எமது இனிய நண்பர் கலாநிதி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் சென்ற சனிக்கிழமை 30-1-2021 ஆண்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி எமக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இலங்கையில் பிரதி கல்விப்பணிப்பாளராகவும், ரொறன்ரோவில் பகுதிநேர ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்த இவரை முதன் முதலாக 1990 களில் ‘கனடா தமிழ் பெற்றோர் சங்க நிகழ்வு ஒன்றில்தான் சந்தித்தேன். இவர் பெற்றோர் சங்க நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தார். திரு சின்னையா சிவநேசன், திரு கே. கனகரட்ணம், திரு. இராமநாதன் ஆகியோர் அக்காலகட்டத்தில் தலைவர்களாக இருந்தார்கள். நான் முதலில் பொருளாளராகவும், பின் செயலாளராகவும் கடமையாற்றினேன். அதிபர் பொ. கனகசபாபதி, பேராசிரியர் இ. பாலசுந்தரம், திரு. சாள்ஸ் தேவசகாயம், திரு. இராமச்சந்திரன் போன்றோர் நிர்வாகசபையில் இருந்தார்கள். அக்காலத்தில் இருந்தே, தன்னார்வத் தொண்டரான நண்பர் சிவநாயகமூர்த்தி இது போன்ற ‘இலங்கை பட்டதாரிகள் சங்கம்’ மற்றும் பல சங்கங்களில் இணைந்து கடைசிவரை தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் இவர் அங்கத்தவராக இணைந்திருந்தார். தற்போது இருக்கும் நிர்வாகக் குழுவில் உப செயலாளராகக் கடமையாற்றினார். இவர் எழுத்தாளர் இணையத்தின் தலைவராக 2015 ஆம் ஆண்டு இருந்த போது, எனது 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டி விழா எடுத்திருந்தார். ‘கனடா தமிழர் இலக்கியத்தில் குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் 286 பக்கங்களைக் கொண்ட நூல் ஒன்றையும் அந்த விழாவில் கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பில் வெளியிட்டு வைத்திருந்தார். சர்வதேச இலக்கிய உலகிற்கு இந்த நூல் மூலம் எனது இலக்கியப் பணி பற்றி அறிய வைத்திருந்தார். இந்த இதழில் ‘குரு அரவிந்தன் அவர்களின் 25 ஆண்டுகால எழுத்துப் பணியும், சமூகசேவையும்’ என்ற தலைப்பில் விரிவான ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். கனடாவில் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களில் அனேகமானவர்களுடன் நட்புறவு கொண்டிருந்ததால், அவர்களுடைய வாழ்த்துச் செய்திகளையும் இதில் இடம் பெறச் செய்திருந்தார். தனது காலத்திலேயே சிறுகதைப் பட்டறை ஒன்றை நடத்தும்படி என்னிடம் கேட்டு, சிறப்பாக அதை நடத்தியும் வைத்தார்.
2016 ஆம் ஆண்டு எழுத்தாளர் இணையம் வெளியிட்ட ‘வேரும் விழுதும்’ என்ற மலர் வெளியிடுவதற்கும் இணையாசிரியர்களாக நாங்கள் கடமையாற்றினோம். எழுத்தாளர் இணையத்தின் 25 வது ஆண்டு நினைவு மலர்க் குழுவில் என்னுடன் துணை ஆசிரியராகக் கடமையாற்றி அந்த மலரைச் சிறப்பாக வெளியிட மிகவும் உதவியாகவும் இருந்தார். அச்சகத்திற்கே வந்து நூலில் உள்ள பிழை, திருத்தங்களைக் கவனமாகச் செய்து தந்தார். அதன் பின் எழுத்தாளர் இணையத்தின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்றையும் 2019 ஆண்டு நடத்தி இருந்தோம். போட்டிக்கான நடுவர் குழுவில் ஒருவராக இருந்து இறுதிச் சுற்றில் பரிசுக்கதைகளைத் தெரிவு செய்ய மிகவும் உதவியாக இருந்தார். ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 16 சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் தொகுத்து 2020 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம். இந்தத் தொகுப்பிலும் பிழை, திருத்தங்களைச் செய்து தந்தார். ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டால் கடமை உணர்வோடு அதைக் கவனமாகச் செய்து முடிப்பதில் வல்லவராக இருந்தார். இவர் பதவி வகிக்கும் போது நிர்வாகசபைக் கூட்டங்கள் எதையுமே தவிர்த்ததில்லை. இவரிடம் வாகன வசதி இல்லாவிட்hலும் குறித்த நேரத்திற்குச் சற்று முன்பாகவே அந்த இடத்தில் நிற்பதற்கு ஏற்றமாதிரித் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டிருந்தார். சமூகத்தில் கொண்ட அக்கறை காரணமாக, தவறான பாதையில் செல்பவர்களை அடையாளம் கண்டு, போலிகளையும், ஏமாற்றுக் கூட்டங்களையும் எப்பொழுதும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அன்று அடிக்கடி தன் மனதில் பட்டதை எமக்கு எடுத்துச் சொல்வார். அப்படியானவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் இவர் தவிர்த்துக் கொண்டிருந்தார்.
இவர் ‘குரு அரவிந்தனின் புனைவுகள்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பான, விரிவான கட்டுரையை ஏற்கனவே எழுதியிருந்தார். தொடர்ந்து சென்ற ஆண்டு வெளிவந்த ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற எனது நாவலுக்கு அறிமுகயுரையும் சிறப்பாக எழுதித்தந்திருந்தார். சமீபத்தில் ‘குரு அரவிந்தனின் நாவல்கள்’ என்ற தலைப்பில் இலக்கிய நண்பர்கள் யாரையாவது கேட்டு ஒரு கட்டுரை எழுதித் தரும்படி ஜீவநதி ஆசிரியர் கேட்டிருந்தார். நான் இவரிடமே அதையும் கேட்டிருந்தேன். உடனடியாகவே அவர் அந்தப் பழைய கட்டுரையில் சில மாற்றங்களை இந்தத் தலைப்புக் கட்டுரைக்கு ஏற்ற மாதிரிச் செய்து அனுப்பியிருந்தார். நான் அவர் குறிப்பிட்ட சில திருத்தங்களைச் செய்து விட்டு அவருக்கு நன்றி சொல்வதற்காக அழைத்த போதுதான் அவரை மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதித்திருப்பதாக மகளிடம் இருந்து அறிய முடிந்தது. வழமைபோல, அவர் திரும்பி வருவார் எனத்தான் நினைத்திருந்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக அவர் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை அறிந்த போதுதான் அதிர்ச்சியாக இருந்தது. சமூக நலன் கருதிக் கனடிய இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் சில நூல்களையும் இவர் வெளியிட்டிருக்கின்றார். எப்பொழுதும் சிரித்த முகத்துடன், யாருடைய மனமும் நோகாது, நட்போடும், உதவி செய்யும் மனதோடும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததே இவரிடம் இருந்த தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.
இவர் மிகவும் சுறுசுறுப்பாகத் தன்னார்வத் தொண்டராகவும், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் இயங்குவதற்கு இவரது குடும்பத்தினர் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானதாகும். இவரது துணைவியார் திருமதி தனலட்சுமி அவர்கள் எப்பொழுதும் இவர்கள் வீட்டிற்கு யார் சென்றாலும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று, உபசரிப்பவராகவே இருந்தார். சென்ற வருடம் ஐனவரி மாதத்தில் தான் இவரது துணைவியாரும் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவரது பிரிவுத் துயரால் இவர் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. கோவிட் 19 காரணமாக நேரடியாகச் சந்திக்க முடியாவிட்டாலும், தொலைபேசி மூலம் அடிக்கடி நலன் விசாரித்துக் கொள்வார். பாசம் மிக்க ஒருவரைப் பிரிந்து விட்டோம் என்ற துயர் மனதை வேதனைப் படுத்திக் கொண்டே இருக்கின்றது.
கோவிட்-19 காரணமாகச் சுகாதாரக் கட்டுப்பாடுகளை மதித்து நேரடியாகச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்த முடியாத நிலை கனடாவில் ஏற்பட்டிருப்பதால், இறுதிக் கிரிகைகள், 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும் குடும்பத்தினர் அறிவித்திருக்கிறார்கள்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்’ (குறள்-50)
என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப வாழ்ந்து, தனது 86 வது வயதில் எம்மைவிட்டுப் பிரிந்த திரு. எஸ். சிவநாயகமூர்த்தி அவர்களின் பிரிவுத் துயரில் குடும்பத்தவர்கள், உறவினர், மற்றும் நண்பர்களுடன் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய அங்கத்தவர்களான நாங்களும் பங்கு கொண்டு, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!
குரு அரவிந்தன்,
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.
01-02-2021
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.