அறிஞர் அண்ணாவின் இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த தினம்!
- அறிஞர் அண்ணாவின் இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை! கவிஞர் கண்ணதாசன் 'தாய்வீடு' இதழில் எழுதிய கட்டுரையில் பகிர்ந்துகொண்டது. இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை புதுக்கோட்டையில் நடைபெற்றபோது (14,15 – 12 – 1946)) அறிஞர் அண்ணா ஆற்றிய உரையினைக் கவிஞர் கண்ணதாசன் புதுக்கோட்டை க .நாராயணனின் “தாய்நாடு” இதழில் எழுதிய கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார். இக்கட்டுரையினைக் கண்ணதாசன் வலைப்பதிவில் (http://kannadasan.wordpress.com) வாசித்தேன். உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இவ்விதமான அறிஞர் அண்ணாவின் உரைகள் ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களைப் பித்தம் கொள்ள வைத்திருந்தன. அவரது உரையினைக் கேட்பதற்கு இலட்சக்கணக்கில் மக்கள் கூட்டங்களில் திரண்டனர். அண்ணாவின் எழுத்துகள் - கடிதங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் & நாடகங்கள் அனைத்தையும் வாசிக்க \ அண்ணாவின் சொற்பொழிவுகள் -
அறிஞர் அண்ணாவின் உரை:
அருமைத் தோழர்களே! தலைவர் அமைச்சரைக் கூப்பிட்டுவிட்டு அமர்ந்தார். அமைச்சர் அண்டவனை அழைத்துவிட்டு அமர்ந்துவிட்டார். (கரகோஷம்) புது உலகம் அமைக்கவிருக்கும் வீரர்கள் ஆண்டவன் அருளை வேண்டி நிற்கச் சொல்கிறார்அமைச்சர். ஆண்டவன் அருள் எப்பொழுதும் இருக்கும் அமைச்சர் சொல்லிவர வேண்டியதில்லை. மேலும் நாமக்கல் கவிஞர் போன்ற பக்தர்கள் இருக்கும் இடத்தில் ஆண்டவன் அருளுக்குக் குறைவா என்ன? (கரகோஷம்) அமைச்சர், விரும்பும் ஆண்டவன் அருள் கிடைக்காவிட்டாலும் அமைச்சர் போன்ற ஆள்பவர் அருள் இருந்தால் எதைத்தான் சாதிக்கமுடியாது?
அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை (கரகோஷம்) ஆக்கவும் அளிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்து இருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல. இவை இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.