கனடா: போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் முடிந்தளவு கட்டியெழுப்ப வேண்டும்
"வட கிழக்கில் வாழும் தமிழ்மக்களது அரசியல் மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) 1990 இல் இருந்து இயன்றளவு உதவி வழங்கி வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களை மீண்டும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும். போர் காரணமாக வட கிழக்கில் கணவர்களை இழந்த 89,000 கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்" இவ்வாறு ததேகூ(கனடா) இன் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மருத்துவர் வி. சாந்தகுமார் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த பெப்ரவரி 23 காலை 11.00 மணி தொடக்கம் பிப 1.00 வரை ஸ்காபரோ பொது மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பேசுகையில் "எமது அமைப்புக்குள் இளைஞர்களை உள்வாங்க வேண்டும். பல்கலைக் கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழின விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட கால - 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. அவற்றை எமது இளைய தலைமுறையினரும் படித்து அறிந்து கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டும். மேலும் கனடா, பிரித்தானியா போல் வெளிநாடுகளில் ததேகூ இன் ஆதரவு அமைப்புக்களை உருவாக்க வேண்டும் " எனக் குறிப்பிட்டார்.