வெற்றிச் சிகரத்தை நோக்கி (3): உன்னை தெரிந்து கொள்! எண்ணம் மற்றும் எழுத்து! - கி. ஷங்கர் (பெங்களூர்) , Chartered Mechanical Engineer, MBA(Marketing)-
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர் -
ஆளுமை வளர்ச்சிக்கு மனோபாவம் எந்தளவிற்கு உதவும் என்பதையும், நல்ல மனோபாவத்தை பெற என்னென்ன வழிகள் உண்டு என்றும் சில வழிகளை உங்களுக்கு சொன்னேன். இந்த இதழில், மனிதன் வெற்றி பெற முக்கியமான ஒரு ஆற்றல் பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன்.
பொதுவாக யாரிடமாவது ஒருவரை பற்றிக் கேட்டால், அவர் உடனே அவரைப் பற்றி தனக்குத் தெரிந்தது, தெரியாதது என்று பலவற்றை பற்றி கூற ஆரம்பித்து விடுவார். இதை நான் தவறாக கூறவில்லை. அது மனித சுபாவம். சிலர் தெரியாது என்றும் சொல்லுவார்கள். அதனால்தான் நான் பொதுவாக கூறினேன். ஆனால் நான் இனிமேல் சொல்லப்போவதுதான் ரொம்ப முக்கியம். ஒருவரிடம் உங்களை பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டால் “ ஹி ஹி என்னை பற்றி என்ன சொல்வது?” என்பார். ஒன்று, அவருக்கு தன்னை பற்றி எதுவுமே தெரியாதாக இருக்கலாம் அல்லது கூச்சப்படுபவராக இருக்கலாம். பெரும்பாலான நேரங்களில் உண்மை என்னவென்றால், பொதுவாக மனிதர்கள் தங்களை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.
வேலை நேர்காணல்களில் (job interviews) நடப்பது இதுதான். உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்பார்கள். எதை எதையோ படித்து வந்திருப்பார்கள். ஆனால் தன்னைப் பற்றி அழகாக எடுத்து சொல்ல அவர்களுக்குத் தெரியாது. நாம் பேசும் போது பேசும் நடையையும், மொழியையும், பேசும் சொற்களையும், வேகத்தையும், உடல் அசைவுகளையும், முகபாவங்களையும் வைத்து நேர்காணல் காண்பவர் நம்மை அழகாக படம் பிடித்து விடுவார். தன்னை முழுவதும் தெரிந்து வைத்திருப்பவனே ஞானி என்று சொல்வார்கள். அந்த காலத்திலேயே கவிஞர் கண்ணதாசன் எழுதினார், “ உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்” என்று. தன்னை முழுமையாக அறிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. ஆனால் கொஞ்சம் முதிர்ச்சி பெற்றவுடன் தான் யார், தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன, தன் விருப்பு, வெறுப்புகள் என்ன, தான் எந்த படிப்பை, தொழிலை எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று ஒரளவிற்கு தெரிந்து கொள்ள முற்பட்டால்தான் முன்னேற முடியும். இதுதான் தன்னை தெரிந்து கொள்ளும் ஆற்றல்.