கோவிட் 19: தப்பி வாழும் வழிமுறைகள்! - அன்ரனி யூட் -
2020 என்பது பெரும்பாலான உலகமக்களுக்கு வித்தியாசமான அனுபவம் என்பதில் சந்தேகமே கிடையாது. 1918 இல் உலகம் தழுவிய இன்புழுவன்சா தாக்கிய போது வாழ்ந்தவர்கள் தவிர மிச்ச அனைவருக்கும் முதலாவது உலகப் பெருந்தொற்று அனுபவம் இது. பல மறைத்தன்மையான விளைவுகளோடு இந்தப் பெருந்தொற்று சில நேர்த்தன்மையான தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரண தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவம், விஞ்ஞானம் எப்படி செயல்படுகிறது என்ற ஆர்வத் தேடல் என்பவற்றோடு அடிப்படை ஆரோக்கியம் பேணல் என்பதிலும் மக்களின் கவனம் ஈர்க்கப் பட்டிருக்கிறது. இந்த இறுதி நன்மை கோவிட் தொற்றிலிருந்து மட்டுமல்லாமல் பல தொற்றும் தொற்றா நோய்களில் இருந்தும் காக்கும் வழிகளை எமக்கு கோவிட் பரிசாக விட்டுச் செல்லும் என நினைக்கிறேன்.
அடிப்படை உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான தூண்கள் எவையெனப் பார்த்தால் நான்கு விடயங்கள் பதிலாகக் கிடைக்கின்றன: 1. மனப்பதற்றம் குறைத்தல் 2. தூக்கம் 3. போசணை 4. உடல் உழைப்பு. இவை ஒவ்வொன்றின் முக்கியத்துவம், அதன் பின்னாலுள்ள விஞ்ஞானம், அடையக் கூடிய வழிமுறைகள் என்பன பற்றிப் பேசுவதே கட்டுரையின் நோக்கம்.
மன-உடல் அமைதி
70 களில் பிலிப் மொறிஸ் என்ற புகையிலைப் பொருள் தயாரிப்பு நிறுவனம் "புகைப் பிடித்தல் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடல்ல" என்ற வாதத்தை மேற்கு நாட்டு அரசாங்களுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. புகைத்தலைக் கட்டுப் படுத்தும் சட்டங்களை அரசுகள் அறிமுகம் செய்வதற்கு எதிராக இந்த முயற்சியை எடுத்த பிலிப் மொறிஸ் நிறுவனத்திற்கு சாட்சியாக செயல்பட்டவர் டாக்டர் ஹான்ஸ் செல்யி என்ற கனேடிய விஞ்ஞானி. ஹான்ஸ் மனிதனின் எல்லா நோய்களுக்கும் stress எனப்படும் மனப்பதற்றமே காரணம் என்ற கருத்தை வலுவாக முன்வைத்த முதல் நவீன கால விஞ்ஞானி. இதனால் பதற்றத்தைக் குறைக்கும் புகைப்பழக்கம் நோய்களையும் குறைக்க வேண்டும் என்று ஹான்ஸ் சாட்சியம் சொல்லி வந்தார். ஆனால், பிலிப் மொறிஸ் நிறுவனம் அவரது வங்கிக் கணக்கில் இட்ட ஐம்பதினாயிரம் டொலர்களால் தான் ஹான்ஸின் சாட்சியத்திற்குக் காரணம் என்பது சில காலங்களின் பின் வெளிவந்தது. உலகமும், புகைப்பிடித்தலின் ஆரோக்கியக் கேடுகளை ஏற்றுக் கொண்டு பல தடைகளை புகையிலைக் கம்பனிகளுக்கு விதித்தது.