கவிஞரும்,பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம்திகதி மலேசியா செல்ல இருக்கின்றார். இலங்கையில் மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்கு சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் - 'பொறுமை'என்னும் தலைப்பில் அமைந்த மரபுக்கவிதை இலங்கை ஏற்பாட்டுக்குழுவின் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசந்தம்TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர் ஏலவே அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டி 'ஜனாதிபதிபதி விருது', பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் 'தங்கப்பதக்கம்', சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது உட்பட ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கையின் இலக்கியத்துக்கு தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வரும் இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள்,சர்வதேச தமிழ் சஞ்சிகைகளிலும்,இணைய சஞ்சிகைகளிலும்,இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.இவர் WWW.kavinger-asmin.blogspot.com என்ற தனது வலைப்பூவிலும் எழுதிவருகின்றார்.
சக்தி TV யின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர் செவ்வேள் தயாரிக்க இயக்குனர் கேசவராஜ் இயக்கும் 'பனைமரக்காடு' திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கின்றார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய இவரது 'எங்கோ பிறந்தவளே...'பாடல் இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.'விடைதேடும் வினாக்கள் (2000)', 'விடியலின் ராகங்கள்'(2001), என்ற இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினின் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
www.poetasmin.tk
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.