நீர் வார்த்த அய்யனார்!  -  சுருளி காந்திதுரை (மதுரை) -

கருப்பசாமி மொறட்டு கண்களோடு வீச்சருவாள் கையில் கொண்டு மிகவும் ஆக்ரோசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். உச்சிப் பொழுது உச்சிக் காலப் பூசையை வீரமணிகண்ட பூசாரி சூடம் காட்டிட்டு பக்தர்கள் முன் தட்டைக் காண்பித்தார். எல்லோரும் தொட்டு கண்களில் வைத்துக் கொண்டார்கள்.

கனகராஜ் மீனாட்சிபுரத்தில் இருந்து படித்துப் பட்டணம் சென்ற இளையதலைமுறை. வருடம் ஒரு முறையேனும் வந்துப் போகனும்னு குடும்பத்தை அழைத்துப் பார்த்தான். செலவு விட்டுத் தள்ளு, மனைவி வந்தாவுல புள்ளகவர, அவளே காரணங்களைத் தேடுவாள்.

பிள்ளகளக் கேட்க வேண்டுமா… எப்பவும் படிக்கனும் வீட்டுப்பாடம் எழுதனும் அப்பறம் டியூசன் போகனும்னு ஆத்தாளும் பிள்ளைகளும் காரணங்களைத் தேடுவார்கள். இருந்துட்டுப் போகட்டும்னு கனகராஜ் காரணங்களைக் களைந்து குலதெய்வம் கோயிலுக்கு வரணும்… (வந்தாத்தானே பூசாரிக்கு வரும்படி.)

பாவம் கோயிலே கெதின்னு கிடக்கிற மனுசன். நாலு சாதிசனம் வந்து பொங்கல் வைக்கனும், மொட்டை போடனும், கிடாவெட்டனும், காது குத்தனும், ஆளும் பேரும் கோயிலுக்கு வந்து போகனும். அப்பத்தான் உறவும் வளரும் ஊரும் நல்லா இருக்கும். மக்க மனுசர் கோயிலுக்கு வந்து போனாதான் பூசாரி ஆசையா வேல வெட்டிச் செய்யச் சந்தோஷமா இருக்கும். அவனும் மனுசன் தானே. “குல சாமி” மாதிரி கம்மாக்கரையிலே.. பூசாரி எத்தனை நாளைக்கி தனியா வெறும் கண்மாயியயும் கருவேல மரத்தையும் பாத்துக்கிட்டே இருக்கமுடியும்.

போனத் திருவிழாவுலப் பார்த்தது, பூசாரியப் பாத்ததும், சாமியக் காயப்போட்டாச் சாமிக் குத்தம் வந்துரும். பூசாரிக்கு வாய் வயிறு இருக்கு. குடும்பம் குட்டி… நாலு நல்லது கெட்டது இருக்கு, நீர் வார்த்த முத்து அய்யன்… ஆத்தா வெயிலா முன்னோடும் கருப்பசாமி… அவுக அவுகளுக்குப் பூசைப் போட்டாத்தானே மனம் குளிரும்… சாமி மனசு குளுந்தாப் பூசாரி மனசு குளுந்த மாதிரி.

மண்ண விட்டுப் பொளப்புத் தேடிப் பொளைக்கப் போனவுக, ஊரவிட்டுப் பட்டணம் போயிட்டக் கனகராஜ் மாதிரி ஆளுக கோயிலுக்கு வந்தா.. மனம் உருகி வேண்டுவதிலும் கோரிக்கை வைப்பதிலுமே இருந்து காணிக்கை வைக்க மறந்துறாக…

அடடான்னு பஸ் டிக்கெட் எடுக்கும்போது தட்சணை வைக்காம வந்துட்டமேன்னு தோணும்…

அட நம்ம சாமி தானே, மேலைக்குப் பார்த்துக்கிறலாம்… இப்படித்தான் பலரும் சென்று விடுகிறார்கள். கொடுக்கனும்னு மனசு இருக்கிறவனுக்குத் தொட்டுக்க நக்கிக்கன்னு போகுது பொளப்பு… நாலு காசு வந்ததும் பழச மறந்துர்றான். புதுசுக் கண்ண மறைக்கிது. சாமியையும் கவனிக்க மாட்றாங்க… பூசாரிய மனுசனாக் கூடப் பார்க்கிறதில்ல.

பெறந்த ஊர விட்டு மண்ணவிட்டு, மனுசர விட்டுட்டுப் பட்டணம் போயிட்டு வரும்போது, நம்ம வாழ்க்கையில தோத்தமா ஜெயிச்சமான்னு தெரியாம?

வெள்ள வேட்டி சட்டை, பெரிய செல்போன், ரெண்டு மோதிரம், ஜெயின் எதையாவது மாட்டி வந்தா தானே ஊர்ல நாட்டுல மதிப்பாக. வீசுன கையும் வெறும் கையுமா வந்தா? யார் மதிப்பா?

என்ன இன்னாரு அது யாரு மகன்இவன்.. ஒன்னும் செழிப்பமா இல்ல போலன்னு ஊருக்கு ரெண்டு பெருசு ஆம்பளைக பற்றிப் பேசியும், ரெண்டு கிழவி பொம்பளக பேச இதுதானப்பா நம்ம ஊர் பழக்கம். இதுக்குன்னே ஊருக்கு நாலுபேர் இருக்கிறாக.

கனகராஜ் கிளம்பிக் குலதெய்வத்தப் பார்க்கனும் யார்ட்டையும் பேசாம நேராக் கோயிலுக்கு வந்தான்.

“நீர் காத்த முத்தையா”வுக்கு யாரோ ரெட்டைக்கிடா வெட்டி இருப்பாங்க போல, கூட்டம் தூள் பறக்குது. பத்து இருநூறு பேர் இருக்கும்.

பூசாரி வாய்கட்டிப் பூசையை முடிச்சிட்டு தீப ஆராதனை முடிச்சு, வெளிய பக்தர்களுக்கு கொண்டு வந்து சூடத் தட்டைக் காட்டினார். அவரவர் கண்களில் ஒத்திக் கொண்டார்கள்.

திரும்பிப் போய் விபூதிய எடுத்துக் கொடுத்துட்டே வரும்போது பூசாரி பார்த்துட்டுக் கனகராஜ் கிட்ட வரும்போது தீபஆராதனைத் தட்டு வேகமாக அடுத்தவுகிட்டப் போனது.

கூட்டத்துல கனகராசு இதப் பெரிசா எடுத்துக்கல… ஆனா, விபூதி கொடுத்த வீரமணிகண்ட பூசாரி வேகமா கனகராசிடம் வரும்போது பார்க்காமப் போனார். மீண்டும் அதே மாதிரி.

அங்ஙன இருந்த முத்துராஜ் அண்ணே நிக்கிதுப்பா என்றான்.

அத்தமக்க ஆளு அடையாளம் தெரிந்துகொண்டு மச்சினனுக்கு கொடுங்கன்னு சொன்னார்கள். பூசாரி காதில் வாங்கியதாகத் தெரியல.

கனகராஜ் கையக்கண்டதும் பூசாரியின் விபூதிக் கைதானே நகண்டது. மீண்டும் மீண்டும் நடந்தது.

சாமியைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான் கனகராஜ்.

என்ன இந்தப் பூசாரிக்கு நம்ம மேல கோபம்.

பூசாரி மனசுக்குள், எப்ப வந்தாலும் என்னைக் கும்பிட்டு அவன் பாட்டுக்கப் போறான். எனக்கு கொடுக்க வேண்டியதக் கொடுக்கனும்.. நான் வெதப்புன்னு ஊர் தேசம் போகும்போது கண்டுக்கறிது இல்ல. வருடந்தோறும் குலதெய்வத்தின் பூசாரி அசலூர்ல இருக்கும் வீடுதோறும் போய் தவசம், பக்தர்களின் தானியம், காணிக்கை… வீட்டில் இருப்பதை மனம் கோணாமல் கொடுத்து பூசாரியை அனுப்புவது வழக்கம்.

இப்ப விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. எல்லாம் பணம் தான். பூசாரிவரும் பத்து நூறு கொடுத்து அவர மனம் கோனாம அனுப்புனா பூசாரி சந்தோசமா இருப்பார்.

நம்ம கோயிலுக்கு உடமைப்பட்டவுகன்னு தேடிப் போகும் போது, உனக்குச் சோலித் தொந்தரவு இருந்தா? பூசாரி இதையே நம்பி கிடக்கான். எல்லாரும் கொடுத்தாத்தானே பூசாரிக்கு ஆகும். காலம் இருக்கிற இருப்பில சும்மா மணிய ஆட்டிட்டே இருந்து என்ன செய்ய… நான் சாமிய நம்பியிருக்கேன்.

உங்களுக்கு குல சாமி, நான் புசாரி… நீ கொடுத்தாத் தான் நானும் எம் குடும்பமும் பசியாறுவோம். நோட்டு உம் பைக்குள்ள இருந்தாப் போதுமா? என் தட்டுக்கு வரணும்.. அப்பத்தான் மனசு நிறையும் எனக்கு.. பூசாரியின் மன ஓசை அவரையும் கடந்து அப்பப்பால் சிலநேரம் வெளியே வந்துவிடும்.

யாரோ, அண்ணே கனகராஜ் இந்தாங்க விபூதின்னு கொடுக்கவும் வாங்கிக் கொண்டார். மனதுக்குள் வெட்கம், மானப்பிரச்சனை வெளியே சொன்னா அசிங்கம்… அமைதியாக இருந்தான்.

வீரமணிகண்ட பூசாரி கடைசி வரை பார்க்காது போலவே இருந்தார். சில நாவுகள் அசைந்தது. ஏன் என்று சிலர் மனதில் கேள்வி. சிலர் பூசாரி அப்படியில்லப்பான்னு சொல்லிக் கொண்டார்கள்.

ஆனா, நீர் வார்த்த முத்தையன் பார்த்துக்கிட்டே இருந்தார். அவருக்கு எல்லோரும் வேணும். ஏழையும் வேணும் பணக்காரனும் வேணும்.

குதிரையின் மேல் கடிவாளம் பிடித்தபடி அமைதியாக இருந்தார். கோயிலில் கூட்டம் அலைமோதியது. ஆனாலும் பூசாரித் தட்டில் பெசா வரும்படியில்ல. விலவாசி கூடிப்போச்சு.. எதத்தொட்டாலும் காசு. முன்னோர்கள் பார்த்தத் தொண்டு ஊழியம்விட முடியல? வீரமணிகண்டபடி பூசாரி தொடர்ந்து பார்த்து வருகிறார் பூசாரித்தனத்த...

ஆளுக்கு ஏத்த மாதிரியா மணியடித்தார். பாவம் ஏழைகத் தட்சணை கொடுன்னு வம்பு பண்ணமுடியாது. பத்து விரலும் ஒரே மாதிரியா இருக்கு? சிலநேரம் முன்பின் இருக்கத்தான் செய்யும். மக்கள் கூட்டம் குறையவும் அமைதியாப் போய் மரத்தடியில் அமர்ந்தார்.

அண்ணே, வாங்க சாப்பிடுங்க, சாமிச்சோறு எல்லோரும் சாப்பிடத்தான்னு சொல்லுவது வழக்கம். மணி ரெண்டைக் கடந்துவிட்டது. பசியின் தொடக்கம், கறிக்கொழம்பு நம்ம கோயில்ல… சாப்பிட வேண்டியதுதான்னு எழுந்து வந்து சாப்பிட்டான்.

பூசாரி தனியா இருக்கும்போது போய் பேசனும்னு அமைதியா மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். பூசாரியின்னு விபூதிக் கொப்பறையக் கையில எடுத்துட்டா அடிச்சவனும் வருவான், சண்டைக்காரனும் வருவான்… கோயில் தலம் நீ பூசாரி, இந்த இடத்தில உன் தனிமனித விருப்பு வெறுப்புக்கு இடம்தரக்கூடாது.

சின்னப்பிள்ளைக்குக்கூட நின்னு பூசி விடுவார்ன்னு பெயர் எடுத்தவர். ரொம்ப நல்ல மனுசன்னு பெயர். அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார்ன்னு கனகராஜ் விடைத்தெரியா வினாவைச் சுமந்துகொண்டு அமைதியாக இருந்தான் கனகராஜ்.

நான்கு மணிக்கு மேல ஆலமரத்து நிழலப்பக்கம் வந்து தனியே நின்னார். கனகராஜ் பற்றிய நினைவு அவருக்கு துளியுமில்ல.

கனகராஜ் பூசாரி முன்னே போய் என்னையத் தெரியலயாப் பூசாரி? இன்னாரு மகன் இன்னாரு… தான் நான். எம் பெயர் கனகராஜ்.

எப்பா எனக்கு முன்ன மாதிரியா கண்ணு தெரியல.. வயது ஆகிப்போச்சுல.

நீங்கதான் இட்டுத்தட்டு நேரத்துல வந்து பாத்துட்டுப் போகணும். பல வருஷம் கழிச்சு வந்தா எப்படித் தெரியும்னு, மீண்டும் அழுத்தினார் பூசாரி.

ஏன்ப்பா எனக்குத் தெரியாதா? லிங்கப்பக் குடும்பன் வகையாருன்னு. எனக்குத் தெரியுமில்ல.

தெரிஞ்சுமா பூசாரி, கண்ணுத் தெரியலன்னு எப்படிச் சொல்றீங்க…

எம் சாமி தெரிஞ்சா ஏன் அப்படிச் சொல்லப்போறேன்… வாப்பா சாமி வா விபூதிய வாங்கிக்க…

இவன் இவுகப்பாட்டான் மாதிரியா வில்லங்கம்மாப் பேசுறானே. இவங்க கூட்டம் திருந்தமாட்டாங்க. பூசாரி மீண்டும் பூசை தீபஆராதனைக் காட்டி சூடத்தட்டைக் காண்பித்தார். தொட்டு வணங்கியவன் ஆதிக்கிழவன்… இந்தப் பூசாரிக்குக் கண்ணு தெரியல மேலைக்கி வரும்போது அப்படியே ஆகட்டும்… நான் அன்னைக்கி அப்ப வந்து திருநீறு வாங்கிக்கிறன்.

மனதுக்குள் ஆதிக்கிழவனை வேண்டினான். விபூதி வாங்கல மேலைக்கே வாங்கிக்கிறன் கிளம்பிவிட்டான். இது யாருக்கும் தெரிய வாய்ப்பில்ல. சிலருக்குத் தெரியும். மறுவருடம் கோயிலுக்கு வந்ததுமே… கனகராஜ், என்னடா, கோயிலுக்குள்ள பூசாரியக் காணம்.

ஆதிக்கிழவ முன்னோடு கருப்பா… நீர் வார்த்தவனே வேண்டிக்கிட்டுக் கோயிலுக்குள் போன கனகராஜ் கண்கள் இயல்பாக தேடின. வீரமணிகண்ட பூசாரியக் காணம்.

யாருச் சின்னப்பயலா இருக்கான். பூசாரியின் பேரன்போல. பேசிக்கொண்டே கனகராஜின் கண்கள் மீண்டும் தேடின.

அரசமரத்தடியில் சக்கவிரிச்சு மரத்தடியில் அமர்ந்து இருப்பதைக் கண்ட கனகராஜ். நேரா பூசாரிட்ட போய். பூசாரி இப்ப விபூதி கொடுங்கன்னு கேட்கவும். யாரு சாமி இது எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாம… எங்கிட்ட வந்து கேட்டா எப்படி. போங்க எம் பேரன்ட்டப் போயி விபூதி வாங்கிங்க.. சொல்லிட்டு.

யார் சாமி; நீங்க எந்த ஊர், யார் வகையிறான்னு கேட்டார்.

லிங்கப்பக் குடும்பன் வகையறா.

ஏய் சாமி, கனகராசா வந்திருக்க. வாப்பான்னு வாரிச்சுருட்டி எழுந்தார்.

அழுதார்… தம்பி நீ எனக்கு கொடுப்பா விபூதின்னு கேட்டார்.

என்ன பூசாரி நீங்க போய் என்கிட்ட கேட்டுட்டு.. உங்க வயசு என்ன என் வயது என்ன? நீங்க என் கிட்ட கேட்கலாமா?

இல்லப்பா நீ எனக்கு விபூதி கொடுப்பா…

இல்லங்க வீரப்பவேளார் மகன் மாசிலமணிவேளார் மகன் கண்டெடுத்த வேளார். ஆக வீரமணிகண்ட பூசாரிக்கு ஏற்கனவே கொடுத்தாச்சு… கடிச்சாத் திருப்பதுறா கருநாகக்குட்டி… பூசாரி உம் தலமுறைத் தத்துவத்துக்கும் சொல்லிட்டுப் போங்க பூசாரின்னு கனகராஜ் சொல்லவும்,

பூசாரி மனதுக்குள்ள தடுமாற்றம்… என்ன பூசாரிக்கு சாமிப்பத்தி தெரியும்… நாங்க உங்களப் பூசாரித்தனம் பார்க்கக் கொண்டாந்து வைச்சிருங்கம். அவ்வளவுதான். முடிஞ்சாச் செய்யனும்… முடியலயா? சாமிக்காரவுகிட்ட சாமியக் கொடுத்துட்டுப் போகனும்.

நம்ம கடவுளுக்குத் தொண்டு செய்யனும். உங்கள வச்சா, நீங்க மனுசனுக்குள் வேறுப்படான்னு சொல்லிட்டு,

கனகராஜ் கருப்பா. நீர் வார்த்த ஐயா எல்லாத்தையும காப்பாத்து என்னையும் காப்பாத்து.. மண்ண எடுத்து நெத்தியில வைச்சுட்டு நிமிர்ந்து நீர்வார்த்த அய்யாரைப் பார்த்தான். அவர் குதிரைப் பாய்ச்சலும் மணிச்சத்தமும் காதுக்குளி கேட்டது கனகராஜ்க்கு…

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்