தமிழியல் துறை தமிழியற்புலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,ஹ_ஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமெரிக்கா, உகண்டா தமிழ்ச்சங்கம், உகண்டா கிருஷ்ணகிரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து நடாத்தும் 100 நாள் தேசிய நாடகவிழா மற்றும் நாடகமும் பண்பாடும், திறன் மேம்பாட்டுத் தேசிய பயலரங்கம் நிகழ்வைச் சிறப்பித்துக்கொண்டிருக்கும் தமிழில்துறை தலைவர் முனைவர் யோ.சத்தியமூர்த்தி, கலைமணிச்சுடர் ம.வெ.குமரேசன், நாடக ஆசிரியர் மாதையன், நாடக மனேஜர் பெ.முருகேசன் மற்றும் கலைஞர்கள், நடிகர்கள், கலை ஆர்வலர்கள், இளையவர்கள் அனைவருக்கம் எனது இனிய வணக்கம்!
‘ஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்’ என்ற தலைப்பில் பேச உள்ளேன். யாழ்ப்பாண வரலாறு ஆய்வுகளில் அக்கறை கொண்ட என் தந்தை அகஸ்தியர் யாழ்ப்பாணக் கூத்து வடிவங்கள் பற்றி அதாவது வடபாங்கு, தென்பாங்கு, மன்னார் கூத்து வடிவங்கள், மட்டக்களப்பு கூத்து, காத்தவராயன் கூத்து, மலையக வடிவங்கள், கண்டிய நடனங்கள் என்று பேசுவதை அவதானித்து வந்திருக்கிறேன். அத்தோடு அவர் சிறந்த பாடகர். தாள லயம் குன்றாது நாட்டுக் கூத்து மெட்டுக்களை பாடக்கூடியவர். அத்தோடு மிருதங்கக் கலையை முறைப்படி கற்றவர். அவரது மிருதங்கக் கச்சேரிகளையும் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன். எனது பாட்டனாரான சவரிமுத்துவும் கலையார்வம் கொண்டவர். அவர் உண்மையான குதிரையை மேடையில் ஏற்றி நடித்தவர் என்று எனது தயார் நவமணி கூறியதைக்கேட்டு வியந்திருக்கிறேன். அவர் நடித்தவற்றை நான் நேரில் பார்க்காவிட்டாலும் கூத்துப் பாடல்கள் பாடியதைக் கேட்டிருக்கிறேன். எனது பெரிய தந்தை எஸ் சிலுவைராஜாவும் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞன். ‘சங்கிலி மன்னன், ‘கண்டி அரசன்’ போன்ற நாட்டுக்கூத்து நாடகங்களில் அரசனாகி கொலுவில் உட்கார்ந்து அவர் கர்ஜித்ததை நான் மேடைகளில் பார்த்து அனுபவித்திருக்கிறேன். அத்தோடு எனது மகன் அகஸ்ரி யோகரட்னம் லண்டனில் மிருதங்கக் கலையைப் பயின்று அரங்கேற்றம் கண்டு, லண்டன் மேடைகளில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றான். இத்தகைய கலைச் சூழலின் பின்னணியிலிருந்து வந்தவள் என்றவகையில் இங்கு பேசுவது பொருத்தமாகி மகிழ்விக்கின்றது.
‘நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு - கலையுலக வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை 1981இல் எனது இனிய தந்தை எஸ்.அகஸ்தியர் அவர்கள் எழுதி வெளியிட்டதையும், அந்த நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு அவருக்கு வழங்கப்பட்டு கௌரவித்தமையையும் இவ்வேளை நினைவுபடு;த்தி, அந்த இனிய நினைவுகளோடு அவரது நூலிலிருந்தும் சிறியனவற்றையும் சுட்டித் தொடர்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
ஈழத்து நவீன நாடகம் என்று கூறும்போது முதலில் எனது நினைவுக்கு வருபவர் கலையரசு சொர்ணலிங்கம். 1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மானிப்பாயில் பிறந்த கலையரசு சொர்ணலிங்கத்தை எனது வீட்டில் நேரில் காணும் அருமையான பாக்கியம் பெற்றவள் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.
புராணக் கதைகளையும், இதிகாசங்களையும், வடமொழி நாடகங்களையும், ஆங்கிலம் தழுவல் நாடகங்களையும் அடிப்படையாகக் கொண்டு கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகங்கள் அமைந்திருந்தன. நாடகம் என்பது யாழ்ப்பாணத்தில் அங்கீகரிக்ப்படாத ஒரு கலையாக இருந்த காலகட்டத்தில் கிராமிய மட்டத்தில் கலையரசு சொர்ணலிங்கம் மேற்கொண்ட நாடக முயற்சிகள் ஈழத்து நாடக அரங்கியலுக்கு வலுவான தளத்தைத் தீர்மானித்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஈழத்தில் நாடக அரங்குகளைத் தீர்மானித்ததில் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் தனியிடம் விகிக்கின்றார். 1950 களில் கலையரசு சொர்ணலிங்கம் பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் கூத்தாடிப் பாடி நடிப்பதை விடுத்து வசனம் பேசி நடிப்பதுதான் நவீன நாடகம் என்று வலியுறுத்தியவர்கள் இவர்கள். நவீன நாடகத்தின் தந்தையாக கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் திகழ்ந்தார்.
அகஸ்தியர் நூலிருந்து...
1920களில்; ஒலிபெருக்கி இல்லாத கால கட்டத்தில் பூந்தான் யோசேப்புவும் அவர்தம் குழுவினருடன் கத்தோலிக்க மரபுடன் கூடிய நாடகங்களை மேடையேற்றிப் புகழ் பெற்றனர். நாடகம் பார்க்கும் ரசிகர்கள் கடல்போல் பரவியிருந்தாலும் வசனங்களையும் பாடல்களையும் தெளிவாக உச்சரித்து அட்சர சுத்தியாக உரத்துப் பாடி மக்களைக் கவர்ந்து விடுவார் பூந்தான் யோசேப்பு.
சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுக் கூத்துக்களில் நடித்தும், ஐந்நூறு நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியும் நமக்குத் தொழில் நாட்டுக்கூத்து என்று வாழ்ந்த பூந்தான் யோசேப்பு கத்தோலிக்க மக்கள் மத்தியில் மாத்திரமன்றி சைவப் பெரியார்கள் கலைஞர்கள் மத்தியிலும் பெருஞ் செல்வாக்கைப் பெற்றிருந்தார். புலவர் தட்சணாமூர்த்தியின் தயாரிப்பான ‘இலங்கேஸ்வரன்’ என்னும் சரித்திர நாடகத்தில் இராவணணாக யோசேப்பு நடித்தார். இந்த நாடகம் 1965 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கலாமன்றத்தினரால் மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்துக்கு தலைமை வகித்த சைவப் பெரியார் மாவட்ட நீதிபதி திரு.செ. தனபாலசிங்கம், பூந்தான் யோசேப்பு அவர்களது அரை நூற்றாண்டு நாடக சேவைகளைப் பாராட்டி நாட்டுக்கூத்து கலாநிதி என்னும் உயர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒரே கலைஞர் என்ற பெருமைக்குரியவர் பூந்தான் யோசேப்பு அவர்கள் மட்டுமே!
அன்று அநேக புலவர்கள் கத்தோலிக்க மறை பரப்பும் நாட்டுக் கூத்துப் பாடல்களையே அதிகம் பாடினர். கத்தோலிக்க வேதத்தைப் பரப்புவதற்கெனத் தங்கள் உயிர்களைத் தத்தம் செய்த வேத சாட்சிகள், அர்ச்சியசிஸ்டர்கள், கன்னியர்கள் முதலாளித்துவ தன்னகங்கார ஆட்சியதிகாரம் பூண்ட மன்னர்களால் உயிர் நீத்து வேதத்துக்காக மரித்த வரலாறுகளைப் பல்வேறு கிராமங்களுக்கு எடுத்துச் சென்று, அத்தகையோரின் சரித்திரங்களைத் தேர்ந்து எம்மதத்தினரும் பார்த்து ரசிக்கும்படியாக நாட்டுக் கூத்துகளாக அமைத்துப் பாடி மேடையேற்றியவர்களில் கலைஞர் பூந்தான் யோசேப்புவே முக்கிய இடம் வகிக்கின்றார்.
சிங்களக் கலைஞர்கள் மத்தியில் கலைஞர் பூந்தான் யோசேப்பு
1974 இல நாட்டக்கூத்து சர்க்கரவர்த்தி ப10ந்தான் யோசேப்பு கொழும்பு சென்றிருந்தார். அவ்வேளை கொழும்பு ‘லயனல் வேண்ட் தியேட்ட’ரில் சர்க்கரவர்த்திக்கென நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி இருந்ததாம். இருநூறுக்கும் மேற்பட்ட சிங்களக் கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சக்கரவர்த்தி பூந்தானுக்கென அவர்கள் தயாரித்த ‘மனமே’ என்ற நாடகத்தின் சில கட்டங்கள் நடித்துக் காட்டப்பட்டன. அவருடன் சென்றிருந்த கலைஞர் சில்லையூர் செல்வராஜன் உணர்ச்சிவசப்படக் கூறி அவரைப் பாராட்டினாராம். தலை சிறந்த சிங்களக் கலைஞர் பேராசிரியர் கலாநிதி ஈ.ஆர்.சரச்சந்திரா, சக்கரவர்த்தி பூந்தான் யோசேப்புவைத் தேடி இலங்கை வானொலிக்கு வந்து அவரை மிக மரியாதையோடு வணங்கித் தனது சொந்த வாகனத்தில் அவ்விழாவுக்கு அழைத்துச் சென்றாராம். இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் கலைஞர் பூந்தான் யோசேப்பு தனது கருத்துரை வழங்கும்போது ‘தான் பிறந்து வளர்ந்து என் கலைத் திறமைகளையெல்லாம் அள்ளி அள்ளி வழங்கிய என் அன்புத் தாயகமான யாழ்ப்பாணத்திற்கூட இப்படி ஓர் அன்பு தோய்ந்த இதய சுத்திமிக்க வரவேற்பு எனக்குக் கிடைத்ததில்லை. இது கலைஞன் உலகுக்கு உரியவன் என்பதையே காட்டுகிறது’ என்று கூறினாராம் என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் அகஸ்தியர்.
ஈழத் தமிழர் வரலாற்றிலே 1983ஆம ஆண்டிற்குப் பின்னரான இனக்கலவரம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஈழத் தமிழர்களை உலகெல்லாம் பரந்து வாழ வைத்தது. அப்புலப்பெயர்வு, ஈழத்தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சியை உலகெங்கும் அறிமுகப்படுத்தியது என்று எனக்குத் தோன்றுகின்றது.
பூந்தான் யோசேப்பு ஈழத்தினுடைய கூத்து மரபின்; முக்கிய நாயகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி மட்டக்களப்பு, மன்னார், புத்தளம் ஆகிய பகுதிகளிலும் தத்தம் பாரம்பரிய கூத்து மரபைப் பேணிய கலைஞர்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இந்தக் கூத்துக் கலையைப் பேணிய அண்ணாவிமாரே ஈழத்து நாடக மரபின் மூலவர்களாவார். இன்றும் தங்களின் பாரம்பரியக் கூத்துக்கலையைப் பேணும் முயற்சிகளில் ஈழத்திலும், கனடா, பிரான்ஸ் போன்ற புலம்பெயர் நாடுகளிலும் அக்கறையோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சிங்கள நாடக மரபிற்கு 1960 களில் புத்துயிர் ஊட்டிய நாடகப் பேராசான் சரச்சந்திரவின்; தாக்கத்தின் பேரில் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் ஈழத்துக் கூத்து மரபைப் பேணி அதனை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அண்ணாவிமார்களை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து கௌரவித்தும், பழைய கூத்து நாடகப் பிரதிகளை அச்சிட்டும் அவர் ஆற்றிய பணிகள் விதந்துரைக்கத்தக்கன.
இதே சமயத்தில் பேராதனைப் பல்கலைக்கழககத்தின் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் ‘துரோகிகள்’, ‘சங்கிலி’ ஆகிய நாடகங்களை எழுதியமையையும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும். பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் கூத்து மரபைப் பேணும் முயற்சிகள் நடைபெற்றபொழுது இந்த மாற்றத்தை உள்வாங்கி சி.மௌனகுரு, ஏ.சீ.தாசீசியஸ் ஆகிய இருவரும் கூத்து மரபைப் பேணி நவீன நாடகங்களை மேடையேற்றுவதில் வெற்றி கண்டனர். தற்போது லண்டனில் வாழும் நாடகப் பேராசான் ஏ.சீ. தாசீசியஸ் ஈழத்திலும் புகலிடத்திலும் தமிழ் நாடகத்தை வழிநடத்தியதில் முக்கியமானவர்.
தாசீசியஸ்: ஒற்றை நட்சத்திரம் என விமர்சகர் மு.நித்தியானந்தன் குறிப்பிடுகையில் : ‘ஈழத்தின் நவீன நாடகத்தின் உருவத்தை வார்ப்பதிலும், தன் செல்நெறியைத் தீர்மானிப்பதிலும் அழுத்தமான தாக்கத்தைச் செலுத்திய நாடக வியக்தியாகத் தாசீசியஸ் திகழ்கின்றார். ஆழ்ந்த கத்தோலிக்க மரபிலே வேரூன்றி, நாட்டுக்கூத்துகளில் தோய்ந்து, பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பின்புலத்தின் ஆங்கில நாடகங்களில் பரிச்சயம் கொண்டு, சமகால இலங்கை ஆங்கில நாடகங்களில் பரீச்சயம் கொண்டு, சமகால இலங்கை ஆங்கில நாடக ஆசான் ஏர்னஸ்ட் மக்கின்ரைரின் பயிற்சிப் பட்டறையில் வளர்க்கப்பட்டவர் தாசீசியஸ். Dramsoc என்று பல்கலைககழகப் பரிபாஷையில் அழைக்கப்படும் இலங்கைப் பல்கலைக்கழக நாடக சங்கத்துடனும் தொடர்பு கொண்டிருந்த தாசீசியஸ், இப்சனையும், ஓ நீலையும், பிரன்டெலோவையும், பிரெஷ்டையும் நேரடியாக தரிசித்த நாடக வளம் அவருடையது. கொழும்பில் அக்குவையினாஸ் கல்லூரி நடாத்திய நாடகப் பட்டறைகளிலே தனது நாடகச் சிந்தனையை செழுமைப்படுத்திக் கொண்டிருந்தார் தாசீசியஸ். சிங்களப் பாரம்பரிய நடனத்தின் ஆதாரமான கண்டிய நடனத்தின் நுட்பங்களை மிகுந்த சிரத்தையோடு கற்றுக்கொண்ட பயிற்ச்சியின் சொந்தக்காரர் இவர்;. யாழ்ப்பாணத்தின் மீனவக் கிராமங்களில் பயிலப்படும் பாடலாட வடிவங்களை ஆழ்ந்த லயிப்போடு தேடிய கலைஞன் இவர். யாழ்ப்பாணத்துத் தென்பாங்கு இசையை கடந்த 300 ஆண்டுகளுக்க மேலாகக் காப்பாற்றி வந்திருக்கும் மன்னார்க்கூத்துப் பாரம்பரியத்தைக் கிராமம் கிராமமாகச் சென்று கள ஆய்வு நடத்திய பலம் இவருடையது. பழமையிலும் புதுமையிலும் ஆழ வேரூன்றி, இத்துணை நாடகப் பயிற்சியோடும், அனுபவத்தோடும் நம்காலத்தில் நாடகத்துறையில் கால் பதித்த ஒற்றை நட்சத்திரமாக தாசீசியஸ் திகழ்கிறார்’ இன்றைய ஈழத்து நாடகவியலாளர்களில் தாசீசியஸினால் வழிநடத்தப்படாதவர்கள், பாதிப்புறாதவர்கள் யாருமே இல்லையென்றே கூறலாம். மேலைநாட்டு நாடகங்களில் நேரடிப் பரீட்சயம் கொண்ட தாசீசியஸ் ஈழத்துத் தமிழ் நாடகங்களின் வேர்களைத் தனது மண்ணிலேயே காண முனைந்தவர் ஆவார். கொழும்பில் நாடோடி என்ற நாடகக் குழுவின் மூலம் மஹாகவியின் ‘கோடை’ நாடகத்தையும் பின்னர் அவரது ‘புதியதொரு வீடு’ நாடகத்தையும் மேடையேற்றிருந்தார்.
அறுபதுகளில் பாடசாலை மட்டங்களில் நாடகங்களைக் கொண்டு செல்வதில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரியின் ஆசிரியரான பி.ஏ.சி. ஆனந்தராஜா அவர்கள் தாசீசியஸ், கலையரசு சொர்ணலிங்கம் போன்ற கலைப் பேராசான்களுடன் இணைந்து செயற்பட்டு மேடை நாடகங்களின் சிறப்பை வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடக்கூடியவர். அக்கல்லுரியின் மாணவர்களாகிய லூயிஸ் மைக்கல் றேமன் ஜேர்மனி நாட்டிலும், அன்ரன் பொன்ராஜா சுவிஸ் நாட்டிலும் தத்தமது நாடகப் பணியை இன்றும் தொடர்வது மகிழ்ச்சிக்குரிய விடயம்.
இதனைவிட அலெக்ஸி ஆப10சோவின் ரஷ்ய நாடகத்தை ஞானம் லம்பெட்டின் மொழிபெயர்ப்பில் ‘பிச்சை வேண்டாம்‘ என்ற பெயரில் நெறிப்படுத்தியதில் அக்காலகட்டத்தின் தன்னிகரற்ற நாடக நெறியாளராகத் தாசீசியஸ் திகழ்ந்தார். ஈழத்தின் மொழிபெயர்ப்பு நாடக மேடையேற்றத்திற்கு மிகச் சிறந்த முன்னோடியாக தாசீசியஸ் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்துக் காத்தான் கூத்து மரபையும், கண்டிய நடன வடிவங்களையும், மட்டக்களப்புக் கூத்தையும் இணைத்துத் தாசீசியஸ் மேற்கொண்ட பரிசோதனை கந்தன் கருணையில் பெரும் வெற்றியைத் தேடித் கொடுத்தது. 1970 களில் கொழும்பில் இயங்கிய நாடோடிகள், கூத்தாடிகள், அம்பலத்தாடிகள் ஆகிய மூன்று நாடகக் குழுக்களும் இணைந்து நடிகர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியதில் தாசீசியஸ் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியில் தாசீசியஸ் அளித்த நாடகப் பயிற்சிகளும், நிகழ்த்திய நாடக மேடையேற்றங்களும் முக்கிய பணிகளாகும். லண்டனிலும் சுவிற்சலாந்திலும் தொடர்ந்து தனது நாடகப்பணியை மேற்கொண்டுவரும் தாசீசியஸின் ரத்த நாளங்களில் கூத்தும் நடிப்பும் தோய்ந்திருக்கின்றன்;’ என்று அவதானிக்க முடிந்தது என்கின்றார் அவரது குறிப்பில்.
மட்டக்களப்பைச் சேர்ந்த சி. மௌனகுரு தென்மோடி மரபை மையமாகக்கொண்டு மேடையேற்றி இராவணேசன் ஈழத்தின் மிக முக்கிய நாடக வடிவமாகும். (அழிக்கையாகும்). இன்று ஈழத்தில் சிங்களக் கலைஞர்கள் மத்தியில் எமது நாடகம் என்று காட்டத்தக்க ஒரு நாடகமாக ‘இராவணேஸ்வரன் தசை’ சிறப்புப் பெற்றிருக்கிறது. ‘சங்காரம்’ போன்ற நாடகங்களை மேடையேற்றிய மௌனகுரு அவர்கள் அபூர்வமான கூத்துக் கலைஞர் மட்டுமல்ல மட்டக்களப்பில் கூத்து முறமை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற ஆய்வறிஞரும் ஆவார். இன்று மட்டக்களப்பில் கூத்து நாடக மரபைப் பயிற்றுவிக்கும் கலைஞராகப் பணியாற்றி வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
இந்த மரபில் யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த பத்தண்ணா அவர்கள் தனியிடம் பெறுகின்றார். காத்தான் கூத்தைத் தளமாகக் கொண்டு சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக வடபுலத்து கொம்யூனிச இயக்கத்தினர் அரங்கேற்றிய ‘கந்தன் கருணை’ என்ற நாடகம் ஈழத்து வரலாற்று நாடகத்தில் முக்கியம் பெறும் நாடகமாகும். சிங்களக் கண்டிய நடனத்தின் துள்ளலையும், காத்தான் கூத்தின் மரபினையும் பத்தண்ணா, தாசீசியஸ் ஆகியோர் மேற்கொண்ட நவீன நாடக முயற்சி ஒரு முக்கிய காலகட்டத்தைக் குறித்து நிற்கிறது.
இவர்களில் சி.சுந்தரலிங்கம், இ.சிவானந்தன், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோர் முக்கியம் பெறுகிறார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடக விரிவுரையாளராக இருந்த குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் ‘உறவுகள்’, ‘வாடகை வீடு’, ‘வையத்துள் தெய்வம்’, ‘’அண்ணனுக்கு அரோகரா’ (நகைச்சுவை நாடகம்), ‘அவள் ஏன் கலங்குகிறாள்’, ‘மண் சுமந்த மேனியன்’, பொறுத்தது போதும்’, ‘பாஞ்சாலி சபதம்’, ‘வேள்வித்தீ’ போன்ற பல நாடகங்களை மேடையேற்றியிருந்தார். புதிய நாடகக் கலைஞர்களை பயிற்றுவிப்பதிலும் அக்கறையாகச் செயற்பட்டவர் ஆவார். இதனைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையின் தலைவராகவிருந்த சி.ஜெயசங்கர் மட்டக்களப்பில் கூத்து மரபை நிறுவும் புதிய அணுகுமுறையை செயற்படுத்தினார். கூத்துக்கள் எந்தக் கிராமங்களில் காலாகாலமாக நடத்தப்பட்டு வந்தனவோ அதே முறையிலேயே அதே கிராமக் களங்களிலேயே அவை நடத்தப்படவேண்டும் என்று அவர் சில கூத்துக்களை அரங்கேற்றினார்.
இதே சமயத்தில் ஈழத்தின் இசை நாடக மரபொன்றும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்திருக்கிறது. இந்த இசை மரபின் மிகப்பெரும் கலைஞனாக வைரமுத்து அவர்கள் நாயகனாகத் திகழ்ந்தார். அவருடைய அரிச்சந்திரா மயானகாண்ட இசை நாடகத்தைக் கண்டு ரசிக்காத நாடகக் கலைஞர்கள் அக்காலகட்டத்தில் யாரும் இல்லை எனலாம். இந்த நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேலாக மேடையேற்றம் கண்டு வந்துள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும். நாட்டிய நாடகத் துறையில் கலைஞர் வேலானந்தன் முக்கிய இடம் வகிக்கின்றார். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் நான் பயின்ற போது அவர் அங்கு விரிவரையாளராகக் கடமையாற்றியிருந்தார். அவ்வேளை அவரது பயிற்சியில் பல்வேறு நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்துள்ளேன்;. அவ்வேளை இடம்பெற்ற நாட்டியநாடகத்தில் இணைந்து நானும் நாட்டியமாடிச் சிறப்பித்தமை இன்றும் இனிமையாக என்னுள் விரிகி;றது. அதனைவிட ‘ஜீவமணி’, அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’ போன்ற நாடகங்களில் அரசியாகவும், இளவரசியாகவும் நான் நடித்து அன்றைய ஆசிரியபயிற்சிக் கல்லூரியின் அதிபர் திருமதி.ஆனந்தக் குமாரசாமியின் விசேட பாராட்டுதலும் என் நினைவில் வந்து போகின்றது. புலம்பெயர் நாட்டிலும் நாடகங்கள் தமிழ் விழாக்களில் முக்கியம் பெற்று வருகின்றன. லண்டனில் புலவர் சிவாதன் இயற்றிய இசைப்பாடல்கள் பரவலாக மேடையேற்றப்பட்டன. அவை நூலாகவும் வெளிவந்துள்ளன. ஈழத்தில் மஹாகவியின் புதியதொரு வீடு;’, ‘கோடை’, ‘வள்ளி’ ஆகிய கவிதை பாநாடகங்கள் தேர்ந்த நாடக நெறியாளர்களின் கைகளின் முக்கிய நாடகங்களாக அரங்கேறின.
தாசீசியஸ் மௌனகுரு வரிசையில் லடீஸ் வீரமணியும் மஹாகவியின் நாடக மேடையேற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். இதே சமயத்தில் கொழும்பில் சுஹைர் ஹமீட் அந்தனி ஜீவா, கலைச்செல்வன், மாத்தளை கார்த்திகேசு ஆகியோரின் நவீன நாடகங்களின் மேடையேற்றங்களையும் நாம் அவதானிக்க முடிகிறது.
அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ என்ற நாடகம் குறிப்பிட்டுக் கூறவேண்டிய நாடக வரிசையில் முக்கியமானதொன்றாகும். ‘திருமறைக் கலாமன்றம்’ என்ற கிறிஸ்த்தவ அமைப்பின் கர்த்தாவாகச் செயற்பட்ட வணக்கத்திற்குரிய மரிய சேவியர் அவர்கள் கத்தோலிக்கர்களின் ‘கிறீஸ்த்துவின் திருப்பாடுகளின சாட்சி’ என்ற புதிய அத்தியாத்தின் மேடையேற்றத்தினால் மிகப் பெரும் கௌரவத்தை மக்களால் பெற்றுக்கொண்டவர்.
எண்பதுகளில் ஈழத்து நாடக அரங்கில் மொழிபெயர்ப்பு நாடகங்களை தொடர்ச்சியாக மேடையேற்றிய க.பாலேந்திராவின் தொடர்ந்த நாடகப் பணி பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
தமிழக நாடக ஆசிரியரான இந்திரா பார்த்தசாரதி, அ.முத்துசாமி ஆகியோரின் நாடகங்களை பாலேந்திhர மேடையேற்றினார். தர்மு சிவராமுவின் நட்சத்திரவாசி என்ற நாடகத்தை மேடையேற்றிய பாலேந்திரா கண்ணாடி வார்ப்புகள் என்ற நாடக மேடையேற்றத்தின் மூலம் நாடக அரங்கில் அழுத்தமான காலடியைப் பதித்துள்ளார். தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினுடாக வாழ்க்கைச் சூழலைப் பிரதிபடுத்தும் மொழிபெயர்ப்பு நாடகங்களான ‘கண்ணாடி வார்ப்புகள்’, ‘ஒரு பாலை வீடு’, ‘யுகதர்மம்’, பிரத்தியேகக் காட்சி, மரணத்துள் வாழ்வு போன்றவற்றை மேடையேற்றி வெற்றி கண்டவர். லண்டனில் சிறுவர் நாடகப் பயிற்சியினை நடாத்தி அதன்மூலம் தனது நாடகப் பணியை அவரது மனைவி ஆனந்தராணியுடன் இணைந்து பயணிக்கின்றார்.
லண்டனில் ‘ஈழவர் திரைக் கலை மன்றத்தின்’ தலைவராக இருந்த பாரிஸ்டர் எஸ்.ஜெ.யோசவ் லண்டனில் வாழ்ந்த ஈழத்து நாடகக் கலைஞர்களை பாராட்டுவதிலும், கௌரவிக்கும் விழாக்களை மேற்கொள்வதிலும், குறும்படங்களைத் தயாரிப்பதிலும், கலைஞர்களை ஊக்குவி;பதிலும் அக்கறையுடன் செயற்பட்ட சிறந்த பெருந்தகையாகத் திகழ்ந்தவர்.
லண்டனில் ராஜேஸ் பாலராஜன் ‘காரைநகர் மாதர் சங்கத்தின’; ஊடாக பல நாடகங்களைத் தயாரித்து நடித்து பாராட்டுக்களைப்பெற்று வருகின்றார். ‘வெளிநாட்டில் காற்று உள்நாட்டில் சீற்றம்’, ‘அகதியும் அவலமும்’ , ‘ஊரும் உறவும’, ‘மனக்கோட்டை’ போன்ற நாடகங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்றவர். நடிப்பில்; ஆர்வம் காட்டும் மற்றப் பெண்களையும் அதில் ஊக்குவிக்கும் பெரும் மனம் படைத்தவர்.
புலம்பெயாந்து பிரான்சில் வாழ்ந்தது மறைந்த முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் ஆங்கில நாடகங்கள், வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் என நடித்து புகழ்பெற்றவர். ‘வாடைக்காற்று’ திரைப்படத்தில் பொன்னுக்கிழவனாக நடித்து இலங்கை ஜனதிபதி விருது மற்றும் பல உயர் விருதுகளைப் பெற்றுக்கொண்டவர். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். ‘எரிமலை வெடித்தபோது’, ‘அலைகளின் குமுறல’, ‘கோபுரங்கள் சரிகின்றன’ போன்ற அகஸ்தியர் எழுதிய பல வானொலி நாடகங்களை இலங்கை வானொலியில் நடித்துப் புகழ் பெற்றவர். பிரான்சில் தனது நாடகப் பணியை இறுதிவரை தொடர்ந்து கொண்டே இருந்தவர்.
நடிகர் ஏ.ரகுநாதன் ஈழத்தில் ‘நிர்மலா’ என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து அன்றைய புகழ் பெற்ற நடிகராவார். பாரீசில் பல நாடகங்கள் நடித்ததுடன் குறும்படங்களிலும் நடித்தவர். அவரது ‘பேரன் பேத்தி’ என்ற நாடகம் குறிப்பிடக்கூடிய தொன்றாகும்.
பாhரிசில் எம். அரியநாயகத்தின் நாடக முயற்சிகள் பாராட்டுக்குரியன. நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி புதிய தலைமுறைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து நாடக மேடைக்கு புத்துயிர் அளித்து வருகின்றார். யாழ்பாணத்தில் ஆரம்பித்த அவாது கலைப்பயணம் பாரிசில் தொடர்வது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
ஜேர்மனியில் நாச்சிமார்கோவிலடி வில்லுப்பாட்டு இராஜன், பால்ராஜ் போன்றவர்கள் நாடகங்கள், குறும்படங்களை மேற்கொண்டு வந்தனர். ‘அமெச்சூர்’ நாடக மன்றத்தின் மூலம் சிவதாசன்;, ஈழவர் திரைக்கலை மன்றத்தின் பாரிஸ்டர் யோசவ், அம்பனை கலைப்பெருமன்றம் மூலம் ஏலையா, க.முருகதாசன், ஜேர்மனி ஆதவ கிருஷ்ணா நாடக மன்றத்தின் கதிர்காமநாதன் போன்ற நாடக அமைப்புகள் இணைந்து நாடக முயற்சியில் ஈடுபட்டு வந்தமை சிறப்பான விடயம். திருமதி சிபோ சிவகுமாரன் ஜேர்மனியில் ஒரு பெண்ணாக நின்று நாடகம், குறும்படம், தொடர் நாடகங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு தற்போதும் தொடர்ந்து வருவது பெருமைப் படவேண்டிய விடயம்.
எம் அரியநாயகம், பென்சமின் இம்மனுவேல், சின்னக்குட்டி த.தயாநிதி, இரா குணபாலன், அப்புக்குட்டி த. இராஜகோபால், எழில்.துஷியந்தி, வண்ணை தெய்வம், லீனா ஜெயக்குமார், பிரியாலயம் துரைஸ் போன்ற நாடகக் கலைஞர்கள் நாடகங்களை பல்வேறு தளங்களில் பாரிசில் தடம் பதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னால் முடிந்த தகவல்களை சேகரித்துள்ளேன். நேரத்தை மனதிற்கொண்டு எல்லாவற்றையும் தேடுவதோ, இங்கு சொல்வதோ சாத்தியமில்லை. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அதனை வெளிப்படுத்தலாம் என் நம்புகிறேன். பலவற்றை நான் தவற விட்டிருக்கலாம் என்று கூw எதிர்காலத்தில் நாடகத்தை முன்னெடுக்கும் இளம் சந்ததி;யினருக்கு இவை ஒரு உந்துதலாகவும், இத்தகை நிகழ்வுகள்மூலம் எமக்குள் ஒரு உறவுபாலத்தை ஏற்படுத்த வேண்டுமெனக் கூறி, மீண்டும் முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்கட்கு நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன். அன்பான ஒரு பேச்சை அவரிடம் என்னால் காணமுடிந்தது. கலைஞருக்குரிய மிகப்பெரிய பண்பாகப் பார்க்கிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.