போராட்ட அரசியலை அமைப்பையோ அல்லது பாராளுமன்ற அரசியல் அமைப்பையோ சேராத தாயொருவர் , மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணி என்னுமொரு சமூக அமைப்பைச் சேர்ந்த தாயொருவர், நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த போரை நிறுத்தி , பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காகத் தன்னுயிரை அமைதி வழியில் உண்ணாவிரதமிருந்து தந்துள்ளார்.
அன்னையர் முன்னணியின் சார்பில் ஏற்கனவே உண்ணாவிரதமிருந்த அன்னம்மா டேவிட் என்பவரின் உண்ணாவிரதம் இடை நடுவில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், 'தான் சுய நினைவுடனே இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும், தான் நினைவிழக்கும் பட்சத்தில் யாரும் தன் போராட்டத்தைத் தடுக்கக் கூடாது' என்ற முன் கூட்டியே அறிவித்து விட்டு உண்ணாவிரதமிருந்த அந்தத் தாயின் நெஞ்சுறுதி போற்றுதற்குரியது.
அவரது மரணம் துயரம் தருவது. அதே சமயம் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. பத்துப் பிள்ளைகளின் தாயான ஒருவர் தான் பிறந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டிருந்த அனர்த்தங்களை நிறுத்துவதற்காக எடுத்த முடிவு, அதிலுள்ள உறுதி, அதற்காக அவர் கொடுத்த விலை வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப்படும். மனித நேயம் மிக்கவோர் அன்னையாக, தன்னை மக்களின் நல்வாழ்வுக்காகத் தாரைவார்த்துக்கொடுத்த ஒருவராக அவர் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார்.
அன்னை பூபதியை நினைக்கையில் எப்பொழுதும் எனக்கு மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' நினைவுக்கு வருவார்.