ஆய்வுச்சுருக்கம்
மக்களால் ஒருங்கிணைந்து உருவாக்குவது சமூகமாகும். அத்தகைய மனிதனுடைய ஒவ்வொரு சிறப்பும் மனிதனின் சிறப்பாகவே கருதப்படுகிறது. தாம் வாழும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து மக்கள் பிரிக்கப்பட்டனர் என்பதையும், குறிஞ்சி நிலமான மலையும், மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் சிறப்பையும், அவர்களுக்குள் உள்ள பல வகையானப் பிரிவுகளையும், நிலத்தின் தன்மையையும், நிலத்தில் வழிபடும் தெய்வமாக விளங்கும் முருகனின் சிறப்பும், வழிபாட்டு முறைகளையும் எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னுரை
மக்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் சமூகத்தில் மக்களின் சிறப்பே நாட்டின் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. மனிதன் நன்மை, தீமையைப் பகுத்து அவற்றின் வழி செயல்படும் திறனாலேயே உயர்திணையாகச் சுட்டப்பட்டான். “மக்கள் தாமே ஆறறிவுயிரே” என்னும் தொல்காப்பிய வரிகள் மூலம் மனிதன் ஆறறிவுடைய சிறப்பிற்குரிய திறமானது புலப்படுகிறது.
நோக்கம்
மக்களின் சிறப்பு நாட்டின் சிறப்பாகக் கருத அம்மக்கள் வாழும் நிலங்களுக்கு ஏற்ப பகுக்கப்பட்டனர். மலையும் மலை சார்ந்த பகுதியில் வேட்டையாடுதலைத் தொழிலாக் கொண்டு வாழும் குறவர்களின் வாழ்க்கையையும், அந்நிலத்திற்குரிய சிறப்புகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
சிலம்பு சுட்டும் மக்கள்
சிலம்பில் இளங்கோவடிகள் மக்களுடைய வாழ்க்கை நிலைகளைக் கூறி, தொழில்முறைகளைக் கூறும் போது காருகர், காழியர், பாவசர், வாசவர், கஞ்சகாரர், செம்பு செய்குநர், தச்சர், கொல்லர், கண்ணெழுத்தாளர், காலக்கணிதர், கருமவினைஞர், பரவர், என்று இந்திரவிழா ஊரெடுத்த காதையில் மக்களை வகைப்படுத்திக் கூறுகிறார். கடலாட்டு விழாவில் கூடும் மக்களைக் கூறும் போது,
கடற்கரை காவிரிப் பேரியாற்று
இடங்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை (சிலம்பு.6.163-165)
என்ற வரியில் நால்வகை மக்களும் ஒன்றுகூடி விழாவானது நடைபெற்றமையைக் காணமுடிகிறது.
திணைப்பாகுபாடு
மக்கள் தாம் வாழும் தன்மைக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தைப் பகுத்தனர். சிலம்பில் திணைப்பாகுபாட்டின் நிலையில் அமைந்த செய்திகளைக் கூறும் போது குன்றக்குரவையில் குறிஞ்சி நிலமக்களின் வாழ்க்கை நிலையையும், ஆய்ச்சியர் குரவையில் முல்லை நிலமக்களின் வாழ்க்கை நிலையையும், இந்திரவிழா ஊரெடுத்த காதையில் மருத நிலமக்களின் வாழ்க்கை நிலையையும், கானல்வரிகளில் நெய்தல் நிலமக்களின் வாழ்க்கை நிலையையும், வேட்டுவவரியில் பாலை நிலமக்களின் வாழ்க்கை நிலையையும் விரிவாகக் கூறுகின்றார்.
குறிஞ்சி நிலமும் மக்களின் தன்மையும்
மலையும் மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் முருகனைத் தெய்வமாக வழிபட்டனர். மலைப்பகுதியில் விளைந்த மூங்கிலரிசி, கிழங்குகள், தேன் போன்றவற்றை உண்டு இம்மக்கள் வாழ்ந்த பகுதியை சிறுகுடி என்றழைத்தனர்.
குறிஞ்சி நிலத்தில் வாழும் தலைவன் சிலம்பன், வெற்பன், குறவர் என்று இளங்கோவடிகள் சுட்டுகிறார். குறவர் என்பது நிலத்தின் அடிப்படையில் வழங்கியமையை உணரமுடிகிறது. குறிஞ்சி நிலத்தில் வாழும் பெண்களை,
குன்றக் குறவையோடு கொடிச்சியர் பாடலும் (சிலம்பு.25.25)
கொடிச்சியர் என்று சிலம்பில் கூறியமைக் காணமுடிகிறது.
மலையும் மலை சார்ந்த பகுதியில் வாழும் குறவர்கள் மேற்கொண்ட தொழிலானது வேட்டையாடுதலும் தேன் எடுப்பதும் ஆகும்.
குருவி ஒப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றவைகி
அருவி ஆடியும் சுனை குடைந்தும் (சிலம்பு.24.1-2)
என்றவரியில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பெண்கள் தினைப்புனங்களில் குருவிகளை ஓட்டியும், கிளிகளை விரட்டியும், பயரினைக்காத்தும் தொழிலை மேற்கொண்டமையை எடுத்துக் கூறுகிறது.
குலமலை உறைதரு குறவர்தம் மகளார் (சிலம்பு.24.16.2)
என்ற வரியில் குறவர்கள் வாழும் பகுதி குலமலை என்பதையும்,
அருவி ஆடியும் சுனை குடைந்தும்
அலவுற்று வருவேம்மன்
மலைவேங்கை நறுநிழலின் (சிலம்பு.24.3.6)
என்னும் வரிகளில் குறவர்கள் வாழ்ந்த பகுதியில் அருவியும் சுனையும் சூழ்ந்த இடத்தில் தங்களது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கைத் திறத்தை எடுத்துரைக்கிறது.
குரவைக்கூத்து
பெண்கள் எழுவர், எண்மர், ஒன்பதின்மர் வட்டமாக நின்று கைகோர்த்து ஆடுவது குரவைக் கூத்தாகும். இது குன்றக்குரவை, ஆய்ச்சியர்க் குரவை என இரண்டு வகைப்படும் குன்றக்குரவை என்பது குறிஞ்சி நிலப்பெண்கள் முருகனுக்காக ஆடும் கூத்தாகும்.
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எழுமின் (சிலம்பு.24.16.18)
என்னும் வரிகள் குறவர்கள் குறிஞ்சிப்பண் பாடவும், குறிஞ்சி நிலத்திற்குரிய இசைக் கருவிகளை இசைத்தமையை அறியமுடிகிறது.
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக (சிலம்பு.24.10)
வழிபாட்டில் வெறியாட்டு நிகழ்வு நடந்தமையைச் சுட்டுகிறது. குறவர்கள் தெய்வத்தின் மீது கொண்ட பக்தி, வழிபாட்டு நிலை ஆகியவை அவர்களின் பக்திநிலையை எடுத்துக் கூறுகிறது.
குறிஞ்சி மக்களின் சிறப்பு
சிலம்பு தோன்ற அடிப்படையாக அமைந்தவர்கள் குறிஞ்சி நில மக்கள் ஆவர். கண்ணகி துயருற்று தன் கணவருடன் வானவர் தேரில் விண்ணகம் சென்ற போது வேங்கை மரத்தடியில் நின்று பார்த்து அவளை யார் என்று கேட்டதன் வாயிலாக குறிஞ்சி மக்களின் உள்ளம் வெளிப்படுகிறது.
கான வேங்கை கீழோர் காரிகை
……………………………..
வானவர் போற்ற வானகம் பெற்றனள்
எந்நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ (சிலம்பு.25.57-61)
குறவர்கள் தான் அரசனைக் காணவரும் போது கையில் மலையில் விளைந்த பொருட்களைக் கொண்டு வந்ததன் வாயிலாக அம்மக்களின் அன்பு நிலையை, அம்மக்களின் பேரன்பு கொண்ட உள்ளத்தினையும் போற்றுவது பெருமையாகும்.
“ஏழ்பிறப்பும் அடியேம்” (சிலம்பு.25.26) என்பதில் குறவர்கள் அரசன் மீது கொண்ட மதிப்பையும், மரியாதையும் புலப்படுகிறது. “ஊழியுழி வழிவழி சிறக்கநின் வலம்படு கொற்றம்” (சிலம்பு.25.91) என்பதில் குறவர்களின் வாழ்த்தும் பண்பினை எடுத்துக் கூறுகிறது. சிலப்பதிகாரம் குறிஞ்சி நில மக்களான குறவர்களின் வாழ்க்கையைத் திறம்பட எடுத்தியம்புவதைத் தெளிவுற அறியலாம்.
முடிவுரை
ஆறறிவுடைய மனிதனின் சிறப்பையும், அவர்களது வாழ்க்கையையும் எடுத்துக் கூறகிறது.
திணையின் அடிப்படையில் மக்கள் பகுக்கப்பட்டனர் என்பதை நிலப்பகுப்பின் வாயிலாக அறியமுடிகிறது.
திணையோடு, தொழில் முறைகளின் அடிப்படையிலும் மக்கள் பகுத்தமையைக் காணமுடிகிறது.
சிலம்பு ஒவ்வொரு நிலமக்களின் சிறப்புகளையும் விரிவாகக் கூறிச் செல்கிறது.
மலையோடு மலைசார்ந்த பகுதியில் வாழ்ந்த சிறுபான்மையினர் சிறுகுடியினர் என்றழைக்கப்பட்டனர்.
மலைப்பகுதியில் ஆண்களோடு, பெண்களும் தொழில் புரிந்தமையை சிலம்பு எடுத்துரைக்கிறது.
“கூத்து” என்பது பெண்கள் வட்டமாக நின்று ஆடுவதும், குறிஞ்சி நில தெய்வமான முருகனுக்காக ஆடியது குரவைக் கூத்து என்றும் அறியமுடிகிறது.
வழிபாட்டு முறையில் பண், இசைக்கருவிகள், வெறியாட்டு நிகழ்வு நிகழ்ந்தமையையும் அறியமுடிகிறது.
குறவர்கள் குணத்திலும், கொடைத்தன்மையிலும் சிறந்தவர்கள் என்பதையும், அவர்களின் பெருந்தன்மையையும் சிலம்பு எடுத்துரைக்கிறது.
துணைமைச் சான்றுகள்
சிலம்பொலி சு.செல்லப்பன், சிலப்பதிகாரம், பாரதி நிலையம், சென்னை 2016.
சுப்பிரமணியன் ச.வே, சிலப்பதிகாரம், கங்கை புத்தக நிலையம், சென்னை 2001.
தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 2002.
அடிகளார் பதிப்பகம், தொல்காப்பியம், தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சை 1988.
இணையதளம் தரவுகள்.