கவிஞர் வாலி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்து விட்டார். அகவை 81 ஆண்டுகள் வாழ்ந்த அவர் படுக்கையில் வீழ்ந்த 4 நாள்களில் இவ்வுலக வாழ்வை நீக்கி எங்கோ பறந்து விட்டார். தனது மரச் சுரங்கத்தில் பூட்டி வைத்திருந்த பல்லாயிரம் பாடல்களோடு சென்றுவிட்டார். கவிஞர் வாலி இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்ற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததே பெரிய சாதனை. அவரை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு அவரது தோற்றத்தில் முதுமை காணப்படவில்லை. அவரது நகைச் சுவைப் பேச்சில் தடுமாற்றம் இல்லை. குரல் முன்னர் போல் கணீரென்று இருந்தது. மகாகவி பாரதி தனது 39 ஆவது அகவையில் இயற்கை எய்தினார். இருந்தும் மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி வான் புகழ் கவிதைகள் படைத்தார். அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை. புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லையெனும் வசை அவராற் கழிந்தது என்று அவரே சொன்னார். பாரதியாரின் பாஞ்சாலி சபதம் தாகூரின் கீதாஞ்சலியைக் காட்டிலும் உயர்ந்தது. தனக்குப் பின் தமிழ்க் கவிதைத் தளத்தில் ஒரு நீண்ட பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார்.
"நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று சூளுரைத்த கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த காலம் வெறுமனே 55 ஆண்டுகள்தான். ஆனால் வாழும் காலத்தில் கவிதை உலகில் அரியணை போட்டு அதில் உட்கார்ந்து கொண்டு ஒக்காரும் மிக்காரும் இல்லாத கவிஞனாக ஆட்சி செய்தவன். ஆறாயிரம் பாடல்கள், நாவல்கள், திரைப்பட உரையாடல்கள், கதை, காவியம், கட்டுரைகள் என எழுதிக் குவித்து விட்டுத்தான் மறைந்தார்.
அப்படிப் பார்க்கும் போது கவிஞர் வாலி கொடுத்து வைத்தவர்! எண்பத்தொரு ஆண்டு நிறை வாழ்க்கை வாழ்ந்தார். படுக்கையில் நாலு நாள்தான்.
கவிஞர் வாலி பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பல தளங்களில் முத்திரை பதித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக பத்தாயிரம் திரையிசைப் பாடல்கள், 'அவதார புருஷன்', 'அழகிய சிங்கர்' என கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட 20 கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். பாண்டவர் பூமி, ஆறுமுக அந்தாதி, பகவத்கீதை கவிதை நடை, சரவண சதகம், இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள், கம்பன் என்பது, நானும் இந்த நூற்றாண்டும் அவர் எழுதிய நூல்கள்.
கவிஞர் வாலி தனது திரை இசைப் பாடல்களால் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கலியுகக் கண்ணன், காரோட்டி கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக்குருவி, ஒரே ஒரு கிராமத்திலே' உட்பட, 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
பாரதியால் தமிழ் உயர்ந்ததும் தமிழால் பாரதி உயர்ந்ததும் நாம் அறிந்ததே.
கவிஞர் வாலியால் தமிழ் உயர்ந்தது. தமிழால் வாலி உயர்ந்தார்.
எதுகை, மோனை, கற்பனை எதற்கும் பஞ்சம் இல்லாத கவிஞர் வாலி. திரைப்படப் பாடல்களை எழுதும் போது இசையமைப்பாளருக்கு ஒரு பல்லவிக்கு நான்கு பல்லவி எழுதிக் கொடுப்பார். அதே போல் ஒரு சரணத்துக்கு நான்கு சரணம் எழுதிக் கொடுப்பார்.
படித்தது என்னமோ எஸ்எல்சி வரையும்தான். ஆனால் படைத்ததோ எண்ணில் அடங்காதவை. பெற்ற விருதுகளோ கணக்கில் அடங்காதவை.
இந்திய அரசின் பத்மஸ்ரீ (2007) விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது. எங்கள் தங்கம், இவர்கள் வித்தியாசமானவர்கள், வருடம் பதினாறு, அபூர்வ சகோதரர்கள், கேளடி கண்மணி, தசாவதாரம் படங்களுக்கு பாடல்கள் எழுதியதற்காக தமிழக அரசினால் சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது அய்ந்து முறை வழங்கப்பட்டது. பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருது இப்படி ஏராளமான விருதுகள். 1973 இல், பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற "இந்திய நாடு என் வீடு... இந்தியன் என்பது என் பேரு' என்ற பாடல் வரிகளுக்காக, தேசிய விருது கிடைத்தது. ஆனால், வாலி விருதை ஏற்க மறுத்து விட்டார்.
கவிஞர் வாலியின் முதல் பாடல் பின்னணிப் பாடகர் சவுந்தரராசன் பாடி பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பக்திப் பாடல். அந்தப் பாடல் அவரை பாராட்டு மழையில் நனைய வைத்தது. .
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
- கற்பனை என்றாலும்
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
இந்த முதல் பாடலிலேயே கவிஞர் வாலியின் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. அவரது இந்தக் கவித்துவம் கடைசிவரை அவருக்கு வசப்பட்டது.
கவிஞர் வாலியை கவியரசு கண்ணதாசனுக்கு அறிமுகம் செய்து வைத்த போது தனக்குப் போட்டியாக வரக் கூடிய ஒரே கவிஞன் என கண்ணதாசன் மற்றவர்களிடம் சொன்னார். கவியரசு கண்ணதாசனின் கவிதைகளின் தாக்கம் வாலியிடம் காணப்பட்டது. இதனால் வாலி எழுதிய சில பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் எனப் பலர் நினைத்தார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்த இரு மலர்கள் திரைப்படம் சுவைஞர்கள் மனதில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நல்ல திரைக்கதை, வளமான நடிப்புத் திறனையும் முழுதும் வெளிக்கொணரும் வகையில் அமைந்த இத் திரைப் படத்தில் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் பயிலும் சிவாஜியும் பத்மினியும் சிலப்பதிகாரத்தில் கோவலன், மாதவி இருவர் பற்றிய ஒரு நாட்டிய நாடகம் நடத்துகின்றனர்.
பத்மினி, மயில் தோகையை முதுகில் அணிந்து கொண்டு ஒரு மயில் போலவே துள்ளித் துள்ளி ஆடும்போது நடிகர் திலகம் பாடுவதாக அமைந்த இப்பாடலை டி.எம். சௌந்தரராஜன் தன் மதுரக் குரலில் பாடியிருந்தார். பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசை எம்.எஸ். விஸ்வநாதன்.
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட - கலை
மானின் இனம் கொடுத்த விழியாட
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
மானின் இனம் கொடுத்த விழியாட - அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட - நல்ல
கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்
தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்
பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
பலர் இந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசன் பாடியதாக நினைத்தார்கள். நான் கூட நீண்ட காலம் அப்படித்தான் நினைத்தேன்.
* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
* புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
* நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ...
* ஏமாற்றாதே ஏமாறாதே...
* நான் ஆணையிட்டால் ..
போன்ற அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்களை எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எழுதி தமிழகத்தை மலைக்க வைத்தவர் கவிஞர் வாலி. இலக்கியக் கற்பனைகளில் புதுமையைப்புகுத்தியவர்.
"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே. போரில் புதுமைகள் புரிந்த சேரனின் வில்லை, உன் புருவத்தில் கண்டேனே. தஞ்சையில் பறந்த புலிக்கொடியை, உன் பெண்மையில் கண்டேனே. இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே'' என பெண்ணை, தமிழகத்தோடு ஒப்பிட்டு எழுதியவர். "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே,' என்று எல்லோருக்கும் புரியும் வகையில் எண்ணங்களைத் தெளிவுபடுத்தியவர்.
பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து, வாலி போன்ற கவிஞர்கள் தங்கள் கவிதைப் பூக்களால் அன்னைத் தமிழுக்கு அழகும் பொருளும் இனிமையும் சுவையும் சேர்த்து அவளை அழகு படுத்தியுள்ளனர். இது நாம் செய்த புண்ணியம்.
"பூ முகத்து புன்னகையே இனி யார் முகத்தில் பார்ப்போம்! புது நடையில் சொற்பொழிவை யாரிடத்தில் கேட்போம்! நடை துள்ளும் தமிழுக்கு பகை வந்தால், அங்கே உடைவாளை எடுக்கின்ற பெரும் வீரர் எங்கே? இமை மூடிக் கொண்டாய்! புதை குழியில் மெல்ல தமிழே உன் தலையெழுத்தை நான் என்ன சொல்ல?'' இது அறிஞர் அண்ணாத்துரை இறந்த போது கவிஞர் வாலி எழுதிய இரங்கல் கவிதை.
இந்த வரிகள் அக்கிரகாரத்தில் பிறந்த கவிஞர் வாலிக்கும் இது பொருந்தும்.
சத்தான தமிழில் முக்காலும் முத்தான கவிதை பாடிய கவிஞனை தமிழ் அன்னை இழந்துவிட்டாள். இனி எக்காலம் அவனைக் காண்போம்?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.