மறக்க முடியாத எழுத்துலக ஆளுமைகளில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன் மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள் பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில் இவர்கள் எழுதினார்கள்.