோம். அவர் எங்கள் அன்புக்குரிய 'பல்கலை வேந்தர்" சில்லையூர் செல்வராசனின் உற்ற நண்பர். இருவரும் ஒன்றாகவிருந்து பேசிக்கொள்வதை, பாடி மகிழ்வதைப் பார்ப்பதே ஆனந்தம். சில்லையூர் கவித்தூறல் சொட்ட, இவர் அதனை இசைமழையாகப் பொழிவார். ஆகா… அதனைக் கேட்பது தான் எத்தனை ஆனந்தம்..!
தமிழகத்தில் கவியரசர் கண்ணதாசன் மாதங்களின் பெயர்களைக் கோர்த்து ஒரு பாடலை எழுதியிருந்தார். சில்லையூரிடம் இதனைக் குறிப்பிட்ட நண்பர்கள், 'இப்படி ஒரு பாடலை நீங்கள் எழுத முடியுமா..?" எனக் கேட்டுவிட்டனர். பல்கலை வேந்தர் - தான்தோன்றிக் கவிராயர் சில்லையூர் செல்வராசனுக்கு இது பெரிய வேலையா..? உடனே எழுதினார்… மாதங்களின் பெயர்களும் கிழமைகளின் பெயர்களும் இடம்பெறும் பாடல் பிறந்தது. அந்தப் பாடலை யார் பாடினால் நன்றாவிருக்குமென யோசித்தபோது, உடனே நண்பர் குலசீலநாதன் தான் அதனைப் பாடவேண்டுமென சில்லையூர் குறிப்பிட்டார். அதற்கேற்ப குலசீலநாதனின் வெண்கலக்குரலில் அந்தப் பாடல்… 'ஞாயிறென வந்தாள்… .." எனத் தொடரும் பாடல் ஒலித்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பாடல்களில் நேயர்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக இப்பாடல் இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை - அராலியைப் பிறப்பிடமாகக்கொண்ட குலசீலநாதன் 1959 -ம் ஆண்டு தமிழகம் சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதம் கற்று முதல் தரத்தில் சித்திபெற்றுச் 'சங்கீத பூசணம்" பட்டம் பெற்றார். இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஸ்ணாவைக் குருவாகக்கொண்டு அவரிடமும் கற்று சங்கீத நுண்ணறிவை மேலும் வளர்த்துக்கொண்டார். 1964 -ம் ஆண்டு தனது பிறந்த இடமான அராலியல் முதல் இசைக்கச்சேரியை நிகழ்த்தினார். 1968 -ம் ஆண்டு இலங்கை வானொலியில் பகுதிநேர இசைத் தயாரிப்பாளராக இணைந்துகொண்டார். 1970 -ல் அங்கு நிரந்தர இசைத் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1981 -ல் இசைக்கட்டுப்பாட்டாளர் பதவிக்கு உயர்ந்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட 'கங்கை யாழே… .." என்ற இசைத்தட்டில் இவரது பாடல்கள் ஒலித்தன. 'ஜனரஞ்சனி" என்ற நிகழ்ச்சி மூலம் சாதாரண மக்களும் சங்கீதத்தின் தாற்பரியத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலைமையை ஏற்படுத்தினார். 'இசைக்கோலம், இசைப்பிருந்தா, ஜனரஞ்சனி" போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பல்லாயிரம் வானொலி நேயர்களை இசையால் வசப்படு;த்தினார். நாடகங்களுக்கும் இசையமைப்புச் செய்தார். 'விழிப்பு, செவ்வானத்தில்.." என்ற இரு மேடை நாடகங்களும் இவரது இசையமைப்பு இணைப்பை பெற்றன.
கர்நாடக சங்கீதத்தில் முழுமையான தேர்ச்சி பெற்றவர்கள் மெல்லிசையைக்கூட மெருகுபடுத்திப் பாடமுடியும் என்பதற்கு உதாரணபுருசராகத் திகழ்ந்தார். சினிமாவில், அன்றைய பாடகர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் திகழ்ந்த கண்டசாலா, ஜி. இராமநாதன் போன்றோரின் இசையை மெச்சுபவர். 1983 -ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தால் புலம்பெயர்ந்த இவர், முதலில் சிங்கப்பூர் வானொலியிலும் பின்னர் மலேசிய வானொலி - தொலைக்காட்சி நிலையங்களின் கௌரவக் கலைஞராகவும் இசை ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார். அங்கு இவரது இசைக்கச்சேரியைக் கேட்டதும், டாக்டர் பாலமுரளி தான் வந்து பாடுகிறாரென இசை ரசிகர்களை எண்ணவைத்துவிட்டதாக பத்திரிகைகள் பாராட்டிச் செய்திகள் வெளியிட்டன என அறிகிறோம்.
1990 -ம் ஆண்டளவில் பாரிஸ் மாநகர் வந்த குலசீலநாதன், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இசைக்கச்சேரிகள் செய்ததுடன், மெல்லிசைப் பாடல்கள் - ஈழத்துப் பாடல்களையும் மேடைகளில் பாடி இரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். மேடை நிகழ்ச்சிகளின்போது 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே..., ஞாயிறென வந்தாள்…" போன்ற பாடல்களை இரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடி நிறைவுசெய்வார்.
1991 -ம் ஆண்டு யான் பாரிஸ் மாநகர் வந்தபோது, 'இன்தமிழ்க் குரலோன்" எஸ். கே. இராஜென் வீட்டில் நண்பர் குலசீலநாதனைப் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் சந்தித்துப் பேசும் வாய்ப்புக்கிட்டியது. பின்னர் பலமுறை நாம் சந்திக்கும் வேளைகளில் நிறையவே பேசி மகிழ்ந்தோம். 1993 -ம் ஆண்டுக்கு பின் யான் துலூஸ் நகரில் வசிப்பவனாகிவிட்டபோதிலும் அவ்வப்போது விழாக்களுக்கும், வானொலி - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குமென பாரிஸ் மாநகர் வரும்போதெல்லாம் அவரைச் சந்திக்க முடிந்தது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இசைக்கச்சேரிகள், பரத நாட்டிய அரங்கேற்றங்களுக்கான இசை, நாடகங்களுக்கான இசையமைப்பு மற்றும் இசைப்பயிற்சி வகுப்புகள் என அவரது பணிகள் தொடர்ந்தது. பிரான்சில் பல நகரங்களிலும் சத்தியசாய் பாபா பக்தர்களின் பஜனை மன்ற நிகழ்ச்சிகளிலும் கௌரவப் பாடகராகப் பாடிவந்துள்ளார். துலூஸ் நகரில் ஓர் பிரெஞ்சுப் பெண்மணி யான் இலங்கையைச் சேர்ந்தவன் எனத் தெரிந்ததும், அவர் என்னிடம் 'உங்களுக்குப் பாடகர் குலசீலநாதனைத் தெரியுமா..?" எனக் கேட்டார். 'ஆமாம்.. அவர் என் நண்பர். சிறந்த கர்நாடக இசைப் பாடகர்.." என்று பதில் சொல்லிவிட்டு, 'உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்..?" என அவரிடம் கேட்டேன். சாயிபாபா பஜனை மன்றத்தின் பிரான்ஸ் தென்பகுதிக்குப் பொறுப்பாகத் தான் செயற்படுவதாகவும், பிரான்ஸ் சாயிபாபா பஜனை மன்ற நிகழ்ச்சிகளின்போது குலசீலநாதனின் அழகான குரலில் பஜனைப் பாடல்களைத் தான் கேட்டு மகிழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பிரான்சில் வசிக்கும் பல்லின மக்களையும் தன் இசையால் கவர்ந்த பாடகராக அவர் புகழுடன் விளங்கினார்.
மேடைக் கச்சேரிகளுக்கு வரும்போதும் தன்னை மெருகூட்டிடும் விதத்தில், ஆடை அலங்காரங்களிலும் தேர்ந்த கலைஞனுக்குரிய மிடுக்குடன் தான் வருவார். நண்பர்களுடன் குழந்தைபோல் பழகினாலும் பெரும் கலைஞனுக்குரிய கர்வமும் இறுமாப்பும் அவருக்கிருந்ததை மறுக்கமுடியாது.
அந்த அற்புத இசைக் கலைஞர், ஈழத்துக்குப் பெருமை சேர்த்த இசையரசர், நண்பர் குலசீலநாதன் 2004 -ம் ஆண்டு மே மாதம் தனது 64 -வது வயதில் எம்மைவிட்டுப் பிரிந்தார் என்ற செய்திகேட்டு வருந்தினேன். அவரது இனிய பாடல்கள் - இசைக்கச்சேரி ஒலிப்பதிவுகள் மூலம் என்றும் எம்மக்கள் மத்தியில் வாழ்வார். அவர் எம் மக்கள் மறக்க முடியாத உன்னத இசைக் கலைஞர் என்பதில் ஐயமில்லை..!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.