தமிழ்த்திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்துக்கொள்வதில் மகிழும் விஜயகாந்த் உண்மையிலேயே திரையிலும், அரசியலிலும் எம்ஜிஆரின் வழியில் நடந்தவர். அதுவே அவரது திரையுலக, அரசியல் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணம்.
சிறிது தந்திரமாகத் தமிழக அரசியலில் அவர் நடந்திருந்தால் இன்றும் அவரது தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் முக்கியமான , வலு மிக்க கட்சியாக இருந்திருக்கும்.
அவரது படங்களும், பாடல்களும் மக்களுக்கு ஆரோக்கியக் கருத்துகளைக் கூறின. சமுதாயப் பிரக்ஞை மிக்க கதைகளை மையமாகக் கொண்டவை. அவையே அவரை மக்கள் இதயங்களில் குடியேற வைத்தன. எண்பதுகளில் அவர் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர்.
நடிகர்கள் பலரும் எம்ஜிஆரைப்போல ஆகவேண்டும் என்று கனவு காண்கையில் உண்மையில் தன் திரைப்படங்களை எம்ஜிஆரைப்போல் நன்கு பயன்படுத்தி வெற்றி கண்டவர் விஜயகாந்த் மட்டுமே. அரசியலில் மிகபெரிய வெற்றியினை அடையாமலிருந்திருக்கலாம் ஆனால் மக்கள் மனத்தில் இடம் பிடிப்பதில் மிகுந்த வெற்றியினை வேறெந்த நடிகரையும் விட அடைந்தவராகவே விஜயகாந்த் கருதப்படுவார். ஆழ்ந்த இரங்கல்.
அவர் நினைவாக அவரது திரைப்படப் பாடல்கள் சில: https://www.youtube.com/watch?v=9RueJGFDCNU