முன்னுரை :
ஒலியமைப்பினைச் சார்ந்து வரக்கூடிய செய்யுளுறுப்புகளில் ஒன்று வண்ணம் என்பதாகும். பேராசிரியர் இதனை சந்த வேறுபாடு என்று குறிப்பிடுவார். தொல்காப்பியர் வரையறுத்துள்ள செய்யுளுறுப்புகளில் இருபத்தாறாவது உறுப்பாக வண்ணம் உரைக்கப்பட்டுள்ளது. இவ்வண்ணத்தின் வகைகளாக இருபது வகைகளைக் குறிப்பிடுகிறார். உலக வழக்கில் சிந்துப்பாடல்களிலும், நாடகப் பாடல்களிலும் இலக்கியத்தில் சந்த விருத்தங்களிலும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்களிலும், நூற்றுக்கணக்கான வண்ணங்கள் பயின்று வருகின்றன. உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் காணப்பெரும் வண்ணங்கள் எழுத்து, சொல், தொடைநலன் என்பவற்றால் அமைவன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வண்ணத்தியல்பு என்னும் நூலினை எழுதியுள்ளார். அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் பயின்று வரும் வண்ணங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஒலிக்கோலம் :
பழைய மரபு நெறியில் ஒலிக்கோலத்தை ‘வண்ணம்’ என்றனர். ஒரேஓர் ஒலி அல்லது அதற்கினமான ஒலிகள் ஓரடியிலோ, அல்லது பாடல் முழுவதிலுமோ பயின்று வருவதினையே வண்ணம் என்று கூறியுள்ளனர். வல்லொலி எழுத்துக்கள், மெல்லொலி எழுத்துக்கள் ஆகியவற்றைப் புலவர் ஏதேனும் ஒரு காரணத்தோடு திட்டமிட்டே அமைத்திருக்கிறார். இந்த ஓசைநயமே படிப்போர்க்கு இன்பத்தை விளைவிக்கும் வண்ணமாகும். தொல்காப்பியரின் வண்ணம் பற்றிய கருத்துக்கள் இத்தகையதே. சங்க இலக்கியப்பாடல்கள் வாய்மொழியாக வழங்கப் பெற்றவை. அதனால்தான் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்களுக்கு சங்கப் பாடல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் கூற முடியாமல் இடர்ப்படுகின்றனர்.
வண்ணம் :
வண்ணம் ஓசை நோக்கி வரும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. பாடுபொருளின் தன்மைக்கும், ஓசை நயத்திற்கும் இயைபு உண்டு. அகவல் வண்ணம் சூறைக்காற்றும் நீர்ச்சுழியும் போலவரும். ஒழுகு வண்ணம் நீரொழுக்கும்,காற்றொழுக்கும் போல வரும். வல்லிசை வண்ணம் தோற்கயிரும் இரும்பும் திரிந்தாற் போலவும், மெல்லிசை வண்ணம் அன்ன நடையும் தண்ணம் பறையும் மண்மேல் நடந்தாற் போல வரும் என்பர்.
“வண்ணந் தானே நாலைந்து என்ப” 1
எனக் குறிப்பிடும் தொல்காப்பியர், அவ்விருபது வண்ணங்களையும்,
“அவைதாம்
பாஅ வண்ணம், தாஅ வண்ணம்
வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம்
இயைபு வண்ணம், அளபெடை வண்ணம்
நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம்
சித்திர வண்ணம், புறப்பாட்டு வண்ணம்
ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம்
எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம்,
தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம்
உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என்று
ஆங்கனம் அறிப அறிந்திசினோரே”2
எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறுந்தொகையில் வண்ணங்கள் :
குறுந்தொகைப் பாடல்களில் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் எவ்வாறு பயின்று வந்திருக்கின்றன என்பதைக் காண்போம்.
தாஅ வண்ணம்:
செய்யுளின் கட்டமைப்பில் சீர் இடையிட்ட எதுகையால் வருவது தாஅ வண்ணமாகும். குறுந்தொகைப் பாடல்களில் தாஅ வண்ணம் பரவலாகப் பயின்று வந்திருக்கின்றது. சான்றுகளாக,
“இம்மை மாறி மறுமை ஆயினும்” (குறுந்.49:3)
“ஒண்தொடி வண்டல் அயரும்” (குறுந்.243:3)
“உரவுக் களிறு போல்வந்து இரவுக்கதவுமுயறல்” (குறுந்.244:2)
“வாரல் எம்சேரி தாரல் நின்தாரே” (குறுந்.258:1)
“ஒல்லை ஆயினும் கொல்லை ஆயினும்” (குறுந்.259:5)
“எல்லை கழிய முல்லை மலர” (குறுந்.387:1)
வல்லிசை வண்ணம்:
செய்யுளில் வல்லெழுத்துக்களே மிக்கு வரக் கட்டமைப்பது வல்லைசை வண்ணமாகும். திப்புத்தோளார் பாடிய குறுந்தொகையின் குறிஞ்சிப்பாடலில் வல்லிசை வண்ணம் பயின்று வந்திருப்பதைக் காண முடிகின்றது.
“செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை
கழல் தொடி சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே” (குறுந்.:1)
“கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே ” (குறுந்.3:3)
தேவகுலத்தார் பாடிய குறுந்தொகையின் குறிஞ்சிப்பாடலில் வல்லிசை வண்ணம் பயின்று வந்திருப்பதைக் காண முடிகின்றது. ஆலங்குடி வங்கனார் பாடிய குறுந்தொகையின் மருதத்திணைப் பாடலில்,
“கையும் காலும் தூக்கத் தூக்கும்” (குறுந்.8:4)
என்னும் அடியில் வல்லிசை வண்ணம் பயின்று வந்துள்ளது.
“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை” (குறுந்.313:1)
“பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்” (குறுந்.280:3)
எனவும் வல்லிசை வண்ணங்கள் பயின்று வந்திருக்கின்றன.
மெல்லிசை வண்ணம் :
மெல்லெழுத்துக்களே தொடர்ந்து வரத் தொடுப்பது மெல்லிசை வண்ணமாகும். மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடிய குறுந்தொகைப்பாடலில்,
“முகை முற்றினவே முல்லை முல்லையொடு” (குறுந்.188:1)
“மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே” (குறுந்.286:5)
“நல்லை அல்லை நெடுவெண் நிலவே” (குறுந்.47:4)
“நிரைவளை முன்கை நேரிழை மகளிர்” (குறுந்.335:1)
என ஓரடிக்குள் அனைத்துச்சீர்களும் மெல்லெழுத்துக்களைப் பெற்று மெல்லிசை வண்ணங்களாக வந்துள்ளன.
எண்ணு வண்ணம் :
எண்ணும் மரபில் தொடர்ந்து மிகுதியாக அமையும் அனைத்துத் தொடைகளும் எண்ணுவண்ணமாகும். எண்ணிக்கை பயின்று வருவதை எண்ணுவண்ணம் எனக் குறிப்பிடலாம். சிறைக்குடி ஆந்தையார் பாடலில்,
“இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் அகிய புன்மை நாமுயற்கே” (குறுந்.57:5-6)
என இறுதியிரண்டு அடிகளில் எண்ணுவண்ணம் பயின்று வந்துள்ளது.
“ஓருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பல்நாள் வந்து, பணிமொழி பயிற்றி” (குறுந்.176:1-2)
என பாடலின் முதலிரண்டு அடிகளில் எண்ணுவண்ணம் பயின்று வந்துள்ளது.
ஏந்தல் வண்ணம் :
முன் வந்த சொல்லே பின்னும் வந்தமையச் செய்யுளைக் கட்டமைப்பது ஏந்தல் வண்ணமாகும். ஒரு சொல்லே திரும்பத் திரும்ப வருவதால் செய்யுளின் இனிமை கூடுகின்றது.
“நோம் என்நெஞ்சே! நோம் என்நெஞ்சே!
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
………………. …………….. ……………….
…………………..நோம் என்நெஞ்சே” (குறுந். 4)
இப்பாடலில் “ நோம் என்நெஞ்சே” – எனும் வந்த சொல்லே திரும்பத் திரும்ப வந்து செய்யுள் இனிமையைக் கூட்டி ஏந்தல் வண்ணமாயிற்று.
ஔவையார் பாடிய குறுந்தொகைப் பாடலொன்றில்,
“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே- அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே” (குறுந். 23)
என ‘அகவன் மகளே’ எனும் சொல் மூன்றிடத்தும், ‘பாடுக பாட்டே’ எனும் சொல் இரண்டிடத்தும் ‘பாடிய பாட்டே’ என்னும் சொல் ஓரிடத்தும் வந்து செய்யுளின் இனிமையைக் கூட்டி ஏந்தல் வண்ணமாகின்றது. பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடிய குறுந்தொகையின் 156- ஆவது பாடலில், ‘பார்ப்பன மகனே! எனும் சொல் மூன்று முறை வந்து செய்யுளின் சந்த இனிமையைக் கூட்டி ஏந்தல் வண்ணமாயிற்று.
நலிபு வண்ணம் :
செய்யுளில் நலிந்த இயல்புடைய ஆய்த ஓசை பயின்று வருவது நலிபு வண்ணமாகும். குறுந்தொகைப் பாடல்களில் நலிபு வண்ணம் குறைவாகவே பயின்று வந்துள்ளது. கருவூர்க்கதப்பிள்ளையின் பாடலில்,
“தான்நாணின் இஃது ஆகா வாறே” (குறுந். 265 : 8)
எனவும்,
“எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து” (குறுந். 198 : 6)
“இஃதோ தோழி, நம் காதலர் வரவே?” (குறுந். 160 : 6)
எனவும் ஆய்த ஓசை பயின்று வந்திருப்பதைக் காணலாம்.
ஒழுகு வண்ணம் :
ஓடை நீர் போல இடையறாது ஓசை ஒழுகிச் செல்லும் இயல்புடையதே ஒழுகு வண்ணமாகும். குறுந்தொகையில் இறையனார் பாடிய,
“கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?” (குறுந். 2)
என்னும் பாடலையும், யாயும் யாயும் யாராகியரே எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்? – என்ற செம்புலப்பெயநீரார் பாடலையும் ஒழுகு வண்ணத்திற்குச் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.
நிறைவுரை :
தொல்காப்பியர் ஒலிக்கோலத்தை வண்ணம் என்கின்றார். ஒரே ஒரு ஒலி அல்லது அதற்கினமான ஒலிகள் ஓரடியிலோ அல்லது பாடல் முழுவதுமோ பயின்று வருவதனையே தொல்காப்பியர் வண்ணம் என்கின்றார். வல்லொலி, மெல்லொலி ஆகியன படிப்போர்க்கு விளைவிக்கும் ஓசைநயத்தின் இன்பமே வண்ணமாகும். வண்ணம் ஓசை நோக்கி வரும் என்ற நச்சினார்க்கினியர் கருத்து இதனை உறுதிப்படுத்துகின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் இருபது வண்ணங்களில், குறுந்தொகைப் பாடல்களில் புறப்பாட்டு வண்ணம், பாவண்ணம், நீங்கலாக ஏனைய வண்ணங்கள் பயின்று வந்துள்ளன. அவற்றுள் நலிபு வண்ணம் குறைவு. அகப்பாட்டு வண்ணம் மிகுதி. குறுந்தொகைப் பாடல்களில் தூங்கல் வண்ணம் பயின்று வரவில்லை என்றே குறிப்பிடலாம். இவ்வாறு குறுந்தொகைப் பாடல்களில் வண்ணம் என்னும் செய்யுளுறுப்பு அப்பாடல்களின் கட்டமைப்பிற்குத் துணைபுரிகின்றது எனலாம்.
சான்றெண் விளக்கம் :
தொல்காப்பியம். பொருளதிகாரம், செய்யுளியல், பேரா( உ.ஆ ) நூற்பா - 210
தொல்காப்பியம். பொருளதிகாரம், செய்யுளியல், பேரா( உ.ஆ ) நூற்பா - 211
பயன்பட்ட நூல்கள் :
கணேசையர் பதிப்பு, தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும், முதல் பாகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007.
சாமிநாதையர், உ.வே.,( ப.ஆ ) குறுந்தொகை மூலமும் உரையும், கபீர் அச்சகம், சென்னை,1962.
தண்டபாணி சுவாமிகள், வண்ணத்தியல்பு புலமை பதிப்பகம், சென்னை,1987.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.