நதியில் நகரும் பயணம் (13): ஹெக்- டெல்ஃவ்ற் -ரொட்டர்டாம்- கீத்தோன் - நடேசன் -
- ICJ-international Court of Justice) -
அடுத்த நாள் எமது பயணம் ஹெக் (Hague), ரொட்டர்டாம் (Rotterdam), டெல்ஃவ்ற் (Delft) என்ற நெதர்லாந்தின் என்ற நகர்களுக்குள் ஊடாகச் செல்வதற்கு அம்ஸ்ரர்டாம் ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு உல்லாசப் பிரயாணிகளுக்கான இடத்தில் பதிவு செய்திருந்தோம் .
ஒல்லாந்து என்ற பெயரைப் பல இடத்தில் நான் தாறுமாறாக பாவித்த போதிலும் இரண்டு மாகாணங்கள் மட்டுமே வட , தென் ஒல்லாந்து ஆகும். அதைவிட பத்து மாகாணங்கள் சேர்ந்த நாடு நெதர்லாந்து. அம்ஸ்டர்டாம் இருப்பது வட ஓல்லாந்திலேயாகும். ஒல்லாந்து உண்மையில் இலங்கையிலும் சிறிய நாடு. சனத்தொகையும் அதேபோல் (18 மில்லியன்) குறைவானது. இதைவிட நான்கு கரிபியன் தீவுகள் இவர்களோடு இன்னும் காலனிகளாக உள்ளன.
நாங்கள் போக இருந்த ஹெக், ரொட்டடாம், டெல்ஃவ்ற் எல்லாம் தென் ஒல்லாந்தை சேர்ந்த நகரங்களாகும் அம்ஸ்ரர்டாம் நாட்டின் தலைநகரான போதும், அரசும் நாடாளுமன்றம் என்பன இருப்பது ஹெக் நகராகும். இப்படியான ஒரு அமைப்பு தென் ஆபிரிக்காவிலும் உள்ளது.
நாங்கள் அம்ஸ்ரர்டாமிலிருந்து தென் நோக்கி ஹெக் போகும் வழியில் பஸ்சை நிறுத்தியபோது, குழந்தைகளின் பூங்கா போல ஒரு இடம் இருந்தது. இறங்கியதும் மொத்த நெதர்லாந்தின் மாதிரி, ஆனால் சிறிய வடிவம் மடுரோடம் (Madurodam) என்ற பெயரில் அங்குள்ளது . நெதர்லாந்தில் உள்ள விமான நிலையம் , ரோட்டர்டாம் துறைமுகம், காற்றாலைகள் என எல்லாம் யதார்த்தமான சிறிய வடிவமாக அங்குள்ளது.