மருதூர்க்கொத்தன் நினைவுகள்! ஏப்ரில் 19 அவரது நினைவு தினம் ! கண்டியில் இம்மாதம் நினைவுகளின் தேரோட்டம் நூல் வெளியீடு! - முருகபூபதி -
- எழுத்தாளர் மருதூர்க்கொத்தன் -
பல படைப்பாளிகள் தமது இலக்கியப்பிரதிகளை எழுதும்பொழுது இயற்பெயரை விடுத்து புனைபெயர்களில் அறிமுகமாவார்கள். பலர் தமது பிறந்த ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தமக்குத்தாமே ஊருடன் இணைந்த புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள். பின்னாளில் அவர்களின் இயற்பெயரை பிறப்புச்சான்றிதழ் - பதிவுத்திருமண சான்றிதழ் - மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும். இலக்கிய வட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் புனைபெயரே நிலைத்துவிடும்.
கிழக்கு மாகாணத்தில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்தார் எனச்சொன்னால் எவருக்கும் தெரியாது. மருதூர்க்கொத்தனையா சொல்கிறீர்கள் என்று அவருக்கு மிகவும் நெருக்கமான சிலரே குறிப்பிடுவார்கள்.
கிழக்கு மாகாணத்தில் கல்முனைக்கு அருகாமையில் பெரிய நகரமும் அல்லாமல் சிறிய கிராமமாகவும் காட்சியளிக்காத கடலோர சிற்றூர் மருதமுனை. இந்த ஊரில் மருதூர் ஏ. மஜீத் - மருதூர்க்கனி - மருதூர் வாணன் என்ற பெயர்களில் எழுதியவர்களின் வரிசையில் முன்னோடியாக இருந்தவர் மருதூர்க்கொத்தன்.
1935 ஜூன் மாதம் 6 ஆம் திகதி அநுராதபுரத்தில் பிறந்த இஸ்மாயில் என்ற மருதூர்க்கொத்தன் ( இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 89 ஆவது வயதை குடும்பத்தினருடனும் இலக்கிய நண்பர்களுடனும் கொண்டாடியிருப்பார். ) 2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 19 ஆம் திகதி மறைந்தார்.