தொடர்நாவல்: ஒரு கல் கரைந்தபோது! (4) - ஶ்ரீராம் விக்னேஷ் (நெல்லை,, வீரவநல்லூர்) -
அத்தியாயம் நான்கு!ஆஸ்பத்திரியிலிருந்து “டிஸ்சார்ஜ்” ஆகி, வீட்டுக்குப் புறப்படும்போது, எனக்குப் பக்கத் துணையாக ஒருஜோடி ஊன்றுகோல் தரப்பட்டது.
இரண்டு கக்கத்திலும் வைத்துக்கொண்டு உன்னி உன்னி நடப்பதுகூட எனக்குப் புது அனுபவமாகவே பட்டது.
எங்கள் வீட்டுத் தோட்டம் பூராவும் “சிட்டுக்குருவி”யாகச் சிறகடித்துப் பறந்த நான், இப்போது மாடிவீட்டு ஏழை ஆகிவிட்டேன்.
அக்காளின் ஆதிக்கம் அலை மோதியது. அம்மா நோயாளி. அத்தானோ வாயில்லாப் பூச்சி. சமையல்காரப் பையனோ மூன்றாவது மனிதனாக ஆக்கப்பட்டு விட்டான். முன்பு அவனுக்கிருந்த சுதந்திரங்களில் பல பறிக்கப்பட்டிருந்தன.
அக்காளின் மகனுக்கும், தாயின் குணம் அப்படியேயிருந்தது. பக்கத்துவீட்டுப் பையன்களுடன் விளையாடும்போது, “எங்க சித்தி இப்பிடித்தான் நடப்பாங்க….” ன்னு என்னைக் கேலி செய்து நடந்து காட்டுவது, அவனுக்கு அன்றாட பிழைப்பாக ஆகிவிட்டது.
“என் வீட்டில் எல்லாம் உண்டு…. ஆனால், எனக்கென்று எதுவும் இல்லை….” என்னும் வாசகம் எனக்கென்றே ஆக்கப்பட்டது போலாகியது.
அடிக்கடி அக்காளால் இம்சைப்படுத்தப்பட்டு, ஸ்டோர் ரூமில் அடைக்கப்படுகின்ற நிலைமைகூட , யாருக்குமே தெரியாமல் என் கவலைகளையெல்லாம் கொட்டித்தீர்த்து, கதறிக் கண்ணீர்சிந்தவும், அதனால் ஆறுதல் பெறவும் நல்லதோர் களமானது.
சாப்பாட்டைக்கூட சமையல்காரப் பையன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போவான். மற்றும், அடிப்படை வசதியெல்லாம் மாடியிலே இருப்பதை காரணம் காட்டி, கீழே வரக்கூடாது என்பதும், மேலே படியேறி மொட்டைமாடிக்குப் போகக்கூடாது என்பதும் அக்காளின் கண்டிப்பான உத்தரவு.