சிறுகதை : அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்! - கடல்புத்திரன் -
கொஞ்ச நாளாய் தான் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ,அதாவது பச்சை மரங்கள் செடிகள் கொண்ட நடைபயிலுகிற பூங்கா என்று சொல்ல முடியாத, காடு என்றும் சொல்ல முடியாத பச்சை வளையப்பகுதியிலே நடக்கிறான். எல்லாம் கொரானாவின் கதவடைப்பால் வந்த உபயம். இதற்கு முந்தியும் பறவைகள் கீச்சிடும் அந்த பகுதி இருந்தது தான்.இறங்கி இருக்கவில்லை.வீட்டிலேயே கனநாள் கிடைக்கையில் ஏற்பட்ட உடல் மூட்டுகளில் வலியோடு ஏற்பட்ட கீரீச் கிரீச் என்ற சத்தங்களிற்குப் பிறகு,நடப்போம் என இறங்கி இருக்கிறான்.இந்த நாட்டில் எல்லாப் பகுதியிலும் பாம்பு போல போற இந்த பச்சை வழிப்பாதைகள் கிடக்கின்றன. எவ்வளவு பேர்களுக்குத் தெரியுமோ?, நாம் குளிக்கிற , பாத்திரம் கழுவுற தண்ணீர் , சலவை செய்கிற நீர், மழை, பனி நீர் எல்லாம் வீதிகளில் வலையமைப்பில் ஓடுற குழாய்க்கால்களில் ஓடி ,அடைப்புகள் ஏற்பட்டால் கிடக்கிற மனிதர் இறங்கி வேலை செய்கிற துளைகள் போன்ற கட்டமைப்புகளுடன் சேர்கின்றன.பிறகு இவை ஓடி வந்து பெரிய ஏரிகளை அடைகின்றன. இந்தக் கட்டமைப்பில் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து வெளியேறுகிற நீரை வடிகட்டி இரசாயன கலப்பில்லாது விட வேண்டும் என்ற விதிகளை சிலர் மீறி விடுகிறார்கள். பிறகென்ன நாம் குடிக்கிற நீரில் நஞ்சு கலந்து விடுகிறது. ஏரி நீரைத் தான் நாம் எல்லோருமே குடிக்கிறோம். சில பகுதிகள் பாதிக்கப் பட்டுக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் முதல்குடி மக்களின் பகுதிகளாக கிடப்பது தான் பரிதாபம். தொழிற்சாலைகளுக்கும் வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்க வேண்டும். அவற்றை அரசாங்கள் செய்யாது அவர்களே செய்ய வேண்டும் என தட்டிக் கழித்து விட்டதாலேயே தவறுகளும் கணிசமாகி விட்டிருக்கின்றன. மனிதக்கழிவு நீர்களுக்கு வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்கின்றன. அதில் வடிகட்டி உர உப்புகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன. வடிகட்டிய நீரும் இதே வாய்க்காலிலே விடப்படுகின்றன. இலங்கை. இந்தியா போன்ற நாடுகளில் குடிமனைகளில் பரவி சேதம் ஏற்படுத்துபவை இங்கே ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன . இந்த வாய்க்கால்கள் சில நதிகள் என்றும் கூட அழைக்கப்படுகின்றன. நீளம் கூடியதால் அழைக்கிறார்களோ? மழைக்காலத்தில் பெருமளவு நீர் பெருக்கெடுத்து ஓடுறதும் ஏற்படுகின்றது.