காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்!
சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் - நியாயமான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, விசுவாசமாகவும் - அர்ப்பணிப்பாகவும் பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு ஒரு வழிமுறையாக பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை? என்பதை கடந்த ஏழு வருட காலத்தில் தம்மால் அறிந்தும் - தெளிந்தும் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Vavuniya District) வவுனியா மாவட்ட சங்கத்தின் தலைவர் திருமதி கா.ஜெயவனிதா,
தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் - தமக்கான தொழில்துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை பயன்படுத்தி, இதற்காகவே காலத்தையும் நீட்டிப்பு செய்துகொண்டு திரியும் ‘இடைத்தரகர்’ அமைப்புகள், உறவுகளை தேடியலையும் தமது பயணத்தில் குறுக்கீடு செய்யாமல் தாமாகவே விலகி ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், இனியும் இவ்வாறான அநாகரிக நடத்தைகள் தொடருமாகவிருந்தால் அந்த அமைப்புகள் - அந்த அமைப்புகளின் பணியாளர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு பகிரங்கப்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைமைகள் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தை விடவும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளே பாரிய தடைக்கற்கள்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களுக்கு ‘அது செய்யப்போகின்றோம் - இது செய்யப்போகின்றோம்’ என்று கூறி, வெளிநாட்டு என்.ஜி.ஓக்களிடமிருந்து பெருந்தொகை நிதியை பெற்று, அதையே தமக்கான ஒரு தொழில்துறையாகவும் - வேலைத்திட்டமாகவும் எடுத்துக்கொண்டு, இந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பதனால், தம்மில் பல குடும்பங்கள் சோர்வடைந்து - மனச்சலிப்படைந்து, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபாடில்லாமல் ஒதுங்கியிருப்பதாகவும், நீதியை கோரும் அழுத்த மற்றும் கவனவீர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகவும் ஜெயவனிதா கவலை தெரிவித்தார்.