
1
(27-28 அக்டோபர் 1910 இல், தனது 82வது வயதில் டால்ஸ்டாய் தனது வீட்டை விட்டு (Yasnaya Polyana) மருத்துவருடன் வெளியேறினார் (Flight). 07 நவம்பர் 1910 இல் Astapovo ரயில் நிலையத்தில் இறந்தார்.
இது சம்பந்தமாக பல்வேறு சித்திரங்களை, மனம்போன போக்கில், பல்வேறு எழுத்தாளர்கள் தீட்டியிருந்தாலும், கார்க்கியின் இரு கடிதங்கள் முக்கியமானவை. ஒன்று அவரது அகல்வுக்குப் பின் உடனடியாக எழுதப்பட்டது. மற்றது, அதன் தொடர்ச்சியாக, அவரது மறைவுக்குப் பின் எழுதி முடிக்கப்பட்டது.
டால்ஸ்டாய் பற்றி எழுதிய Tomas Mann, Romain Rolland மற்றும் Stefan Zwigh ஆகிய மூன்று ஐரோப்பிய எழுத்தாளரின் கணிப்பிலும் கார்க்கியின் சித்திரமே விருப்பு வெறுப்பைத் தாண்டி, மிகச் சிறந்ததாய் யதார்த்தபூர்வமாக இருந்தது என்று கணிக்கப்பட்டது. ‘இது ஒரு மேதையின் திட்டமிட்ட தீட்டல்’ எனவும் Romain Rolland கூற நேர்ந்தது (பகுதிகளே இங்கு தரப்பட்டுள்ளன. இதன் மூலத்தை முழுமையாக வாசிப்பது வாசகருக்குப் பயன் தருவது).
புலமை மிகுந்த மேதையர் (Genius) என அழைக்கக் கூடியவர்களில், மிக உயரிய மட்டத்தை அடைந்தவர் டால்ஸ்டாய் என்பதில் ஐயமில்லை. ஆழ்ந்த சிக்கல் வாய்ந்தவரும், தன்னுடனேயே தான் முரண்படும் பண்புகளை எய்தியவருமாக இருப்பது இவரது குணாம்சமாகின்றது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையுமே அற்புதமானது–மிக மிக அழகானது என்பதனைக் கூறியே ஆக வேண்டும். அற்புதம் என்று பொதுவாய்ச் சொல்லும்போது அது குறித்த அவரது நடவடிக்கைக்குப் பொருந்தி வருவது போல, அவரது ஆளுமைக்கும் பொருந்தியே வரும்.
நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அஞ்சல் செய்த பின்னரே, டால்ஸ்டாயின் அகலல் பொறுத்த தந்தியைக் கிடைக்கப் பெற்றேன். எனவே உங்களிடமிருந்த மனத் தொடர்பை அறுக்காமல், தொடர முடிவு செய்து விட்டேன். அதாவது, இக்கடிதத்தை மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளேன். உண்மை. எனது குரல்வளையை யாரோ பிடித்து நசுக்குவது போல் இருக்கின்றது.