ஈழத்தின் வடபுலக் கிராமமான கரவெட்டியில் 10/07/1944இல் பிறந்து கலை உலகின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் அமரர்.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்.எழுத்து,நடிப்பு தன் மூச்சாகக் கொண்டவர்களில் இவரும் ஒருவர்.தொலைபேசியில் பேசுகையில் அதிராமல்,நிதானமாகக் கேட்டபடி அமைதியாக பதில் சொல்வது அவரின் பழுத்த அனுபவத்தைச் சுட்டி நின்றன.யாழ்ப்பாணத்தில் நாடகம்,நடிப்பு என அலைந்த நாட்களில் யாழ்நகர விளம்பர நிறுவனங்களான பெஸ்டோன்,மணிக்குரல் விளம்பரசேயினரின் ஒலிபரப்பில் அடிக்கடி பயணிக்கையில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பயணிக்கும் போதும் பயணிகளை மகிழ்வதற்காக பேரூந்தின் சாரதியால் ஒலிபரப்படும் ஒலிநாடாவும் பயண களைப்புத் தெரியாமல் குதூகலமாய் திரிந்த காலங்களும் உண்டு.பின் இலங்கை வானொலியில் -அண்னை றயிற், ஒலிக்கையிலும் எங்கடை பொடியன் என்று என் தந்தை சொல்லி மகிழ்ந்ததி இன்றும் நினைக்கத் தோன்றுகிறது.பிறகு கே.எம்.வாசகரின் இயக்கத்தில் சில்லையூராரின் அறிவிப்பில் ஒலிபரப்பாகிய 'தணியாத தாகம்' அந் நாட்களில் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது.இன்றுஎப்படி சின்னத்திரைகள் நம்மவர்களைக் கட்டிப்போட்டதோ அதே போல அந் நாட்களில் இலங்கை வானொலி நாடகங்கள் நம்மை ஆட்கொண்டிருந்ததை மறக்கமுடியாது. தணியாததாகத்தில் சோமு என்ற பாத்திரமே மக்கள் மனதில் இடம்பிடித்தது. யாழ்ப்பாணத்து வழக்கு மொழியை மேடையில் அற்புதமாக கொழும்பு மேடைகளில் ஒலிக்க வைத்ததில் வரணியூரானுக்கும், கே.எஸ்.பாலச்சந்திரனுக்கும் முக்கிய இடம் உண்டு.அதே போல கமலாலயம் மூவீஸாரின் 'வாடைக்காற்று' திரைப்படத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்து திரையிலும் ஜொலித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் கடமையாற்றியபடி, மேடை,வானொலிநிகழ்விலும் பங்குபற்றினார்.
மேடைநாடகங்கள் மாத்திரமன்றீ,வானொலி,தொலைக்காட்சி நாடகங்களிலும் நடிக்கும் வாய்ப்புப் பெற்றதன் பின் நிகழ்சி நேரலை வர்ணனையாளராகவும் தன் திறமையைக் காட்டினார்.சிரித்திரனின் சிரிகதைகள் எழுதினார். பின்னர் ஈழநாடு, தினகரன், வீரகேசரி, முரசொலி, ஒருபேப்பர், தாய்வீடு, தமிழ்டைம்ஸ், தூறல் போன்ற அச்சு ஊடகங்களில் எழுதினார்.முதலில் கரவெட்டி ஆரம்பப்பாடசாலையிலும்,பின்னர் யாழ்/மத்தியகல்லூரியிலும் கல்வியை பயின்றார்.தவிர்க்கமுடியாத சூழல் இலங்கையில் வாழ்ந்தபோது ஏற்பட கனடாவிற்கு புலம் பெயர்ந்தார். கனடாவிலும் தன் கலைப்பயணத்தைத் தொடர்ந்தார்.பத்திர்கைகளில் தொடராக எழுதுவதிலும்,வானொலி,தொலைக்காட்சி நாடகங்களிலும் பங்கு பற்றினார்.
அவரின் எழுத்துப் பயணத்தில் நிறைய எழுதி இருந்தாலும் 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' நாவல் 2009இல் வெளி வந்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.இந் நாவல் தமிழக அமுதன் அடிகள் அறக்கட்டளை விருதையும் பெற்றுக்கொண்டது. பின் 2011இல் 'நேற்றுப்போல் இருக்கிறது' நூலையும் வெளியிட்டார்.கலை இலக்கியச் செயல்பாட்டாளராக மிளிர்ந்தவருக்கு 'தலைக்கோல்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது மாபெரும் கலைஞனுக்குக் கிடைத்த கௌரவமாகும்.இலங்கையிலும்,கனடாவிலும் அவள் ஒரு ஜீவநதி,வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,ஷர்மிளாவின் இதயராகம்,,அஞ்ஞானா,உயிரே, கனவுகள்:மெமையான வைரங்கள், தமிழச்சி, சகா, என் கண் முன்னாலே, 1999 போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.சிறையில் இருந்து வந்த போது ஆங்கில, சிங்கலப் படங்களிலும் நடித்தும், உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.அண்ணை றைற் போலத் தான் நம்மைக் கவர்ந்த ஓடலி ராசையாவும். தொலைக்காட்சித் தொடர்களாக/நாடகங்களாக நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம்,திருப்பங்கள்,மனமே மனமே,நாதன் நீதன் - நேதன்,வை டி லிங்கம் ஷோ குறிப்பிடத்தக்கன.வை.டி.லிங்கம் ஷோ பின்னர் ரி ரி என் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பாகின.தாகம்,வாழ்வு,உனக்கொரு நீதி போன்ற குறும்படங்களிலும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.சு.வே எழுதிய அனேக வானொலி நாடகங்களில் நடித்தமியினால் அவரின் அபிமானதிற்குரியவாரகவும் மிளிர்ந்தார்.அவரிடன் பல படைப்புக்கள் கைவசம் இல்லை என்பது அவரின் வருத்தமாகும்.இப்போது போல ஆவணப்படுதல் முயற்சிகள் அன்றில்லையாதலால் பலதும் கைவிட்டுப்போனமை அவரின் கவலையுமாகும்.
பல பரிசுகளைப் பெற்றவரின் நூல்கள் பல அவர் வாழ்நாளில் வெளிவந்திருக்கவேண்டும். அவருடன் பல தடவை கதைத்த போதும் இப்போதுதான கதைத்தது போல உணருகிற போது இப்போது கவலையாக இருக்கிறது.புதன்கிழமை(26/02/2014)அவரின் மறைவுச் செதி கிடைத்ததும் அதிர்வே ஏற்பட்டது.யாழ்ப்பாணத்திலும்,கொழும்பிலும்,கனடாவிலும் பேசிய பொழுதுகள் நினைவில் வந்து போயின. இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்த போதும்,பிற சுகயீனங்களின் போதும் அவருடன் தொலைபேசியில் பேசியது நெஞ்சு கனக்க வைக்கிறது. வாழ்வாங்கு வாழ்ந்தவன்.அவரின் குழுவினரின்(வரணியூரான்,முகத்தார்)போன்றோரின் நினைவும் வந்து போகும்.காலத்தால் வாழ்த்தப்பட்டவன்.மீண்டும் யாழ்நகர பயணம் வாய்க்கும் போதெல்லாம் 'அண்ணை றையிற்'ஒலிக்கும்.வலிக்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.