முன்னுரை
தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கன்னிப் பெண்கள், பிற கன்னிப் பெண்களைத் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி இறைவனை வழிபடுவர். இதனைப் பாவை நோன்பு என்பர். இப்பாவை வழிபாட்டைப் பரிபாடலில் தைந்நீராடல்1 என்று குறிப்பிடுகிறது. இதனுடைய தொடர்ச்சியாகச் சைவ சமயத்தில் மாணிக்கவாசகர் திருவெம்பாவையையும் வைணவ சமயத்தில் ஆண்டாள் திருப்பாவையையும் பாடியிருக்கிறார்கள். எனவே பாவை வழிபாடு என்பது தொன்றுதொட்டு ஒரு மரபாகவே இருந்து வருவதைக் காணலாம். தமிழர்கள் சைவத்தையும் வைணவத்தையும் தங்கள் இருகண்களாகப் போற்றினர். அவ்வகையில் திருவெம்பாவையில் இடம்பெறும் பாவை நோன்பு குறித்த கருத்துக்கள் “சைவமும் பாவை வழிபாடும்” என்னும் தலைப்பில் இக்கட்டுரையின் வழியாக எடுத்துரைக்கப்படுகிறது
திருவெம்பாவை உள்ளடக்கம்
சைவசமயக் குரவர்களுள் ஒருவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் பக்தியின் உச்சமாகக் கருதப்படுகிறார். அவர், திருவண்ணாமலையில் பாடிய பாடல்களே திருவெம்பாவை ஆகும். தன்னைப் பெண்ணாகப் பாவித்து மற்றப் பெண்களுடன் மார்கழி நீராடி அண்ணாமலையானையும் தில்லையம்பலத்தானையும் வழிபடுவதாக அமைந்துள்ளது திருவெம்பாவை. திருவெம்பாவையில் இருபது பாடல்களில் உள்ள செய்திகள் பகுத்தாயப்படுகின்றன.
திருவாதிரை நோன்பு
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்துக்கு முன்பு வரும் ஒன்பது நாட்களுக்கு முன்னர் நோன்பைத் தொடங்குவர். பத்தாம் நாள் திருவாதிரை ஆகும். சிவன் கோயில்களில் இத்திருவாதிரையை ஆருத்ரா தரிசனம் என்ற விழாவின் பெயரில் வழிபடுகின்றனர். இந்நோன்பைத் திருவெம்பாவை நோன்பு என்றும் அழைக்கின்றனர். இந்நோன்பு திருமணப் பேற்றினை அருளும் தன்மையுடையது ஆகும். மேலும் மார்கழியில் திருவெம்பாவைப் பாடல்களைக் கூறினால் சிவனின் அருள்பெற்ற சிவனடியவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறது திருவெம்பாவை. இவ்விரத்தை இன்றும் மக்கள் கடைப்பிடிப்பதைக் காணமுடிகிறது. நோன்பு கடைப்பிடிக்கும் முறை, நிறைவு செய்யும் முறை பற்றித் திருவெம்பாவையில் குறிப்பிடவில்லை என்பதை அறியலாம்.
துயில் எழுப்புதல்
திருவெம்பாவையில் ஒன்று முதல் எட்டு வரையுள்ள பாடல்கள் உறங்குகின்ற இளம்பெண்களைத் துயில் எழுப்புவதாக அமைந்திருக்கின்றது. பாவை நோன்பின் மிக முக்கியமான ஒன்று தன்வயது ஒத்த பெண்களோடு இறைவனை வழிபடுவதாகும். அவ்வகையில் நாங்களெல்லாம் ஆதியும் அந்தமும் இல்லாப் பெருமானைப் பாடிக் கொண்டிருக்கிறோம். நீ இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயோ? (பாடல் 1) என்று விளிக்கிறார். என் அன்பெல்லாம் சிவபெருமானுக்கே (பாடல் 2) , எங்களுக்கு முன் எழுந்து சிவபெருமானைத் தந்தையே, ஆனந்த வடிவினனே, அமுதமயமானவனே (பாடல் 3) என்றெல்லாம் சொல்லும் முத்துப் போன்ற பற்களை உடையவளே என்று கூறுகிறார்.
மூன்றாவது பாடலில் துயில்கொண்டவள் எழுந்து, நான் இந்த நோன்பிற்குப் புதியவள் என்றும் இதனைப் பொறுத்துக் கொண்டால் என்ன என்று வைவதாக அமைந்துள்ளது. நான்காம் பாடலில், அழகிய கிளி போலப் பேசும் நம் தோழியர் அனைவரும் வந்துவிட்டனரா என்று வினவுகிறாள். எல்லோரும் உள்ளபடியே வந்துவிட்டார்கள் தூங்கிக் காலத்தை வீணாக்காதே என்று அழைக்கின்றனர். சிவபெருமானை அறிந்து கொண்டோன் என்று கூறும் நயவஞ்சகி தவைத்திற (பாடல் 5) நேற்று நீயே வந்து எழுப்புவதாகச் சொல்லி விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறாய இது தகுந்த செயலா ( பாடல் 6 ) என்றும் மங்கள ஒலிகள் கேட்கின்றன. சிவ சிவ என்ற நாமங்கள் ஒலிக்கின்றன இதனையெல்லாம் கேட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறாய உன்னுடைய தூக்கத்தின் தன்மை தான் என்ன? (பாடல் 7) என்றும் வினவுகிறார். பறவைகள் ஒலியெலுப்புகின்றன. இசைக்கருவிகள் ஒலிக்கின்றன. சிவபெருமானைப் பாடுவது உனக்குக் கேட்கவில்லையா? வாசலைத் திற என்று துயில்கின்ற பெண்ணை எழுப்புகிறார்.
திருவெம்பாவையில் தொடக்கத்தில் துயில் எழுப்புவது அதன்பின் துயில் எழுந்து வினவுவதும் புதுமையாக் காணப்படுகிறது. அடுத்து திருமாலை ஆழியான் என்று எட்டாம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதனை நோக்கும் போது சைவம் வைணத்தை ஏற்பதும் அரியும் சிவனும் ஒன்று என்பதும் சமய ஒற்றுமை மாணிக்கவாசகர் காலத்தில் இருந்திருக்கிறது என்பதை அறியலாம். அதுமட்டுமன்றி சைவம் எப்போதும் வைணவத்தை ஏற்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நோன்பின் பயன் அல்லது வரம் வேண்டல்
துயில் எழுந்த பின் இறைவனிடம் தங்கள் வரத்தைக் கேட்கின்றனர். பழமைக்குப் பழமையான மூலப்பரம்பொருள். புதுமைக்குப் புதுமையாக நின்று உயிரூட்டும் எம்பெருமானைத் தலைவனாக நினைத்து வழிபடும் பெருமை மிக்கத் தலைவர்களை வழிபட்டு அவர்களுக்குத் துணையாக இருப்போம். அவர்கள் எங்கள் கணவர் ஆவர் என்றும் வரம் கேட்கிறார்கள். (பாடல்9)
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
……………………………………………… ………………
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறைய மிலோமேலோ ரெம்பாவாய்2
இந்த வரத்தை இறைவன் அருவிட்டால் வேறு குறையே இல்லை என வேண்டுகின்றனர். இதே கருத்தையே பத்தொன்பதாம் பாடலிலும் வலியுறுத்தி வேண்டுகின்றனர். சிவபெருமானே அடைக்கலம் என்றும் உன் அடியவர்களைத்தவிர வேறு யாரும் எங்களுக்குக் கணவராகக் கிடைக்கக் கூடாது என்றும் வணங்கிவிட்டு இங்வரத்தைத் தந்துவிட்டால் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் கவலையில்லை என்கின்றனர். இதனை,
இறங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்3
இப்பாடல்களை நோக்கும்போது திருமணப் பேறு என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் கவலை இல்லை என்று இயற்கையைப் பேசுவது பெண்ணின் மணவிருப்பத்தை மிகைப்படுத்தி காட்டுகிறது. அதுமட்டுமன்றி நோன்பிருக்கும் பெண்கள் சிவனைத் தலைவனாக வழிபடும் சிவனடியவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல கணவனைப் பெறுதல் என்பது நோன்பில் வேண்டும் வரமாகவும் வரத்தின் பயனாகவும் அமைகிறது.
நீராடல்
பாவை நோன்பின் தொடக்கம் துயில் எழுப்புதல், வரம் வேண்டல் என்பதாகும். பாவை நோன்பின் மிகமுக்கியமாகக் கருதப்படுவது நீராடல் ஆகும். தன் வயதொத்தவர்களை நீராட அழைத்து இறைவனை வழிபடச் செய்வதாகும். பரமசிவனின் பாதங்கள் ஏழுபாதாளங்களைக் கடந்து விளக்க முடியாத பொருளாக உள்ளன. இப்படிப்பட்ட சிவபெருமானின் கோயிலில் பணிபுரியும் பெண்களிடம் சிவனின் ஊர் எது? பெயர் என்ன? உற்றார், அயலார் யார்? எப்படி? அவனைப் பாடித் துதிப்பது என்று திருவெம்பாவை பத்தாவது பாடலில் வினவுகிறார் நாயகி பாவம் கொண்ட மாணிக்கவாசகர்.
தில்லையம்பலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி அவனுள் பெற, மலர் நிறைந்த நீர்நிலை மற்றும் பெரிய மலர்ச்சுனையில் நீராடல், (பாடல் 12). பொய்கையில் நீராடல் (பாடல் 13), குளிர்ந்த நீரில் நீராடல் (பாடல் 14),அழகிய மலர் நிறைந்த நீரில் குதித்து விளையாடுவதால் (பாடல் 15), தாமரை மலர்கள் நிறைந்த பொய்கையில் நீராடல் (பாடல் 17), புதுப்புனலில் நீராடுதல் (பாடல் 18), என்று பெண்கள் நீராட அழைக்கிறார் மாணிக்கவாசகர். இறுதியாக மார்கழி நீராட அருள் புரிந்த இறைவனுக்கு வணக்கத்தையும் நன்றியையும் செலுத்துகின்றனர். இந்த நீராடல் என்பது சங்ககாலம் முதல் இன்று வரை காணப்படுவதை அறியலாம். இன்று இளம் பெண்கள் மார்கழி நீராடுவது என்பது சற்று கேள்விக்குறியாகவே உள்ளது.
மழை வேண்டல்
சிவபெருமானின் சிறப்புகளைச் சொல்லி, எப்படி அவரும் உமையம்மையும் தம் அடியவர்களுக்குத் தாமாகவே முன்வந்து அருள் சுரப்பதைப் போல மழையைப் பொழிவிப்பாயாக என்று மேகத்தைக் கேட்கிறார். மழையேலோர் எம்பாவாய் பாடல் 16. பாவை நோன்பு என்பது நல்ல கணவனைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல் இவ்வுலக மக்கள் நலம் பெற மழையையும் வேண்டுவது இங்குப் பொதுவுடைமையாகக் காணப்படுகிறது.
நிறைவுரை
சைவசமயத்தில் பாவை நோன்பு பற்றி குறிப்பிட்டும் நூல் திருவெம்பாவை ஆகும். திருவெம்பாவையில் தில்லையம்பலத்தானையும் அண்ணாமலையானையும் வழிபடுகின்றனர். இரண்டாவது பாடலிலும் பன்னிரண்டாவது பாடலிலும் தில்லையம்பலத்தானையும் பதினெட்டாவது பாடலில் அண்ணாமலையானை ப் பற்றியும் குறிக்கப்படுகிறது. தில்லையம்பலத்தானைத் தொடக்கத்தில் குறிப்பிட்டதால் திருவாதிரை நோன்பிற்கானது என்று மாற்றப்பட்டிருக்கலாம். விரதம் தொடங்கும் முறை, முடிக்கும் முறை பற்றிய குறிப்புகள் இல்லை. மழை வேண்டல் என்பது உலக நன்மைக்காகவும் நல்ல கணவன் என்பது தன்னலத்திற்காகவும் பார்க்கப்படுகின்றது. மார்கழி மாதத்தில் நற்காற்றைச் சுவாசித்து நீளாயுள் பெறவும் நீராடியிருப்பர் எனலாம்.
இந்தப் பாவை நோன்பு என்பது சமகாலத்தில் பாவையர்கள் ஓரிருவரே மேற்கொள்கின்றர். தானும் துயில் களைவதில்லை. பிறகு எப்படித் தன் வயதொத்த பெண்களைத் துயில் எழுப்பி நீராடி வழிபடுவது? என்ற கேள்விகள் எழுகின்றன. மேலை நாட்டுக் கலாச்சாரம் பாவைகளை கோவிலுக்குச் செல்லவிடாமல் செல்போன் கோபுரங்களைத் தேட வைக்கின்றன என்பதும் வருத்தத்தை அளிக்கின்றது. இது சைவத்திற்கு மட்டுமல்ல வைணவத்திற்கும் பொருந்தும். திருவெம்பாவை திருத்தலங்களில் ஒலிப்பது மட்டுமன்றி நவயகப்பாவைகளிடம் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இக்கட்டுரை.
அடிக்குறிப்புகள்
1.பரிபாடல், 11:134
2.திருவெம்பாவை.9
3.திருவெம்பாவை. 19: 7-8
துணை நின்றவை
முனைவர் சி. பாலசுப்பிரமணியம், திருவெம்பாவை விளக்கம், பாரி நிலையம், பிராட் வே, சென்னை-600108, முதற்பதிப்பு 1987.
பரிபாடல், டாக்டர் உ. வே. சா நூல் நிலையம், 2,அருண்டேல் கடற்கரைச்சாலை, பெசன்ட் நகர், சென்னை-600090.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.