முகநூல் பதிவு: அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு
பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.
2) நடிகை நாடாளலாமா வென ஆணாதிக்க அறங்களைப் பேசிய சனாதனிகளின் மூஞ்சியில் ஓங்கி அறைந்த ஒரு திரை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா. தனது இரண்டு வயதிலேயே அப்பா ஜெயராமனை பறிகொடுத்தார். தாயார் வேதவல்லி என்ற சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மு என்று அன்பால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தனது இருபத்துமூன்றாம் வயதில் தாயையும் இழந்தார்.மைசூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் திருச்சி சிறீரங்கமாக இருந்தது.சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் பள்ளி படிப்பை கற்ற ஜெயலலிதா தனது பனிரெண்டாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையிலும் தேர்ச்சிமிக்கவராக இருந்தார்.2016 ஆகஸ்டில் எழுத்தாளர் வாஸந்தி எழுதிய Amma: Jayalalithaa's Journey from Movie Star to Political Queen என்ற நூல் ஜெயலலிதாவின் பூர்வீகம் பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளன.
3)முதல்தடவையாக இயக்குநர் சிறீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இது 1965 இல் நடந்தது.அன்றுமுதல் 1980 வரையில் முதன்மை கதாநாயகிப் பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என 127 திரைப்படங்களில் நடித்திருந்தார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு 28 படங்களில் இணைந்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் துவங்கி அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் , ராமன்தேடிய சீதை என தனது திரையுலக முத்திரையை பதித்துக் கொண்டார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,எஸ்.எஸ்.ஆர் போன்ற பிரபலங்களோடு இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாயின.
4)புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபரில் திமுகவை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அதிமுக) கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவாகினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1984 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 இல் அதிமுக பொதுச் செயலாளரானார். பல்வேறு அரசியல் சமூக நெருக்கடிகளைத் தாண்டி 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழக முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா 2015 மே 13 இல் ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வந்தார். இறுதியாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார். தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட தமிழகமுதல்வருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.